Tuesday, April 26, 2011

நான் அறிந்த சிலம்பு - பகுதி 9

புகார்க்காண்டம் - 2. மனையறம் படுத்த காதை
புகழ்வாய்ந்த சிறப்பும்
அரசரும் விரும்பும் செல்வமும்
பரதவர் மிகுதியாய் வாழ்வதுமானது
புகார் நகர்தானது.

நீர்வளம் நிறைந்ததொரு சிறப்பு;
அலையெனத் திரண்டு
மக்கள் வெள்ளம் வரினும்
சலிப்பின்றி அள்ளிவழங்கும்
வளம் கொழிக்கும் செழிப்பு;

அலைகடல் வழியே
பெருங்கலம் செலுத்தி,
பெருநில வழியே
வண்டி கொண்டு வாணிபம் செய்து
அரும்பொருட்கள் ஆயிரமாயிரம்
கொண்டு வந்து குவித்ததொரு சிறப்பு.

குலவொழுக்கம் குன்றாத
நற்குடியில் பிறந்த
நல்ல செல்வந்தர்
தான தருமங்கள்
பலவும் செய்து பெறக்கூடிய
'உத்தரகுரு' என்னும் செல்வபூமியை
இப்புகார் நகர் ஒத்திருப்பது
இன்னுமொரு சிறப்பு.

அத்திருநகரில்
எழுநிலை மாடமொன்றின்
இடைநிலையாம்
நான்காம் மாடத்தில்
மன்மதனே செய்தது போன்ற
அழகிய கால்களுடைய
கட்டிலின் மேல் அமர்ந்திருந்தனர்
குவளைமலர்க்கண்ணி
கண்ணகியவளும்
காதல் கணவன் கோவலனும்...

தென்றலைக் கண்டு மகிழ்ந்து, இருவரும் காதல் கைம்மிக நிலா முற்றம் போதல்

அந்தக் காதல் நேரத்தில்
அழகிய தென்றல்தான் என்ன செய்தது?

செங்கழுநீர்மலர், ஆம்பல்மலர்
முழுமையான இதழ்களின் அழகு
குலைந்திடாத முழுக்குவளைமலர்,
வண்டுகள் தேனுண்ண
வாய்ப்பு நல்கும் வண்ணம்
அரும்பவிழ்ந்த தாமரைமலர் --
இவ்வயல்வெளி நீர்நிலைமலர்களின்
வாசம் சுமந்து நின்றது
ஆங்கு வீசிய தென்றல்;

இவற்றினின்று வேறுபட்ட,
மேன்மைபொருந்திய
வெள்ளித்தோடாய் விரிந்த
தாழைமலர் வாசம்,
செண்பகச்சோலையில்
அழகு மாலை போன்று
இதழ்விரித்து மலர்ந்திருக்கும்
மாதவி(குருக்கத்தி) மலர் வாசம்,
இவ்விரண்டும்
தன்வசம் விரவிக்கொண்டது
அவ்விளந்தென்றல்;

தாதுடன் சேர்ந்த தேனதனை உண்டு,
ஒளிபொருந்திய முகம் கொண்ட மகளிர்
திருத்திச் சுருட்டி முடிந்த கூந்தலின்
நறுமணம் நுகர்ந்திட விழைந்து,
அவர்தம் பள்ளியறைப் புகமுயன்று
புகமுடியாததால் ஏக்கமுற்று,
'எப்போது பள்ளியறை திறப்பார்'
என்று எதிர்பார்த்துச்
சுழன்று திரியும் வண்டுகளுடன்
தானும் சேர்ந்துகொண்டு
பள்ளியறை புகுந்திட
வழிதேடியது தென்றல்;

முத்து மணிகளால்
அணிசெய்த நேர்த்தியான
சாளரமொன்றை
அவ்வழகுப் பெண்கள் திறந்தபோது
விரைந்து நுழைந்த வண்டுகளுடன்
தானும் தவழ்ந்து சென்று
உட்புகுந்து உலா வந்தது
நிலாத்தென்றல்;

அழகிய தென்றலைத்
துய்த்து மகிழ்ந்த தம்பதியர்தாமும்
காதலின் மிகுதியால்
கூடிட விரும்பினர்;
மலரம்புகள் ஐந்தினைச்
சுமந்த காமனவன் வீற்றிருக்கும்
அழகிய நிலா மாடம் அடைந்தனர்.

சிலம்பின் வரிகள் 1 - 27 இங்கே

Sunday, April 17, 2011

அவன் அவள் நாங்கள்

ரொம்ப நாள் கழித்துத் தியேட்டருக்கு இன்று வந்தோம்..எப்போதும் ஏதாவது ஒரு அலுவல்..தட்டிக் கழித்துவந்த என் கணவர் மனம் வந்து இன்று ஒருவழியாகப் படத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்...சீக்கிரமே வந்துவிட்டதால் தியேட்டருக்கு வருபவர்களை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அவர்கள் வந்தார்கள்...

வித்தியாசமான அவள் முக பாவத்தைப் பார்த்ததுமே தெரிந்தது..அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவள் என்பது..கூட வந்த ஆண் சுற்று முற்றும் பார்த்துவிட்டு இரண்டு வரிசை முன்னால் அமர்ந்தான்...கடைசி வரிசையில் நாங்கள் இருந்தோம்...உட்கார்ந்த மாத்திரத்திலேயே அவன் மேல் சாய்ந்து உட்கார்ந்தாள் அவள்...அவன் தோள் மீது கைகள் போட, அவளிடம் குனிந்து ஏதோ பேசி மெல்லிதாக அவள் கைகளை விலக்கினான் அவன்...சற்றே விலகிச் சுற்று முற்றும் பார்த்தவள் அவன் கைகளை எடுத்துத் தன் கைகளுடன் பின்னிக் கொண்டாள்..சட்டென்று அவன் கைகளில் ஒரு முத்தமும் கொடுத்தாள்...மீண்டும் அவன் குனிந்து ஏதோ சொல்ல விலகினாள்...

அய்யோ படமே இன்னும் ஆரம்பிக்கலை..இவ்வளவு வெளிச்சத்திலேயே இப்படின்னா....இன்னும் விளக்கு அணைந்தால்...நல்ல வேளை கோடை விடுமுறைக்குக் குழந்தைகள் பாட்டி வீடு சென்றுள்ளதால், அவர்கள் வரவில்லை...வேறு யாராவது வந்து சேர மாட்டார்களா என்றிருந்தது அந்தப்பெண் அடித்த கூத்து....அவள் ஏதாவது செய்வதும், அவன் குனிந்து பேசுவதும், அவள் விலகுவதும்...தொடர்ந்தது..பாக்ஸ் என்பதால் குறைந்த இருக்கைகளே இருந்தன...

இது என்னடா வித்தியாசமாருக்கு...சில்மிஷங்கள் எல்லாம் ஆண்தான் செய்வான் என்றால்..இங்கே இப்படி...அந்தப் பெண் மேல் இரக்கம்தான் வந்தது..அந்தப் பாவி எந்த அளவுக்கு இப்பெண்ணிடம் பழகியிருந்தால் இவள் இந்த அளவுக்குத் துணிவாள்..அது சரி பாவம் அவளுக்கென்ன செய்கிறோம் என்று புரியவா போகிறது?!

ஏன் அங்கேயே பாக்குற...சும்மா இரேன்..

ஏங்க..தள்ளிட்டு வந்துருப்பானோ...

அதுல என்ன சந்தேகம்? நிச்சயமா அதுதான்..

எங்கேயிருந்து வந்திருக்கும் இந்தப்பெண்?

எப்படிங்க இப்படில்லாம்...எப்படித்தான் மனசு வருதோ..பாத்தா நமக்கே பாவமாருக்கு..

சும்மா இருக்க மாட்டே...

இப்படித் தள்ளிட்டு வர்றவங்களுக்கெல்லாம் தண்டனை குடுக்க சட்டம் இல்லியோ...இதுவும் ஈவ் டீஸிங்ல வருமா?
சின்னப் பசங்கதான் இப்படிக் கூத்தடிக்குதுன்னா..இதுங்களுமா இப்படி...

நமக்கேன் வீண் பேச்சு..படம் ஆரம்பிச்சாச்சு...படத்தை ஒழுங்காப் பாரு..

மெல்லிய இருளைத் துளைத்த திரை வெளிச்சம் பரவ...கண்கள் படத்தைப் பார்த்தாலும் அவ்வப்போது அவர்களைப் பார்க்கத் தவறவில்லை என் கண்கள்....படம் போட்டதும் கைதட்டிப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள் அவள்...ஆனால் திடீரென்று அவன் மேல் மீண்டும் சாய்ந்து கொள்ள...

பேசாம படத்தைப் பாரு..என் கைகிள்ளினார் இவர்...

திடீரென்று நாலு இளைஞர்கள் வந்தார்கள்...எங்களுக்கும் அந்த ஜோடிக்கும் இடையே இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள்...

அய்யோ...இவர்கள் இதைப் பார்த்து..என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ....நல்ல நாள் பாத்து வந்து தொலைச்சோம் படத்துக்கு...ச்சே!

அந்தப் பெண் என்ன செய்தாளோ என்னவோ.. திடீரென்று அவர்கள் எழுந்து வந்து எங்கள் வரிசையின் அடுத்த ஓரத்தில் அமர்ந்தார்கள்...

திரும்பிப்பாத்தே கொன்னுடுவேன் உன்னை...இவர் மிரட்டுகிறார்...

ஆனாலும் ஓரக்கண்ணில் இந்தக் காட்சிகளைக் காணத் தவறவில்லை நான்...இவருக்கு மட்டும் எப்படித்தான் வேறெந்த சிந்தனையும் இல்லாமல், தொந்தரவு இல்லாமல் படத்தைப் பார்க்க முடிகிறதோ தெரியவில்லை...

கண்களை மீட்டெடுத்துத் திரைப்பக்கம் திருப்பினாலும்...அவ்வப்போது அங்கேயேதான் போகிறது..

ஒரு வழியாய் இடைவேளை வந்தது...வெளியே அவன் போகும் போது அவன் கையைப் பிடித்துக்கொண்டே அந்தப் பெண்ணும் பின்னால் சென்றது..

கோன் ஐஸ் வாங்கிக் கொண்டு வந்தார்கள்...ஆமாமா இந்த மூஞ்சிக்கு இது வேறு...கையில் வழிய வழிய அந்தப் பெண் சாப்பிடச் சாப்பிட அவன் கைக்குட்டையால் அதைத் துடைத்துக் கொண்டேயிருந்தான்....ரொம்ப அவசியம்தான்...சாப்பிடும் வரையில் சும்மா இருந்த அவள் மீண்டும் தன் வேலையை ஆரம்பிக்க....ஏதோ குனிந்து அவளிடம் சிரித்துப்
பேசினான்..நல்ல வேளையாக அந்த இளைஞர்கள் இன்னும் வரவில்லை...இவ்ள நேரம் இவன் சும்மா இருந்த மாதிரி இருந்துச்சு....இப்ப இவனும் ஆரம்பிச்சுட்டானா...


நினைத்துக் கொண்டிருந்த போது அவனும் அவளும் புறப்பட ஆயத்தமானது தெரிந்தது..போலாம்மா...என்று அவன் கெஞ்ச...ம்ஹும் படம் பாக்கணும் என்று அவள் குழறுமொழியில் கொஞ்ச...எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது...ஒழிந்து போங்கள்....வீடு வாசல் இல்லேன்னா லாட்ஜுக்குப் போய்த் தொலைய வேண்டியதுதானே...

காபி வாங்கப் போனவர் என்ன இன்னும் காணோம்..அந்த இளைஞர்களையும் காணவில்லை..இவரையும் என்ன இன்னும் காணவில்லை...அங்கே தனியாக அதுகளுடன் இருக்க பயமாகக்கூட இருந்தது..

அதோ..கூட யார் பாலு அண்ணாவும் வருகிறார்...

என்ன அண்ணா படம் பாக்க வந்தீங்களா நீங்களும்..

ஆமாம்மா....நண்பர்களுடன் வந்தேன்...கீழே உட்கார்ந்திருக்கோம் நாங்க..என்றவர்...

ஹலோ முரளி..எப்படியிருக்கீங்க...விமலா எப்படிம்மா இருக்கே என்று அவனையும் அவளையும் பார்த்துக் கேட்க...

நல்லாருக்கோம்...என்ன பாலு  இந்த வாரம் வீட்டுக்கே வரலை..ஃப்ரீயா இருக்கப்ப வாங்க.....இதுக்கு மேல தாங்காது...ஏதோ ஆசப்பட்டாளேன்னு வந்தேன்....நாங்க கிளம்புறோம்னு சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள் இருவரும்.

இவன் என் ஃப்ரெண்ட்..எவ்ள நல்ல மனுஷன்..நல்லாருக்க பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணவே அவன் அவன் யோசிக்கும் போது, இவனுக்கு ரொம்ப நல்ல மனசு..போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு..புத்தி சுவாதீனம் இல்லாத அல்லது ஊனமுற்ற ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னான்...வீட்ல இவங்க அம்மா எதிர்த்தும் கூட இப்படி ஒரு பொண்ணத் தேடிப் புடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்...பாவம்னு அவன் அம்மாவும் சமாதானமாய்ட்டாங்க...முகம் கோணாம எப்படிப் பாத்துக்குறான் தெரியுமா...

பாலு அண்ணா சொல்லிகொண்டே நான் கூனிக் குறுகிப் போனேன்...ஏன் இவர்கள் உறவு பற்றி நல்லதாய், ஆரோக்கியமாய் ஒரு சிந்தனை எங்களுக்கு வராமல் போனது...என் கணவரை நான் பார்க்க அவரும் தர்மசங்கடத்தில் நெளிவது புரிந்தது...பாலு அண்ணா சென்றதும் திரைப்படம் தொடர....ஏதோ ஒரு புரிதலுடன் அவர் கையை என் கைக்குள் வைத்துக்கொண்டேன்...

குறளின் குரல் - 25

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 41. கல்லாமை
குறள் எண்: 405

கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.


கல்லா ஒருவன் தகைமை, தலைப்பெய்து
சொல்லாட, சோர்வு படும்.

விளக்கம்:

கல்லாத ஒருவன் தானும் எல்லாம் அறிந்தவன் போல வேடம் தரித்துக் கொள்வது உண்டு; அதன் மூலம் மதிப்பும், பெருமையும் தமக்குக் கிடைக்கும் என்று நினைப்பதுண்டு. அத்தகையவன், கற்றறிந்த அறிஞரை அணுகி, அவர் முன் பேசத் தொடங்கும் போது, அவனது பொய்யான பெருமையும், மதிப்பும் சோர்ந்து, கெட்டு, அழிந்து போகும்.

கல்வியறிவே மெய்யான மதிப்பும், பெருமையும் தேடித்தரும். கல்லாதவனின் போலித்தன்மை கற்றறிந்தவர் முன் தோற்றுப் போகும்.

தகைமை - பெருமை, மதிப்பு, அழகு, தன்மை, தகுதி, ஒழுங்கு, நிகழ்ச்சி
தலைப்பெய்தல் - அணுகுதல், ஒன்று கூடுதல், கிட்டுதல்
--------------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 622

வெள்ளத் தனைய யிடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும்.


வெள்ளத்து அனைய இடும்பை அறிவு உடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

விளக்கம்:

துன்பங்கள் வெள்ளம் போல் பெருகி வரும். அந்த வெள்ளத்தைக் கடப்பது மிகவும் எளிது என்று அறிவுடையவர்கள் மன உறுதியுடன் எண்ணிய உடனேயே அத்துன்பங்கள் மறைந்து விடும்.
----------------
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 102. நாணுடைமை
குறள் எண்: 1013

ஊனைக் குறித்த வுயிரெல்லா நாணென்னு
நன்மை குறித்தது சால்பு.


ஊனைக் குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
நன்மை குறித்தது சால்பு.

விளக்கம்:

எல்லா உயிர்களும் உடம்பை இருப்பிடமாகக் கொண்டு அதை விட்டுப் பிரியாமல் நிற்பவை. அதே போல், சான்றாண்மை என்பது நாணம் என்னும் நல்ல பண்புள்ள இடத்தையே இருப்பிடமாகக் கொண்டு விளங்கும்; அதனை விட்டுப் பிரியாது. நாணம் உள்ள இடத்திலேயே சான்றாண்மையும் நிற்கும்.

சால்பு - சான்றாண்மை, தன்மை, தகுதி
நாண் - வெட்கம், மானம், கூச்சம், வில்நாண், கயிறு, மாங்கல்யச் சரடு

-----------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்.


என்பு இலதனை வெயில் போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.

விளக்கம்:

எலும்பு இல்லாத புழுக்களின் உடம்பை வெயில் காய்ந்து வருத்தும். அதுபோல அன்பு இல்லாத உயிர்களை அறமானது வருத்தி வதைக்கும்.

அன்பு இல்லாதவர்கள் அறம் எதுவென்று அறிந்து கொண்டு செயலாற்ற முடிவதில்லை. அன்பும் அறமும் வேறு வேறாகப் பிரித்துப் பார்க்க முடியாதவை.

அன்பு உயிர்களின் ஆற்றலை வளர்க்கும். அன்பு, அறத்தின் வழி உயிரை நடத்தித் துன்பங்கள் தாங்கிக் கொள்ளும் ஆற்றலைத் தரும். அன்பு இல்லாதபோது அறம் இன்றிப் போகும். அந்த நிலை உயிர்களை வாட்டி வதைக்கும்.
-----------------------
பால்: பொருட்பால்
இயல்: அரண் இயல்
அதிகாரம்: 74. நாடு
குறள் எண்: 732

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா
லாற்ற விளைவது நாடு.


பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி, அருங் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

விளக்கம்:

பொருள்வளம் நிறைந்து காணப்படும்; அதனால் அனைவராலும் விரும்பப்படும்; கேடுகள் எதுவும் நேராது; விளைச்சல் நன்றாய் நிகழ்ந்து, எல்லா வளமும் பொருந்தியிருக்கும்; நாடு என்பது இத்தகைய சிறப்புகள் பெற்றிருக்க வேண்டும்.

பெட்டல் - விருப்பம்
பெட்டக்கது - விரும்பத்தக்கது
----------------------
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 98. பெருமை
குறள் எண்: 980

அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.


அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

விளக்கம்:

பெருமையுடையார் பிறர் குறை குற்றங்களை மறைத்து, நிறைகளை மட்டுமே நினைக்கும் நற்பண்புடையவர்; பெருமையற்ற சிறியரோ பிறரிடம் குற்றங்கள் மட்டுமே கூறி நிற்பர்.

அற்றம் - குறை, இன்மை
-------------------
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 70. மன்னரைச் சேர்ந்தொழுகல் / ஆட்சியாளரோடு பழகுதல்
குறள் எண்: 691

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.


அகலாது, அணுகாது, தீக் காய்வார் போல்க
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்.

விளக்கம்:

தீயின் வெப்பத்தில் குளிர்காய நினைப்பவர், மிகவும் நெருக்கமாக இருந்தாலும் ஆபத்து; மிகவும் விலகிப் போய்விட்டாலும் பயனில்லை. அதே போல், மன்னரைச் சார்ந்து பழகுபவர் மிகவும் நெருங்காமலும், மிகவும் விலகாமலும் சரியான நிலையில் இருந்து பழகவேண்டும்.

பலவிதமான காரணங்களால் மாறுபடும் மனநிலை உடையவர் ஆட்சியாளர்; எனவே அவர்களிடம் பட்டும் படாமலும் பழகிநிற்பதே நன்மை தரும்.

இகல் - வலிமை, பகை, போர், அளவு
---------------
பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 122. கனவு நிலை உரைத்தல்
குறள் எண்: 1215

நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே யினிது.


நனவினால் கண்டதூஉம் ஆங்கே, கனவும்தான்
கண்ட பொழுதே இனிது.

விளக்கம்:

முன்பு என் காதலரை நனவில் கண்டு நான் கண்ட இன்பம், அந்தப்பொழுதில் இனிமையாக இருந்தது, இப்போது, அவரைக் கனவில் கண்டு எனக்கு உண்டாகும் இன்பமும், கண்ட அப்பொழுதில் இனிமையாக உள்ளது. நனவோ, கனவோ, அவரைக் காணும் அந்தப் பொழுது மிகவும் இனிமையானது. அவரைக் காணும் இனிமையை உடனிருக்கும் நிலையிலும், பிரிந்த நிலையிலும் தருவதால், கனவும் நனவும் ஒரே தன்மையுடையவை
----------------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 06. வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 53

இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
னில்லவண் மாணாக் கடை.


இல்லது என், இல்லவள் மாண்பு ஆனால்? உள்ளது என்
இல்லவள் மாணாக்கடை?

விளக்கம்:

இல்லத்தரசியான மனைவி மாண்புடையவள் என்றால், ஒருவனுக்கு இல்லாதது என்பது எதுவும் இல்லை. ஏனெனில், மனைவியின் மாண்பு எல்லாச் சிறப்புகளையும் தேடித் தரும்

அத்தகைய மாண்பு இல்லத்தரசியிடம் இல்லையெனில், ஒருவனுக்கு உள்ளது என்பது எதுவும் இல்லை. மனைவியின் மாண்பெனும் முக்கியச் சிறப்பு இல்லையெனில் வேறெந்தச் சிறப்பாலும் பயனொன்றுமில்லை.

மாண்பு - மாட்சிமை, பெருமை, அழகு, நன்மை