Thursday, December 25, 2008
Money கணக்கு Vs மணிக்கணக்கு
பிள்ளை தலை வாருவதெங்கே?
பூச்சூட்டிப் பாடசாலைக்கு
அனுப்புவதெங்கே?
சமையல்கட்டில்
சமையல் மணக்கிறதோ
இல்லையோ
பாத்திரங்கள் 'மணக்கிறது'..
தெருமுனைக்கடை
ஷவர்மா* குப்பூஸ்* குஸ்கா
அலுத்துவிட்டது..
அனலாயக் காயும்
காய்ச்சல் பிள்ளைக்கு
என்றாலும்
தனியாய்த் தவிக்கவிட்டுக்
கடமைக்காய் மருந்து கொடுத்துக்
கடமையாற்ற விரைய
வெறுத்துப் போய்விட்டது..
கொட்டிக் கொடுத்து
விமானப் பயணம்
குட்டியாய் முடித்துவர
என்ன கொடுமை சரவணா இது?!
துவைத்தது ஒரு புறம்
துவைக்காதது மறு புறம்
துணிகள் மலையாய்..
சமையல் முதல்
சலவை வரை
அ முதல் ஃ வரை
சகலமும் சடுதியில் செய்து
சலித்துப் போய்விட்டது..
தன் ஐயங்கள் போக்கிட
விளக்கங்கள் அறிந்திடக்
காத்திருந்து காத்திருந்து
என் பிள்ளை
தூங்கியே போய்விட
ஊரார் பிள்ளையை.....
பழமொழி பொருத்தமின்றிப் போக..
தங்கமணியும் பாவம்
தங்கமான மணிதான்
முழுநேரமும் பணியில்
முடங்கிப் போகையிலும்
கூட மாட ஒத்தாசை..
ஆயிரம் இருந்தும்....
சுஜாதா பாலகுமாரன்
வலைப்பூ மல்லிகைப்பூ
இன்னிசை இலக்கியம்
இன்னும்..இன்னும்..
ரசிக்க லயிக்க நேரம்?
கிடைத்த
Money கணக்கில்....
ஆத்ம திருப்தி என்ற பிரம்மையில்
மயங்கிய காலம் போய்த்
தொலைத்த
மணிக்கணக்குகளை
மீட்டெடுக்கும் பணியில்
மூழ்க வேண்டிய நேரமிது! நேரமிது!
*ஷவர்மா *குப்பூஸ் - அரேபிய உணவுகள்
Thursday, November 27, 2008
சம்சாரம் அது எதார்த்தம்
செய்தித்தாளில், காபியில், டிவியில் மனம் லயிக்கவில்லை. அவள் மெல்லிய கொலுசுச் சத்தம், பூவாசம் எல்லாம் கலந்து நினைவைப் புரட்ட துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு.
Saturday, November 22, 2008
சாதனையாளர் முனைவர் மாசிலாமணி
Wednesday, November 19, 2008
வேலூர் பொற்கோவில்..அம்மன் Vs அம்மா
சமீபத்தில் இந்தியா வந்த போது வேலூர் பொற்கோவிலைப் பார்க்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. நிறைய எதிர்பார்ப்பு கூடி வர ஆகஸ்ட் 15 அன்று மாலை 5 மணியளவில் போனோம்.
திருப்பதி போல் கூண்டு கூண்டாக அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் சுமாராக இருந்தும் ஏனோ அன்று ஒரு கூண்டு மட்டும் திறந்திருந்தார்கள்.
அதிக நேரம் காத்திருக்க வேண்டுமோ என்று எண்ணிய பயந்த போது..சடாரென்று கதவு திறக்க...சர சரவென்று நகர்ந்த வரிசையில் வேகமாக முன்னேறினோம். கொஞ்ச தூரம் போனதும் பாதுகாப்பு சோதனை..
நடந்து உள்ளே போனபோது முதலில் தோன்றியது பிரமிப்புதான்.. போகப்போக ஒரு புறம் அம்மனின் படமும், மறுபுறம் 'அம்மா'வின் படமும்..அம்மா என்று அவர்கள் குறிப்பிட்டது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதரை...காவி உடையில் சாந்தமாகக் காட்சியளித்தது அவர் முகம்..பின் 'அம்மா' என்ற வயதான பெண்மணியும் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.
நான் மட்டுமல்லாமல் என்னுடன் வந்த உறவினர்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எங்கும் எதிலும் அம்மா..அம்மா..அம்மன் படம் ஒரு மூலையில் தேமே என்று இருந்தது. வளைந்து, நெளிந்து சென்ற பாதையில் செயற்கையாகப் படைக்கப்பட்ட
இயற்கைக்காட்சியமைப்பையும் ரசித்தபடி, எழுதப்பட்டிருந்த பொன்மொழிகள், நன்கொடை விபரங்கள் படித்தபடி ஒருவழியாக சன்னிதிக்கு வரும் போது..ஒரு வேளை வடக்கத்திப் பாணியில் குட்டியூண்டு உருவமாக லட்சுமி நாராயணி இருந்து விடுவாளோ என்று பயந்தேன். ஆனால் நம் பக்கம் போல அளவில் சற்றே பெரியதாக மிகவும் அழகாக ஆபரணங்களோடு ஜொலித்த அம்மனைப் பார்க்கையில் சற்றே ஆறுதல்.
மாலை 6 மணி நெருங்கிவிட்ட படியால், மின்சாரவிளக்குகள் எரியத் தொடங்க, தகதக என்று ஜொலித்தது மிக அழகு.
திரும்பி வந்த பாதை நல்லவேளையாக சீக்கிரம் வெளியே கொண்டுவிட்டது. அப்பாடா என்று நான் நினைத்த வேளை, என் உறவினர்களுக்கு ஒரு சந்தேகம்..அங்கே வெளியே வரும் வழியில் இருந்தது அம்மனின் பாதமா..அம்மாவின் பாதமா....
மொத்ததில் பொற்கோவில் என் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை..நம்ம ஊரிலும் பொற்கோவில் என்ற சாதனை படைத்துவிட்ட சந்தோஷம்..விஜிபி தோட்டத்தின் நடுவில் ஒரு கோவில் இருந்தால் எப்படியிருக்கும்..மைசூர் அரண்மனையில் தங்க நிறப் பெயிண்ட் பூசப்பட்ட ஒரு மண்டபம் இருக்குமே அதைப் பார்த்தால் எப்படியிருக்கும்.. ..அப்படியிருந்தது எனக்கு..நல்ல பரவசமான அனுபவம்..
Sunday, November 16, 2008
என்று புலரும் பொழுது?
புலர்ந்த பொழுதுகள்
புலம்பெயர்ந்து போனதெங்கே?
புல்வெளித் தரையில்
பகிர்ந்த பொழுதுகள்
புதைந்துதான் போனதெங்கே?
கள்ளத் தோணியில்
கடல் தாண்டிப் போன
மாமன் தருவான்
நல்லதொரு செய்தி..
குண்டெய்தி அவன்
மாண்ட செய்தி
அறிந்திடாத மடமகள் மனதில்
மலையளவுக் கேள்விகள்
வந்து போயின சடுதி..
தலைவாரிப் பூச்சூட்டித்
தாயவள் அனுப்பிய செல்வமகள்
மணியோசை கேட்டு
வகுப்பில் நுழைவாளோ..
வெடியோசை கேட்டுக்
குழியில் பதுங்குவாளோ..
பயத்தின் சுவடுகள்
பாரமாய் அழுத்த
நினைவலைகள் ஓயுமுன்னே
பறந்துவந்து குடிசையில்
பாய்ந்த குண்டு
நெருப்பலைகள் வாரியிறைக்கக்
கருகி மடிந்தது தாயவள் தேகம்.
உருவாகும் முன்னே
உடைந்து சிதறியது
கனவுகளின் கோலம்.
மெல்ல அழிந்து வரும்
எம் இனமே!
திருத்தியெழுதிய தீர்வு கண்டு
உமை மீட்டிட இங்கு யாருண்டு?
Tuesday, November 4, 2008
ஆஹா..அடச்சீ..ஐயோ..அப்பாடா..
ரஜினி பேட்டி பார்த்தபோது..நான் வந்தாலும் வருவேன், வராட்டியும் இருப்பேன் என்று நம் வானிலை அறிக்கை மாதிரிப் பேசிய போது அட....போங்கய்யா...நீங்களும் உங்க ரசிகர் மன்ற சந்திப்பும்...வருத்தம் தெரிவித்தாராம் மன்னிப்புக் கேட்கவில்லையாம்...எதார்த்தம் துளிக் கூட எட்டிப் பார்க்காத அப்படி ஒரு சந்திப்பு... ஏதோவோர் சலிப்பு..அடச்சீன்னு..ஏன்?
என்னதான் இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை, நடிகர்கள் உண்ணாவிரதம், நன்கொடை வசூலிப்பு என்று ஆயிரம் இருந்தும்....No peace of mind...இதெல்லாம் எவ்வளவு தூரம், எத்தனை காலம் என்ற நெருடலும் ஆதங்கமும்...நிஜமான அமைதி என்று கிட்டும் என்ற எதிர்பார்ப்பும்....ஐயோன்னு..ஏன்?
என்னதான் கும்ப்ளே நல்ல ஆட்டக்காரர் என்றாலும், இதே போல் முடிவெடுத்துச் சீக்கிரம் பெரிசுங்களும் இளசுங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை (நப்பாசை?)...அப்பாடான்னு..ஏன்?
Friday, October 24, 2008
வேற்றுமையில் ஒற்றுமை
ஆயிரம் வேற்றுமை
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி
இலக்கணங்களில்
பதவி பண ஆசைகளில்
கட்சித் தாவலில்
வாக்குறுதி வழங்கலில்
வார்த்தை மீறலில்
இரட்டைநாக்கு மொழிகளில்
அடடா என்ன ஒற்றுமை..
தொலைக்காட்சி அலைவரிசைகளில்
ஆயிரம் வேற்றுமை
நிகழ்ச்சிகளின் நிரலில்
தொடர்களின் தரத்தில்
குடியரசு தினம் தொடங்கி
மதவாரியாய்ப் பண்டிகைகள் வரை
நடிகையின் நாய்க்குட்டியும்
நல்கும் பேட்டிகள்
அடடா என்ன ஒற்றுமை..
வடக்கு தெற்கு என்று
ஆயிரம் வேற்றுமை
பட்டினி பசியில்
குழந்தைத் தொழிலாளர்களின்
குறைந்திடாத எண்ணிக்கையில்
லஞ்ச லாவண்யங்களில்
சுரண்டிப் பிழைக்கும்
சுயலவாதிகளின் சூழ்ச்சியில்
அடடா என்ன ஒற்றுமை..
உலகெங்கும்
மதங்களில் இனங்களில்
ஆயிரம் வேற்றுமை
உட்பிரிவுப் பூசல்களில்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் மோதலில்
விதிகள் மட்டுமே போற்றி நின்று
வீதி வீதியாய்த் தீவிரவாதம்
வளர்த்து நிற்கும் பாங்கினில்
சந்திராயன் காலத்திலும்
சாகாத மூட நம்பிக்கைகளில்
அடடா என்ன ஒற்றுமை..
Thursday, October 23, 2008
அனைவருக்கும் வணக்கம்
நீ...ண்..ட நாட்களுக்குப் பின் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..பலவித காரணங்களால் இந்தப் பக்கமே வர முடியாமல் போயிருந்தது...
தமிழ்மணத்தை அவ்வப்போது நுகர்ந்து பார்த்தாலும் கூட..மறுமொழி இடமுடியாமல் போனது அவ்வப்போது..இப்போது கூட மறுமொழி இடமுடியவில்லை..தொழில்நுட்பக் கோளாறு என்ன எதுவென்று ஆராய்ந்து சீக்கிரம் சரி செய்யப் பார்க்கிறேன்.
மூன்று மாத காலம் இந்தியா வந்திருந்தேன்..ஒவ்வொரு ஊரைக் கடக்கும் போதும் பதிவுலக நண்பர்களின் ஏதாவது ஒரு நினைவுப் பின்னல் தொடர்ந்து கொண்டே வந்தது..திரு,&திருமதி சீனா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது..
அனவருக்கும் மீண்டும் வணக்கம்....உங்கள் பதிவுகளிலும் என் பதிவிலும் மீண்டும் சந்திப்போம்...
Wednesday, May 21, 2008
தோள் கொடுக்கிறதா தோழமை?
வருகின்றதோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.
'உயிர் காப்பான் தோழன்', 'உடுக்கை இழந்தவன் கை' என்ற வாக்கியங்கள் இலக்கிய அளவில்மட்டும்..ஏட்டுச் சுரைக்காயாக மட்டும்உலவி வருகின்றன. தோள் கொடுக்கும்
தோழமை தோளை மீண்டும் எதிர்பார்க்கிறது. அதில் தவறில்லை என்றாலும் எதிர்பார்ப்பற்ற தன்னலம் கருதாத நட்பு என்பது அரிதாகி வருகிறதோ என்ற உணர்வு.
உறவுகளுக்குள் நட்பு என்பது அடிக்கடி பேசப்படுகின்ற ஒன்று. ஆனால் நட்பு என்ற உறவு? 'உன் நண்பனைக் காட்டு. உன் குணத்தைச் சொல்கிறேன்' என்பார்கள். இப்போது பலருக்கும், குறிப்பாகக் குழந்தைகள் மட்டும் இளைஞர்கள் பலருக்கு அப்படி ஒரு ஆத்மார்த்தமான நட்பைச் சுட்டிக் காட்ட முடியுமா என்பது சந்தேகம்தான். நட்பு வட்டாரம் என்ற ஒன்று இருக்கின்றது..ஒத்த வயதையுடைய நண்பர் கூட்டம் இருக்கிறது..என்றாலும் எங்கேயோ ஏதோ குறைந்து வருகின்றது..
இதற்குக் காரணங்கள் பல: ஒரே இடத்தில் நீண்ட நாள் குடியிருக்கும் வாய்ப்பு இல்லாத நிலைமை, பலவித படிப்பு மற்றும் அலுவல்களால் நட்புக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலைமை, தொலைக்காட்சி, கணினி போன்ற சாதனங்களின் நட்பு மயக்கம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
தெரு முனைகளில் தவறாமல் கூடும் நண்பர்கள், கெக்கே பிக்கே என்று ஏதாவது பேசிச் சிரிக்கும் பெண்கள் கூட்டம், குடும்பத்தினரிடம் கூடப் பேச முடியாத பல விஷயங்களைத் தங்களுக்குள் பேசித் தீர்வு, ஆறுதல் காண்கிற மனங்கள் அரிதாகி வருகின்றன.
நாம் அனுபவித்த, இன்னும் கூட அனுபவித்து வருகின்ற நட்பின் அருமை பெருமைகள் பலவற்றை நம் குழந்தைகள் அனுபவிக்கிறார்களா? என்னவென்றே அறியாமல் அவர்கள் தொலைத்த பலவித சந்தோஷங்களுள், உரிமைகளுள் இதுவும் ஒன்று.
காரணங்கள் புரிந்தாலும் காரியமாற்ற முடியாத ஒரு நிலைமையில் தள்ளப்பட்டுதான் நிற்கிறோம்.
Friday, April 25, 2008
நிறைமதி காலம்
இரண்டும் சமமாகி
Friday, April 18, 2008
நதியொன்று விதி தேடி..
இரட்டைத் தாழ்..
உலகப் பொறி
விரலசைத்து அழைக்கப்
பொறியின் இரை தேடி
இரையாகிற எலி.
மரண பயமற்றுச்
சிறை பயமுற்று
விடமுண்டு மரிக்கும்.
பொறியில் சிக்கியே
சடுதியில் மரணிக்கும்.
முலாம் பூசிய
முகவரி தேடி
முகவரி தொலைத்து
வழி தவறி
வலி பெருக்கிச்
சுயநலத் தேடலில்
சுயம் தொலைத்து
பெற்றது இழந்து
இழந்தது பெற்று..
கண்டு கேட்டு
உண்டு ரசித்து
மயங்கி மயக்கி
உருகி உருக்கி
உய்யும் பொருட்டு
உழன்று சுழன்று
உலகப் பொறியில்
உருளும் மனித மனம்
இரை தேடி இரையாகி
மரண பயமுற்றுச்
சிறை பயமற்று
விடமுண்டும் வாழும்.
பொறியில் சிக்கியே
அனுதினம் மனரணம்
மரணிக்கும் வரை
அகமகிழ்ந்து ஏற்கும்.
Monday, March 31, 2008
யார் பித்தன்?
வீட்டில் புறப்படும் போது ஒலிக்க ஆரம்பித்த "காதலின் தீபமொன்று" பாடலை நின்று கேட்டு ரசிக்க நேரமில்லை..பருத்திப் புடவை மடிப்புகளைச் சரிசெய்யவென்று 5 நிமிடம் அதிகம் நேரம் ஒதுக்கிய அவகாசத்தில் ஒலித்திருக்கக்கூடாதா அந்தப் பாடல்..காலில் செருப்பைப் போடும் போது ஒலிக்க ஆரம்பித்தது..முனை டீக்கடையில் "..பொன்னிலே பூவையள்ளும் புன்னகை மின்னுதே.."மனதுக்குள் வரிகளை ரசித்தபடி வேக நடை போட்ட கனகாவின் கால்கள் பேருந்து நிறுத்தத்தை நெருங்கியதும் தன்னிச்சையாகத் தயங்கின.
இன்றும் அவன் வருவானோ? அய்யோ..தூரத்தில் இருந்தபடிப் பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டாள்..நல்லவேளையாகஅவன் அறிகுறி எதுவும் தென்படவில்லை..இதோ சுந்தரமூர்த்தி மாமாவும் வந்துவிட்டார்..அவருக்கும் அதே பஸ்தான்..
"என்னம்மா இன்னிக்கு லேட் போலருக்கே?"
"ஆமாம் மாமா." கடையில் ஒலித்த.."என்னை நான் தேடித்தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்.."பாடலை ரசித்துக் கொண்டே இருக்கையில் அவன் அதோ வந்து விட்டான்..நாக்கு சட்டென்று மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. பயத்துடன் சுந்தரமூர்த்தி அருகில் நெருங்கி நின்று கொண்டாள் கனகா. "வந்துட்டானா" என்று வரவேற்கத் தயாரான முணுமுணுப்புகள் அங்கங்கே..நின்றிருந்த ஒன்றிரண்டு பள்ளிப் பிள்ளைகளும் கனகா போலவே பயந்தனர்.
அவனுக்கு வயது 15 இருக்கும். சற்று மீறிய வளர்ச்சி..மன நலம் சரியில்லாதவன்..
பூக்காரம்மாவின் பையன். பூ வியாபாரம் முடித்து அந்தம்மா இரண்டு மூன்று வீடுகளில் வேலை செய்து பிழைத்து வந்தார். கணவன் இறந்துவிட, இருக்கும் ஒரே பிள்ளையும் இப்படி.
அந்தம்மா அப்படிப் போனதும் இவன் இப்படி வருவது வாடிக்கையான ஒன்றுதான். சில நேரம் அவன் பாட்டுக்கு அமைதியாய் நிற்பான். அல்லது நடந்து கொண்டேயிருப்பான். சிலநேரம் அங்கே இருக்கின்றவர்களிடம் வம்பு செய்வான். காசு கேட்பான்,கொடுத்ததும் வாங்கிக் கொண்டு போய்விடுவான். ஆனால் சமீப காலமாகப் பெண்களைப் பார்த்தால் அசிங்கமான சைகைகள் புரிவது வழக்கமாகிவிட்டது..தர்மசங்கடத்தில் நெளிய வேண்டிய தருணங்கள்..
என்றைக்குத் தான் மாட்ட போகிறோமோ என்ற பயம் கனகாவுக்கு..
பயத்தைப் புரிந்து கொண்டவராய் சுந்தர மூர்த்தி மாமா, " பயப்படாதேம்மா..ஒன்றும் செய்ய மட்டான் " என்று கூறியும் சமாதானமாகவில்லை..ஏதாவது நடந்து விட்டால் எவ்வளவு அசிங்கம்..என்ன இந்த பஸ் இன்னும் வரவில்லையே என்று பார்க்குப் போது, ஒரு வழியாக அன்று சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்தது பஸ்.
அப்பாடா தப்பித்தோம் என்று பஸ் ஏறி வழக்கமான இடத்தில் உட்கார்ந்தாள் கனகா. என்ன இருந்தாலும் அந்த அம்மா இவனை இப்படி விட்டு விடுப் போகக் கூடாது. என்றைக்கு என்ன செய்வானோ என்ற பயத்துடன் எத்தனை நாள் இருக்க முடியும்..அந்தப் பையன் மீது கோபம் வந்தது..
அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்.
"பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற நீயே பயப்பட்டா எப்படி.."
அதுவும் சரிதான். அதற்காகப் பயம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டுமானால் முடியும். பயம் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?
சரியான கிறுக்கன்..கனகாவுக்குக் கோபம் கோபமாய் வந்தது. இப்படிப் பொறுப்பில்லாமல் வெளியே அந்தப் பையனை அனுப்பிய அவன் அம்மா மீது..அவன் நினைவே எரிச்சலை மூட்ட இதே போல் எத்தனை நாள் போகுமோ என்று எண்ணியபடி பள்ளியை அடைந்தாள். வேலைப்பளுவில் சற்றே மறந்தாலும் ஒவ்வொரு காலையிலும் இம்சை தருகின்ற அந்தத் தருணங்கள் மனதின் ஓரம் வந்து வந்து போயின.
அன்று சாயந்திரம் அதே பஸ்ஸில் வீடு திரும்புகையில், அவள் கண்முன் கண்ட காட்சி மனதைப் பற்றியெரிய வைத்தது. அவ்வளவு அதிகமாகக் கூட்டமில்லை. சற்று முன் நின்று கொண்டிருந்த பள்ளிச் சிறுமியின் மீது சாய்வதும், பின் விலகுவதுமாகப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த நடுத்தர வயது மனிதரைக் கோபத்துடன் வெறித்தாள் கனகா. தற்செயலாக நடப்பது போல் காட்டிக் கொண்டாலும், அந்தப்பாவியின் வக்கிரபுத்தி பார்த்த மாத்திரத்தில் உரைத்தது. அந்தச் சிறுமி பாவம், நகர்ந்து சென்றாலும் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தது அந்த ஜடம்.
ஏதோ ஒரு படத்தில் யாரோ சொன்ன வசனம் நினைவுக்கு வந்தது. "இப்பல்லாம் வயசுப்
பசங்கள விடப் பெரிசுககிட்டதான் ஜாக்கிரதையா இருக்கணும்."
இருக்கையில் இருந்து எழுந்த கனகா அந்தச் சிறுமியிடம் சென்றாள்.
"இங்கே உட்கார்ந்துக்கோம்மா. நான் இறங்கப் போகிறேன்."
"தேக்ஸ் அக்கா." என்றபடி சிறுமி நகர்ந்தாள். அங்கே நின்ற கனகா பார்வையால் அந்த ஆசாமிக்குச் சவால் விட, நெளிந்து குழைந்தார் ஆசாமி. அடுத்த நிறுத்தம் வர, இறங்க வேண்டுமோ அல்லது பயமோ இறங்கிப் போனது அந்த ஜென்மம்.
ஏனோ கிறுக்கனின் முகம் கண்முன் வந்தது. இந்த வக்கிர நடத்தையை அவன் திடீரென்றுதானே தொடர்கிறான்..யாரோ ஒரு விஷமிதான், வக்கிரபுத்திக்காரன் தான் இதைச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். பஸ்ஸில் பார்த்த ஆசாமிக்கும் சித்தம்
சுவாதீனமாகவே இருக்க, அவன் என்ன பித்தனா? கிறுக்கனுக்குச் சைகை செய்யச் சொல்லிக் கொடுத்த ஆசாமிக்கும் மன நலம் நன்றாகவே இருக்க..அவன் பித்தனா? இல்லை எதுவும் புரியாமல் பித்தன் என்று பெயரைச் சுமக்கும் சிறுவன் பித்தனா? யார் பித்தன்?
நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கேறிய தசைநார்கள் நொடியில் இறுக்கம் தளர்ந்து இலகுவாக...சட்டென்று ஒரு நெகிழ்வு பிரவகித்தது மனதில். பெரியப்பா மன நல மருத்துவர்தானே. அந்தப் பையனைக் கூட்டிக் கொண்டு போய் அவரைப் பார்த்தால் என்ன? முதலில் அவன் அம்மாவை பார்த்துப் பேச வேண்டும். சுந்தர மூர்த்தி மாமா இந்நேரம் வந்திருப்பார். அவருக்குதான் அவன் வீடு தெரியும். ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியவளாய் சுந்தரமூர்த்தி வீடு நோக்கி நடக்கலானாள் கனகா. மனதில் இனம் புரியாத அமைதி நிலவியது.
Monday, March 17, 2008
ரசனை மாற்றம் Vs கருத்து வேறுபாடு Vs பலப்பரிட்சை
பள்ளிப் பருவத்தில் ரஜினி - கமல், ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா/ரத்தி, யேசுதாஸ் - எஸ்.பி.பி , சுஜாதா - பாலகுமாரன், பாலசந்தர் - பாரதிராஜா ... இது போல் பல விஷயங்களுக்காகவும் கட்சி கட்டிக் கொண்டு செய்த வாக்குவாதங்கள், சண்டைகள்..இதெல்லாம் ரசனையா என்ற அற்பத்தனமான விஷயத்துக்கும் அடாவடியாய்ச் சண்டைகள்..ஒரு முறை வாக்குவாதம் தீவிரமாகி ஒரு தோழியுடன் சில நாட்கள் பேசாமல் இருந்ததெல்லம் நினைத்தால் சிரிப்பாக வருகிறது. வேலைகள்/கவலைகள் அதிகமில்லாத காலத்தில் இப்படியிருப்பது இயல்புதான்.
எப்போதும் வேறுவிதக் கவலையில் இருக்கும் உயர்தர வகுப்பினருக்கு இந்தப் பலப்பரிட்சைகள் விவாதங்கள் என்ற பெயரில் அவசியமில்லை. காரியத்தில் மட்டுமே கண். எப்போதும் வயிற்றுப்பாட்டைப் பற்றிய கவலையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை. நடுவில் ஊசலாடும் வர்க்கத்திடம்தான் அதிகம் கூச்சலும், குழப்பமும்.
இவையெல்லாம் தனி மனித விருப்பத்தைப் பொறுத்த ரசனை மாற்றங்கள். கொள்கைப் பிடிப்புக்காய் மாறும் ரசனைகளும் பல உண்டு.
திரைப்படம்/தொலைக்காட்சி/பத்திரிகை - இந்தத் துறைகளை எடுத்துக்கொண்டால் மக்கள் ரசனைக்காகத் தருகிறோம் என்ற பெயரில் வகை வகையான ரசனைகள் வரிசைப்படுத்தப் படுகின்றன.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..
மதம் - கேட்கவே வேண்டாம். இதில் ரசனைக்கு இடமில்லைதான். பல சமயம் பிறப்பால், சில சமயம் சுய தேர்வால் ஏற்படுகின்ற ஒரு விஷயம். கொள்கைகளின் அடிப்படையில் ஏற்படும் வேறுபாடுகள் மனிதருக்கு மனிதர் மாறுவதை இங்கும் காணலாம். ஈடுபாடு இல்லாதவர்க்கும் கருத்து வேறுபடு என்ற பெயரில் வாக்குவாதங்களுக்குக் குறைவில்லை. ஆன்மீகத்துக்குப் பல முகமாகிப் போக மதங்கள் மனிதனைக் காப்பாற்றுவதை விட, மனிதன் வரிந்து கட்டிக் கொண்டு மதங்களைக் காப்பாற்ற வேண்டிய பரிதாப நிலை.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..
அரசியல் - இதிலும், பதவிகளில் இருப்பவர்கள், கட்சித் தலைவர்கள் கூட எல்லா விஷயங்களிலும், எல்லா நேரங்களிலும் அதே முக்கியமான கொள்கைப் பிடிப்பிலிருந்து விலகாமல் நிற்கிறார்களா என்பது சந்தேகமே. தலைவர்கள் இப்படியென்றால் தொண்டர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..
இப்படி ஒவ்வொரு துறையிலும் ரசனை மாற்றங்கள்..கொள்கைப் பிடிப்புகள் கருத்து வேறுபாடுகளாக உருவெடுத்து போட்டியிலும், பலப்பரிட்சையிலும் தொடர்ந்து..ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
ஆனால் அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறைக்கு இதற்கான ஈடுபாடு இவ்வளவு ஆழமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அன்று தொலைக்காட்சி, கணினி எல்லாம் ஏது? இன்றுள்ள சாதனங்கள் பல வேண்டவே வேண்டாம் என்று துரத்த முடியாத அளவுக்கு நம் வீடுகளில் அழுத்தமாய் வந்து அமர்ந்துள்ளது. இன்றைய வளர்ந்து வரும் குழந்தைகளின் பார்வையில் பலவிதமான செய்திகள், துறைகள்,சவால்கள்....
ஒவ்வொன்றுக்கும் ரசனை வளர்த்துக் கொள்வதற்கே நேரமில்லாத போது,கருத்து வேறுபாடுகளும், பலப்பரிட்சைகளும் சற்று பலவீனப்பட்டுப் போகின்றன.
இவர்களின் விவாதங்கள்..ஈடுபாடு இருந்தாலும் / இல்லாவிட்டாலும் இந்த ரீதியில்தான் இருக்கும்..அடுத்தவர் மீது தன் கருத்தைத் திணிப்பதாக இருக்காது என்றே தோன்றுகிறது.
நபர் 1: எனக்குக் கவிதையே பிடிக்காது. (இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 2: எனக்குக் கதையே பிடிக்காது.(இருக்கட்டும்.)
நபர் 1: பின் நவீனத்துவம் எனக்குப் புரிவதில்லை.(புரிய வேண்டாம்.)
நபர் 2: மொக்கை எனக்குப் பிடிப்பதில்லை.(ஏன் பிடிக்கணும்?)
நபர் 1: இந்த மதம்தான் சரியானது.(இருக்கட்டும்.)
நபர் 2: இல்லை. இந்த மதம்தான் சரியானது.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 3: கடவுளே இல்லை..இருக்கிறார் என்பவன் முட்டாள்.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 4: கடவுளே இல்லை என்று சொல்லும் நீ தான் முட்டாள்.(அதுனால் என்ன குறைஞ்சு போச்சு?)
நபர் 1: அஜீத் தான் எங்க தல..சூப்பரா கலக்குறாரு..(வச்சுக்கோ)
நபர் 2: இளைய தளபதிதான் என் சூப்பர் ஸ்டாரு..(வச்சுக்கோ)
நபர் 1: எங்க கட்சித் தலைவருக்குதான் நல்ல எதிர்காலம்...வலுவான கொள்கைப்பிடிப்பு..(நல்லா இருக்கட்டும்)
நபர் 2: அதெல்லாம் தலைவர் காலத்துக்கப்புறம் பாப்போம்..என்ன நடக்குதுன்னு..(நல்லாப் பாரு..)
நபர் 3: புதுத் தலைமைதான் தமிழ்நாட்டுக்குத் தேவை..திராவிடம் போதுமப்பா..(புதுசுதான் வந்துட்டுப் போகட்டுமே.என்ன போச்சு?)
நபர் 4: எந்தப் பழைய கட்சியும் வேணாம்ப்பா..ரசிகர் மன்றக் கொடிகள்தான் கட்சிக்கொடியா வரணும்...நாம் நல்லா உருப்படணும்னா..(நல்லா உருப்பட்டுக்கோ..)
நபர் 1: தங்கமனிகளுக்குதான் அதிகம் கஷ்டம்.(அப்படியா?)
நபர் 2: காலத்துக்கும் ரங்கமணிக்குதான் கஷ்டமோ கஷ்டம்.(அய்யோ, அப்படியா)
இப்படி அடைப்புக் குறிக்குள்ள இருக்கிற மனோபாவம் இன்றைய குழந்தைகளிடம் / வளர்ந்து வரும் தலைமுறையிடம் கொஞ்சம் காண முடிகிறது. அஜீத், விஜய்க்காக சண்டை போடுகிற பள்ளிப்பிள்ளைகள் இன்று பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஏதோ புதுப்படம் வெளிவரும் சமயம்..சில கூத்துகள் மட்டும் இன்றும் தொடர..நடிகர்கள்தான் ரசிகர்களை விடப் படங்களில் ஒருவரை ஒருவர் அதிகம் தாக்கிப் பேசுகின்றனர்.
பழையது பிடிக்காது..ஆனாலும் தவிர்க்க முடியாது என்று ரீ மிக்ஸ் கலாசாரத்தைத் திரைத்துறையில் புகுத்தியது போல்..வேண்டியவற்றை, வேண்டிய முறையில் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இவர்களிடம் நிறையவே உள்ளது.
பலப்பரிட்சையென்ற பெயரில் அர்த்தமில்லாத விவாதங்கள் அளவுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோகாத இந்த இளைய தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் எதார்த்தவாதிகள்தான்.
Friday, March 14, 2008
காவியப்பாவை ஜீவிதம்
இணைமொழிய இயலாதன்றோ?
நின் எழில்மென்மை நல்நளினம்
வேனிலினும் வனப்பன்றோ!
சித்தம்கவர் சித்திரைப்பூ மொட்டுகளை
மெத்தனமாய் அளைந்து செல்லும்
வேனிற்தென்றல் அழுத்தமானது;
வேனிலின் வாழ்நாளோ
குத்தகையில் கொஞ்சம் குறைந்திட்டது.
கணப்பொழுது வானின் கண்ணது
சுடர்விட்டுப் பொலிந்திடும்.
மறுகணமே தன் தங்க நிறம்
மங்கலுற்று மயங்கிடும்.
எழிலார்ந்த எந்தவொன்றும்
எழிற்கோலம் சற்றே பிறழ்ந்திடும்.
விதிவசத்தால் சில பொழுது,
வழிமாறாது சென்றிடும்
இயற்கையால் சிலபொழுது.
எனினும் நின் எழில்வேனில்
என்றென்றும் மங்கிடாது,
தனியழகின் தன்மையதனை
ஒருபோதும் இழந்திடாது.
காலத்துக்கும் வாழும்
காவியத்தின் வரிகளில்
வளர்ந்து வரும் நின்னழகை
மரணதேவனும் தன் நிழலில்
வசப்படுத்தல் இயலாது.
மனிதனவன் சுவாசிக்கும் காலம்வரை
கண்களது காட்சிகள் காணும்வரை
இந்தக் கவிதையும் வாழ்ந்திருந்து
நின்னையும் வாழவைக்கும்.
ஷேக்ஸ்பியரின் Sonnet - 18ன் மொழிபெயர்ப்பு முயற்சி/பயிற்சி..
ஏற்கனவே செய்த இந்த முதல் முயற்சி திருப்தியில்லாததால் மீண்டும்...
ஆங்கிலத்தில்:
Shall I compare thee to a summer's day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer's lease hath all too short a date:
Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimmed,
And every fair from fair sometime declines,
By chance, or nature's changing course untrimmed:
But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow'st,
Nor shall death brag thou wander'st in his shade,
When in eternal lines to time thou grow'st,
So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.
Thursday, March 13, 2008
நீ மரணித்தும் உயிர்த்திருப்பாய்!
இனியவளே!
உன்னை
இளவேனில் தினத்துக்கு
இணையாக்கிப் பாடவா?
நீ அதனினும்
அழகானவள்,
மென்மையானவள்..
நளினமானவள்..
மனம் கவரும்
மே மாத
மலர் மொட்டுகளைச்
சற்றே வீம்பாக
அளைந்து போகும்
அழுத்தமான தென்றல்..
(உன் மென்மைக்கு இணையாகுமா?)
இம்மண்ணில்
வேனில் பருவத்தின்
குத்தகை தினங்கள்
மிகவும் குறைவுதானே.
(உன் அழகு அப்படியா?)
சில பொழுது சுடுவெயிலால்
தங்கப் பொலிவுடன் தகதகக்கும்
வானத்தின் கண்கள்
பல பொழுது மேகமூட்டத்தால்
மங்கித்தான் போகும்.
விபத்தால் சில பொழுது,
மாற்றம் எழுதிச்செல்லும்
இயற்கையின் விளைவால்
சில பொழுது..
எந்தவொரு அழகுமே தன்
அழகு நிலையிலிருந்து
தாழும்..சரியும்.
அன்பே,
உன் அழகு இளவேனில்தான்.
எனினும் என்றென்றும்
மங்கி மறையாத இளவேனில்.
மரண தேவனும்
தன் நிழற்பரப்பினுள்
உன்னை வலித்திழுக்க முடியாது.
உன்னை வசப்படுத்தியதாக
வனப்புமொழி பேசி
எக்காலமும் எக்காளமிட முடியாது.
ஏனெனில் என்னவளே!
நீ மரணித்தும் உயிர்த்திருப்பாய்..
என்றும் வாழும்
என் கவிதையின் வரிகளில்
என்றென்றும் நீ வாழ்ந்திருப்பாய்..
காலங்கள் கடந்தும் உயிர்த்திருப்பாய்..
இப்பூவுலகில்
மனிதனின் சுவாசம் உள்ளவரை
கண்களில் பார்வைகள் உள்ளவரை
என் கவிதையும் வாழ்ந்திருக்கும்..
உன்னையும் உன் அழகையும்
என்றென்றும் வாழ வைத்து
என் கவிதையும் வாழ்ந்திருக்கும்!
(ஷேக்ஸ்பியரின் Sonnet-18 ன் மொழிபெயர்ப்பு முயற்சி/பயிற்சி)
(இதில் அவ்வளவு திருப்தியில்லாததால்
காவியப்பாவை ஜீவிதம் பதிவில் மீண்டும் ஒரு முயற்சி)
ஆங்கிலத்தில்:
Shall I compare thee to a summer's day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer's lease hath all too short a date:
Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimmed,
And every fair from fair sometime declines,
By chance, or nature's changing course untrimmed:
But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow'st,
Nor shall death brag thou wander'st in his shade,
When in eternal lines to time thou grow'st,
So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.
Monday, March 10, 2008
தேடல்
Sunday, March 9, 2008
பூவரசி தாமரை பிறந்த கதை
பூமுடி சூட்டிடப்
பலரும் விரும்பும்
பூவொன்று கேட்டுப்
பூமகளிடம்* வந்தனள்
காதல் தேவதை.*
புலவர்தம் பாக்களில்
புகழ்ப் பாமாலை
பல்லாயிரம் சூடிய
ரோஜாவும் அல்லியும்
நெடுங்காலமாய்ப் போட்டி
பூவரசி பட்டத்துக்காய்..
பூத்தது போராட்டம்
ஆன்மக் கடவுளின்*
அழகு நந்தவனத்தில்..
புயலென மாறிய
பூக்களின் போட்டி.
பூவரசி யார்?
"அழகு தேவதை ஜூனோவின்*
அம்சங்கள் பொருந்தியது அல்லியே!
ரோஜாவுக்கு இந்த
அழகு இல்லையே"
என்றது ஒரு பூக்கூட்டம்..
"அல்லி மட்டும் அழகா என்ன?
ரம்ய சுகந்தம்
அள்ளித்தரும் ரோஜாவுக்குப்
போட்டியா என்ன?"
என்றது ஒரு பூக்கூட்டம்.
எந்தப்பூ?
காதல் தேவதை மயங்கினள்.
சற்றே குழம்பினள்..
பின் தெளிந்தனள்.
ரோஜாவின் காந்த சுகந்தம்
அல்லியின் கம்பீர அழகு
இரண்டும் சரிவர மேவிய
புத்தம் புதிய
பூவொன்று வேண்டினள்.
எந்த நிறம்?
ரோஜாவின் இளஞ்சிவப்பா?
அல்லியின் தூயவெண்மையா?
மயங்கினள் மீண்டும்
காதல் தேவதை.
இரண்டும் இழைத்த
இனிய வண்ணம் வேண்டினள்.
பூமகள் தந்தனள்
புதுமலர் தாமரை
இளஞ்சிவப்பு, தூயவெண்மை
இரண்டும் இணைந்த
புத்தம்புது வண்ணத்தில்
புதுப்பொலிவுடன்
பூவரசி தாமரை!
கொஞ்சம் நம் இந்தியக் கலாசாரத்தையும் ஒத்திருக்கும் கிரேக்க/ரோமானியக் கலாசாரத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுள் உண்டு..
பூமகள் - Flora ......... (Roman Goddess of Flowers)
காதல் தேவதை - Love/Venus (Goddess of Love)
அழகு தேவதை - Juno .......... (A Beautiful Roman Goddess)
ஆன்மக் கடவுள் - Psyche...... (Goddess of the Soul)
Toru Dutt எழுதிய The Lotus என்ற கவிதையின்
மொழிபெயர்ப்பு முயற்சிதான் இது.
Tuesday, March 4, 2008
சின்னப் பெண்ணான போதிலே - கண்மணி tag
அம்மா இங்கே வா வா!
ஆசை முத்தம் தா தா!
இலையில் சோறு போட்டு,
ஈயைத் தூர ஓட்டு!
நிலா நிலா ஓடி வா!
நில்லாமல் ஓடி வா!
மலை மேலே ஏறி வா!
மல்லிகைப்பூ கொண்டு வா!
கைவீசம்மா கைவீசு!
கடைக்குப் போகலாம் கைவீசு!
மிட்டாய் வாங்கலாம் கைவீசு!
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு!
பிஸ்கெட் பிஸ்கெட்
ஜாம் பிஸ்கெட்
என்ன ஜாம் கோஜாம்
என்ன கோ டிகோ
என்ன டி பன்ரொட்டி!
கீரை விதைப்போம்
கீரை விதைப்போம்
வாடா கண்ணா வா!
கீரை விதைத்தால்
கோழி கிளறும்
போடா வர மாட்டேன்!
Sunday, March 2, 2008
இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஒருவர் தான் தவறுகளே செய்யவில்லை என்று நம்புவாராயின், அவர் தன் வாழ்வில் புதிய முயற்சி எதுவுமே மேற்கொள்ளவில்லை என்று அர்த்தம்.
சுவாமி விவேகானந்தர்:
பிரச்னைகளை எதிர்கொள்ளாத நாள் என்று ஒன்று இருந்தால், நீங்கள் தவறான பாதையில்
செல்கிறீர்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.
ஆப்ரஹாம் லிங்க்கன்:
எல்லோரையும் நம்பும் குணம் ஆபத்தானது. ஒருவரையுமே நம்பாத குணம் அதைவிட
ஆபத்தானது.
அடால்ஃப் ஹிட்லர்:
நீ பெற்ற வெற்றியை விவரிக்க வேண்டிய அவசியமில்லை..உன் தோல்வியை விவரிக்க நீ இருப்பதே அவசியமில்லை.
தாமஸ் எடிசன்:
ஆயிரம் முறை தோற்றுவிட்டதாக நான் சொல்லமாட்டேன். தோல்வியை ஏற்படுத்தும்
ஆயிரம் வழிகளைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றுதான் சொல்வேன்.
ஆலன் ஸ்ட்ரைக்:
இந்த உலகத்தில் ஒருவரோடும் உன்னை ஒப்பிட்டுப் பேசாதே. அப்படி ஒப்பிடுவது உன்னையே நீ அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்.
அன்னை தெரசா:
பிறரை ஆராய முற்பட்டால், அவர்களிடம் அன்பு செலுத்த நேரமில்லாமல் போய்விடும்.
வில்லியம் ஷேக்ஸ்பியர்:
வெற்றிக்கான மூன்று வாக்கியங்கள்:
- அடுத்தவரை விட அதிகம் தெரிந்து கொள்வது.
- அடுத்தவரை விட அதிகம் உழைப்பது.
- அடுத்தவரை விடக் குறைவாக எதிர்பார்ப்பது.
போனி(Bonnie) ப்ளேர்:
வெற்றி என்பது முதலிடம் என்று எப்போதும் அர்த்தம் ஆகாது. வெற்றி என்பது, முன் நீ செய்ததை விடச் சிறப்பாகச் செய்திருக்கிறாய் என்றும் பொருள்படும்.
சார்லஸ்:
உடைக்கக் கூடாத நான்கு விஷயங்கள் - நம்பிக்கை, சத்தியம், உறவு மற்றும் இதயம்(அன்பு). இவை உடைந்தால் அதிகம் சத்தம் உண்டாவதில்லை, ஆனால் அதிகம் வலிகள் உண்டாகும்.
லியோ டால்ஸ்டாய்:
உலகத்தை மாற்ற வேண்டும் என்று அனைவரும் எண்ணுகிறார்கள். தங்களை மாற்றிக் கொள்ள எண்ணுவதில்லை.
(மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வந்தது..என் மொழிபெயர்ப்புப் பயிற்சிக்கு உதவியது)
Wednesday, February 27, 2008
கலைகளுக்குதான் மரணமில்லை..கலைஞனுக்குதான் உண்டே..
உன்னிடம்
கற்றதும் பெற்றதும்
ஏராளம்!
உன் எண்ணங்கள்
என் கைப்பிடித்துச் சென்று
காட்டிய வழியெல்லாம்
பூத்துச் சிரிக்கின்றது
பூபாளம்!
கதைகள் மீது
காதல் பிறக்கச் செய்தாய்!
எழுத்தினாலே
என்னுள் புரட்சி செய்தாய்!
கண்ணில் கண்ட
உலகங்கள் மட்டுமல்ல
காணா உலகங்களையும்
கவின்மிகு காட்சி செய்தாய்!
அறிவில் கண்ட
அறிவியல் ஆழம்,
அண்ட சராசரத்தின்
அகலம் நீளம் சகலம்
அறிந்து வைத்திருந்தாய்!
உறவில் ஒன்று
உயிர் நீத்தது போல்
குருவில் ஒருவர்
குறைந்து விட்டது போல்
தோழமை ஒன்றைத்
தொலைத்து விட்டது போல்
துடிக்கிறது என் மனம்!
இனி உன்
எழுத்து மட்டும்தானே
எம்முடன் தங்கும்!
கலைகளுக்குதான் மரணமில்லை..
கலைஞனுக்குதான் உண்டே..
Saturday, February 23, 2008
மட்டை(ட)ப் பந்து
ஒரு நாளாய்த் தொடர்ந்து
அரை நாளில் அடங்கி
அரிதார அவதாரத்தையும்
நெட்டித் தள்ளிய
மட்டை(ட)ப் பந்து!
அன்று
விளையாட்டு வினையாகி
விலை கொண்டது உயிர்தனை.
இன்று
வியாபார விகற்பமாய்
விசுவரூபமடுத்து
வீரனே
விலை பேசுகிறது உன்னை.
விலை போகச் சம்மதிக்கும்
வீரனே! நீயெல்லாம் உயர்திணை?
பிடித்த மட்டையும்
எறிந்த பந்தும்
ஏலம் போனது ஒரு காலம்!
மட்டை பிடிப்பவரும்
பந்து எறிபவரும்
ஏலம் போகும்
அவமான அவலம்!
காலத்தின் கோலம்!
காலம்! கலிகாலம்!
ராமி! அபிராமி!
Wednesday, February 20, 2008
நிறம் மாறும் விதிகள்
சரி. போற இடத்துல புருஷனுக்கு அனுசரிச்சு நடக்கிறவதான் பொம்பள. புது இடம். கொஞ்சம் அப்டி இப்டித்தான் இருக்கும்.நீதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போணும். ஆம்பளைங்க வெளில சுத்திட்டு வருவாங்க..ஆயிரம் டென்ஷன் இருக்கும். பாத்துப்பதமா நடந்துக்கோ..மாமியார், மாமனார்கிட்டயும் அப்படித்தான்..ஏடாகூடமா ஏதாவது பண்ணாத..முக்கியமா அவங்க அப்பா,அம்மா பத்தி உன் புருஷன்கிட்ட குறை சொல்லிட்டே இருக்காத..
ரம்யாவின் தாயார் தன் கணவனிடம்:
என்ன அப்டி முழிக்கிறீங்க? ஆபீஸாம்...டென்ஷனாம்..கத்தரிக்கா..வீட்ல இருந்தா எங்களுக்கு மட்டும் டென்ஷன் இல்லையா..நல்லா வளத்து வெச்சிருக்காங்க புள்ளய உங்க அப்பா, அம்மா எதுக்குமே லாயக்கில்லாம.. அவுங்களத்தான் சொல்லணும்..
** ** ** ** * * ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **
ரம்யாவின் மாமியார் தன் மகள் உமாவிடம்:
ஏண்டி..வரும்போது பீரோவெல்லாம் பூட்டிட்டுத்தான வந்த? குடும்பத்துல அத்தனை பேர் நடமாடுற இடம்..ஏதாவது காணோம்னா யாரைச் சொல்ல முடியும்..பாத்துப் பாத்து வாங்கிக் கொடுத்தது..பத்திரமா வச்சுக்கோடி..
உன் மாமியாருக்கென்ன..கையும் காலும் நல்லாத்தான் இருக்கு..அவ புடவைய நீதான் மடிக்கணுமா..நீ என்ன அவ வீட்டு வேலக்காரியாடி?சும்மா உன்னயவே வேல வாங்கிக்கிட்டு..ஆனாலும் ஒனக்குச் சாமர்த்தியம் பத்தாதுடி..
ஆமா..உன் நாத்தனார்க்காரி இன்னும் அடிக்கடி வந்து டேரா போடுறாளா..போன தரம் உங்க வீட்டுக்கு வந்தப்பவே எனக்குப்பத்திக்கிட்டு வந்துச்சு..உன் மாமியார் வேற மீனை வறு, கறிக்குழம்பு வையி அவளுக்குப் புடிக்கும்னு..நீ ஒருத்தியே எவ்வளவு வேலசெய்ய முடியும்..என்னமோ அவ வீட்ல சமைக்கவே சமைக்காதது மாதிரி..உங்க வீட்டுக்கு வந்தாத்தான் சோத்தையே பாப்பாளோ..
ரம்யாவின் மாமியார் ரம்யாவிடம்:
ஏம்மா ரம்யா..என் நீலக் கலர் புடவையக் காணோம்..துவைச்ச துணியெல்லாம் மடிச்சு ஒழுங்கா வக்கிறதில்லயா..இல்ல ஒரு வேள நாந்தான் மறந்தாப்புல உன் பீரோல வச்சுட்டேனா பாரு..
அப்டியே சிக்கன் 65, முட்டைக் குழம்பு, இறாத் தொக்கு பண்ணிடு..உமாவுக்கு ரொம்பப் புடிக்கும்..கொஞ்சம் தேங்காய்ப்பால்சாதமும் பண்ணிடு..
** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **
ரம்யாவின் கணவன் ரம்யாவிடம்:(கல்யாணமான் புதிதில்)
வயசானவங்க அப்டித்தான் இருப்பாங்க..இன்னும் எத்தன காலம் இருக்கப் போறாங்க..அதுவரைக்கும் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயேன்..படிச்ச பொண்ணுதானே நீ..சும்மா சும்மா ஒப்பாரி வச்சுக்கிட்டு..நல்லா வளத்து வச்சுருக்காங்க..
தொட்டாச்சிணுங்கி..
ரம்யாவின் கணவர் ரம்யாவிடம்:(தன் மகளுக்கு வரன் தேடுகையில்)
மாமியார் மாமனார் இருக்கிற இடமெல்லாம் வேணாம்..கூடவே இருந்து என் பொண்ணு உயிர வாங்கறதுக்கா? வர்றவனும் என் பொண்ண எப்டிப் பாத்துக்குவானோ? இப்பக் காலம் இருக்குற இருப்புல..இவ்ள படிக்க வச்சுப் பாத்துப் பாத்து வளத்து வச்சுருக்கேன்..கண் கலங்காமப் பாத்துக்குவான்னு என்ன நிச்சயம்..நம்ம பார்வையிலேயே இருக்குறதுதான் நல்லது..பேசாம வீட்டோட மாப்பிள்ளையாப் பாத்துற வேண்டியதுதான்..
ரம்யா: ????!!!!
Monday, February 18, 2008
பெண்களின் அரசியல் அறிவு
"ஆரம்பிச்சுட்டீங்களா..செய்திகள் வந்தா சேனல் மாத்த மாட்டிங்களே..எந்தக் கட்சி வந்தா நமக்கு என்ன செய்யப் போறாங்க.."
பெண்கள் என்றாலே அரசியல் பேசமாட்டார்கள் என்பதுதான் நிலவரம். சமையல், சீரியல், நகை, சினிமா,குழந்தைப் பராமரிப்பு, புத்தகம் என்று பல விஷயங்களிலும் பெண்கள் பெயர் இணைத்துப் பேசப்படுவது போல் அரசியலுடன் இணைத்துப் பேசப்படுவதில்லை.
இதற்குக் காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் ஒரு வகையில் பெண்களாகவேதான் இருக்கின்றோம். வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்துவதோடு நம் அரசியல் தொடர்பு நின்று போகிறது.(எத்தனை பெண்களை வீட்டில் உள்ள ஆண்கள் இதற்காகக் கூட வற்புறுத்த வேண்டிய நிலைமை உள்ளது தெரியுமா?) பெண்களின் அரசியல் அறிவுக்குத் தடைபோடும் சில ஆண்களும் ஒரு காரணம்தான்.
வீட்டின் சூழலும் இதில் பெரும்பங்கு வகிக்கிறது. பொது அறிவு, பாட அறிவு இதனுடன் சேர்த்து நாட்டு நடப்பு பற்றியும் சிறு வயதிலேயே அறிமுகமாகும் சூழலில் வளர்த்த பெண்களுக்கு அரசியல் அறிவும் சாதாரண விஷயமாகி விடுகின்றது. இன்னும் சில வீடுகளில் கணவர் இதில் பெரும்பங்கு வகிக்கிறார். இந்தச் சூழல் இல்லாமல் வளரும்போதுதான் அரசியல் என்பது நமக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்ற போக்கு பெண்களிடம் வளர்ந்து, தங்கியும் விடுகிறது.
தாய்க்குலங்கள் என்ற வார்த்தைப் பிரயோகமே அரசியல் மூலம் பிரபலமானதுதானே?வாக்களிப்பதோடு கடமை நின்றுவிடுவதில்லை..அவ்வப்போது நம் நாட்டில், ஏன் உலக அளவு அரசியல் நிலவரங்கள் அறிந்து கொள்வது நம் தார்மீகப் பொறுப்புகளில் ஒன்றாய் விளங்க வேண்டும்.
அரசியல் கட்சியில் இருக்கும் பெண்கள் கூட மகளிரணி உறுப்பினர்கள் என்று சேர்க்கப்பட்டு மந்தைக்குள் இருக்கும் ஓர் ஆடாய் இருக்கிறார்களே ஒழிய, தான் சார்ந்திருக்கும் கட்சியென்ன, அதன் கொள்கையென்ன முற்றிலும் அறிந்து ஈடுபடுகிறார்களா என்றால் அநேகமாக இல்லையென்றே சொல்ல வேண்டும்.
தொலைக்காட்சி என்ற ஊடகம், இந்த விஷயத்தில் உண்மையிலேயே பெரும்பங்கு வகிக்கிறது. அன்றாடம் செய்தித்தாள் படிக்காத பெண்கள் கூட தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கும் போதும், திரைப்படம் மற்றும் சில நிகழ்ச்சிகள் பார்க்கும் போதும் ஏதோ ஒரு சமயம் செய்திகள் காதால் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இது போன்ற சூழல் சற்றே வயது முதிர்ந்த, அல்லது நடுத்தர வயதுப் பெண்மணிகளிடம் அதிகரித்திருப்பதை நாம் அண்மைக்காலங்களில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இது வரவேற்கத்தக்கதொரு நல்ல மாற்றமே.
Monday, February 11, 2008
அவன் இவன் என்ற ஏக வசனம்
"விஜய் சூப்பரா நடிச்சிருக்காண்டா.."
"நமீதா நல்லா ஆடிருக்காடா.."
ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்ற போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அவர் மகள் "இந்த சத்யராஜ் படமே வேஸ்ட்...ஏம்ப்பா இவன் படத்தைப் போடுறீங்க.."அவள் அப்பா தேமே என்று சானல் மாற்றினார்.
செய்திகள் வந்தது. ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தார். "இந்தம்மா வந்துருச்சா...ஏதாவது கலைஞர் பத்திப் பேசும் இப்போ..இவளுக்கு வேறு என்ன வேலை?" என்றாள் அக்குழந்தை.
கலைஞர் பேசிக் கொண்டிருக்க.."அய்யோ இவன் வந்துட்டானா.." என்றது மறுபடியும். நண்பருக்கு வந்ததே கோபம். "பெரியவங்களை அப்படி மரியதையில்லாமப் பேசக் கூடாது" என்றார்.
அப்போது யோசித்தேன்..இதே தவறுகளை நானும் செய்து வந்திருக்கிறேன். இன்னும் செய்தும் வருகிறேன். சில நேரங்களில் இதற்காக என்னைத் திருத்திய என் பெற்றோர், என் கணவர், இன்னும் பலரும் இது போல் பேசுகிறோம்.
முக்கிய பிரமுகர்களைக் குறிப்பிட்டுப் பேசும் போது இது இயல்பாகிப் போகிறது நம்மில் பலருக்கு. நம் மனதுக்குப் பிடிக்காதவர்களை மட்டுமல்ல..நம் மனதுக்கும் மிகவும் பிடித்தவர்களையும், வயதில் பெரியவர்களையும் இப்படி ஏக வசனத்தில்தான் அழைத்து வருகிறோம்.
சில சமயம் என் மகளை இதற்காகத் திருத்தும் நான், இன்னும் இப்படித்தான் பேசுகிறேன். இந்த விஷயத்தில் எழுதும் போது இருக்கும் மரியாதைப் பண்பாடு பேசும் போது இல்லாமல் போய்விடுகிறது.
சொற்குற்றம், பொருட்குற்றம் செய்தால் பரவாயில்லை என்று கவிஞர்களுக்கு ஒரு விதிவிலக்கு (Poetic License) உள்ளது போல் இது வி.ஐ.பி. விளிப்பில் விதிவிலக்குதான்.
தெரிந்தே செய்யும் தவறுகளுள் இதுவும் ஒன்று.
இப்படி விளிக்காத விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட்.
Sunday, February 10, 2008
சாகரன் என்ற கல்யாண் -ஒரு நினைவாஞ்சலி
2006 டிசம்பர் இறுதி வாரத்தில் முதல் முறையாகக் கல்யாண் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க நேர்ந்தது. உணவு விடுதி ஒன்றில் ஒரு விருந்தில் கலந்து கொண்ட போது..சிரிப்புடன் சின்னதாக ஒரு அறிமுகப் படலம். அன்றிரவு அவர்கள் இந்தியாவுக்கு 2 வார விடுமுறை செல்வதற்கான ஆயத்தத்தில் இருந்தார்கள். அபர்ணா கல்யாண் பெற்றோருக்கு மற்றும் ஊரிலுள்ள அனைவருக்கும் வாங்கிய பரிசுப் பொருட்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 3 வயது வர்ணிகா துறுதுறு குழந்தையாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது, மழலையில் ஓரிரு வார்த்தைகள் பேசியது இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது.
இரண்டாவது முறை பிப்ரவரி 1,2007 அன்று, தூதரக வளாகத்தில் நடைபெற்ற ஒரு தமிழ்மன்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது ஒரு சிறு புன்னகைப் பரிமாற்றம்.
பிப்ரவரி 11ந் தேதி மதியம் கல்யாண் மறைந்த செய்தி..நம்பவே முடியவில்லை..ஆனாலும் நிஜம். ரியாத்தே ஸ்தம்பித்துப் போனது. கல்யாண் குடும்பம் இங்கிருந்து சென்றது முதல் அங்கே இறுதிச் சடங்கு நடந்தவரை நண்பர், அறிந்தோர், அறியாதவர் அனைவரும் மனதளவில் உடனிருந்து வழிநடத்தினோம்.
சில வாரங்கள் முன் கல்யாண் தம்பதி, ஒரு மேடை நாடகத்தில் மணமக்கள் கோலத்தில் மாலையும் கழுத்துமாக இருந்த புகைப்படத்தை ஒரு மடலில் காண நேர்ந்த போது மனம் வெடித்துப் போகாதவர்கள் யாருமே இல்லை. துக்கத்தைத் தொண்டையில் அடக்கி இறுகிப் போயிருந்த அபர்ணா, ஊருக்குப் போகிறோம், அப்பா ஊரில் இருக்கிறார் என்று விவரங்கள் அறியாத வர்ணிகாவின் பேச்சு..மனதைப் பிசைந்தது.
அவரைப் பற்றிய செய்திகள் பலர் அறிந்தது என்றாலும், தமிழ்ச்சங்க உறுப்பினர் என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன் அதுவரை. அதன் பின் நடந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட போதுதான் வலைக்களத்தில் அவர் புரிந்த தொழில்நுட்பச் சேவைகள், தமிழ்ப்பதிவுலகம் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் குழந்தைகளுக்காக வலையில் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது பேராவல் புரிந்தது.
தமிழ் வலையுலக நண்பர்களின் மடல்கள், முக்கியமாக சென்னப்பட்டணம் நண்பர்கள் மடல்களின் மூலமே அவரின் சத்தமில்லாத சாதனைகள் தெரிய வந்தது. எனக்குத் தமிழ் வலையுலகங்களை அறிமுகம் செய்து வைத்தது அவர் மரணம்.
ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர், ரியாத் எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளர், தேன்கூடு திரட்டியைத் தோற்றுவித்தவர், முத்தமிழ்மன்றத்தின் நிர்வாகி என்ற பல முகங்களில் சேவைகள் புரிந்து வந்தவர். காலம் பொழுது கணக்கின்றிக் கணினி முன்னேயே தவமிருந்தவர். காலனின் சதியால் தன் கனவுகள் பலவற்றைப் பாதியில் விட்டுவிட்டுச் சென்று விட்டார்.
அவர் மனைவி அபர்ணா தற்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். வர்ணிகா இப்போது பள்ளியில் படித்து வருகிறாள். இத்தகவல்கள் அவர் நண்பர்கள் மூலம் அறிந்தேன்.
சாகரன் பதிவுகள் பதிந்த இந்த வலைப்பூ இன்று வாசம் மட்டும் ஏந்தி வெறுமையாய் நிற்கிறது.
சுடர் விளையாட்டைத்
துவக்கி வைத்தவர்
சுடராய் இன்று
பலர் இதயங்களில்..
அருகிலிருந்தும்
அறிமுகமில்லாமல் போன
ஆதங்கத்துடன்
ஆழ்ந்த வருத்தத்துடன்
அன்புடன்
நன்றியுடன்
அவருக்கு
என் அஞ்சலிகள்!
(நினைவஞ்சலியா? நினைவாஞ்சலியா? எது சரி?)
Sunday, February 3, 2008
எரிந்த மலர்களுக்கு...
தொடர்கின்றன
ஆண்டுகள் எட்டு
ஆன பின்னும்...
எந்தப் பாவத்துக்காய்
இந்தத் தீக்குளிப்பு?
தருமம் ஏன்
தவறியது
தருமபுரியில்?
எரித்த அம்புகள்
ஏகாந்தமாய்...
எய்தவர் பவனி
ஏகபோகமாய்...
மரணதண்டனை
தேவையா இல்லையா
விவாதங்கள் தொடர...
சட்டங்கள்
சில்லறைக்காய்ச்
செல்லாமல் போக...
கருவறைச் சுமையைக்
கல்லறையிலும் கண்ட
பெற்றோர் மனம்
செல்லரித்துப் போக...
கண்ணால் கண்டவர்
காதால் கேட்டவர்
நண்பர் அந்நியர்
சிந்தை நொந்து
சித்தம் தெளியாது நிற்க...
(கல்லூரி)
திரைப்படத்தின் உச்சகட்டப்
பரபரப்பு/பரிதாப
உத்திக்காய்...
ஏதோ ஒரு
காரணமற்ற காரியத்துக்காய்
நெருப்புக் கோப்புகள்
மீட்டுத் தர...
அஞ்சலிகள் மட்டுமே
தொடர்கின்றன
ஆண்டுகள் எட்டு
ஆன பின்னும்...
Thursday, January 31, 2008
பிரிவோம் சந்திப்போம் - மனோதத்துவ வகுப்பு
தனிக்குடித்தனத்தில் வளரும் ஒரே குழந்தையின் ஆதங்கம் எப்படியிருக்கும்?
மரணத்தனிமை மன நோயில் கொண்டு விட்டுவிடும்.
பாதிக்கப்பட்டவர்களின் நடத்தை எப்படியிருக்கும்?
அதற்காகச் செய்ய வேண்டியது என்ன?
மனனவியின் எதிர்பார்ப்பு என்ன?
கணவன் செய்ய வேண்டியது என்ன?
இத்தனையும் ஒன்றின் மேல் ஒன்றான சம்பவங்களாய் அடுக்கிக்கொண்டு போகிறார் இயக்குநர். ஆழமான கருத்து என்றாலும் சொல்லிய முறையில் செயற்கைப்பூசல்கள் அதிகம் என்பதால் ஏதோ மனோதத்துவ வகுப்பில் உட்கார்ந்து வந்தது போல் ஓர் அனுபவம்.
சம்பவங்களை அதன் போக்கிலேயே விட்டுவிட்டுப் புரிய வைப்பதுதான் இயக்குநருக்கு அழகு. இப்படி ஒவ்வொரு சம்பவத்தின் முடிவிலும் ஓர் ஆசிரியர் போல் புத்திமதிகள் சில நேரம் சினேகா சொல்கிறார், சில நேரம் ஜெயராம் சொல்கிறார். போதுமடா சாமி என்று ஆகிவிடுகிறது.
பார்த்திபன் கனவு இயக்குநரா இப்படி?
உறவுகளின் ஆழம், கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு, கூட்டுக் குடும்ப சந்தோஷம், இப்படி அழகிய இழைகள் உள்ள கதையைத் தன் போக்கில் போக விடாமல் மனோதத்துவ ரீதியாய்க் கொண்டு போனதால், மிதமிஞ்சிய சலிப்புதான் இறுதியில் ஏற்படுகிறது.
"புதிதாய்க் கல்யாணம் செய்து தனிமை சூழ் உலகுக்குப் போகிற பெண்கள் பயப்படப்போகிறார்கள் இந்தப் படம் பார்த்தபின்" என்று என் தோழி சொன்னாள். இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
இப்படி யாராவது இருப்பார்களா இந்தக் காலத்துப் பெண்கள் என்று வியக்கிறது மனம். இந்தப் பாத்திரப் படைப்பு தரும் வியப்பு மட்டுமே இயக்குநர் பெற்ற ஒரே வெற்றி.
இது போன்ற ஒரு மரணத்தனிமையை அனுபவித்தவள் நான் என்றாலும் கூட இது ஏதோ அபத்தத்தின் உச்சகட்டம் என்று தோன்றுகிறது.
பெண்கள் என்றாலே சீரியல் பார்ப்பவர்கள் என்ற வழக்கமான முத்திரை நாயகியின் மீது குத்தப்பட்டுவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு இருக்கிற இயக்குநர், ஏதோ தொலைக்காட்சியில் வேறு நிகழ்ச்சிகளே இல்லாதது போல் காண்பிப்பதை என்னவென்று சொல்வது?
சீரியல் பிடிக்கவில்லை என்பதால் வித்தியாசமான பெண் என்று அனனவரும் நினைக்கவேண்டும் என்பது ஒரு சறுக்கல்.
பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்:
சினேகாவின் நடிப்பு, காரைக்குடி வீடு மற்றும் திருமணம், ஒரு நிமிடம் வந்து போகும் அந்த மதுரை அத்தை, பலருக்குத் தெரியாத அட்டஹட்டி என்ற அழகான ஊரின் அறிமுகம்.
மொத்தத்தில்..
அழகான, ஆழமான கருத்துகளைச் சொல்ல வந்த இயக்குநர், செய்தித்தாள் பாணியில் விறுவிறுப்பாய்ச் சொல்லாமல், அவள் விகடன் பாணியில் மனோதத்துவ ரீதியாகச் சொல்வதுதான் மிகப் பெரிய சறுக்கல்.
(சேரன், ப்ளீஸ் இயக்குநராக மட்டும் இருந்து விடுங்களேன்.)
Tuesday, January 29, 2008
விளிம்பு
விழிகள் நிறைந்து
விழத்துடிக்கும் கண்ணீர்.
கண்ணீரின் விளிம்பில்
கரையத் துடிக்கும்
கல்லாய்ப் போன மனம்.
மனதின் விளிம்பில்
மயங்கி மீண்டும்
மலர்ந்து நிற்கும் நினைவு.
நினைவின் விளிம்பில்
நீந்திச்சென்று மீட்டெடுத்த
நிச்சய நிச்சலன அன்பு.
அன்பின் விளிம்பில்
அகன்ற துயரம்
அலையின் தொடராய் நம்பிக்கை.
நம்பிக்கையின் விளிம்பில்
நலிந்து போய்
நாடி தளர்ந்தது விரக்தி.
Saturday, January 19, 2008
இரட்டைச் சிறுகதை - ஒரே தலைப்பில்(2)
ஏன் இப்படி நடக்க வேண்டும் எனக்கு? மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்த கல்பனாவைப் பார்த்துக்
குமுறினான் மோகன். வாய் விட்டுக் கதறியழ நினைத்தான் முடியவில்லை....அருகில் இருக்கும் சொந்தங்கள் .. வாயில் துணி பொத்திச் சிறிய விசும்பல்கள், துக்க முகம் என்று அடக்கி வாசித்தார்கள். கல்பனாவின் தாயார் மட்டும் சற்றுப் பெருங்குரலில் அவ்வப்போது அழ..ஒரு இறுக்கமான மௌனம் நிலவியது.
வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலின் கீழ் ஆண்கள் அமர்ந்திருக்க,
உணவகத்திலிருந்து தருவித்த சிற்றுண்டிகள் பக்கம் ஒன்றிரண்டு பேராய்த் தொடர்ந்து சென்று பசியாறிக் கொண்டிருந்தார்கள்.
"ஈவ்னிங் 4.30 க்கு மேல்தான் எடுப்பார்களாம்."
"எலெக்ட்ரிக் சுடுகாடுன்னாலே இது ஒரு கஷ்டம்..அவன் கொடுக்கற டைமுக்குதான் நாம் போகணும்."
"இல்ல. மோகன் தான் லேட் பண்றான்..ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணப்போ கல்பனா ஒரே ஒரு தடவை வீட்டுக்குப் போகணும் போல இருக்குன்னு சொல்லிருக்கா..டாக்டர்கள் அனுமதிக்கலயாம். அதுகுள்ள இப்டியாகி விட்டது..அதுனால கொஞ்சம் நேரம் வீட்ல
வச்சுருக்க நெனக்கிறான்.."
"ஆம்புலன்ஸ் வருதாம்..சரியான டைமுக்கு வருமோ வராதோ..நைட்டே போகணும் ஊருக்கு. லீவில்ல...பஸ், ட்ரெய்ன் எல்லாம் கூட்டம்..எப்படிப் போகப் போகிறோமோ.."
அவரவர் கவலைப்படும் இடைவெளியில், கல்பனாவுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்கலாம். முதல் குழந்தை பிறக்கும் போது சுகப் பிரசவந்தான். இரண்டாவது குழந்தைக்குப் பிரசவ நேரம் நெருங்கிய போது வடபழனி மருத்துவமனையில் சேர்த்தார்கள்.சற்றுச் சிக்கல் என்று தெரியவர சிசேரியன் செய்து பெண் குழந்தை பிறந்தது. எனினும் ரத்தப் போக்கு நிற்காததால், மீண்டும் ஒரு
அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றிக் கல்பனா கண்மூடினாள். இப்படி ஒரு துர்பாக்கியம் எப்போதாவது ஒரு முறை நிகழக்கூடும் என்று மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
நான்கு வயதில் ஒரு மகன் கார்த்திக், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை விட்டு விட்டுக் கண்மூடிய 28 வயது கல்பனா ஒரு பொறியாளர்.மோகனை (30 வயது)
விடச் சற்று வசதியான குடும்பத்தில் வந்த பெண். அவளுக்கு ஓர் அண்ணன். அவனுக்குக் குழந்தையில்லை. பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த மோகன்,மூன்று அக்காக்களுக்கு ஒரே தம்பி. சரியான வேலையில்லாமல் இருந்தவனுக்கு, கல்பனாவின் அப்பாதான் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தந்து, ஒரு விட்டையும் கொடுத்து, தன் பெண்ணைக் கொடுத்தார்.
கல்பனா மோகன் வீட்டைச் சேர்ந்தவருக்கு உதவுவதில் மிகவும் உறுதுணை புரிந்தவள். அவன் அக்கா பையன்கள், பெண் சென்னையில் படிக்க வந்த போது, அவர்கள் வீட்டில் தங்கிக் கொள்ள மட்டுமின்றி, படிப்புக்காகப் பண உதவியும் செய்தவள்.
இன்று மூத்த அக்கா, நர்ஸ், தலைமாட்டில் அமர்ந்து இன்னமும் மூக்கில் இருந்து கசியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது அக்காவின் மகள் சௌம்யா தான் கல்பனா வீட்டில் தங்கிக் கலைக்கல்லூரியில் முதல் வருடமும், கல்பனா அறிவுரையின்படி வேறு சில தனி விசேட வகுப்புகளுக்கும் சென்று வந்தாள். மாமியார் இறந்து விட, மாமனாருக்கான கடமைகளையும் நன்கு செய்து வந்தாள். அலுவலகம், வீடு இரண்டுக்காகவும் உழைத்தவளுக்கு அதிகம் உதவியாக இருந்தது அவள் பெற்றோர்.மோகனின் அதிர்ஷ்டத்தைப் பாராட்டாதவர்களே கிடையாது.
ஆயிற்று. எல்லாம் முடிந்து கல்பனாவை எரித்து விட்டு வந்தாயிற்று. பிறந்த குழந்தையைக் கல்பனா வீட்டார் தங்களுடன் எடுத்துச் சென்று விட்டனர். அவர்கள் வீடு சற்றுப் பக்கம்தான். தன் அறையிலேயே மோகன் பெரும்பாலும் அடைந்து கொள்ள, தொடர்ந்த நாட்களில்
அக்காக்கள் கச்சேரி ஆரம்பம்.
"பாவம். எப்படி இந்தப் பிள்ளைகளை வளர்க்கப் போகிறானோ..வீடு கல்பனா பெயரில்தானே இருக்கிறது..." அக்கா 1.
"ஆமாம். சௌம்யாதான் நல்லா ஒத்தாசையா இருந்தா..கார்த்திக் அவகிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டான்.." அக்கா 2.
"சரிடி..எதுக்கு ரூட் போடறன்னு தெரியுது நல்லா..." அக்கா 3.
"சௌம்யா சின்னப் பொண்ணுதானேடி..படிச்சு வரட்டும்..எம் பொண்ணு கலாவுக்கும் மாப்பிள்ளை பாக்கலாம்னு இருந்தோம்..இப்ப தம்பியக்கேக்க வேண்டியதுதான்..அவன எப்படி இப்டியே விட்டுற முடியும்?" அக்கா 1.
"ஒனக்கென்னம்மா..அத்தானும் நீயும் சம்பாரிக்கிறீங்க..மகனும் வேலக்குப் போகப்போறான்..
சௌம்யாவுக்கு முடிச்சுக்கிறேன்.."அக்கா 2.
"அது சரிடி...தம்பி விஷயத்துல நீங்க என்ன பேசுறது...நல்லாருக்கே நியாயம்.."அக்கா 3.
"உனக்கு மகள் இல்ல..நீ ஏன் பேசமாட்டே?" ..அக்கா 2.
இப்படி அவர்களுக்குள்ளே பேசினாலும் தம்பியிடம் யாரும் பேசவில்லை. ஆனால் அக்கா 2 மட்டும் சௌம்யாவைவிட்டு கார்த்திக்கும், மோகனுக்கும் பணிவிடைகள் செய்யச் சொன்னாள்.
காரணம் புரிந்த போது சௌம்யா தயங்கினாள்.
பிறந்த குழந்தையைக் கல்பனாவின் அண்ணன் குடும்பம் சேலத்துக்கு எடுத்துப் போய்விட்டார்கள். கார்த்திக் மற்றும் மோகனை அவ்வப்போது வந்து பார்த்துப் போவார்கள் கல்பனாவின் பெற்றோர். அக்கா 2 மட்டும் தற்காலிகமாகக் குடும்பத்தோடு அங்கேயே தங்கிவிட, அக்கா 1,3 ஊருக்குப் போய்விட்டார்கள். அக்கா 1 அவ்வப்போது வந்து போவாள் அப்பாவை, தம்பியைப்
பார்க்கும் சாக்கில்.
மறுமணப் பேச்சை அக்காக்கள் எடுத்த போது பிடி கொடுக்காமல் இருந்தான் மோகன்.
"முதல்ல ஒன் மகள இங்க கூட்டிட்டு வந்துருப்பா..நானும் சௌம்யாவும் பாத்துக்க மாட்டோமா.."அக்கா 2.
"வீடு கல்பனா பேர்ல இருக்குது. புள்ள இல்லன்னா அனாதப் பிள்ளைய எடுத்து வளர்க்க வேண்டியதுதானே.அம்மா சொத்து மகளுக்குன்னு சட்டமிருக்குல்ல..வீட்டக் காபந்து பண்ணிக்கடா தம்பி.." அக்கா 1.
அவனுக்குப் புரிய ஆரம்பித்தது அக்காக்களின் எண்ணம். "நான் மறுமணம் பண்ணிக்கிறதா இல்ல..இதப் பத்திப் பேச வேண்டாம்"னு அவர்களை அடக்கினான். இருந்தாலும் பல இடங்களிலிருந்து பலவித அறிவுரைகள் இது குறித்து..ஏன், கல்பனாவின் பெற்றோரே
இதை வலியுறுத்தினார்கள். மகளைப் பிரிய முடியாமல் கூட்டி வந்து விட்டான்.
கல்பனா இறந்து எட்டு மாதங்கள் கழிந்தது. மனம் மாறி மறுமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துள்ளான் மோகன். அவன் கலாவையோ, சௌம்யாவையோ மணக்கத் தன் மனம் ஒப்பவில்லை என்று கூறிவிட்டான். ஆதரவற்ற விதவை, குழந்தைகளற்ற விதவைக்கு முன்னுரிமை, அல்லது அதிக காலம் மணமாகாத பெண்..தன்னை விட வயது சற்று அதிகமானாலும் பரவாயில்லை என்று சம்மதம் தெரிவிக்க, தகுந்த பெண் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
(இதுவும் உண்மைச் சம்பவம்தான்.மன்னிக்கணும் மக்களே..கொஞ்சம் நீ...ள....மாகி விட்டது)
மறுமணம்-முதல் கதை - http://pettagam.blogspot.com/2008/01/blog-post_17.html
Sunday, January 13, 2008
பொங்கல் புத்தாண்டு
பொங்கல் புதுமை!
விலைக்குறைப்பு
நகைக்கடைகளில்.
மழை நீரில்
மூழ்கிய பயிர்கள்
சாகுபடிச் சாக்குகள்
சரளமாய்ச் சொல்லி
எசமான் செய்தார்
கூலிக் குறைப்பு!
மூழ்கிப் போயின
மனைவியின் நகைகள்
குட்டி போட்ட
வட்டிகளால்!
தள்ளுபடி விற்பனை
துணிக்கடைகளில்.
கிழிந்த மேல்சட்டையைக்
கிழிந்த கால்சராயுள்
தள்ளியபடி
உழவன் மகன்...
நிவாரணமற்ற
நிலையில்
(அரை)நிர்வாணமே
நிதர்சனம்!
ஜல்லிக்கட்டு
உயிர் வதையாம்
குரல் கொடுக்க
ஆயிரம் பேர்..
உசிதத் தீர்ப்பு
துரிதம் எழுதும்
உச்ச நீதி மன்றம்!
உரத்தெழும்
உழவனின் பசிக்குரல்
காலம் காலமாய்..
செவிடாய்ப் போன
சமுதாயம்.
வழக்கு வாதம்
வழக்கொழிய
தீர்ப்புகள் யார் தருவார்?
இந்த வருடம்
பொங்கல் புதுமை!
உழவனுக்குத் திருநாள்
இல்லையல்லவா?
தமிழ்ப் புத்தாண்டு!
மாற்றுப் பெயர்
பொதுவாய்ச் சொல்லிப்
பொத்தல்கள் மறைப்பது
பொருத்தமல்லவா?
Thursday, January 10, 2008
நந்து f/o நிலாவின் விருப்பத்துக்காக - மாண்டிஸோரி கல்வி முறை
இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொருத்தமானதாக, குழந்தைகளின் ஆரம்ப காலக் கல்வித் தேவைகளுக்கேற்ப இந்தக் கல்வி முறை அமைந்துள்ளது என்பது என் கருத்து. இத்தகைய ஒரு அமைப்பை சுமார் 35 வருடங்களுக்கு முன்பே கொண்ட ஒரு பள்ளியில் நான் படித்தது இன்றைக்கும் நான் நினைத்து மகிழும் ஒரு விஷயம். அப்பள்ளியில் படித்த காலத்தில் அந்த அருமை பெருமையெல்லாம் புரியாத வயது. பின் கல்வித்துறையில் பட்டப்படிப்பில் இம்முறை பற்றி அறிந்த போது, இம்முறையைச் சரியான முறையில் பயன்படுத்தும் பள்ளிகளைக் கண்ட போது இதன் அருமை புரிந்தது.
நான் படித்த பள்ளியில் (அமலா..திருநகர், மதுரை) ஆரம்ப நிலையில் இக்கல்விமுறை இருந்தது. அப்போது LKG, UKG இல்லை. மூன்றரை வயதில் பள்ளியில் சேர்த்தார்கள். I class, II class, III class என்றும், பின் III std - V std வரை என்றும் இரு பிரிவுகளாக இருந்தன. (இரண்டு வருஷம் 3வது வகுப்பில் என்று தப்புக் கணக்குப்போட்டு மாற்றுச் சான்றிதழ் வாங்கிப் பள்ளி மாறியவர்கள் சிலர்.) இப்போதைய LKG, UKG அமைப்பில் இது போன்ற குளறுபடிகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில பள்ளிகளில்(K.G. காலம் 2 வருடமென்றாலும்) K.G.யே நான்கு நிலைகளில் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.
மாண்டிஸோரி கல்வி அமைப்பு: முழுக்க முழுக்க ஆரம்ப காலக் கல்விக்குப் பொருத்தமானது. குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுக் கற்றுக் கொடுக்கும் முறை கொண்டது. கற்றல் முக்கியம் எனினும் குழந்தைகளின் சுதந்திரத்துக்கும், உரிமைக்கும் உரிய இடம் வழங்க வேண்டும் என்பதும் இதன் சிறப்பம்சம். தானாகவே இயல்பான சூழலில், தனக்கே உரிய வேகத்தில் கற்றுக் கொள்ளும் திறன், குழந்தையில் பலவகைப்பட்ட முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் பயிற்சி முறைகள் இதன் சிறப்பு. நான் படித்த காலகட்டத்தில், மாண்டிஸோரி முறை முழுமையாக அமைத்துத் தரப்படவில்லை. ஆனால் இன்றைய சூழல் அப்படியல்ல.
வகுப்பறையே வித்தியாசமாக இருக்கும். பலதரப்பட்ட விளக்கப் படங்கள், குட்டி நாற்காலி, மேசைகள்..வித்தியாசமான பயிற்சி முறைகள்..எதையும் வாய்வழியோடு மட்டுமல்லாமல் செயல்முறை விளக்கமாகவும் போதிக்கும் கூடங்கள் இந்த வகுப்பறைகள்.இம்முறைக்கென்றே ப்ரத்யேகமாக உருவாக்கப்பட்ட கருவிகள் இதன் பிரதான அம்சம். சதா சத்தம் போடும் ஆசிரியர்களை இங்கே காண முடியாது. ஆசிரியரின் பணி ஒரு மேற்பார்வையாளர் என்ற அளவில் மட்டுமே. மொழிப் பயிற்சியில் எழுத்துக்களை விட ஒலிகளுக்கு முக்கியத்துவம் அதிகம். ஒலிகளைப் புரிந்து கொண்டால் எழுத்துக்களைச் சுலபமாகப் படிக்க முடியும் என்ற அடிப்படைதான் இது. எல்லாவகையான கல்வி முறைகளையும் போலவே..தெரிந்ததை முதலில் விளக்கித் தெரியாததை நோக்கி இட்டுச் செல்லல்(From known to unkown, from near to far) என்பது கடைப்பிடிக்கப்படுகிறது.
வழக்கமான தேர்வின் மூலம் மாணவர்களை மதிப்பிடும் முறை இதில் இல்லை. என்றாலும் ஓர் ஆசிரியர் மாணவர்களின் செயல்பாட்டை வைத்து அவர்களை மதிப்பிடுவர்.
குறைபாடுகள்:
1.நம் நாட்டைப் பொறுத்த வரை ஆரம்ப காலக் கல்விக்கு மட்டுமே பொருந்தும் இம்முறை.
2.செயல்பாட்டு முறைக் கல்வி பல நேரங்களில் முழுமை பெறுவது இல்லை.
3.சரிவர இந்தச் சூழல் அமையாத பள்ளியாக இருந்தால் குழந்தைகள் எதையும் கற்றுக் கொல்ளாமல் போகும் அபாயமுண்டு. எனவே பள்ளியை ஆய்வு செய்து சேர்ப்பது முக்கியம்.
4.ஆசிரியர்களுக்கு மதிப்பிடும் முறை சுலபம் என்றாலும் பெற்றோருக்குத் தன் குழந்தை எந்த அளவு கற்றுள்ளது என்பதைப் பல நேரங்களில் சரிவரப் புரிந்து கொள்ள முடியாமல் போவது இயல்பு.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இம்முறை 2ம் வகுப்பு வரை சரிவரும். அதன் பின் மாற்றங்கள் அவசியம் நம் கல்வி அமைப்பைப் பொருத்தவரை.
புதுகைத்தென்றல் இதை விளக்கமான தொடராகப் பதிவிடுகிறார்.
Wednesday, January 9, 2008
எது கலாசாரம்?
கலாசாரம் அவரவர் பார்வையில், புத்தாண்டு சம்பந்தமாக..
சில ஆண்கள்: கேளிக்கைகள் என்ற பெயரில் அத்துமீறல் என்பது எங்கள் கலாசாரம்.
சில பெண்கள்: யாரை எப்படிப் பாதித்தாலும் சரி, நாங்களே பாதிப்புக்குள்ளானாலும் சரி..
எங்கள் விருப்பத்திற்கேற்ப, விருந்துக்கேற்ப ஆடை அணிந்து கலாசாரம் காப்போம்.
சில பெற்றோர்: புது வருடக் கேளிக்கைக்குப் போக வேண்டும் என்று மகள்/மகன் சொன்னால் அனுப்பி வைப்பதும்,அசம்பாவிதம் நடக்கும் போது விடுதி நிர்வாகத்தை மட்டுமே சாடுவதும் எங்கள் கலாசாரம்.
சில வாரிசுகள்: விருந்துக்குப் போவதற்குக் கணக்கில்லாமல் பொய் சொல்லிச் சென்று அப்பாவிப் பெற்றோரை முட்டாளாக்குவது எங்கள் கலாசாரம்.
சில மனைவிகள்: கணவனே கண்கண்ட தெய்வம்..அவர்கள் கூப்பிட்டால் விருந்து என்றாலும் மருந்து என்றாலும் சரியென்று சொல்வதுதான் எங்கள் கலாசாரம்.
சில கணவன்கள்: கோவிலோ, திரையரங்கோ.. எங்கே போனாலும் பெண்களுக்குப் ப்ரச்னைதான்..அதற்குப் பயந்து விருந்துகளைப் புறக்கணிக்க முடியுமா? எதற்கும் துணிந்து நிற்பதுதான் எங்கள் கலாசாரம்.
மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம்: மக்கள் கூட்டம் புத்தாண்டிற்கு அலை மோதியது. அவர்களுக்காகவே நடைசாத்தாமல் தொடர்ந்து திறந்து வைத்திருந்து காலம் காலமாகப் பாவித்து வந்த நடைமுறைகளைச் சற்றே மீறியது எங்கள் கலாசாரம். தேவைப்படின் இந்தச் சேவை கூட்ட நாட்கள் அனைத்திலும் தொடரும். ஏன், 24 மணி நேர தரிசனத்துக்கும், ஷிப்ட் முறையில் பணியாளர்கள் நியமிப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். காசு பண்ணுவதற்காக அல்ல. கலாசாரம் காப்பதற்காக!!!
இன்னும் சில கோவில்கள்: வழக்கமாகச் செய்யும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யாமல் காசு கொடுத்தால் கடவுள் தரிசனம் என்று புதுமையிலும் புதுமை செய்து, சிறப்பு வழிபாடுக்குச் சிறப்பு ஏற்பாடு செய்வது எங்கள் புதிய கலாசாரம்.
சில பக்தர்கள்: காசும் காலமும் விரயம் செய்தாவது புத்தாண்டில் கடவுள் தரிசனத்தில் புண்ணியம் தேடுவது எங்கள் கலாசாரம். தமிழ்ப்புத்தாண்டு, சைனீஸ் புத்தாண்டு எல்லாமே சமமாகப் பாவித்துக் கொண்டாடுவது இன்னும் புண்ணியம்.
சொல்லிக் கொண்டே போகலாம்..காலத்தினால், அவரவர் வசதிக்காய் மாறுவதுதான், மாற்றப்படுவதுதான் கலாசாரம். அடுத்தவர்களையோ ஏன் தங்களையே பாதிக்காத கலாசாரத்தைப் பின்பற்றுவது பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.
(பி.கு: கலாசாரம்? கலாச்சாரம்? எது சரியென்று ஒரு விவாதம் வந்து கலாசாரம் என்று சில நண்பர்கள் திருத்தினார்கள். எது சரியென்று சரிவர விளக்கம் யாரேனும் தருவீர்களா?)
Sunday, January 6, 2008
மொக்கை tag - முடிவுகள் பலவிதம்
இது திரைப்பட மொக்கை..ரொம்ப நாளாவே சில தமிழ்த் திரைப்படங்களோட முடிவுகள் பத்தி எழுத நினைப்பு..இப்போ எழுதலாம்..
மூன்றாம் பிறை: இன்றும் கூடப் பாதிக்கும் முடிவு..அந்தப் பாடல்களைப் பார்க்கும்போதே இன்னும் கூட முடிவுதான் நினைவுக்கு வரும்.
சிந்து பைரவி: அபத்தமான முடிவு...சிந்து சொல்வார்...இரண்டு கல்யாணம் செய்து கொண்டால் கே.பி. செஞ்சுக்கிட்டார்..நாங்களும் செஞ்சுக்குவோம் 2 கல்யாணம்னு ரசிகர்கள்
சொல்வார்கள்...ஏன்...கல்யாணம் செய்யாமல் குழந்தை பெத்துக்கிட்டதை ரசிகர்கள் பின்பற்ற மாட்டார்களா என்று தோன்றியது இந்த அபத்த முடிவைப் பார்க்கும்போது...இதே முடிவுக்கு வேறு காரணம் சொல்லியிருக்கலாம்.
சம்சாரம் அது மின்சாரம்: நச் முடிவு.
வசந்த மாளிகை, கிரீடம், முகவரி: சோகமயமான முடிவை என் போல் சந்தோஷ முடிவை விரும்பும் ரசிகர்களுக்காக மாற்றியமைத்தார்கள்.
விதி: இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றவைத்த முடிவு.
காதல்: இப்படியும் நடக்குமா என்று நெகிழ வைத்த முடிவு..
கல்லூரி: இது தேவையா என்று சலிக்க வைத்த முடிவு.
நூறாவது நாள்: எதிர்பார்க்காத முடிவு.
தாமரை நெஞ்சம்: கதாசிரியாரான நாயகி தன் முடிவையும், தன் கதை நாயகியின் முடிவையும் ஒருசேரத் தேடும்..மனம் கனக்க வைக்கும் முடிவு.
வெயில்: தம்பி உயிரோடு இருப்பதையாவது தெரிந்து கொண்டு நாயகன் இறந்திருக்கலாமே என்று ஆதங்கம் ஏற்படுத்திய முடிவு.(இதே போல்தான் கஜினி: அசின் சஞ்சய் ராமசாமி
யாரென்று அறிந்தபின் இறந்திருக்கலாம் என்று தோன்றியது.)
அவள் ஒரு தொடர்கதை, அவர்கள்: சோக முடிவுதான் என்றாலும், எதார்த்தம் என்பதால் படத்துக்கே வெற்றி தந்தது இந்த முடிவு.
சிறை: சமூகத்தையே அந்த காலத்தில் ஒரு கலக்கு கலக்கிய புரட்சிகரமான முடிவு.
புதுமைப்பெண்: வீட்டை விட்டு வெளியேறுவது புதுமை என்று காட்டிய அபத்த முடிவு.
பருத்திவீரன்: என்னவென்று விவரிக்க இயலாத உணர்வை ஏற்படுத்திய முடிவு.
சேது: வாய்க்குள் கையைவிட்டு இதயத்தைத் தொட்ட முடிவு.
யப்பாடி..இன்னும் நிறைய இருந்தாலும் இப்போதைக்குப் போதும்னு நினைக்கிறேன். அடுத்து நான் இணைப்பவர்கள்:
1. கோவி.கண்ணன்
2. வவ்வால்
3. கண்மணி (மதுரைக்காரவங்களுக்கு யாருமே எதிர்க்கட்சி கிடையாது.)
4. காட்டாறு
Friday, January 4, 2008
தகப்பன் சாமிகள்
தட்டியெழுப்பும் பிஞ்சுக்கரங்கள்..
பிள்ளையார் சுழிகள்
பிள்ளைகள் இட்டு நிற்க
அடியொற்றும் பெரியவர்கள்...
காரியத்தின் வீரியத்தில்
காரிருள் களைந்து
கார்த்திகை தீபம்
ஏற்றி நிற்கும்
சாதனைச் சிறார்கள்.
பள்ளிப் பாடத்தில்
பரீட்சைகள் பாக்கி
என்றாலும்
வாழ்க்கைப் பாடத்தில்
பட்டங்கள் வென்றவர்கள்.
பூக்களின் சுவடுகளைப்
பின்பற்றும் புயல்கள்
இது
சத்தமின்றிப்
பூக்கள் செய்த புரட்சி!
Child is the Father of Man
Wordsworth இன் மொழியை
மெய்ப்பித்த
தகப்பன் சாமிகள்!
வருங்காலத் தூண்களின்
அஸ்திவாரம் ஆழத்தில்..
எதிர்கால இந்தியாவுக்கான
நமது நம்பிக்கைகள்
இமயத்தின் சிகரத்தில்.
(கோபிநாத்தின் வலையில் தரப்பட்ட காட்சிப்பதிவுக்கான கவிதை இது..
http://gopinath-walker.blogspot.com/2007/12/blog-post_19.html
சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தை அலட்சியம் செய்து போக்குவரத்து நெரிசலிலும் பெரியவர்கள் காத்திருக்க, சில சிறுவர்கள் அம்மரத்தைப் பிஞ்சுக்கரங்களால்
அப்புறபடுத்துவது கண்டு பெரியவர்களும் தொடரும் காட்சி.)