Wednesday, February 27, 2008

கலைகளுக்குதான் மரணமில்லை..கலைஞனுக்குதான் உண்டே..


உன்னிடம்
கற்றதும் பெற்றதும்
ஏராளம்!
உன் எண்ணங்கள்
என் கைப்பிடித்துச் சென்று
காட்டிய வழியெல்லாம்
பூத்துச் சிரிக்கின்றது
பூபாளம்!

கதைகள் மீது
காதல் பிறக்கச் செய்தாய்!
எழுத்தினாலே
என்னுள் புரட்சி செய்தாய்!
கண்ணில் கண்ட
உலகங்கள் மட்டுமல்ல
காணா உலகங்களையும்
கவின்மிகு காட்சி செய்தாய்!

அறிவில் கண்ட
அறிவியல் ஆழம்,
அண்ட சராசரத்தின்
அகலம் நீளம் சகலம்
அறிந்து வைத்திருந்தாய்!

உறவில் ஒன்று
உயிர் நீத்தது போல்
குருவில் ஒருவர்
குறைந்து விட்டது போல்
தோழமை ஒன்றைத்
தொலைத்து விட்டது போல்
துடிக்கிறது என் மனம்!

இனி உன்
எழுத்து மட்டும்தானே
எம்முடன் தங்கும்!

கலைகளுக்குதான் மரணமில்லை..
கலைஞனுக்குதான் உண்டே..

Saturday, February 23, 2008

மட்டை(ட)ப் பந்து



ஐந்து நாளில் தொடங்கி
ஒரு நாளாய்த் தொடர்ந்து
அரை நாளில் அடங்கி
அரிதார அவதாரத்தையும்
நெட்டித் தள்ளிய
மட்டை(ட)ப் பந்து!

அன்று
விளையாட்டு வினையாகி
விலை கொண்டது உயிர்தனை.

இன்று
வியாபார விகற்பமாய்
விசுவரூபமடுத்து
வீரனே
விலை பேசுகிறது உன்னை.

விலை போகச் சம்மதிக்கும்
வீரனே! நீயெல்லாம் உயர்திணை?

பிடித்த மட்டையும்
எறிந்த பந்தும்
ஏலம் போனது ஒரு காலம்!

மட்டை பிடிப்பவரும்
பந்து எறிபவரும்
ஏலம் போகும்
அவமான அவலம்!
காலத்தின் கோலம்!

காலம்! கலிகாலம்!
ராமி! அபிராமி!

Wednesday, February 20, 2008

நிறம் மாறும் விதிகள்

ரம்யாவின் தாயார் ரம்யாவிடம்:

சரி. போற இடத்துல புருஷனுக்கு அனுசரிச்சு நடக்கிறவதான் பொம்பள. புது இடம். கொஞ்சம் அப்டி இப்டித்தான் இருக்கும்.நீதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போணும். ஆம்பளைங்க வெளில சுத்திட்டு வருவாங்க..ஆயிரம் டென்ஷன் இருக்கும். பாத்துப்பதமா நடந்துக்கோ..மாமியார், மாமனார்கிட்டயும் அப்படித்தான்..ஏடாகூடமா ஏதாவது பண்ணாத..முக்கியமா அவங்க அப்பா,அம்மா பத்தி உன் புருஷன்கிட்ட குறை சொல்லிட்டே இருக்காத..

ரம்யாவின் தாயார் தன் கணவனிடம்:

என்ன அப்டி முழிக்கிறீங்க? ஆபீஸாம்...டென்ஷனாம்..கத்தரிக்கா..வீட்ல இருந்தா எங்களுக்கு மட்டும் டென்ஷன் இல்லையா..நல்லா வளத்து வெச்சிருக்காங்க புள்ளய உங்க அப்பா, அம்மா எதுக்குமே லாயக்கில்லாம.. அவுங்களத்தான் சொல்லணும்..

** ** ** ** * * ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **

ரம்யாவின் மாமியார் தன் மகள் உமாவிடம்:

ஏண்டி..வரும்போது பீரோவெல்லாம் பூட்டிட்டுத்தான வந்த? குடும்பத்துல அத்தனை பேர் நடமாடுற இடம்..ஏதாவது காணோம்னா யாரைச் சொல்ல முடியும்..பாத்துப் பாத்து வாங்கிக் கொடுத்தது..பத்திரமா வச்சுக்கோடி..


உன் மாமியாருக்கென்ன..கையும் காலும் நல்லாத்தான் இருக்கு..அவ புடவைய நீதான் மடிக்கணுமா..நீ என்ன அவ வீட்டு வேலக்காரியாடி?சும்மா உன்னயவே வேல வாங்கிக்கிட்டு..ஆனாலும் ஒனக்குச் சாமர்த்தியம் பத்தாதுடி..

ஆமா..உன் நாத்தனார்க்காரி இன்னும் அடிக்கடி வந்து டேரா போடுறாளா..போன தரம் உங்க வீட்டுக்கு வந்தப்பவே எனக்குப்பத்திக்கிட்டு வந்துச்சு..உன் மாமியார் வேற மீனை வறு, கறிக்குழம்பு வையி அவளுக்குப் புடிக்கும்னு..நீ ஒருத்தியே எவ்வளவு வேலசெய்ய முடியும்..என்னமோ அவ வீட்ல சமைக்கவே சமைக்காதது மாதிரி..உங்க வீட்டுக்கு வந்தாத்தான் சோத்தையே பாப்பாளோ..

ரம்யாவின் மாமியார் ரம்யாவிடம்:

ஏம்மா ரம்யா..என் நீலக் கலர் புடவையக் காணோம்..துவைச்ச துணியெல்லாம் மடிச்சு ஒழுங்கா வக்கிறதில்லயா..இல்ல ஒரு வேள நாந்தான் மறந்தாப்புல உன் பீரோல வச்சுட்டேனா பாரு..

அப்டியே சிக்கன் 65, முட்டைக் குழம்பு, இறாத் தொக்கு பண்ணிடு..உமாவுக்கு ரொம்பப் புடிக்கும்..கொஞ்சம் தேங்காய்ப்பால்சாதமும் பண்ணிடு..

** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **

ரம்யாவின் கணவன் ரம்யாவிடம்:(கல்யாணமான் புதிதில்)

வயசானவங்க அப்டித்தான் இருப்பாங்க..இன்னும் எத்தன காலம் இருக்கப் போறாங்க..அதுவரைக்கும் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயேன்..படிச்ச பொண்ணுதானே நீ..சும்மா சும்மா ஒப்பாரி வச்சுக்கிட்டு..நல்லா வளத்து வச்சுருக்காங்க..
தொட்டாச்சிணுங்கி..

ரம்யாவின் கணவர் ரம்யாவிடம்:(தன் மகளுக்கு வரன் தேடுகையில்)

மாமியார் மாமனார் இருக்கிற இடமெல்லாம் வேணாம்..கூடவே இருந்து என் பொண்ணு உயிர வாங்கறதுக்கா? வர்றவனும் என் பொண்ண எப்டிப் பாத்துக்குவானோ? இப்பக் காலம் இருக்குற இருப்புல..இவ்ள படிக்க வச்சுப் பாத்துப் பாத்து வளத்து வச்சுருக்கேன்..கண் கலங்காமப் பாத்துக்குவான்னு என்ன நிச்சயம்..நம்ம பார்வையிலேயே இருக்குறதுதான் நல்லது..பேசாம வீட்டோட மாப்பிள்ளையாப் பாத்துற வேண்டியதுதான்..

ரம்யா: ????!!!!

Monday, February 18, 2008

பெண்களின் அரசியல் அறிவு

"இந்த ஆம்பளங்களுக்கு என்ன வேல..ரெண்டு பேரு கூடினாப் போதும்..அரசியல் பேச ஆரம்பிச்சுடுவாங்க.."
"ஆரம்பிச்சுட்டீங்களா..செய்திகள் வந்தா சேனல் மாத்த மாட்டிங்களே..எந்தக் கட்சி வந்தா நமக்கு என்ன செய்யப் போறாங்க.."

பெண்கள் என்றாலே அரசியல் பேசமாட்டார்கள் என்பதுதான் நிலவரம். சமையல், சீரியல், நகை, சினிமா,குழ‌ந்தைப் ப‌ராம‌ரிப்பு, புத்தகம் என்று பல விஷயங்களிலும் பெண்கள் பெயர் இணைத்துப் பேசப்படுவது போல் அரசியலுடன் இணைத்துப் பேசப்படுவதில்லை.

இதற்குக் காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் ஒரு வகையில் பெண்களாகவேதான் இருக்கின்றோம். வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்துவதோடு நம் அரசியல் தொடர்பு நின்று போகிறது.(எத்தனை பெண்களை வீட்டில் உள்ள ஆண்கள் இதற்காகக் கூட வற்புறுத்த வேண்டிய நிலைமை உள்ளது தெரியுமா?) பெண்களின் அரசியல் அறிவுக்குத் தடைபோடும் சில ஆண்களும் ஒரு காரணம்தான்.

வீட்டின் சூழலும் இதில் பெரும்பங்கு வகிக்கிறது. பொது அறிவு, பாட‌ அறிவு இத‌னுட‌ன் சேர்த்து நாட்டு ந‌டப்பு ப‌ற்றியும் சிறு வ‌ய‌திலேயே அறிமுகமாகும் சூழலில் வ‌ள‌ர்த்த‌ பெண்க‌ளுக்கு அர‌சிய‌ல் அறிவும் சாதார‌ண‌ விஷ‌ய‌மாகி விடுகின்ற‌து. இன்னும் சில‌ வீடுக‌ளில் க‌ண‌வ‌ர் இதில் பெரும்ப‌ங்கு வ‌கிக்கிறார். இந்த‌ச் சூழ‌ல் இல்லாம‌ல் வ‌ள‌ரும்போதுதான் அர‌சிய‌ல் என்ப‌து ந‌ம‌க்குச் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ விஷ‌ய‌ம் என்ற‌ போக்கு பெண்க‌ளிட‌ம் வ‌ள‌ர்ந்து, தங்கியும் விடுகிற‌து.

தாய்க்குலங்கள் என்ற வார்த்தைப் பிரயோகமே அரசியல் மூலம் பிரபலமானதுதானே?வாக்களிப்பதோடு கடமை நின்றுவிடுவதில்லை..அவ்வப்போது நம் நாட்டில், ஏன் உலக அளவு அரசியல் நிலவரங்கள் அறிந்து கொள்வது நம் தார்மீகப் பொறுப்புகளில் ஒன்றாய் விளங்க‌ வேண்டும்.

அரசியல் கட்சியில் இருக்கும் பெண்கள் கூட மகளிரணி உறுப்பினர்கள் என்று சேர்க்கப்பட்டு மந்தைக்குள் இருக்கும் ஓர் ஆடாய் இருக்கிறார்களே ஒழிய, தான் சார்ந்திருக்கும் கட்சியென்ன, அதன் கொள்கையென்ன முற்றிலும் அறிந்து ஈடுபடுகிறார்களா என்றால் அநேகமாக‌ இல்லையென்றே சொல்ல வேண்டும்.

தொலைக்காட்சி என்ற ஊட‌க‌ம், இந்த விஷ‌ய‌த்தில் உண்மையிலேயே பெரும்ப‌ங்கு வ‌கிக்கிற‌து. அன்றாடம் செய்தித்தாள் ப‌டிக்காத‌ பெண்க‌ள் கூட‌ தொலைக்காட்சித் தொட‌ர்க‌ள் பார்க்கும் போதும், திரைப்ப‌ட‌ம் ம‌ற்றும் சில‌ நிக‌ழ்ச்சிக‌ள் பார்க்கும் போதும் ஏதோ ஒரு சமயம் செய்திக‌ள் காதால் கேட்டே ஆக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் நில‌வுகிற‌து. இது போன்ற‌ சூழ‌ல் சற்றே வயது முதிர்ந்த, அல்லது நடுத்தர வயதுப் பெண்மணிகளிடம் அதிக‌ரித்திருப்பதை நாம் அண்மைக்கால‌ங்க‌ளில் க‌ண்கூடாக‌க் க‌ண்டு வ‌ருகிறோம். இது வரவேற்கத்தக்கதொரு நல்ல மாற்றமே.

Monday, February 11, 2008

அவன் இவன் என்ற ஏக வசனம்

"டேய்..டெண்டுல்கர் 44 அடிச்சிருக்காண்டா.."

"விஜய் சூப்பரா நடிச்சிருக்காண்டா.."

"நமீதா நல்லா ஆடிருக்காடா.."

ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்ற போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அவர் மகள் "இந்த சத்யராஜ் படமே வேஸ்ட்...ஏம்ப்பா இவன் படத்தைப் போடுறீங்க.."அவள் அப்பா தேமே என்று சானல் மாற்றினார்.

செய்திகள் வந்தது. ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தார். "இந்தம்மா வந்துருச்சா...ஏதாவது கலைஞர் பத்திப் பேசும் இப்போ..இவளுக்கு வேறு என்ன வேலை?" என்றாள் அக்குழந்தை.

கலைஞர் பேசிக் கொண்டிருக்க.."அய்யோ இவன் வந்துட்டானா.." என்றது மறுபடியும். நண்பருக்கு வந்ததே கோபம். "பெரியவங்களை அப்படி மரியதையில்லாமப் பேசக் கூடாது" என்றார்.

அப்போது யோசித்தேன்..இதே தவறுகளை நானும் செய்து வந்திருக்கிறேன். இன்னும் செய்தும் வருகிறேன். சில நேரங்களில் இதற்காக என்னைத் திருத்திய என் பெற்றோர், என் கணவர், இன்னும் பலரும் இது போல் பேசுகிறோம்.

முக்கிய பிரமுகர்களைக் குறிப்பிட்டுப் பேசும் போது இது இயல்பாகிப் போகிறது நம்மில் பலருக்கு. நம் மனதுக்குப் பிடிக்காதவர்களை மட்டுமல்ல..நம் மனதுக்கும் மிகவும் பிடித்தவர்களையும், வயதில் பெரியவர்களையும் இப்படி ஏக வசனத்தில்தான் அழைத்து வருகிறோம்.

சில சமயம் என் மகளை இதற்காகத் திருத்தும் நான், இன்னும் இப்படித்தான் பேசுகிறேன். இந்த விஷயத்தில் எழுதும் போது இருக்கும் மரியாதைப் பண்பாடு பேசும் போது இல்லாமல் போய்விடுகிறது.

சொற்குற்றம், பொருட்குற்றம் செய்தால் பரவாயில்லை என்று கவிஞர்களுக்கு ஒரு விதிவிலக்கு (Poetic License) உள்ளது போல் இது வி.ஐ.பி. விளிப்பில் விதிவிலக்குதான்.

தெரிந்தே செய்யும் தவறுகளுள் இதுவும் ஒன்று.

இப்படி விளிக்காத விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட்.

Sunday, February 10, 2008

சாகரன் என்ற கல்யாண் -‍ஒரு நினைவா‌ஞ்ச‌லி

அதற்குள் வருடம் ஒன்று ஓடிவிட்டதா?

2006 டிசம்பர் இறுதி வாரத்தில் முதல் முறையாகக் கல்யாண் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க நேர்ந்தது. உணவு விடுதி ஒன்றில் ஒரு விருந்தில் கலந்து கொண்ட போது..சிரிப்புடன் சின்னதாக ஒரு அறிமுகப் படலம். அன்றிரவு அவர்கள் இந்தியாவுக்கு 2 வார விடுமுறை செல்வதற்கான ஆயத்தத்தில் இருந்தார்கள். அபர்ணா கல்யாண் பெற்றோருக்கு மற்றும் ஊரிலுள்ள அனைவருக்கும் வாங்கிய பரிசுப் பொருட்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 3 வயது வர்ணிகா துறுதுறு குழந்தையாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது, மழலையில் ஓரிரு வார்த்தைகள் பேசியது இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது.

இரண்டாவது முறை பிப்ரவரி 1,2007 அன்று, தூதரக வளாகத்தில் நடைபெற்ற ஒரு தமிழ்மன்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது ஒரு சிறு புன்னகைப் பரிமாற்றம்.

பிப்ர‌வ‌ரி 11ந் தேதி மதியம் க‌ல்யாண் ம‌றைந்த‌ செய்தி..ந‌ம்பவே முடிய‌வில்லை..ஆனாலும் நிஜ‌ம். ரியாத்தே ஸ்த‌ம்பித்துப் போன‌து. க‌ல்யாண் குடும்ப‌ம் இங்கிருந்து சென்ற‌து முத‌ல் அங்கே இறுதிச் ச‌ட‌ங்கு ந‌ட‌ந்த‌வ‌ரை ந‌ண்ப‌ர், அறிந்தோர், அறியாத‌வ‌ர் அனைவ‌ரும் ம‌ன‌த‌ள‌வில் உட‌னிருந்து வ‌ழிந‌ட‌த்தினோம்.

சில‌ வாரங்கள் முன் க‌ல்யாண் த‌ம்பதி, ஒரு மேடை நாடகத்தில் ம‌ண‌ம‌க்க‌ள் கோலத்தில் மாலையும் க‌ழுத்துமாக‌ இருந்த‌ புகைப்ப‌ட‌த்தை ஒரு ம‌ட‌லில் காண‌ நேர்ந்த‌ போது ம‌ன‌ம் வெடித்துப் போகாத‌வ‌ர்க‌ள் யாருமே இல்லை. துக்க‌த்தைத் தொண்டையில் அட‌க்கி இறுகிப் போயிருந்த‌ அப‌ர்ணா, ஊருக்குப் போகிறோம், அப்பா ஊரில் இருக்கிறார் என்று விவ‌ர‌ங்கள் அறியாத‌ வ‌ர்ணிகாவின் பேச்சு..ம‌ன‌தைப் பிசைந்த‌து.

அவ‌ரைப் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ப‌ல‌ர் அறிந்த‌‌து என்றாலும், த‌மிழ்ச்ச‌ங்க‌ உறுப்பின‌ர் என்ற‌ அள‌வில் ம‌ட்டுமே அறிந்திருந்தேன் அதுவ‌ரை. அத‌ன் பின் ந‌ட‌ந்த இர‌ங்க‌ல் கூட்டத்தில் கலந்து கொண்ட போதுதான் வலைக்க‌ளத்தில் அவர் புரிந்த தொழில்நுட்பச் சேவைகள், தமிழ்ப்பதிவுலகம் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் குழந்தைகளுக்காக வலையில் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது பேராவல் புரிந்தது.

த‌மிழ் வலையுலக நண்ப‌‌ர்க‌ளின் ம‌ட‌ல்க‌ள், முக்கிய‌மாக‌ சென்ன‌ப்ப‌ட்ட‌ண‌ம் ந‌ண்ப‌ர்க‌ள் மட‌ல்களின் மூல‌மே அவ‌ரின் ச‌த்த‌மில்லாத‌ சாத‌னைக‌ள் தெரிய‌ வ‌ந்த‌து. எனக்குத் த‌மிழ் வ‌லையுல‌க‌ங்க‌ளை அறிமுக‌ம் செய்து வைத்த‌து அவ‌ர் ம‌ர‌ண‌ம்.

ரியாத் த‌மிழ்ச்ச‌ங்க‌த்தின் செய‌ற்குழு உறுப்பின‌ர், ரியாத் எழுத்துக்கூட‌த்தின் ஒருங்கிணைப்பாள‌ர், தேன்கூடு திர‌ட்டியைத் தோற்றுவித்த‌வ‌ர், முத்த‌மிழ்ம‌ன்ற‌த்தின் நிர்வாகி என்ற‌‌ ப‌ல‌ முக‌ங்க‌ளில் சேவைக‌ள் புரிந்து வ‌ந்தவ‌ர். கால‌ம் பொழுது க‌ண‌க்கின்றிக் க‌ணினி முன்னேயே த‌வ‌மிருந்த‌வ‌ர். கால‌னின் ச‌தியால் த‌ன் க‌ன‌வுகள் பலவற்றைப் பாதியில் விட்டுவிட்டுச் சென்று விட்டார்.

அவ‌ர் ம‌னைவி அப‌ர்ணா த‌ற்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவ‌ன‌ம் ஒன்றில் ப‌ணிபுரிந்து வ‌ருகிறார். வ‌ர்ணிகா இப்போது ப‌ள்ளியில் ப‌டித்து வ‌ருகிறாள். இத்தகவல்கள் அவர் நண்பர்கள் மூலம் அறிந்தேன்.

சாகரன் ப‌திவுக‌ள் பதிந்த இந்த வலைப்பூ இன்று வாசம் மட்டும் ஏந்தி வெறுமையாய் நிற்கிற‌து.

சுட‌ர் விளையாட்டைத்
துவ‌க்கி வைத்த‌வ‌ர்
சுட‌ராய் இன்று
ப‌ல‌ர் இத‌ய‌ங்க‌ளில்..
அருகிலிருந்தும்
அறிமுகமில்லாமல் போன‌
ஆதங்கத்துடன்
ஆழ்ந்த‌ வ‌ருத்த‌த்துட‌ன்
அன்புட‌ன்
ந‌ன்றியுட‌ன்
அவ‌ருக்கு
என் அஞ்சலிக‌ள்!

(நினைவஞ்சலியா? நினைவாஞ்சலியா? எது சரி?)

Sunday, February 3, 2008

எரிந்த மலர்களுக்கு...

அஞ்சலிகள் மட்டுமே
தொடர்கின்றன
ஆண்டுகள் எட்டு
ஆன பின்னும்...

எந்தப் பாவத்துக்காய்
இந்தத் தீக்குளிப்பு?
தருமம் ஏன்
தவறியது
தருமபுரியில்?

எரித்த அம்புகள்
ஏகாந்தமாய்...
எய்தவர் பவனி
ஏகபோகமாய்...

மரணதண்டனை
தேவையா இல்லையா
விவாதங்கள் தொடர...

சட்டங்கள்
சில்லறைக்காய்ச்
செல்லாமல் போக...

கருவறைச் சுமையைக்
கல்லறையிலும் கண்ட
பெற்றோர் மனம்
செல்லரித்துப் போக...

கண்ணால் கண்டவர்
காதால் கேட்டவர்
நண்பர் அந்நியர்
சிந்தை நொந்து
சித்தம் தெளியாது நிற்க...

(கல்லூரி)
திரைப்படத்தின் உச்சகட்டப்
பரபரப்பு/பரிதாப
உத்திக்காய்...
ஏதோ ஒரு
காரணமற்ற காரியத்துக்காய்
நெருப்புக் கோப்புகள்
மீட்டுத் தர...

அஞ்சலிகள் மட்டுமே
தொடர்கின்றன
ஆண்டுகள் எட்டு
ஆன பின்னும்...