Monday, December 27, 2010

குறளின் குரல் - 17

பால்: பொருட்பால் இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 628

இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான்
றுன்ப முறுத லிலன்.


இன்பம் விழையான்; 'இடும்பை இயல்பு' என்பான்
துன்பம் உறுதல் இலன்.

விளக்கம்:

இன்பத்தை விரும்பமாட்டான். வாழ்க்கையில் துன்பம் வருவது இயல்பு எனப் புரிந்து கொள்வான். இத்தகையவனைத் துன்பங்கள் ஒருபோதும்
துன்பப்படுத்துவது இல்லை.

------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 29. கள்ளாமை
குறள் எண்: 289

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.


அளவு அல்ல செய்து, ஆங்கே வீவர், களவு அல்ல
மற்றைய தேற்றாதவர்.

விளக்கம்:

களவாடுவதைத் தவிரப் பிற நல்ல வழிகளைத் தெரிந்து கொள்ளாதவர், அளவில்லாத தீய செயல்களை, வரம்பு மீறிய செயல்களைச் செய்து
கெட்டழிவர்.

-------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
னருளாதான் செய்யு மறம்.


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்-தேரின்,
அருளாதான் செய்யும் அறம்.

விளக்கம்:

அருள் இல்லாதவன் அறச்செயலைச் செய்தல் கூடும். ஆனால் அச்செயலை ஆராய்ந்து பார்த்தால், அது தெளிந்த ஞானமில்லாதவன் உண்மைப் பொருளைக் கண்டறிந்ததற்கு ஒப்பாகும்.

-------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 59. ஒற்றாடல்
குறள் எண்: 581

ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் கண்.


ஒற்றும் உரை சான்ற நூலும், இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

விளக்கம்:

ஒற்று, புகழமைந்த அறநூல் - இவ்விரண்டையும் அரசன் தன் இரு கண்களெனக் கொள்ள வேண்டும். (புறக்கண்களால் காண முடியாதவற்றை
இவையிரண்டும் புலப்படுத்தும் என்பதால் இவற்றைக் கண் எனக் கொள்ள வேண்டும்.)

----------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 44. குற்றங்கடிதல்
குறள் எண்: 432

இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு.


இவறலும், மாண்பு இறந்த மானமும், மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

விளக்கம்:

செலவு செய்ய வேண்டிய இடத்திலும் செலவு செய்யாத கருமித்தனம், பெருமைதராத மான உணர்வு, தகுதியற்ற மகிழ்ச்சி - இவை எந்தவொரு
தலைவனுக்கும் கேடு தரும் குற்றங்களாகும்.
------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 30. வாய்மை
குறள் எண்: 295

மனத்தோடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ்செய் வாரிற் றலை.


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.

விளக்கம்:

ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்துமாறு வாய்மையுள்ள சொற்களையே பேசுவானேயானால், அவன் தவமும் தானமும் செய்பவர்களை விட மேலான சிறப்புடையவனாவான்.

Monday, December 20, 2010

காதல் கொள்!

நிகழ்வுகள்
கிடுக்கிப்பிடியில்
கழுத்தை நெரிக்கும்.

காதல் கொள்.
அது
கழுத்து நீவிக்
கவலைகள் சுத்திகரிக்கும்.

உணர்வுகள்
உடலெங்கும்
ஊசிகள் குத்தும்.

காதல் கொள்.
அது
ஊசிகள் பிடுங்கி
உபாதைகள் நீக்கும்.

குழப்பங்கள்
கடலில் அலையெனச்
சுழன்று தொடரும்.

காதல் கொள்.
அது
எதிர்நீச்சல்
கற்றுக் கொடுக்கும்.

வாழ்வில்
வெற்றி கொள்ள..
வாழ்வை
வெற்றி கொள்ள...

காதல் கொள்.

குறளின் குரல் - 16

பால்: பொருட்பால் இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 66. வினைத்தூய்மை
குறள் எண்: 660

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.


சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - பசு மண்
கலத்துள் நீர் பெய்து, இரீஇயற்று.

விளக்கம்:

தீய, வஞ்சகச் செயல்களால் ஒருவன் செல்வம் தேடிச் சேர்த்து, அதனை நீண்ட காலத்துக்குக் கட்டிக் காக்கலாம் என் எண்ணுதல், ஈரம் உலராத பச்சை மண் பானையில் தண்ணீரை ஊற்றிக் காத்து வைப்பது போன்றதாகும். பானையும் கரைந்து, நீரும் கசிந்து போவது போல, வஞ்சனையால் செல்வம் பெற்றவனும் அழிந்து, செல்வமும் அழிந்து போகும்.

------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள் எண்: 120

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தம்போற் செயின்.


வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம் போல் செயின்.

விளக்கம்:

வாணிகம் செய்யும் போது பிறர் பொருளையும் தம் பொருள் போலக் கருதி, அப்பொருளின் மதிப்பைக் கூட்டாமல், குறைக்காமல் அப்பொருளின் மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த நேர்மையும் நடுவுநிலைமையும் கருத்தில் கொண்டு செய்வதே சிறந்த வாணிகமாகும்.

----------------

பால்: காமத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 120. தனிப்படர் மிகுதி
குறள் எண்: 1196

ஒருதலையா னின்னாது காமங்காப் போல
விருதலை யானு மினிது.


ஒருதலையா னின்னாது, காமம்; காப் போல
இருதலையானும் இனிது.

விளக்கம்:

காவடியின் இருபக்கமும் சமமான சுமை இருப்பதே சுமப்பவர்க்கு இலகுவாகும், இனியதாகும். அது போல ஆண், பெண் இருவரிடத்தும் காதல் சமமாய் அமைந்திருப்பதே இனியதாகும். இருபக்கமும் காதல் சமமாக இல்லாது ஒருபக்கம் மட்டுமே காதல் இருக்குமென்றால் அது துன்பத்தில்தான் முடியும்.

--------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 45. பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்து தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.


பல்லார் பகை கொளலின் பத்து அடுத்து தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல்.

விளக்கம்:

துணையாக்கிக் கொள்ள வேண்டிய நல்லவர்களுடன் மனம் வேறுபட்டு, அவர் நட்பை விட்டு விடுதல், பலருடன் பகை கொள்வதைக் காட்டிலும் பத்து மடங்கு தீமையைத் தருவதாகும்.
--------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 50. இடன் அறிதல்
குறள் எண்: 498

சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்.


சிறு படையான் செல் இடம் சேரின், உறு படையான்
ஊக்கம் அழிந்து விடும்.

விளக்கம்:

சிறிய படையை உடையவன் தனக்குப் பாதுகாப்பு உடைய இடத்தில் நின்று போர் செய்தால், பெரிய படையுடைய அரசன் ஊக்கம் அழிந்து தோற்றுப் போவான். பெரிய படையானாலும், இடமறியாது சென்றால் தோற்க நேரிடும்.

---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 109

கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்.


கொன்றன்ன இன்னா செய்யினும் அவர் செய்த
ஒன்று நன்று உள்ள, கெடும்.

விளக்கம்:

முன்பு நமக்கு நல்ல உதவியைச் செய்த ஒருவர், பின்பு கொலை போன்ற ஒரு பாதகச் செயலைச் செய்து துன்பம் விளைவிக்க முற்பட்டாலும், அவர் முன்பு செய்த நன்மையை நினைத்தால் அத்துன்பம் தன்னால் நீங்கி விடும். கெட்டதை மறக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.