Wednesday, November 28, 2007

கண்ணியம் காப்பாய் பெண்ணியமே

"அச்சம், மடம், நாணம் எல்லாம் மிச்சம் மீதி ஏதுமின்றி
எச்சில் போலத் துப்பிப் போடடி....."

கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஏதோவொரு தொடரின் (புதுமைப்பெண்கள்?) பாடல் இப்படிப் ஒலிக்கிறது..

பெண் விடுதலை, பெண்ணியம் என்று காலம் காலமாகப் பேசி வருகிறோம்...பள்ளி போகாத நிலை, பால்ய விவாகம், சதி,விதவையாகி வீட்டில் முடக்கம், பெற்றோர் காட்டும் ஆண் பெண் குழந்தை பாரபட்சம், முதலிய கொடுமைகள் காலம் காலமாகப்பெண்களுக்கெதிராக நடைபெற்று வந்தன. அதெல்லாம் மாறி இன்றைய நிலையில் குறிப்பிடும் அளவு முன்னேறி இருக்கிறோம்.

சமுதாயத்தில் பெண்கள் நிலையைப் பொருளாதார அடிப்படையில் 3 விதமாகப் பிரிக்கலாம்..இதில் மேல்வகுப்பைச் சேர்ந்தவர்கள்,மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள், அடித்தட்டைச் சேர்ந்தவர்கள்...இதில் 3 ஆவது ரகத்தைத் தவிர(அவர்களுக்குத்தான்
விடிவு காலம் என்று வருமோ தெரியவில்லை) மற்ற பெண்கள் எல்லாம் அடிமைத்தளையிலிருந்து பெரும்பாலும் விடுபட்டவர்கள்தான்...விதிவிலக்குகளும் உண்டு..ஆனால் விழுக்காடு குறைவுதான்..

பெற்றோரால், கூடப் பிறந்தவர்களால் புரிந்து கொள்ளப்பட்டு, பின் கணவன் வீட்டாரால் புரிந்து கொள்ளப்பட்டு...இப்படிப் போகிறது பயணம்..ஆணுக்கும் இப்படித்தான்..ஆனால் சமுதாய மற்றும் உடற்கூறு அமைப்புகளால் ஆணுக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்டு
அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் உண்டு. பெண்களும் தங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும்? உலகத்தரத்தில் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் நம் இந்தியாவின் பெருமை என்னவாகும்?

காலம் காலமாக வழங்கி வரும் சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாய் உடைந்து கொண்டுவருகின்றன..சம்பிரதாயங்கள் உடைந்தாலும் பண்பாடு பாக்கியிருக்கிறது...
உடைத்துவிட்டு நியாயமாக நடப்பது என்பது தனி மனித ஒழுக்கத்தைப் பொறுத்தது..கற்பு நெறி
இருவருக்கும் பொதுவில் வை என்று நாம் யாரைக் கேட்க முடியும் பாரதியைப் போல?
அடிமைக் காலத்தில் எழுந்த பொதுவான கேள்வி அது..இன்று தனி மனிதக் குடும்பங்களில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஒழுக்க நெறியால் விடை காணக்கூடிய கேள்வி...

தேசம், மொழி இவற்றை அன்னை என்னும் நாம் பெண்மைக்கென்று சமுதாயக் கட்டுப்பாட்டுக்காக சில அடையாளங்களை விட்டு வைத்துள்ளோம். ஆண், பெண் தனி இருக்கைகள், பொது இடங்களில் இருவரின் பழக்கவழக்கங்கள்....உடைகள் முதலியன..இவற்றில்
பெரும்பாலானவை மீறப்பட்டுள்ளன...நாகரிகமாக, பிறர் முகம் சுளிக்காவண்ணம் மீறப்பட்டுள்ளன..(மறுபடியும் சொல்கிறேன்..விதிவிலக்குகள் உண்டு..விழுக்காடு நம் நாட்டில் குறைவுதான்..)

பெண்ணியம், பெண் விடுதலை என்று என்னதான் பேசினாலும் இது போன்ற பாடல்கள் முகம் சுளிக்க வைக்கின்றன அநேகம் பெண்களை..அதுவும் என்னைப் போன்ற விடலைப் பருவத்தில் மகள் உள்ள தாய்களை..

நியாயமான சுதந்திரம் கிடைக்காத இடத்தில் போராடிப் பெற வேண்டியதுதான் புதுமைப்பெண்ணின் கடமை..இது போலப் பாடிக் கொண்டிருப்பதல்ல..

பாடிய கவிஞர் ஆண்தானே என்ற வாதத்துக்குச் சத்தியமாக நான் வரவில்லை..

ஆரோக்கிய, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் செயல்பாடுகளும்தான் நம் தற்போதையத் தேவை. தனி மனித வாழ்வின் நெறியே மெல்ல மெல்ல சமுதாய நெறியாக மாறும் என்பது
வரலாறு உரைக்கும் உண்மை.

Monday, November 26, 2007

அன்புடன் அஜீத் - முதல் தொலைக்காட்சிப் பேட்டி

கலைஞர் டிவியில் காலை 12 மணி முதல்(சவுதி நேரம்) இந்த அறிவிப்பு கீழே ஓடிக் கொண்டிருந்தது..மதியம் 1.30க்கு பேட்டி..முடியும் போது 3.40..(நடுநடுவில் நல்லவேளை பாடல்கள்,விளம்பரம்) எப்போது போடும் குட்டித் தூக்கத்தைத் தியாகம் செய்து கேட்ட சில விஷயங்கள்:

1. இதுவரை பேட்டி கொடுக்காதது குறித்து..

பொதுவாக outspoken person நான்..யாரும் எதையும் misunderstand பண்ணக்கூடாது...தமிழ் மொழியில் முதலில்அவ்வளவு சரியாகப் பேச வராது என்பதால்..யாரும் நான் கூற வந்ததைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது..So let me shut up and mind my own business என்று இருந்து விட்டேன்...சில கேள்விகளுக்குப் பதில் சொன்ன போது industryக்கு வந்து 2 வருடம்
ஆகவில்லை..ஏன் இப்படி frank ஆப் பேசுகிறார்னு கேட்டவர்கள் அதிகம்...பொய் பேச முடியாது..உண்மை பேசாமல் இருந்துவிட்டேன்..எனக்காக argue பண்ண ஒரு கூட்டம் அப்போது இல்லாததால் silent ஆக இருந்துவிட்டேன்.
சமீப காலம் என்று எடுத்துக் கொண்டால் என் race ஈடுபாடு குறித்த விமர்சனங்கள்..தோல்விப் படங்கள் குறித்த விமர்சனங்கள்
.இதில் எல்லாம் சொல்கிற அளவுக்கு positive விஷயங்கள் கம்மி....negativeபற்றிப்பேசினால் cry baby யாக நேரிடும்.அதனால் பேசாமல் இருந்து விட்டேன்.

பேசுவதற்கான சமுதாய நல விஷயங்கள் எத்தனையோ இருக்கையில் நாட்டுக்கு அஜீத் பேட்டி தேவையா? என்பது ஒரு புறம்.அப்படியே சமுதாய நலன் பற்றிப் பேசினால் அரசியல் ஈடுபாடு என்பார்கள் என்பது ஒரு புறம்..தன்னைப் பற்றியே புகழும் Narcistic approach நடிகனுக்கு இருக்கிறது என்ற பேச்சு ஒரு புறம்..exposure disastrous ஆகி விடுமோ என்ற பயம் ஒருபுறம்..

2. இப்போது கொடுப்பதற்குக் காரணம்?

என்னுடைய ரசிகர்களின் பல நாள் வேண்டுகோளுக்காக..எல்லா நடிகர்களின் படங்களின் செய்திகள் பேட்டிகள் வரும்போது என்னுடையதும் வரவேண்டும் என்று விரும்பினார்கள்..அவர்கள் ஆர்வம் காரணமாய்..எனக்கும் ரசிகர்களுக்குமிடையே ஒரு
link இல்லாமல் இருந்ததைச் சரி செய்ய..

3. பில்லா பற்றி..

இப்போது பேசக் கிடைத்த ஒரு காரணம் இந்தப் படம்.."தொட்டால் பூ மலரும்" என்ற பாடல், ஹிந்திப்பட ரீமேக் ஷான் -ஹிட்டானபோது ரீமேக் செய்யத் தோன்றியது..சிறு வயது முதல் கமல்,ரஜினி fan..பில்லா படத்தை நான் அந்த வயதில் ரசித்தது போல இந்த இளைய தலைமுறையினர் ரசிக்க வேண்டுமென்று தோன்றியது...ரஜினி சார் "வரலாறு" படம் பார்த்துவிட்டு
என்னைப் பாராட்டிய போது அவரும் ஓ.கே சொல்லிவிட்டார்..
பில்லா success பொறுத்து "தீ" படத்திலும் ரஜினி,சுமன் 2 வேடத்திலும் செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது.
My name is Billa, மற்றும் வெத்தலையப் போட்டேண்டி என்ற 2 பாடல்கள் மட்டும் remix ..வேறு எல்லாம் புதுப் பாடல்கள்
variety ஆக stylish ஆக costumes போட முடியவில்லையே என்ற ஆசையை இந்தப் படம் நிறைவேற்றியுள்ளது..

(Trailor காண்பித்தார்கள்..இந்த வசனத்துடன்: "சரித்திரத்தை ஒரு நிமிஷம் பாருங்க. அது நமக்குக் கத்துக் கொடுத்தது ஒண்ணுதான்.நாம வாழணுமின்னா யாரை வேணாலும் எத்தனை பேரை வேணாலும் கொல்லலாம்")

4. Fans பற்றி..

இந்தக் கொடுப்பினை எல்லாருக்கும் கிடைக்காது..I am very grateful to them..எத்தனை ஜென்மம் எடுத்தாலும் etc.,etc.,
இனிமேல் experiments பண்ண மாட்டேன்...பில்லா, வில்லன், வரலாறு மாதிரி entertaining commercial படங்களில்தான் நடிப்பேன்.

5. Heroines பற்றி..

நான் தயாரிப்பபளரிடம் choice சொல்லுவதில்லை..இப்போது வரும் படங்களில் பெண் பாத்திரங்களுக்கு perform பண்ணும் வாய்ப்புகள் heroes ஐ விடக்குறைவுதான்..

6. சமூகப் பணிகள் பற்றி..

எக்ஸ்னோரா மூலம் மரக்கன்றுகள் நடுதல் பிறந்த நாளன்றும், பட ரிலீஸ் அன்றும் ரசிகர்கள் செய்கிறார்கள்..கூட்டம் கூடுவதால் நேரடியாகக் கலந்து கொள்ள முடிவதில்லை..

7. குடும்பம் பற்றி..

அப்பா தமிழ்..அவருடைய forefathers கேரளாவில் போய் settle ஆனவர்கள்..அம்மா Karachi யில் பிறந்து Calcuttaவில் வாழ்ந்தவர்கள்..Secunderabad இல் பிறந்து சென்னையில் வளர்ந்தேன்...ஒரு அண்ணன் ஒரு தம்பி..

8. ஷாலினி பற்றி..

very intelligent..not interfering in my decision making...கருத்துக்கள் சொல்வாங்க..

9. தமிழக அரசு விருது விழாவில் கலந்து கொண்டது பற்றி:

commercial shows, commercial benefits க்கான விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை அநேகர் தவறாகப் புரிந்து கொண்டார்கள்..அரசு விழாவுக்கு ஆட்சேபமில்லை..
I am not comfortable in appearing in public...யார் comfortable ஆக feel செய்கிறார்களோ அவர்கள் போகட்டும்..இதையும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்..

10. உங்கள் படங்கள் பற்றிக் கலைஞர் பேசினாரா?

இல்லை. ஷாலினி பற்றிக் கேட்டார்...We should be proud to be in the industry during his period...

Race சம்பந்தப்பட்ட காட்சிகளையும் இடையே காட்டினார்கள்..பேட்டி முழுவதும் தற்காப்பு மற்றும் சின்னதாக இழையோடும் tension கொஞ்சம் தெரிந்தது...பேட்டியெடுத்த பிரியதர்ஷினியும் அவ்வாறே..சில சம்பவங்கள் அவர் சொல்கையில் இவர் இப்படி வெளிப்படையாகப் பேசியது பிறர் விமர்சனத்துக்குக் காரணம் என்று
அப்பட்டமாகத் தெரிந்தது..சின்ன மெலிதான அடிக்குரலில் அவர் பேசிய போது கொஞ்சம் பாவம் look, கொஞ்சம் தைரிய look, I fear no one look கலப்படமாய்த் தெரிந்தது...

நிறைய ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்றைக் கலைஞர் தொலைக்காட்சி செய்துவிட்டது.

(பி.கு: பிழைகள்,சொற்குற்றமிருப்பின் படிப்பவர்கள் பொறுத்துக் கொள்க, பொருட்குற்றமிருப்பின்
அஜீத் பொறுத்துக் கொள்க)

Sunday, November 25, 2007

ஒன்றுக்கொன்று துணை


அண்ணன் தம்பி
அக்கா தங்கை
பாசமிகு பந்தங்கள்
பல அடி தள்ளி வை
பத்திரமாய் இருப்பாய்
என்ற
பத்தினித் தங்கம்..

தன்
தமக்கை தமையன்
தயக்கமின்றிப்
பத்தடி தள்ளி வைத்த
இனிய இல்லாள்...

அடுத்த வீட்டுப் பெண்ணிடம்
அழகாய்ச் சொல்கிறாள்
"ஒரு குழந்தை போதுமா?
இன்னுமொன்று வேண்டும்
இனி வருங்காலத்தில்
ஒன்றுக்கொன்று துணை வேண்டாமா?"

தன் மகனிடம்
சொல்கிறாள்
"பாவம் தங்கச்சிப் பாப்பா
பகிர்ந்து சாப்பிடு
பாங்காய்க் கவனி
அண்ணனல்லவா நீ?"

?!

Friday, November 23, 2007

முடமாக்கும் மூடநம்பிக்கைதான் பேய்

முருங்கை மரத்துல பேய், வீட்டில் பேய், காட்டில் பேய், மரம் வெட்ட முடியவில்லை, ஏதோ தடுக்கிறது, கட்டிய பாலம் இடிகிறது..ஏதோ தடுக்கிறது...இன்னும் எத்தனை எத்தனை கதைகள், வதந்திகள் இந்த அறிவியல் உலகில் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்...

இதற்கெல்லாம் சற்று மேலே போய் சென்னை புதிய வண்ணாரப்பேட்டையில் ஒரு பள்ளியில் பேய் உலாவுகிறது, பக்கத்திலுள்ள சுனாமிக் குடியிருப்பில் பேய் உலாவுகிறது (அதுவும் சுனாமி ஏற்பட்டு இவ்வளவு காலம் கழித்து..) என்று கதை கட்டியிருக்கிறார்கள்... மற்ற கதைகளை எல்லாம் ஓரங்கட்டி முன்னால் நிற்கும் முட்டாள்தனம்...அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியை சொல்கிறார்...கதவு அடிக்கிறதாம், சன்னல் அடிக்கிறதாம்...திறந்து பார்த்தால் யாரும் இல்லையாம்...என்னத்த சொல்றது போங்க..

பள்ளிக்குத் தற்காலிகமாக விடுமுறை விடப்பட்டுள்ளது...திரும்பவும் திறக்கும் போது எத்தனை மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கப்போகிறார்களோ..எத்தனை பேர் பயந்து கொண்டே வரப்போகிறார்களோ..பாவம் அந்தக் குழந்தைகள்..என்னதான் வதந்தி உண்மையில்லை என்று கூறினாலும் எத்தனை பேர் இதை நம்பப் போகிறார்கள்?

"வேப்பமர உச்சியில் நின்று பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க
உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே..."

என்று கூறவேண்டியவர்களே பயந்து போனால் மாணவர்கள் நிலைதான் என்ன?

முன்னேற்றத்தை முடமாக்கும் மூடநம்பிக்கைதான் விரட்ட வேண்டிய பேய் என்று உணர இன்னும் எவ்வளவு காலந்தான் ஆகும்?

Wednesday, November 21, 2007

சிதை(யில்)யும் தமிழ்

மொழியே செம்மொழியே
என் தாய்த் திருமொழியே
இலக்கியம் அழகுசெய்
தனித் தமிழ்மொழியே!

எழுத்தில் மாறி
ஒலியில் மாறி
வடிவில் மாறி
வழியே மாறி..

பிற மொழிக் கலப்பு
உணவில் நெய்யாக
இருந்த காலம் போய்
இன்று
உப்பாகிப் போக

நோயாளிகள் யார்?

நெய் உண்பவர்கள்
என்பார்கள்
உப்பு உண்பவர்கள்.

உப்பு உண்பவர்கள்
என்பார்கள்
நெய் உண்பவர்கள்.

எது எப்படியோ
உணவாவது மிஞ்சினால் போதும்
என்பார்கள் சிலர்.

சிங்காரத் தமிழே
மெல்லச்
சிதையும் தமிழே!

சிதையில் நீ போகாமல்
சீராய்க் காக்கும்
மெய்காப்பாளர்
திருப்பணி பெற்றுத்
துறை தோறும்
துலங்குவாய் தமிழே!

(பி.கு: நானும் சிதைப்பவள்தான்)

Tuesday, November 20, 2007

இயற்கையெனும் கொடிய கன்னி

சமீபத்தில் வங்காளதேசத்தில் சிதர் தரும் இடர் பார்க்கையில் பரிதவித்துப் போகின்றோம்...இயற்கையின் சீற்றம் குறித்து முன் நான் எழுதிய கவிதை ஒன்று.

ஆழி யலைகள் உயிர்பெற்று
ஆதி யந்தம் முடித்துவிடும்
நாழி யசைவில் எரிமலைதான்
நஞ்சை புஞ்சை எரித்துவிடும்
ஊழி யணிகள் பூண்டுவிடின்
உயிரும் குடிக்கும் இயற்கையுமே
தாழி யுடைந்த சிதறல்போல்
தழைக்கு மினங்கள் சிதைந்திடுமே...

அழிவின் கதைகள் இயற்கைக்கு
அழகா யெழுதும் மானுடமே!
பழியின் கணக்கு நீண்டுவிடின்
பலியின் கணக்கு முயர்ந்திடுமே
செழிவின் கழிவு அச்சுறுத்த
செத்துப் பிழைக்கும் வழக்குதான்
அழிவின் றிப்பேண் வனமெல்லாம்
அமிர்தம் சுரக்கும் பாலையெல்லாம்.

Saturday, November 17, 2007

மாறி வரும் மதுரை மாநகர் - 2மதுரையின் சிறப்புகள் பல அனைவரும் அறிந்ததே...தென் தமிழ்நாட்டின் தலைநகரம், தூங்கா நகரம், கிழக்குப் பகுதியின் ஏதென்ஸ், கோவில் நகரம் என்ற பல சிறப்புப் பெயர்களைப் பெற்ற நகரம்.


இரண்டாவது தலைநகரம் என்பது தேவையில்லை என்று தற்சமயம் வாதிட்டாலும், நிர்வாக சவுகரியங்களுக்காகவும், செயலாக்கத் திட்டங்களை விரிவு மற்றும் விரைவு படுத்துவதற்காகவும் என்று பல காரணங்களுக்காக இன்னொரு தலைமையகம் தேவை என்ற நிலை குறுகிய காலகட்டத்துக்குள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் ஏராளமாய் உள்ளன. அந்த நிலை ஏற்படும்போது மதுரை நகரின் பெயர் முன்னிலை வகிக்கும்.


இராமர் சேது முனையல், உள்மாநில, வெளிமாநில அளவில் அநேகப் பெரு நகரங்களை இலகுவாகச் சென்று சேரும் வண்ணம் புவியியல் அமைப்பு மற்றும் போதுமான போக்குவரத்து வசதிகள்,(இதனால்தானே அரசியல் முதல் சினிமா வரை அனைத்து மாநாடுகளுக்கும் மதுரை தமுக்கம் மைதானம் களமாகிறது..) கூப்பிடு தூரத்தில் கவின்மிகு சுற்றுலா மையங்கள்,வழிபாட்டுத் தலங்கள், தரமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், உயர்நீதிமன்றக் கிளை, விரைவில் அமையவிருக்கும் மண்டலக் கடவுச் சீட்டு அலுவலகம்..சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரின் தேவைகளும் பூர்த்தியாக்கும் விலைவாசி நிலவரம், இன்னும் இன்னும்...


முத்தாய்ப்பாக ஒரு செய்தி...JNNURM - Jawaharlal Nehru National Urban Renewal Mission மதுரைக்கு அளிக்கவிருக்கும் பல ஆயிரம் கோடிகள் ...


மதுரைவாசி என்பதால் மட்டுமல்ல நியாயமான பல காரணங்களுக்காகவும் மதுரை மாநகர் இரண்டாவது தலைநகரமாகும் நன்னாளை ஆவலுடன்

எதிர்பார்க்கிறேன்..

- மலர்.

Tuesday, November 13, 2007

மாறி வரும் மதுரை மாநகர் - 1

சமிபத்தில் ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன்..மகேந்திரவர்மன் என்ற நபர் அனுப்பியது அது..எப்படியோ யாஹூ குழுமத்தில் எனக்கும் வந்து சேர்ந்தது..அதில் படித்த செய்திகள் மற்றும் சமீபத்தில் ஊருக்கு நான் சென்ற போது கண்டவை கேட்டவையே இந்தப் பதிவுக்குக் காரணம்..

மதுரை ஒன்றுதான் மாறி வரும் உலகில் மாறாத நகரம் என்று என் கணவர் உட்பட அநேகர் கூறியதுண்டு..(என் கணவருக்கும் என்னைப் போல் மதுரைதான் சொந்த ஊர் என்பது வேறு விஷயம்)..அவர்களுக்கெல்லாம் பதில் கூற வேண்டிய நேரம் இப்போதுதான் கைகூடியுள்ளது..மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி அடுக்கடுக்காகத் தாமரை இதழ்களைப் போல அடுக்கி வைக்கப்பட்ட தெருக்கள்...நிறைய மாறாதிருந்த அந்தப் பகுதியில் கடந்த வருடம் முதல் தடாலடி மாற்றங்கள்...பிரம்மாண்ட கட்டடங்களை முதலில் அறிமுகம் செய்த பெருமை பல நகைக்கடைகளையே சாரும்...எத்தனையோ காரணங்கள் கூறியதுண்டு...கோவில் கோபுரத்தை விட உயர்வான கட்டடங்களைக் கட்டக்கூடாது என்பதுதான் காரணம் என்று சிலரும்...ஆழமாக அஸ்திவாரம் தோண்டுவதால் பாதாளக் கழிவு நீர்க் குழாய்கள் பாதிக்கப்படும் என்று சிலரும் பலவாறாகக் காரணங்கள் கூறினர்...அடுக்கு மாடிக் கட்டடங்கள் இல்லாவிட்டாலும் பிரம்மாண்டமான கட்டடங்கள் பல்கிப் பெருகி வருகின்றன என்பது மதுரைவாசிகளை மகிழவைக்கும் உண்மையாகும்..

இன்னும் ஏற்படவிருக்கும் மாற்றங்களும், துறைகளும்:

1.ரியல் எஸ்டேட் துறையில் அபரிமித வளர்ச்சி...போட்டா போட்டி..தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் வரப்போவதற்கான அறிவிப்பின் எதிரொலி..நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு உயருவதால் உடனே விற்பதற்கு யோசிக்கும் உரிமையாளர்கள்..

2. விரிவாக்கப்படும் விமான நிலையம் கூடிய சீக்கிரம் பன்னாட்டு விமான நிலையமாகப் போகிறது..

3. அங்கங்கே முளைக்கும் townships..பல தரப்பட்ட நவீன வசதிகளுடன்...

4.பல பகுதிகளில் அமையவிருக்கும் தொழிற்பேட்டைகள்

5. சென்னை மற்றும் கேரளா சார்ந்த பிரபல நகைக்கடைகளின் கிளைகள்

6. மதுரையின் பழம்பெரும் திரையரங்குகள் பல பிரபல் துணிக்கடைகளின் கிளைகளாக மாற உள்ளன.

7. மதுரையில் கால்பதிக்கவிருக்கும் அநேக தகவல் தொழில் நுட்ப மையங்கள் மற்றும் பூங்காக்கள்

8. உருவாகப் போகும் 3 மற்றும் 5 நட்சத்திர விடுதிகள்

9. பெருகி வரும் இலகுரக மற்றும் கனரக பிரபல மோட்டார் வாகன விற்பனை நிலையங்கள்

10.வரவிருக்கும் திரையரங்குகளுடன் கூடிய Multiplex கட்டடங்கள்

11.சுற்றிலும் கட்டுமானத்தில் இருக்கும் நான்கு வழிப் பாதையில் தேசிய நெடுஞ்சாலைகள்..

இன்னும் இன்னும் அநேக துறைகளில் மாறி வருகிறது மதுரை மாநகர்..

மதுரை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரம் என்ற தகுதிக்குத் தயாராகிவிட்டது என்று கட்டியங்கூறும் சில தகவல்கள் அடுத்த பகுதியில்...

அன்புடன்,
மலர்.

Monday, November 12, 2007

மதம்
அன்று
மனிதனைக் காக்க
வகுத்த நியதி..
இன்று
மனிதன் இதனைக்
காக்க வேண்டிய(து) விதி.

மக்களை நெறிப்படுத்தி
மிதவாதம் மீட்பது நோக்கம்..
அவரை மாக்களாக்கி
உயிர் போக்கித்
திசை திருப்பும் தீவிரவாதம்!

இறை போதிக்க வந்தது
இவர்தம் நிறை குறை
சோதித்து நிற்கிறது.

நற்புவியில் நல்லிணக்கம்
நல்க வந்தது
பிணக்கம் பெருக்கிப்
பிணங்கள் நிறைக்கிறது.

கலையாய் வந்தது
கலைத்து நிற்கிறது.
செதுக்க வந்தது
சிதைத்து நிற்கிறது.

பூக்களின் பொய்கை
இதுவென நினைக்க..
பொய்களே இங்கு
பூக்களாய்ப் பூக்க..

குளிர வேண்டிய மனங்கள்
கனத்துக் கிடக்கின்றன.
நிமிர வேண்டிய தலைகள்
குனிந்து கிடக்கின்றன.

மனிதம் மருவி
மதம் என்று ஆனதோ?
இன்று மதம் பிடித்து ஆ(ட்)டுதோ?

Sunday, November 11, 2007

மெகா சீரியலும் தாய்க்குலமும்

மெகா சீரியல் குறித்துப் பல வித விமர்சனங்கள் அவ்வப்போது பலர் வாயிலாகக் கேட்டறிகிறோம்...பலவிதமான நகைச்சுவைத்துணுக்குகள், பல கொடூரமான தாக்குதல்கள் படித்திருக்கிறோம்...

இத்தனை தாக்குதல் தேவையா என்பது என் எண்ணம்..தாக்குவது என்பது இன்றைய fashion என்றாகிவிட்டது..அதுவும் தாய்க்குலங்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்களே..ஏதோ தந்தைக்குலங்கள் அதைப் பார்க்கவே பார்க்காதது மாதிரி...பதவி ஓய்வுபெற்ற தந்தைக்குலங்களின் முக்கிய பொழுதுபோக்கே இதுதான்..

இத்தொடர்கள் சில மாற்றங்களை நம் பெண்களிடம் கொண்டு வந்துள்ளன..தொடர்கள் ஆரம்பிக்கும் முன் சமையல் முதல் சகல வேலைகளையும் சுறுசுறுப்பாய் முடித்து...2 அல்லது 3 சானல்களில் ஒரே நேரம் மாறி மாறிப்பார்த்து...நடுவில் வரும் தலைப்புச் செய்திகளையும் பார்த்து நாட்டு நடப்பு அறிந்து கொள்கின்றனர்...சீரியல் வம்புகளில் நாட்டம் அதிகமாக ரியல் வம்புகள் தானாகவே இல்லாமல் போகின்றன...
பாமரத்தனம் சற்றே குறைந்து சில நல்ல விஷயங்களைப் புதிதாகக் கற்றுக் கொள்கிறார்கள்.

நான் சமீப காலத்தில் கண்டது..விரும்பிப் பார்த்தாலும் விழுந்தடித்துக் கொண்டு யாரும் பார்ப்பதில்லை ...முன்பெல்லாம் ஒன்றிரண்டு பகுதிகள் கூடத் தவறவிடாமல் பார்த்தவர்கள் இன்று வாரம் ஒரு முறை பார்த்தால் கூட மீதிக் கதை புரிந்துவிடும் என்று இயக்குநர் பார்வை பெற்றுவிட்டார்கள்..

எனவே தாக்கும் வேகத்தைக் கொஞ்சம் மட்டுப் படுத்துவோமே!