"டேய்..டெண்டுல்கர் 44 அடிச்சிருக்காண்டா.."
"விஜய் சூப்பரா நடிச்சிருக்காண்டா.."
"நமீதா நல்லா ஆடிருக்காடா.."
ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்ற போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அவர் மகள் "இந்த சத்யராஜ் படமே வேஸ்ட்...ஏம்ப்பா இவன் படத்தைப் போடுறீங்க.."அவள் அப்பா தேமே என்று சானல் மாற்றினார்.
செய்திகள் வந்தது. ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தார். "இந்தம்மா வந்துருச்சா...ஏதாவது கலைஞர் பத்திப் பேசும் இப்போ..இவளுக்கு வேறு என்ன வேலை?" என்றாள் அக்குழந்தை.
கலைஞர் பேசிக் கொண்டிருக்க.."அய்யோ இவன் வந்துட்டானா.." என்றது மறுபடியும். நண்பருக்கு வந்ததே கோபம். "பெரியவங்களை அப்படி மரியதையில்லாமப் பேசக் கூடாது" என்றார்.
அப்போது யோசித்தேன்..இதே தவறுகளை நானும் செய்து வந்திருக்கிறேன். இன்னும் செய்தும் வருகிறேன். சில நேரங்களில் இதற்காக என்னைத் திருத்திய என் பெற்றோர், என் கணவர், இன்னும் பலரும் இது போல் பேசுகிறோம்.
முக்கிய பிரமுகர்களைக் குறிப்பிட்டுப் பேசும் போது இது இயல்பாகிப் போகிறது நம்மில் பலருக்கு. நம் மனதுக்குப் பிடிக்காதவர்களை மட்டுமல்ல..நம் மனதுக்கும் மிகவும் பிடித்தவர்களையும், வயதில் பெரியவர்களையும் இப்படி ஏக வசனத்தில்தான் அழைத்து வருகிறோம்.
சில சமயம் என் மகளை இதற்காகத் திருத்தும் நான், இன்னும் இப்படித்தான் பேசுகிறேன். இந்த விஷயத்தில் எழுதும் போது இருக்கும் மரியாதைப் பண்பாடு பேசும் போது இல்லாமல் போய்விடுகிறது.
சொற்குற்றம், பொருட்குற்றம் செய்தால் பரவாயில்லை என்று கவிஞர்களுக்கு ஒரு விதிவிலக்கு (Poetic License) உள்ளது போல் இது வி.ஐ.பி. விளிப்பில் விதிவிலக்குதான்.
தெரிந்தே செய்யும் தவறுகளுள் இதுவும் ஒன்று.
இப்படி விளிக்காத விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட்.
Monday, February 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
பாச மலர்,
இதுக்கே இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள். பொல்லாதவன் படத்தைப் பாருங்கள், படத்தில் தனுஸ் அந்த பாத்திர அப்பாவை
'எங்க அப்பன் ஒரு கெழவன், எங்க அப்பங்காரன், அப்பன் கால ஒடச்சிக்கிட்டு கெடக்கான்...'இது போன்று படம் முழுவதும் ஒருமை வசனம் வரும்.
:))
எனக்கு 'சல்யூட்' அடித்த உங்களுக்கும் ஒரு சல்யூட் :-)) இதெல்லாம் ரொம்ப அதிகம்தான் இருந்தாலும்... ஹிஹி
சாத்தான்குளத்தான்
ஏன் எப்படின்னு தெரியல ... எல்லாருமே இப்படித்தான் பேசுறோம் :(
பொல்லாதவன் மட்டுமா?
சேது படத்தில் நாயகியின் அப்பாவை விக்ரம் குறிப்பிட்டுப் பேசும் வசனம்?
கண்ணன் சார்,
சினிமாவில் என்ன அப்பாவைப் பேசுவது நிஜ வாழ்க்கையிலும் தான் செய்கிறார்களே..
மீரான் சார்,
//இதெல்லாம் ரொம்ப அதிகம்தான் இருந்தாலும்... ஹிஹி//
..ஆனாலும் சில நேரம் வயதானவர்களைக் கூட நான் இப்படிச் சொல்லும் போது கஷ்டமாக உள்ளது..மாற்றிக் கொள்ளவும் முடியவில்லையே..
அதே நேரம் இவர்களை மரியாதையுடன் விளிக்கும் ஒருவரையும் நான் கண்டிருக்கிறேன்.
ஆமாம் பொன்வண்டு..
துளசி மேடம்,
நிஜ வாழ்க்கையிலேயே அப்பாவை, அம்மாவை இப்படிச் சொல்கிறார்களே..
பாச மலர் நீங்கள் சொல்வது மிகச்சரி... சமீபத்தில் திரைத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுதுதான், நான் எப்படி பேசுகிறேன் என்பதே புரிந்தது. அவர் பேசுகையில் ஷங்கர் சார், அஜீத் சார், ரஜினி சார் என்றே பேசிக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது. அந்த பழக்கத்தை தற்போது குறைத்து வருகிறேன்.
“வி.ஐ.பி. விளிப்பில் விதிவிலக்கு” என்று உரைநடையிலும் மோனை நயத்தோடு எழுதும் உங்கள் எழுத்து அழகு.
//நித்யகுமாரன் said...
பாச மலர் நீங்கள் சொல்வது மிகச்சரி... சமீபத்தில் திரைத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுதுதான், நான் எப்படி பேசுகிறேன் என்பதே புரிந்தது. அவர் பேசுகையில் ஷங்கர் சார், அஜீத் சார், ரஜினி சார் என்றே பேசிக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது. அந்த பழக்கத்தை தற்போது குறைத்து வருகிறேன்.
“வி.ஐ.பி. விளிப்பில் விதிவிலக்கு” என்று உரைநடையிலும் மோனை நயத்தோடு எழுதும் உங்கள் எழுத்து அழகு.
//
என்னுடன் உறையாடிய திரைத்துரை நண்பர் நடிகர்களை சார் போட்டார், நடிகைகளை அவள் / இவள் என்றே சுட்டினார். ஏன் இந்த வேறுபாடு என்று உடனடியாகவே கேட்டேன். நடிகைகளுக்கு அவ்வளவு தான் மரியாதை என்றார்.
:(
ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.
நல்லதொரு பதிவு. இந்த லிஸ்ட்ல வீட்டு வேலைசெய்றவங்க, டிரைவர்.............. இப்படி நிறைய இருக்கு.
அவங்களும் மனிதர்கள் என்று நினைப்பதில்லை.
ஒரு நாளைக்கு அவங்க லீவு போட்டாத்தெரியும் நமக்கு.
எங்கள் வீட்டில் அம்மா, அப்பா கலைஞரையும், எம்ஜியா யாரையும் இன்னும் சிலரையும் மரியாதை கொடுத்து தான் அழைபார்கள், அந்த பழக்கம் எனக்கும் வந்து விட்டது, பொதுவாகவே பெரிய அரசியல்வாதிகளை(உதாரணம் மன்மோகன், வாஜ்பாய், சோனியா என்று) அவன், இவன் என்று அழைக்கும் பழக்கம் எங்கள் வீட்டில் இல்லை. :) பெற்றோர்கள் தான் பழக்க வேண்டும்
பாசமலர்,
அந்த காலத்தில மரியாதை ராமன் கதைகள்னு ஒரு கதை வரும், பேருலவே மரியாதை வச்சிருக்கும், அதே போல ரொம்ப மரியாதையானவங்க போல நீங்க :-))
சும்மா ஒரு புளோவுக்காக வி.ஐ.பிகளை அவன், இவன் என்று வருவது போல நான் கூட பதிவுகளில் எழுதுவதுண்டு, ஆனால் பேசும் போது அப்படி இல்லை. அப்படி எழுதினா தான் ஒரு தமாசு வருது எழுத்தில. இதுல என்ன தமாசுனு கேட்டா நான் எஸ்கேப்பு!
வி.ஐபிகளை எல்லாம் மக்கள் தங்கள் செல்லமாக பார்ப்பதால் செல்லத்துக்கு எதுக்கு மரியாதைனு தப்பா எடுத்துகாதுனு நினைக்கிறாங்க போல!
நித்யகுமாரன்,
தர்மசங்கடந்தான்..தவிர்க்க
முடியவில்லையே..
புதுகை,
போலீஸ், ஆசிரியர் பலர் இந்த லிஸ்டில் வருவார்கள் என்றாலும் அந்த விஷயத்தில் முழு மனதுடன் குழந்தைகளைக் கண்டிக்க முடிகிறது..
இதில் அப்படிக் கண்டிக்கும் போது முழு மனது வரவில்லையே...
நீங்க சொன்னவுடனே இந்த பயபுள்ளைக திருந்தீடுவாய்ங்கன்னா நெனய்க்கிறீங்க....
ஹி..ஹி..
இதெல்லாம் தொட்டில் பழக்கம் தாயே....
அடுத்த தலைமுறைககு இந்த மரியாதையை நான் சொல்லிக்கொடுக்கிறேன்....அவர்களும் பின்பற்றுகிறார்கள்....இதெல்லாம் வீட்டிலிருந்துதான் துவங்க வேண்டும்.
வள்ளி,
//பெற்றோர்கள் தான் பழக்க வேண்டும்//
இதுதான் இங்கே உதைக்கிறதே..நானே சரியில்லை...அதனால்தான் திருத்தும் போது உதைக்கிறது..
//பொதுவாகவே பெரிய அரசியல்வாதிகளை(உதாரணம் மன்மோகன், வாஜ்பாய், சோனியா என்று) அவன், இவன் என்று அழைக்கும் பழக்கம் எங்கள் வீட்டில் இல்லை.//
நன்று நன்று..
வவ்வால்,
எல்லோரும் எழுத்தில் மட்டும் மரியாதி..பேச்சில் இல்லை..
நீங்கள் வித்தியசமாய்...
மரியாதை ராமன் எல்லாம் இல்லை..இதில் குழந்தைகளை முழுமனதோடு கண்டிக்க முடியவில்லையே என்ற வருத்தம்தான்..
இவர்களைத் தவிர எல்லோரைப் பற்றிப் பேசும் போதும் இயல்பாகக் கண்டிக்க வருகிறது..
நீங்கள் சொன்னது போல் அவர்கள் நம் வீட்டுச் செல்லப் பிள்ளைகள் தான் போலும்..
சொக்கரே,
//நீங்க சொன்னவுடனே இந்த பயபுள்ளைக திருந்தீடுவாய்ங்கன்னா நெனய்க்கிறீங்க//
நானே திருந்தப் போவதில்லையே..முயன்று தோற்றிருக்கிறேன்..
//அடுத்த தலைமுறைக்கு இந்த மரியாதையை நான் சொல்லிக்கொடுக்கிறேன்....அவர்களும் பின்பற்றுகிறார்கள்....இதெல்லாம் வீட்டிலிருந்துதான் துவங்க வேண்டும்.//
உங்கள் வீட்டில் துவங்கியதற்கு ஒரு ஓஓஓஒ...
கண்டிப்பாக குழந்தைகளிடம் கற்றுக் கொடுக்க வேண்டிய நல்ல விஷயம்தான்..
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாததுதான்..
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் கோபம் வெளிப்படும்போது பெரியவர்களிடமிருந்து வெறியாகக் கிளம்பும் வார்த்தைகளைக் கேட்கும் குழந்தைகள் அதுவும் பேசக்கூடிய வார்த்தைகள்தான் என்று பழகிக் கொள்கிறார்கள்.
பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய நல்ல விஷயம் இது..
நல்ல இடுகை பாசமலரு..
நல்ல பதிவு. சொல்வதை அழகாய்ச் சொல்வோமே. அதனால் எதுவும் குறைந்து விடப் போவதில்லை.
எனக்கும் இந்தப் பழக்கம் இருந்தது அதை என் நண்பர் மாற்றினார்.
"எங்க பாஸ் சரியான வம்பனாயிருக்கான்.
ஒங்க பாஸ் என்ன சொன்னான்?" என்று ஒரு முறை நான் கேட்டபோது
"'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்று என்னத்தய்யா ஸ்கூல்ல படிச்சீங்க. உங்க பாஸ எப்படி வேண்டாலுஞ்சொல்லு. எங்க பாஸ மரியாதயாப் பேசு" என்று சொன்னார்.
அதிலிருந்து நான் திருந்தியதோடு என் குடும்பத்தாருக்கும் மற்ற நெருங்கியவர்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
உண்மைத்தமிழன்,
நன்றி..
சுல்தான்,
திருந்திவிட்டீர்களா? என்னால்தான் முடியவில்லை இன்னும்...
\\இப்படி விளிக்காத விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட்.\\
நானும் ஒரு சல்யூட் வச்சுக்கிறேன்..;)
//இப்படி விளிக்காத விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட்//
இந்தப் பதிவிற்காக உங்களுக்கு ஒரு சல்யூட்!!!!
அன்புடன் அருணா
கோபி, அருணா,
கருத்துக்கு நன்றி..
எங்கள் ஊரில் வயதுக்கு மூத்தவர்களை பண்மையில் அழைப்பது அவர்களை அந்நியப்படுத்துவது போல் ஆகும். "வா சித்தப்பா உக்காரு" என்போம், இதே நகரங்களில் "வாங்க சித்தப்பா உக்காருங்க" என்று பண்மையில் பேசுவார்கள். மரியாதை என்பதே இடம், ஏவள் சம்மந்தப்பட்டது தானே!
அய்யோ நிசந்தான், இதை நாம் ஒரு சில பிரபலங்களோடு பழகும்போது மட்டுமே உணர்ந்து கொல்ளமுடியும். அதாவது நாம் அவர்களுக்கு மிகவும் தெரிந்தவர்கள் ஆகும் போது அவர்களை மிகவும் மரியாதையாக விளிக்கத்தொடங்குவோம் ஆனால் மற்றவர்கள் நாம் ஏதோ இலக்கண தவறோடு பேசுவது போல் பார்க்கும் போது அழுவதா சிரிப்பதா என்று தெரியாது இதில் வேடிக்கை என்னவென்றால் நாம் அறிந்த அவர்களைத்தவிர மற்றவர்களை இன்னும் நாம் இந்த வரிசையில் தான் விளித்துக்கொண்டிருப்போம்.. நல்ல பதிவு, சிந்திக்கத்தூண்டிய பதிவு.. வாழ்த்துக்கள்.
கருப்பன்,
நீங்கள் சொல்வது உரிமையுடன் அழைப்பது..
மனதில் மரியாதை இன்றி வாய்மொழியில் மரியாதையுடன் இருக்கிறோம் சிலரிடம்..மரியாதை மனதைப் பொறுத்தது..
இந்த வி.ஐ.பி. விளிப்பு பொறுத்தவரை இடம்,பொருள்,ஏவல் நம் பெரும்பலானோர்ர்க்கு ஒரே மாதிரிதான் இருந்து வருகிறது..
நன்றி கிருத்திகா..எனக்குத் அறிமுகம் ஆகும் வரை ஒரு பிரபலப் பிரமுகரை ஏக வசனத்தில்தான் பேசிக்கொண்டிருந்தேன்..வயதில் மூத்தவர் என்று கூடப் பார்க்காமல்..இன்று பழகியதும் விளிப்பில் "ங்க" வந்து ஒட்டிக் கொண்டது..
மலர், உடன்படுகிறேன். ஒரு பேச்சுப் போட்டியில், ஒரு சிறுவன் வள்ளுவன் கூறினான், பாரதி பாடினான், கம்பன் கவிஅதை படைத்தான் என்றெல்லாம் சொல்லி அமர்ந்தான். ஒரு வயது முதிர்ந்த பெரியவர் அவனுக்கு இதெல்லாம் தவறு எனச் சொல்லி அறிவுறுத்தினார். ஆனால், தமிழ்க் கவிஞர்களையோ, புலவர்களையோ இவ்வாறு ஒருமையில் அழைப்பது சரி யென பல தமிழறிஞர்கள் கூறி இருக்கின்றனர். ம்ம்ம்ம்ம் - -மாற வேண்டும் -
ஆமாம் சீனா சார்..கவிஞர், எழுத்தாளர் மற்றும் கடவுளுக்கும் கூட இது சரிதான் என்று வைத்துக் கொள்கிறோம்.
ம்ம்ம் நான் முழுக்க முழுக்க ஒத்ஹ்டுப் போகிறேன்...
எங்கள் அண்ணா இதை சொல்லிட்டே இருப்பார்...அவர் தவறி கூட யாரையும் அவன் அவள் என்று சொல்ல மாட்டார்...
அதைப் பார்த்து நாங்கள் அவ்வளவு திருந்தவில்லை என்றாலும், எங்கள் வீட்டு குழந்தைள் அண்ணாவை கடைப் பிடிப்பது எங்களுக்கு சந்தோஷம்...
என்னங்க, கடவுளையே ஏண்டா முருகா அவனே இவனே ஆத்தாடி மாரியாத்தா என்று சொல்கிற சமூகத்தில் அதைப் பார்த்து வளர்கிற குழந்தைகள் என்ன கற்கும்?
பல வீடுகளில் பெற்றோர் தங்களையே பிள்ளைகள் ஒருமையில் அழைப்பதை வரவேற்று வளர்க்கிறார்கள்.
விதை ஒண்ணு போட சுரை ஒண்ணா முளைக்கும்?
ஹி ..ஹி . .இந்தத் தொல்லையெல்லாம் வேணாம்னு தான் பிள்ளையை ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்து விடலாம் என்றால் அதற்கும் தமிழ்த் துரோகி என்று பட்டம் கிடைக்கிறதே!
மங்கை, ரத்னேஷ் சார்,
இது போல் யோசித்துக் கொண்டிருக்கிறோம் நிறைய பேர் என்று புரிகிறது...
ஆமா,எவ்வளவுதான் ஜாக்கிரதையா இருந்தாலும் கோபமா இருக்கறப்ப நம்மை அறியாமலே அப்படி வந்துடுது.
சிவா,
கோபத்தில் மட்டுமில்லை..
சாதாரணமாகவே அப்படித்தான் வருகிறது பல நேரங்களில்..
பாசமலர் யக்காவ்வ்... அவன் இவன் ஏக வசனம் வேணாம்ன்னு தோணினாலும் ,இவனுங்க பண்ணுற அலும்பு பாத்துப்புட்டு மரியாதையே கொடுக்க தோனலியே?.. அதுக்கு என்ன பண்ணறதாம்..ஹிஹி....
ரசிகன்,
நீங்க அந்த ரூட்ல வர்றீங்களா? அர்சியல் மட்டுமில்லையே நான் சொல்வது..வேறு துறைகளும்தான்..குறிப்பாக எழுத்தாளர்களையே எடுத்துக் கொள்ளுங்களேன்..எப்படிச் சொல்கிறோம்?..பெரும்பான்மையினர்..(நானும்தான்)
ஒரு முறை ரொம்ப பழைய தினமணியை படித்தேன். மதுரையில் நடந்த கம்பர் பற்றிய விழா பற்றிய செய்தி பார்த்தேன். அதில் சிறப்புரை ஆற்றிய அப்போதைய உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் " கம்பர் என்று சொல்லும்போது ஏதோ ஒரு அந்நியனை அழைக்கும் உணர்வு உறுவாகிறது. கம்பன் என்று அழைக்கும் போது தான் நம்மில் ஒருவர் என்ற உணர்வு ஏற்படுகிறது. ஆகவே கம்பன் சொல்லி இருக்கிறான், பாரதி பாடி இருக்கிறான், வள்ளுவன் எழுதி இருக்கிறான் என்று சொல்லும் போது தான் , அவர்களை நமக்கு நெருக்கமானவர்கள் போல் நினைக்க முடிகிறது. ஆகவே கம்பர் என்று சொல்வதை விட கம்பன் என்று சொல்வது தான் சரி" என்று உரை ஆற்றி இருந்தார்.
அதுவும் இன்றி நாம் ஒளிபடங்களாகவும் வெகு தொலைவிலும் பார்க்க முடிகிறவர்களை மட்டும் தான் அவன் இவன் என்ற எGஅ வசனத்தில் அழைக்கிறோம். வீட்டில் உள்ள பெரியவர்களையோ பக்கத்து வீட்டுக் காரர்களையோ அல்லது நமக்கு தெரிந்தவர்களையோ அவன் இவன் என்று அழைப்பதில்லை.
எந்த குழந்தையாவது காந்தியையோ நேருவையோ நேதாஜியையோ அல்லது அப்துல் கலாமையோ அவன் இவன் என்று சொல்லி பார்த்திருக்கிறீர்களா?.. அவர்களுக்கு தெரியும் யாரை எப்படி அழ்ழைப்பது என்று. இதிலெல்லாம் குழந்தைகளை கட்டுபடுத்தாதிங்க அக்கா.
//கருப்பன்/Karuppan said...
எங்கள் ஊரில் வயதுக்கு மூத்தவர்களை பண்மையில் அழைப்பது அவர்களை அந்நியப்படுத்துவது போல் ஆகும். "வா சித்தப்பா உக்காரு" என்போம், இதே நகரங்களில் "வாங்க சித்தப்பா உக்காருங்க" என்று பண்மையில் பேசுவார்கள். மரியாதை என்பதே இடம், ஏவள் சம்மந்தப்பட்டது தானே!//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :))
//இதிலெல்லாம் குழந்தைகளை கட்டுபடுத்தாதிங்க அக்கா//
நானே ஒழுங்கா இருந்தாத்தானே கட்டுப்படுத்த...
உங்கள் சில விளக்கங்கள் நன்று சஞ்சய்
//உங்கள் சில விளக்கங்கள் நன்று சஞ்சய்//
கை வலிக்க அவ்ளோ பெரிய விளக்கம் குடுத்தும் நீங்க திருந்த மாட்டிங்களா? அதென்ன உங்கள்? இது எனக்கு பிடிக்கல. என்னை நீங்கள் ஒருமையிலேயே அழைக்கலாம்.அதில் தான் எனக்கு விருப்பம்.
.... பின்ன எப்டி தான் நான் சின்ன பையனு காட்டிகிறதாம்? :P....
//பல வீடுகளில் பெற்றோர் தங்களையே பிள்ளைகள் ஒருமையில் அழைப்பதை வரவேற்று வளர்க்கிறார்கள். - rathnesh
இதைப் பற்றிய என் "தவறான" எண்ணம் (?) இங்கே.
எல்லாமே தொட்டில் பழக்கம் தானே மலர். எங்க வீட்டில் குழந்தைகளை வாங்க போங்கன்னு தான் கூப்பிடுவாங்க. ஏன்னா.. அவங்க மரியாதையா பேசிப்பழகனுமின்னு. :)
தருமி சார் ..உங்கள் சுட்டியில் பார்த்தேன்..வீடும் சரி, சூழலும் சரி இதற்குக் காரணமாகிப் போகிறது..மாறுவது என்பது அவ்வளவு சுலபமில்லை என்றே தோன்றுகிறது.
உண்மைதான் காட்டாறு..பார்ப்பதைத்தானே குழந்தைகள் பின்பற்றும்
Post a Comment