Saturday, March 31, 2012

நான் அறிந்த சிலம்பு - 13

புகார்க்காண்டம்- 2, மனையறம் படுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே 91 - 94

தம்பதியரின் இனிய இல்லறம்

பின்னிக் கொள்ளும்
பாம்புகள் இரண்டாய்ப்
பிணையல் இன்பத்தில்
மூழ்கித் திளைத்தனர்
காதல் தம்பதியர்.

காமதேவனும்
அவன் மனைவி ரதியுமாய்க்
காம இன்பங்களனைத்தும் 
கண்டே அவர் களித்தனர்.

நிலையாமையுடைத்து
இவ்வுலகம்
அழியும் தன்மையுடைத்து.

இவ்வுண்மை உணர்ந்தவராய்
உடல்தனில் உயிர்  இருந்திடும் போதே
இன்பங்கள் முழுதும்
துய்த்திடும் நோக்கில்
காதல் இன்பத்தில்
இடைவிடாது ஆழ்ந்து
களித்திருந்தனர்.

புகார்க்காண்டம்- 3. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே 1 - 36

மாதவி - பிறப்பு, நாட்டியப் பயிற்சி

தெய்வ மலையாம்
பொதிகை மலைவாழ்
திருமுனி அகத்தியர் சாபமேற்று
விண்ணுலகு விடுத்து
மண்ணுலகில் பிறந்தனர்
இந்திரன் மகன் ஜயந்தனும்
பேரழகி ஊர்வசியும்.

வானவர் உலகில்
நாடகத் தொழிலுடை
ஜயந்தனும் ஊர்வசியும்
மானிடர் உலகில்
நாடக அரங்கொன்றில்
திருமுனியின் கருணையால்
தம் சாபம் நீங்கப் பெற்றனர்.

வானவர் வழிவந்த
ஊர்வசியின்
வழித்தோன்றலாய்ப்
புகார் நகர்தன்னில்
பிறந்தனள் மாதவி.

அவள் தாமும்
குன்றாப் பெருமைவாய்ந்த
பிறப்பினள்;
அழகிய தோள்  உடையாள்;
மடலவிழ் மலரணிச்
சுருள் கூந்தலாள்;

ஆடல் பாடல் அழகு -
இந்த மூன்றிலும்
குறையின்றி முழுமையாய்
ஏழு ஆண்டுகள்
தாம் பயின்றிட்ட
நாட்டியக் கலையை
அரங்கேற்ற விரும்பியே,
தம் பன்னிரண்டாம் வயதில்
வீரர் புடை சூழ்ந்த
கழலணிந்த  சோழமன்னன்
அவைக்கு வந்தனள்.
தம் பரிவாரங்களுடன்.

நாட்டிய  ஆசிரியன்

இருவகைக் கூத்தின்
இலக்கணம் அறிந்தவன்;
இருவகையினின்று
கிளைத்துப் பல வகைப்படும்
கூத்துகள் பதினொன்றின் புணர்விதிகள்
தெரிந்து தெளிந்தவன்;
ஆடல், பாடல், இசைக்கருவி
இவற்றின் கூறுகள்
நூல்களின் இலக்கணப்படிக்
கற்றுத் தேர்ந்தவன்;

ஆடலும், பாடலும்,
தாளமும், தூக்கும்
ஒன்றுடன் ஒன்று கூடி
இணைந்து இயைந்து
வருகின்ற முறைகளைப்
பயிற்றுவிக்க வல்லவன்;

கற்பிக்கும் போது,
கூத்து நெறிகளான
பிண்டி பிணையல்
எழிற்கை தொழிற்கை
பயன்பாடுகள்
வகைப்படுத்தத் தெரிந்தவன்;

கூத்துக் களத்தில்
கூடை வருமிடத்தில்
வாரம் வாராது
வாரம் வருமிடத்தில்
கூடை வாராது
அபிநயம் நிகழ்கையில்
ஆடல் கலவாமல்,
ஆடல் நிகழ்கையில்
அபிநயம் கலவாமல்
விலக்கத் தெரிந்தவன்;

குரவைக்கூத்தும்
வரிக்கூத்தும்
ஒன்றுடன் ஒன்று
கலந்திடாது கற்பிப்பவன்;
தான் ஆடுவதிலும்
பிறரை ஆட்டுவிப்பதிலும்  வல்லவன்
ஆடலுக்கென்றமைந்த
ஆசான் அவனொடும்..

குறிப்பு:
பிண்டி, பிணையல், எழிற்கை, தொழிற்கை, கூடை, வாரம் - நாட்டியக் கூத்து வகைகளில் பின்பற்றப்படும் தாள, இசை விகற்பங்களுக்கு ஏற்ற அபிநயம், ஆடல்..

இசை ஆசரியன்

யாழ்ப்பாடலுமும்
குழல் பாடலும்
தாளக் கூறுகளும்
மிடற்றுப் பாடலும் (வாய்ப்பாட்டு)
தாழ்ந்த சுரத்தில்
இசைத்திடும் மத்தளமும்
நல்லிசையுடன்
இயைந்து புணர்ந்து
இசைக்கத் தெரிந்தவன்;

ஆடல்வகைகளுக்கேற்ற
பாடல்களின்
உரிப்பொருள் உணர்ந்து
இசைக்கூறுகள் அறிந்து
சுவை பொருந்தும்
இசைப் பாடல்களை
இசைக்க வல்லவன்;

தாய்மொழிக்கேயுரிய
சொல்லோசைகள்
சரிவரக் கையாண்டு
தாய்மொழிக்கேற்ற
பிற ஓசை நயங்களையும்
குற்றமறக் கற்றுணர்ந்த அறிவாளன்.

பாடல்கவியின் உள்ளக்குறிப்புடன்,
ஆடல்களின் தொகுதிக்கேற்ப
நாடகங்களின் பகுதிக்கேற்ப
இசைப்பொருத்தம் உணர்ந்து
இசைக்கும் பாங்கு கற்ற்றிந்தவன்.

குற்றமற்ற இசைநூல்
வழக்குகளை நன்கறிந்து
தக்கதொரு இசையை
வகுக்கவும் விரிக்கவும் வல்லவன்.
தளராத மனமுடைய இயல்பினன் 
இசையாளன் அவனொடும்.......

வல்லமையில் 26.03.12 அன்று வெளிவந்தது.

Wednesday, March 28, 2012

வெள்ளைச் சூரியன்

பார்த்துப் பார்த்து,
கேட்டுக் கேட்டு,
நுகர்ந்து நுகர்ந்து,
ஸ்பரிசித்து ஸ்பரிசித்து,
சுவைத்துச் சுவைத்து,
சலித்துக் களைத்து
இளைப்பாறத்துடிக்கும்
புலன்கள் போலவே

தீச்சிவப்பாய் எரிந்து
தங்கத்தகடாய்த் தகதகத்து
இளஞ்சிவப்பில் மினுமினுத்துக்
களைத்துப்போனதொரு மாலை
வெள்ளைச் சூரியன்.

புனரமைப்பு தேவைப்படுகிறது.
புலன்களுக்கும்
சூரியக்கோளுக்கும்.


(கத்தார் - சவூதி நெடுஞ்சாலைப் பயணமொன்றில் மறைந்துவிடத் துடித்த சூரியனை கார் கதவின் கண்ணாடி கூடத் திறக்க நேரமின்றி எடுத்த புகைப்படம்...)

Sunday, March 25, 2012

உத்தியோகம் பெண்கள் லட்சணம் - வசுந்தரா

வாசலில் விசாலமான திண்ணை. அங்கிருந்த பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் வசுந்தரா. நடந்ததை எண்ண எண்ண அலுப்பாயும் இருந்தது. களைப்பாயும் இருந்தது.

"போதும் பாப்பா.எந்திரிச்சு உள்ள வா. ஆஸ்பத்திரிலருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்து ஒரு நாள் கூட ஆகல. பனி வேற கொட்டுது. சீக்கிரம் உள்ள வா.."

சொன்னதோடு நிற்காத ருக்மணி, அவளைக் கையைப் பிடுத்து இழுக்காத குறையாக, உள்ள அழைத்துக்கொண்டு போய் வரவேற்பறை சோபாவில் அமர வைத்து விட்டுத் தொலைக்காட்சியை இயக்கினாள்.

"கண்ட கருமத்தையும் நெனக்காம ஆகுற வேலையைப் பாரு. நாசமாப் போறவனுங்க...வேற வேலயே இல்லாத போக்கத்த பயலுக...காபி கொண்டாரட்டா?"

"இன்னும் கொஞ்சம் சேரம் கழிச்சுக் குடு ருக்கு. இப்போ வேண்டாம்.." சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் வசுந்தரா.


ருக்கு பணிப்பெண் மட்டுமல்ல..வசுந்தராவுக்குத் தூரத்து உறவு..வசுந்தராவின் அப்பா அம்மா இறந்து விட்டார்கள்; தம்பி குடும்பத்துடன் ஹைதராபாத்தில் இருக்க, தங்கை தன் குடும்பத்துடன் சென்னையில் இருக்கிறாள்.

ருக்குவின் கணவன் இறந்துவிட, அவள் மகள் சென்னைக் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கிப் படிக்கிறாள்.இருவரும் ஒருவருக்கொருவர் துணை

மதுரையில் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் துணை முதல்வர் பொறுப்பு
வசுந்தராவுக்கு. இயற்பியல் துறையில் விரிவுரையாளராகத் தன் பணியைத் துவங்கி, தற்போது துணை முதல்வர் பதவி.

அப்பா, அம்மா இறந்த போது தம்பி தங்கையின் வாழ்க்கைப் பொறுப்பு இவள்தம் கடமையாகிப் போக, பொருந்திய வயதில்  திருமணத்தைத் தள்ளிப் போட்டாள். திருமணம் செய்ய நினைத்த போது, காலமும் கடந்து விட, அதில் ஆர்வமும் இன்றி இந்த வாழ்க்கை பழகிப் பிடித்துப் போய் விட்டது.

மறக்க முயன்றவுடன் நினைவுகள் மட்டும் மறைந்துவிட்டால்தான் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒருவேளை அப்படி இருந்தால் அதுவும் வெறுமைதானோ?!

நீண்ட பெருமூச்சுடன் மீண்டும் அச்சம்பவத்தை அசைபோடலானாள் வசுந்தரா..

சென்ற வாரம் ஒரு நாள் கல்லூரிக்கு வழக்கம் போலவே சென்றாள். முதல்வர் நீண்ட விடுமுறையில் சென்றதால், இவளுக்குப் பணிச்சுமை அதிகம்.

வழக்கம்போலவே வழியில் வந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் முகமன் கூறிச் செல்ல, புன்சிரிப்புடன் தலையை அசைத்தவள், அவர்கள் முகங்களில் காணப்பட்ட 'அய்யோ..பாவம்..' என்ற ரீதியிலான குறிப்பைக் கவனிக்கவில்லை.

அறையில் நுழைந்து, கணினியை இயக்கி, கல்லூரியின் தளத்துக்குச் சென்று, மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி. அசிங்க அசிங்கமான கார்ட்டூன் பட இணைப்புகளுடன், அவளையும் ரவியைப் பற்றியும் ஆபாசத் தகவல்கள்..

ரவி எம்.ஃபில் ஆராய்ச்சி மாணவன். அவன் ஆராய்ச்சி முடியும் தருவாயில் இருக்க, அடிக்கடி கல்லூரியில் லேபிலும், நூலகத்திலும், அவள் அறையிலும், அவள் வீட்டிலும் அடிக்கடி சந்திப்புகள் நிகழ்வதுண்டு. ரவி மட்டுமல்ல, இன்னும் இரு மாணவிகளுக்கும் அவள் கைடுதான். ஒவ்வொரு வருடமும் இது போன்ற மாணவ மாணவியர்க்குக் கைடாக இருக்கும் பொறுப்பு வரும்தான்..

மிகவும் கண்டிப்பானவள் வசுந்தரா..3 மாணவர்கள் சஸ்பென்ட், 2 ஆசிரியர்களுக்கு மெமோ என்று வழக்கமாக அந்தக் கல்லூரியில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டாதால், இந்தத் தண்டனையா? யார் இப்படிச் செய்திருப்பார்கள்?

கல்லூரித் தளத்தின் பாஸ் வேர்டைக் கூட ஹேக் செய்திருக்கிறார்களே..

காலம் மாறினாலும் வக்கிரங்கள் மாறவில்லை...நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் நவீன வக்கிரம்....

அய்யோ..மின்னஞ்சல் யார் யாருக்குப் போகுமோ...அவள் அதிர்ச்சியில்
குழம்பிக்கொண்டிருக்க,

"மே ஐ கம் இன், மேடம்?" சக ஆசிரியை மஞ்சுளாதான்.

"யெஸ்..வாங்க மஞ்சுளா.."சுதாரித்துக்கொண்டு தண்ணீரை எடுத்துக் குடித்தாள் வசுந்தரா.

"நானும் பார்த்தேன் மேடம். வெரி ஸாரி.."

"என்ன பாத்தீங்க..எதைப் பத்திப் பேசுறீங்க.."நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.  குடித்த தண்ணீர் மொத்ததையும் மீறி மீண்டும் நாக்கு வற்றி விட்டது..

"நம்ம காலேஜ் சுவத்துல, கண்ட கண்ட இடத்துல எழுதி வச்சுருக்காங்க.."

அய்யோ இது வேறயா.."என்ன எழுதிருக்கு.."

"அது வந்து மேடம்...உங்களையும் ரவியையும் பத்தி..."

அவள் சொல்லாமலே எல்லாம் புரிந்தது.

என்ன கருமம் இது..அப்பா ஊட்டிய தைரியம் எல்லாம் நொடிப்பொழுதில் எங்கே போனது?

பள்ளிக்காலத்தில், பஸ்ஸில் சில்மிஷம் செய்த ஒருத்தனை அத்தனை பேரும் வேடிக்கை பார்க்கத் தைரியமாய்க் கை நீட்டி அடித்த வசுந்தரா,

கல்லூரி மாணவியாய் இருந்து போது, இவளைப் பற்றித் தாறுமாறாக மைதானச் சுவற்றில் எழுதியிருக்க, கரித்துண்டைக் கொண்டு 'போடா பொறுக்கி, தைரியம் இருந்தால் நேரில் வந்து எழுதுடா.." என்று எழுதிய வசுந்தரா,

அதிர்ச்சியின் அடிகள் தாங்காமல், அவமானம் தாங்காமல்  இரத்தக் கொதிப்பு ஏறி, மயங்கி விழுந்து......

"இந்தா பாப்பா...காபி குடி...ராத்திரிக்கு என்ன சமைக்க.." நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது ருக்குவின் குரல்..

"சப்பாத்தியும் ஏதாவது குழம்பும் பண்ணு ருக்கு..கொஞ்சம் காரமாப் பண்ணு ..ஆஸ்பத்திரி டயட்ல நாக்கே செத்துப் போச்சு..."

சர்க்கரை வியாதியும் இருப்பதால், சர்க்கரை இல்லாத காபி..அதை உறிஞ்சியபோது தோன்றியது..

வயசுக் காலத்தில் போதுமான சர்க்கரை இல்லாவிட்டால் குடிக்கவே முடியாது..இப்போது சர்க்கரையே இல்லை..அது அப்போதைய பழக்கம்..இப்போது ஆரோக்கியம் வேண்டி இப்போது பழகிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ...

ம்ம்ம்....வயசுக்காலத்தில் பதவிகள் இல்லை..பொறுப்புகளும் இல்லை..தட்டிக் கேட்க முடிந்தது உடனுக்குடன்..இப்போது? உயர்ந்த பதவி..அது தந்த பொறுப்பு....அவள் மானத்தைப் பங்கப் படுத்தியவர்களைத் தேடிபிடித்து உடனடியாகத் தண்டிக்கும் அதிகாரம் வேகம் எல்லாம் உண்டு
என்றாலும் பொறுப்பான பதவிக்காய் கடைப்பிடிக்க வேண்டிய நிதானங்கள்..எல்லைகள்...வேகங்களைக் கட்டுப் படுத்தத்தான் செய்கின்றன..

ஆடிப்போய்விட்ட ரவியின் பெற்றோரைச் சமாதானப்படுத்த...
மாணவ மாணவியர் மத்தியில் சகஜ நிஐயைத் துரிதமாக மீட்டெடுக்க..
எல்லாவற்றுக்கும் மேலாகக் கல்லூரியின் பெயர் அளவுக்கதிகமாய் ஊடகங்களில் அடிபடாமல் பாதுகாக்க.....

வாழ்க்கையும் சர்க்கரை இல்லாத காபி போலத்தான்..சூழலின் ஆரோக்கியம் கருதி, பிடிக்கிறாதோ பிடிக்கவில்லையோ காம்ப்ரமைஸ் செய்து கொண்டு போக வேண்டிய கட்டாயம்.

மெதுவாகப் புன்னகைத்தபடி, செல்பேசியை எடுத்து ரவிக்குச் சுழற்றினாள்.."ரவி..கடைசி சாப்டெர் பத்தி டிஸ்கஸ் பண்ணனுமில்ல ...நாளைக்குக் காலைல 11 மணிக்கு வீட்டுக்கு வந்துடு.." என்றாள்.

நன்றி: வல்லமை

Wednesday, March 21, 2012

நான் அறிந்த சிலம்பு - பகுதி 12

புகார்க்கண்டம் - 2. மனையறம் படுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே..73-90

கோவலன் பேசிய காதல் மொழிகள்

மாசு ஏதுமற்ற
பொன் போன்றவளே!   (பார்த்தல்)
இன்பம் ஊற்றெடுக்கும் 
வலம்புரி முத்தே!         (தொடுதல்)
குற்றமற்ற
மணப்பொருள் தரும்
தெய்வ மணமே!             (நுகர்தல்)
இனிமையான
கரும்பு போன்றவளே!  (சுவைத்தல்)
இன்மொழியில்
தேன் போன்றவளே!     (கேட்டறிதல்)

பெறுதற்கரிய
பெரும்பேறே!
இன்னுயிர் காக்கும்
அருமருந்தே!
பெருங்குடி வணிகனின்
பெருமை வாய்ந்த மகளே!

நின்னை
மலையிடைப் பிறவா
மாணிக்கம்தான் என்பேனா..
அலையிடைப் பிறவா
அமிழ்துதான் என்பேனா..
யாழிடைப் பிறவா
இசைதான் என்பேனா..

நீண்டு தாழ்ந்திறங்கும்
இருள் கூந்தற்பெண்ணே!
நின்னை
என்னென்று பாராட்டுவேன்!

இன்னும் இன்னும்
முடிவற்ற
பாராட்டுரைகள் பலப்பல
நித்தமும் நவின்று

பூமாலை அணிந்து
ஒளிர்கின்ற
கண்ணகி அவளுடன்

கொத்துமலர்
மாலையணிந்த
கோவலன் அவனும்

நித்தமும் களித்து
மனம் மலர்ந்து
வாழ்ந்து வந்த
ஒரு நாளில்..

தம்பதியரின் இனிய இல்லறம்

பண்புகள்
பெருமை சேர்த்திட
நீண்ட கூந்தலுடை
இல்லக்கிழத்தி
கோவலன் அன்னையும்,
அவன் தம் தந்தையும்
தம்பதியர் தமக்காய்த்
தனி இல்லறம்
சமைக்க விழைந்தனர்.

தம்பதியர் தாமும்
தம் கடமை
மறவாமல் தவறாமல்
சுற்றத்துடன் இயைந்து வாழ்தல்
துறவியர் பேணுதல்
விருந்தினர் உபசரித்தல்

இன்னும் இன்னும்
நற்செயல்கள்
பல புரிந்து

இல்லறவாழ்வில்
இனிதே ஈடுபட்டு
வாழ வேண்டி

தம் கண்களால்
திரு அறங்கள்
காணவேண்டி,

தாம் ஈட்டிய பொருட்களின்
பகுதி ஒன்றைப்  பிரித்தளித்து,
உரிமைச் சுற்றமாய்ப்
பணியாட்களும் பலர் அளித்துத்
தனிக் குடும்பம்தான்
அமைத்துக் கொடுத்தனரே..

கண்ணகியவள் பேணிய
இல்லறப் பாங்கினைக்
கண்டவர் பாராட்ட,

இவ்வினிய
இல்வாழ்க்கையில்
ஆண்டுகள் சிலதான்
கழிந்தனவே.

வல்லமையில் வெளிவந்தது.

குறளின் குரல் - 51

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 44. குற்றங்கடிதல்
குறள் எண்: 434


குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
யற்றந் தரூஉம் பகை.


குற்றமே காக்க, பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை.


விளக்கம்:

குற்றம் புரிவது என்பது ஒருவருக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய பகையாய் அமையும். எனவே, ஒருவர் தம்மிடம் குற்றம் இல்லாமல் இருப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, குற்றச் செயல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு அழிவு என்பது புறத்திலிருந்து வருவதில்லை; அவர் செய்யும் குற்றங்களாலேயே அழிவு நேர்கிறது. எனவே தமக்குத் தம்மையே பகையாக்கும் குற்றத்தை விலக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டால் அழிவிலிருந்து மீள முடியும்.

அற்றம் - அழிவு, துன்பம், இறுதி, சோர்வு, வறுமை, அவகாசம், அவமானம்,  அறுதி, விலகுகை, சுற்று, நாய், மறைக்கத் தக்கது, பொய், மெலிவு
பொருள் - கொள்கை, செய்தி, சொற்பொருள், செய்கை, அறிவு, தத்துவம், மெய்ம்மை, பொன், தந்திரம், மகன்

-----------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 09. விருந்தோம்பல்
குறள் எண்: 87


இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்.


இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை; விருந்தின்
துணைத் துணை வேள்விப் பயன்
.

விளக்கம்:

விருந்தோம்பலும் வேள்வி / யாகம் கடைப்பிடிப்பதைப் போன்றதாகும். தேவர்களுக்கு விருந்து படைப்பது வேள்வி; உலகினருக்கு விருந்து படைப்பதும் வேள்வி போன்றதேயாகும்.

விருந்தின் பயன் / நன்மை  இவ்வளவுதான் என்று அளவிட முடியாது. வரும் விருந்தினரின் தகுதியின் அளவுதான் அந்த நன்மையின் அளவாகும்.

துணை - இணை, அளவு, ஒப்பு, ஆதரவு, உதவி, உதவுவோன், காப்பு, கூட்டு, இரண்டு, இரட்டை, அன்பு, உடன்பிறப்பு, கணவன், மனைவி, நட்பினன்
----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 04. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 33


ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.


விளக்கம்:

செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் நல்வினையாகவே இருத்தல் வேண்டும்; செல்கின்ற இடமெல்லாம் அறம் வழுவாத செயல்களை இடைவிடாமல் இயன்ற வரையில் செய்து வாழ வேன்டும்.

அறம் என்பது தருமம் மட்டுமே அல்ல; அது எங்கேயும் எப்போதும் நேர் வழியில் நடந்து நல்வினை புரிவதையும் குறிப்பதாகும்.

ஒல்லும் - இயலும், பொருந்தும்,உடன்படும், தகும், ஆற்றும், ஒலிக்கும், விரையும், கூடும், நிகழும், பொறுக்கும்
ஓவாதே - இடைவிடாதே, நீங்காதே, ஒழியாதே

------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 61. மடியின்மை
குறள் எண்: 610



மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாஅய தெல்லா மொருங்கு.


மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு
.

விளக்கம்:

சோம்பல் இல்லாத அரசன், தன் அடியால் உலகம் அனைத்தையும் அளக்கக் கூடியவனாவான்; அவ்வாறு அளந்து நின்ற அனைத்து உலகப் பரப்பையும், ஒரு சேரத் தனக்குரியதாக அடையும் வாய்ப்பையும் பெறுவான்.
சோம்பல் இன்றி வாழ்ந்தால் உலகையே வெல்லலாம்
---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 33. கொல்லாமை
குறள் எண்: 323


ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.


ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின்சாரப் பொயாமை நன்று
.

விளக்கம்:

ஈடு இணை கூற முடியாத அளவுக்கு மிகவும் உயர்ந்ததும், அறங்களில் எல்லாம் சிறந்த அறமாக முதலிடம் வகிப்பதும் 'கொல்லாமை' ஆகும். அதற்கு அடுத்த நிலையில் 'பொய்யாமை' சிறந்த நல்லறமாக விளங்குகிறது. இவை இரண்டும் தலையாய அறங்கள் என்று போற்றத்தக்க சிறப்பு வாய்ந்தவை.
---------------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 109. த
கையணங்குறுத்தல்
குறள் எண்: 1083


பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.


பண்டு அறியேன், 'கூற்று' என்பதனை; இனி அறிவேன்
பெண்தகையால் பேர் அமர்க் கட்டு
.

விளக்கம்:

எமன் என்று ஒருவன் இருப்பதாக முன்பிருந்தே நீதி உரைப்பவர் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு; இதுவரை கண்களால் கண்டதில்லை.
இப்போதுதான் அந்த எமன் யார் என்று அறிந்து கொண்டேன். பெரியதாய் உள்ள கண்களால் போர் செய்யும் பெண்வடிவில் உள்ளதுதான் அந்த எமன் என்று இப்போது அறிந்து கொண்டேன்.

பண்டு - முற்காலம், நீதி, பழமை
கூற்று - எமன், காலன், கூற்றுகை, மொழி, கூறத்தக்கது
பேர் -பெருமை வாய்ந்த, பெரிய
அமர் - போர், மூர்க்கம், மாறுபாடு, கொட்டி, விருப்பம், பொருந்து, போராடு
கட்டு - கண் அமைப்பு, உடல் அமைப்பு
---------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 03. நீத்தார் பெருமை
குறள் எண்: 21


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிபு.


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிபு.


விளக்கம்:

உலகப்பற்றை எல்லாம் துறந்து வாழ்வது கடினம். ஒழுக்கத்தில் சிறந்தவர்களால் மட்டுமே பற்றை எளிதாகத் துறக்க முடியும். அங்ஙனம் பற்றுகளை நீத்து வாழ்பவரது சிறப்பையும் பெருமையையும் போற்றி உயர்வாகக் கூறுவதே அறநூல்களின் துணிபாகும்.

பனுவல் - நூல், சொல், பாட்டு, கேள்வி, கல்வி, ஆராய்ச்சி
துணிபு - கொள்கை

குறளின் குரல் - 50

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் எண்: 693

போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கு மரிது.

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

விளக்கம்:

மன்னரிடமிருந்து / ஆட்சி செய்பவர்களிடமிருந்து / தமக்கு மேலுள்ள பதவியில் இருப்பவர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள விரும்புபவர்கள், பொறுத்துக்கொள்ள முடியாத, மோசமான அரிய பிழைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அப்படிப் பிழை செய்து விட்டால், மன்னர் / ஆட்சியாளர் / மேலாளரின் நம்பிக்கை குறைந்து சந்தேகப்பட நேரிடும். அப்படிச் சந்தேகம் வந்துவிட்டபிறகு அவரது சந்தேகத்தைத் தீர்ப்பது யார்க்கும் இயலாது.

------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 131. புலவி
குறள் எண்: 1302

உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா னீள விடல்.

உப்பு அமைந்தற்றால் புலவி; அது, சிறிது
மிக்கற்றால் நீள விடல்.

விளக்கம்:

உணவுக்குச் சுவைசேர்க்க உப்பு உதவுவது போல, காதல் வாழ்வின் இன்பம் கூட்ட ஊடல் வழிவகுக்கும். எனினும், தொடர்ந்து  நீடித்துச் செல்லும் ஊடல், அளவுக்கு அதிகமான உப்பு போல, சுவையைக் கெடுக்கும்.

---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 20. பயனில சொல்லாமை
குறள் எண்: 197


நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.


நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று
.

விளக்கம்:

பண்பு நிறைந்த சான்றோர் நயமற்ற, இனிமையற்ற சொற்களைப் பேசினாலும் பேசலாம். ஆனால் பயனற்ற சொற்களைப் பேசாமல் இருப்பது நன்மை தரும்.
--------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகார்ம்: 105. நல்குரவு
குறள் எண்: 1041


இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
னின்மையே யின்னா தது.


இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின்
இன்மையே இன்னாதது.


விளக்கம்:

வறுமையைப் போலக் கொடுமையானது யாது?

வறுமை போலக் கொடியது வறுமையே அன்றி வேறேதும் இல்லை.
எந்த ஓர் உவமையையும் எடுத்துக்காட்டி, வறுமையை விளக்க இயலாது. உவமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் வறுமை உள்ளதால், வேறு உவமையற்றுத் தனக்குத் தானே உவமையாயிற்று.

நல்குரவு - நுகர்வதற்கு ஏதுமின்றி வருந்தும் வறுமை நிலை

-----------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 103. குடி செயல் வகை
குறள் எண்: 1021


கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும்
பெருமையிற் பீடுடைய தில்.


'கருமம் செய' ஒருவன் 'கைதூவேன்' என்னும்
பெருமையின் பீடு உடையது இல்
.

விளக்கம்:

தம் குடியின் பெருமை உயரும் பொருட்டுப் பல கடமைகளை மேற்கொண்டிருக்கும் ஒருவன், தம் முயற்சிகளில் சோர்ந்து விடாமல், 'அத்தகைய முயற்சிகளைக் கைவிடமாட்டேன்' என்று தொடர்ந்து உழைத்திருப்பான். இதைவிட அவனுக்குப் பெருமை தரக்கூடியது வேறொன்றும் இல்லை.
-- ---------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 109. தகையணங்குறுத்தல்
குறள் எண்: 1088


ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு
ணண்ணாரு முட்குமென் பீடு.


ஒள் நுதற்கு ஓஓ! உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு.


விளக்கம்:

போர்க்களத்தில் பகைவரும் கண்டு அஞ்சி நடுங்கும் பெருமை வாய்ந்தது என் வலிமை! ஆனால் அந்தோ! அந்த வலிமை முழுவதும் ஒளிபொருந்திய இவள் நெற்றியின் முன் தோற்றுப்போய் நிற்கிறது!

ஒள்நுதல் - ஒளி பொருந்திய நெற்றி
ஓ - மகிழ்ச்சி, இரக்கம் முதலியவற்றைத் தெரிவிக்கும் ஒலிக்குறிப்பு
உடைந்ததே - படை உடைதல் / சிதறி ஓடுதல் - போர்க்களச்சொல்
ஞாட்பு - போர், போர்க்களம், படை, களம், வலிமை, கூட்டம்
நண்ணார் - பகைவர்
உட்கு - அச்சம், நாணம், மதிப்பு, மிடுக்கு
பீடு - பெருமை, வலிமை, தாழ்வு, தரிசு நிலம், துன்பம், குறைவு, ஒப்பு

Monday, March 19, 2012

வடிகால் இரவல்கள்



உறவாட
விளையாட
துணை தேட
பாசநேசம் பழக
காதல் பேச
ஊடலாட

உணர்வுகளுக்கு வடிகால்
இங்கு உயிர்களல்ல.
உயிரற்ற
உணர்வற்ற
பெட்டிகளாய்ப் பொருட்கள்.

தகவல் தொடர்புகள்
கூடத்
தமக்குத் தாமே.

இறைவனை தரிசிக்கவும்
இயற்கையை ரசிக்கவும்
இரவல் கண்களை
இறைஞ்சுகின்ற
இலகுவான தேடல்கள்.

தொழில்நுட்பங்கள்
மனநுட்பங்களை
மென்று தின்று
ஏப்பம் விட்டுப் போகின்றன.

வாழ்க்கைச் சூட்சுமங்கள்
வளைந்து கொடுத்துக் கொடுத்து
வலையில் வீழ்ந்து போகின்றன.

Friday, March 16, 2012

நான் அறிந்த சிலம்பு - பகுதி 11

புகார்க்காண்டம் - 2: மனையறம் படுத்த காதை

கோவலன் கண்ணகியின் நலம்பாராட்டுதல்

சிலம்பின் வரிகள் 53 - 72 இங்கே..

கருமையடர்ந்த
பெரிய தோகை வாய்த்த
நீல நிற மயிலும்
நின்
அழகிய சாயலுக்கு
அஞ்சித் தோற்றுக்
குளிர் காடு தேடித்தான்
ஓடி ஒளிந்ததுவே!

நல் நெற்றியாளே!
நன்னடை பயிலும்
அன்னப் பறவையது
நின்
மென்னடைக்கு
அஞ்சித் தோற்று
நன்னீர் சூழ்
வயற்காடு தன்னில்
அடர்ந்து செறிந்த
மலர்க்கூட்டம் நடுவே
மறைந்துதான் கொண்டதுவே!

இச்சின்னஞ்சிறு
பச்சைப்பசுங்களியோ
இரக்கத்துக்குரியது.

குழலிசை யாழிசையோடு
அமிழ்தமும் குழைந்து இழைகின்ற
நின் மழலை மொழிக்கு
வருந்திச் சோர்ந்ததுவே!

எனினும்
மடநடை மாதே,
நின்
மலர்வாய் மழலை
கற்றுத் தேர்ந்திட
நின்
மலர்க்கரம்
நீங்காது தங்கி
நினைப் பிரியாமல் பொருந்தியதுவே!

நறுமலர்கள்
நறுங்கூந்தலில் சூடிய
நறுமலர்ப் பெண்ணே!

மாசற்ற மாற்றற்ற
இயற்கை தந்த
இனிய அழகே
நினக்கு
நல்லதொரு அணியாய்
வாய்த்திருக்க..

நின்
மாங்கல்ய மங்கல அணி
மேலும் அழகு சேர்த்திருக்க..

நின்னை
ஒப்பனையில் மேலும்
அழகூட்ட நினைப்பவர்
இன்னும் பல
அணிகலன்கள் அணிவித்ததால்
ஆனதொரு பயன்தான் என்ன?!

பல்வகைத் தோற்றம் கொண்டு
பொலிகின்ற நின்
கருங்கூந்தல் அதனுக்குச்
சில மலர்கள் மட்டும் சூட்டிச்
சிங்காரிப்பதை விடுத்துப்
பல மலர்கள் கூடி அணிசெய்யும்
ஒளிவீசும் மாலை
தேடிச் சூட முயன்றனரே!
அம்மாலையோடு
அவர்க்குள்ள உறவுதான் என்ன?!

அகிற்புகையின்
நறுமணமொன்றே போதும்
நின்
கூந்தலை மணமாக்க
என்றிருக்க
வாசனையூட்ட வேண்டிக்
கத்தூரிக் குழம்பு கொணர்ந்தவரின்
உள்நோக்கம்தான் என்ன?!

அழகுத்திரு மார்புகளுக்கு
அணியது சேர்த்திடச்
சந்தனக் குழம்பினால்
தீட்டிய கோலங்களே
போதுமென்றானபின்
முத்து வடம் கொணர்ந்தவர்க்கு
அதனுடனுள்ள உறவுதான் என்ன?!

மதி முகத்தில்
முத்து முத்தாய்
வியர்வையது அரும்பிடவும்,
அணிகலனின் கனம் தாங்காது
துவண்டு நலியும்
நின் சிற்றிடை வருந்திடவும்,
மென்மேலும்
மென்மைப் பெண்மீது
அணிகலன் பூட்டுகின்றனரே.
இவருக்கு என்னதான் நேர்ந்திட்டது?!

வல்லமையில் தொடராக வெளிவருகிறது...

Wednesday, March 14, 2012

அலையின் விலை


ஆழ அளவறியா
ஆதியினின்று
பொங்கிப் பிரவகித்துப்
பிணங்கிப் பிளிறித்
திமிருடன் திமிறி
ஊழிக் கூத்தாடும்
ஆழியதன் அலை

வெயிற் காய்ந்து
மழை உறிஞ்சி
மோனத் தவமிருந்து
பொறுமை பொதிந்து,
காலத்தேயும்
காலந்தாழ்ந்திடினும்
பரந்து பாய்விரித்துச்
சோராது காத்திருக்கும்
மணல் முன்னே

மண்டியிட்டு மடிகிறது;
மணல் தந்த முத்தத்தில்
மீண்டு உயிர் பெறுகிறது.

கரையின் மணலுக்கு
விலையாகிப் போகிறது
கடலின் அலை.

ஆரவார அரவங்கள்
அன்பின் எல்லையில்
அடங்கி மடிந்து
அமிழ்வதென்பதொரு
அழகான நியதி.

Friday, March 9, 2012

உத்தியோகம் பெண்கள் லட்சணம் - நந்தினி


"ஏ மனோ..பேங்க் போயிட்டு வந்துர்றியாப்பா..வீட்டு வாடகை, பால் காசு, மளிகைக் காசு குடுக்கணும்.."

"இதோ கிளம்பிட்டேம்மா...வேற ஏதும் வாங்கிட்டு வரணுமா.."
"அப்பா கண்ணாடி ரிப்பேர்க்குக் குடுத்துருந்தார்..ஒரு எட்டு வாத்தியார் கடைக்குப் போய் அத வாங்கிட்டு வந்துரு..."

"ஏன்..திரும்பியும் ரிப்பேரா...ஃப்ரேம் சுத்தமாப் போய்ருச்சும்மா..ரிப்பேர் பண்ணால்லாம் வேலைக்கு ஆவாது...என்ன பெரிசா செலவு ஆய்றப் போது..புதுசு வாங்கச் சொல்லுங்க."

"ஆமாண்டா....செலவைக் குறைச்சு உங்க அக்கா சுமையைக் குறைக்கணும்னு பாக்குறேன்..எல்லாம் நல்லாத்தான் இருக்கு கண்ணாடி..இன்னும் ஒரு வருஷத்துக்காவது வரும்.." பேசியபடியே உள்ளே நுழைந்தார் சபேசன்.
தனியார் கம்பெனி ஒன்றில் கணக்காளராய் இருந்து ரிட்டையர் ஆனவர்..ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கிய நந்தினிக்கு நல்ல மார்க் வாங்கியும் வசதியில்லாத காரணத்தால், டாக்டருக்குப் படிக்க வைக்க முடியவில்லை..அவள் விருப்பப்படி நர்ஸ் படிப்புதான் படிக்க வைத்தார்...

அவளும் படித்து முடித்து, தம்பி படிப்புக்கும் உதவி, தன் கல்யாணத்துக்காவும் பணம் சேர்க்கும் கடமையில், துபாய் ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை செய்கிறாள் கடந்த 3 வருடங்களாக..

அவள் போகும் போது இளையவன் மனோ 3 வது வருடம் படித்துக் கொண்டிருந்தான். இப்போது படிப்பு முடித்து, தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தவனுக்கு பஹ்ரைனில் வேலைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறாள் நந்தினி.

சபேசனும், அவர் மனைவி மீனாட்சியும் நந்தினி அனுப்பும் பணத்தில் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தது போக பேங்க்கில் அவள் கல்யாணத்துக்கென்று கணிசமான தொகை சேர்த்து வைத்திருந்தார்கள். மனோவும் தன் குடும்பச் சூழல் நன்கறிந்தவன்; அக்கா நந்தினியைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கத் தயாராக இருந்தவனுக்கு இந்த வேலையும் கிடைத்ததும் குடும்பமே குதூகலித்தது.

மனோவும் அடுத்த வார இறுதியில் பஹ்ரைன் கிளம்பி விடுவான். நந்தினியையும் கூடிய சீக்கிரம் வேலையை விட்டு விட்டு இங்கே வரச் சொல்லிவிட்டார்கள்.

மனோவுக்கு வேலை கிடைத்ததும்தான் இவர்களுக்கு நிம்மதி வாய்த்தது. பெண் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பிச் சம்பாதிக்க வைத்ததில், இவர்கள் ஏற்கனவே நொந்து போயிருந்த வேளை, உற்றார் உறவினர் வேறு அவ்வப்போது "ம்ம்ம்...காலம் கெடக்கிற கெடப்பில பொட்டப்புள்ளையை வெளிநாடு அனுப்பிச் சமபாதிக்கணுமா..இங்கே என்ன ஆஸ்பத்திரிக்கா பஞ்சம்...என்னமோ போப்பா.." என்று முடியும் போதெல்லாம் எதையாவது சொல்லி அவர்கள் வேதனையை இன்னும் அதிகப் படுத்தினார்கள்.

அப்பாடா..எல்லாமும் முடிந்து சீக்கிரம் விடிவு காலம் வரப்போகிறது.
.
"மனோ..போயிட்டு வாப்பா நேரமாகுது.."

"இதோ கிளம்பிட்டேம்மா..அம்மா மதியச் சாப்பாட்டுக்கு வர மாட்டேன்...ஃபேக்டரி வரைக்கும் போயி ஸெட்டில்மெண்ட் பணம் வங்கிட்டு வந்துர்றேன்..ஊருக்குப் போறதுக்கு முன்னாடி எல்லாரையும் பாத்த மாதிரியும் இருக்கும்.."என்றபடியே வெளியே கிளம்பிவிட்டான்.

"ஏங்க..சாயந்திரம் வெளிய போறப்ப மறக்காம் டெய்லர் கடைக்கு போயிட்டு மனோ தைக்கக் குடுத்த ட்ரஸ்ஸெல்லாம் வாங்கிட்டு வந்துருங்க.."

"சொல்ல மறந்துட்டேன். டெய்லரைப் பாத்தேன். சாயந்தரம் அவரே குடுத்தனுப்புறதாச் சொல்லிருக்கார். சரிமீனாட்சி.....சமைச்சுட்டியா..கொஞ்சம் சூடா ரசம் தாயேன்..நெஞ்சக் கரிக்கிற மாதிரி இருக்கு"

"ஏங்க மோர் வேணாத் தாளிச்சுக் குடுக்கட்டுமா.."

"வேணாம். ரசமே குடு..ஆனா சூடாக் குடு"

இதோ கொண்டு வர்றேங்க.." அடுக்களைக்குள் விரைந்தாள் மீனாட்சி.
ஈஸி சேரில் சாய்ந்த படியே தொலைக்காட்சியை இயக்கினார் சபேசன்.
செய்திகள் சானல் பக்கம் போக, கர்நாடகச் சட்ட சபையில் மந்திரிகள் மொபைலில் ஆபாச வீடியோப் படம் பார்த்து மாட்டிக்கொண்ட செய்தியை அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருந்தார்கள்.

ரசம் கொண்டு வந்த மீனாட்சியிடமும் அதைப் பற்றி விளக்கிவிட்டு, " இவனுங்களுக்குப் படம் பாக்க வேற இடமே கெடக்கலியா...என்ன தைரியமாக் கொஞ்சம் கூட வெக்கமேயில்லாமக் காமிராவப் பாக்குறாங்க பாரு...கர்மம் கர்மம்..."

அரபு நாட்டில் என்னவெல்லம் நடக்கிறது என்ற கொடுமையை அந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்ததாகப் பாழாய்ப் போன விளக்கம் வேறு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்

"இந்த மந்திரிங்களோட இருக்க அப்பா, அம்மா, பொண்டாட்டி, புள்ளங்க எல்லாம் என்ன பாடு பட்டுப் போவாங்க..ஏன் நாண்டுகிட்டுச் செத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.."

சாயங்காலம் 5 மணி அளவில் மனோ திரும்பி வந்தான்.

"ஏம்ப்பா இப்டி வாடிப் போயிருக்க...சாப்பிட்டியா இல்லியா.."

மீனாட்சிக்குப் பதில் சொல்லாமல் தொலைக்காட்சியை இயக்கிச் செய்திகள் சானலில் வைக்க மீண்டும் கர்நாடக மந்திரிகள் காட்சிகள் ஓட..

"காலேலருந்து இந்தக் கருமத்தைத்தான் காமிக்கிறான்..படம் பாக்குற எடத்தைப் பாரு...சனியன் புடிச்சவனுங்க.."

"இப்போ டான்ஸ் ஆடுன பொண்ணுங்களையும் சேத்துக் காமிக்கிறான்..பாருங்கப்பா...அம்மா நீங்களும் வாங்க.."

"இதுவே கண்றாவி..இனி அந்தக் கண்றாவியை வேறு பாக்கணுமா..."

க்லோஸ் அப் காட்சியாகப் பெண்களின் முகம் வர, விக்கித்துப் போனார்கள் சபேசனும், மீனாட்சியும்..அங்கே அரைகுறை ஆடையில் ஆடிக்கொண்டிருந்தது நந்தினியேதான்....

"பாபுகிட்டச் சொல்லிட்டு வர அவன் ரூமுக்குப் போயிருந்தேன். அப்பதான் டி.வி பாத்தேன்...." அவன் சொல்லிக் கொண்டு போன எதுவும் அவர்கள் காதில் விழவில்லை.

சபேசன் சுதாரித்துக் கொண்டு பார்த்த போது, மனோவும் மீனாட்சியும் ஓங்கிய குரலில் அழுது கொண்டிருந்தார்கள்.

இரண்டாம் நாள் மாலை...

மனோவின் துணியைக் கொண்டு வந்த டெய்லர் பையனும், எடுக்கப்படாத பால் பாக்கெட்டுகளைக் கண்ட பால்காரரும், அன்று எதேச்சையாய்ச் சந்திக்க..வீட்டினுள் இருந்து வந்த துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பிடித்துக்கொண்டே அக்கம் பக்கத்தைக் கூட்டிப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தார்கள்...

போலீஸ் வந்து கதவை உடைத்த அவ்வேளையில், வீட்டுக்குள் போன் மணியடிக்க, "நந்தினிதான் போன் பண்றா போலருக்கு" என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

வல்லமையில் வெளிவந்தது.

Wednesday, March 7, 2012

உத்தியோகம் பெண்கள் லட்சணம் - வித்யா

வல்லமையில் நேற்று வெளிவந்தது..


மழை வருமா என்று அண்ணாந்து பார்த்தபடியே கோரிப்பாளையம் பிராஞ்ச் பேங்க் வாசலை விட்டு வெளியே வந்தாள் சாரதா. நல்ல வேளை அதற்கான அறிகுறியே இல்லை. கைப்பேசி எடுத்து எண்களைச் சுழற்ற ஓட்டுநர், 

"என்னம்மா வண்டி எடுத்தாரட்டா" என்று கேட்டார்.

"வாப்பா..நான் வாசலுக்கு வந்துட்டேன்...லேட் பண்ணிராத.."

ஒரிரு நிமிடங்களில் கார் வர, விரைந்து சென்று ஏறியவள்.."மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போப்பா."

"சரிம்மா."

இந்நேரம் மாப்பிள்ளை வந்திருப்பாரா..இந்த வித்யா என்னதான் மனசில நெனச்சிட்டிருக்காளோ புரியலை..வித்யா சாரதாவின் மூத்த பெண். இரண்டாவது பெண் பூஜா 12ம் வகுப்பு படிக்கிறாள்.

கடந்த வருடம்தான் வித்யாவுக்கும், டாக்டர் அரவிந்துக்கும் திருமணம் நடந்தது. வித்யா பொறியியல் பட்டதாரி. விரும்பிப் படித்தாளேயொழிய, வேலைக்குச் செல்வதில் துளியும் விருப்பமில்லை. படித்த முடித்த கையுடன் நல்ல சம்பந்தம் வந்து விட கலயாணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார்கள்.

ஆயிற்று. வருடம் ஒன்று ஆவதற்குள் என்னென்ன ப்ரச்னைகள்.....ப்ரச்னைகள் என்ன ப்ரச்சனைகள்...ஒரேயொரு தலைவலிதான்..டாக்டர் எப்போதும் பிஸி. இவளுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை..புதுக் கல்யாணக் கனவுகள்..கணவனுடன் அங்கே இங்கே சுற்ற வேண்டும் என்ற அவா..

திருச்சிதான் அவர்கள் சொந்த ஊர்; அங்கே தில்லை நகரில் சொந்தமாய் மருத்துவமனை வைத்துக் கொடுத்திருந்தார் அரவிந்துக்கு, கட்டடக் கான்டிராக்டரான அப்பா.

இத்தனைக்கும் மாமியார், நாத்தனார் பிடுங்கல் இல்லாத தனிக்குடித்தனம்தான்...

அரவிந்திடம் குறை சொல்ல ஒன்றுமில்லை...அவன் கல்யாணம் நிச்சயித்த போதே தன் பிஸியான, மூச்சு விட நேரம் இல்லாத வாழ்க்க்கையைப் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் அவளிடம் சொல்லியிருந்தான். அப்போதெல்லாம் சரி சரி என்று தலையாட்டியவள், சாரதாவும், கணவர் ரமேஷ்பாபுவும் வரப்போகும் கஷ்டங்களை, சந்தோஷங்களை எடுத்துக்கூறும் போது பொறுமையாகக் கேட்டவள்...இப்போது எடுத்ததுக்கெல்லாம் குத்தம் சொல்கிறாள்..

"வேலைக்குப் போகச் சொல்றாரும்மா...அப்போதான் அவர் கஷ்டம் எனக்குப் புரியுமாம்..எனக்கும் மனசு அலைபாயாம இருக்குமாம்.."

"அதுல என்னம்மா தப்பு.."ரமேஷ் பாபு கேட்க..

"அது சரி..அம்மா வேலைக்குப் போனதால நானும், பூஜாவும் எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு எங்களுக்குத்தான் தெரியும். அதையே என் பிள்ளைகளும் படணுமா...அதும் க்ளினிக்கையே கட்டிக்கிட்டு எப்பவும் இவர் மாரடிக்கிற லட்சணத்துக்கு நானும் வேலைக்குப் போனா நல்லாத்தான் இருக்கும்."

"வெளில வேற எங்கயும் போகாட்டாப் பரவால்ல...மாப்பிள்ளை க்ளினிக்கத்தான கவனிச்சுக்கச் சொல்றார்..அதைச் செய்யலாமில்ல.."

"போங்கம்மா...அதுக்கு டாக்டர் பொண்ணாக் கட்டிருக்க வேண்டியதுதானே...ரெண்டு பேரும் வேல பிஸின்னு இருந்திருக்கலாமே..சரிக்குச் சரியா ஜாடிக்கேத்த மூடியா இருந்திருக்கும்...நீங்கதான் இந்த வயசுலயும் வேலக்குப் போயிக் கஷ்டப்படுறீங்க...வேலைய விட்டுட்டு அக்கடான்னு இருங்கன்னாக் கேக்குறீங்களா...அப்போதான் தேவையிருந்துச்சு..வேலைக்குப் போனீங்க..இப்ப என்ன தேவை...நிம்மதியா வீட்ல இல்லாம..இந்த வயசுலயும் உங்க அம்மா எப்படி உழைக்கிறாங்கன்னு உம் மாப்பிள்ளை நக்கல் பேச்சு வேற.."

அரவிந்த் நல்ல டாக்டர்னு பேரெடுத்தவன்..பணக்கார அப்பாக்குப் பொறந்து, நல்லாவும் படிச்சு வந்தவன். அவனிடம் வரும் நோயாளிகள், அந்த டெஸ்ட், இந்த ஸ்கேன்னு அங்கே இங்கே அலைய வேண்டியதில்லை. நவீன கருவிகள் எல்லாம் அங்கேயே இருந்தது....அவன் மட்டுமின்றி, கூட இருந்த 5 டாக்டர்களும் நல்ல பேர் எடுத்து விட, நோய்க்குத்தான் பஞ்சமா..நோயாளிகளுக்குதான் பஞ்சமா..

சின்னச் சின்னதாய்த் தொடங்கிய ப்ரச்னை, வித்யா வீட்டோடு வந்துவிடும் அளவுக்கு முற்றிவிட்டது..இரண்டு தரப்பிலும் சமாதானமும் செய்தாகிவிட்டது..சும்மா சொல்லக்கூடாது அவ்வளவு வேலையிலும், மாதம் இருமுறையாவது திருச்சியிலிருந்து வந்து அவளைச் சமாதானப் படுத்திக்கொண்டுதான் இருந்தான்..நோயாளியைக் குணப்படுத்த அவ்வபோது வரும் ஹவுஸ் விஸிட் போல..

இன்றும் அப்படி அவன் வருவதால்தான், அவர்கள் தனியாக இருக்கட்டும் என்று இவர்கள் ஒதுங்கி விட்டார்கள்..அலுவலகப் பணிக்காய் ரமேஷ்பாபு சென்னை சென்றுவிட, பூஜாவும் தோழி பிறந்த நாள் பார்ட்டிக்குப் போய் விட, இதோ சாரதா மீனாட்சி கோவில் தெப்பக்குளப் படிகளில்...

மணி 7 ஆக, மீண்டும் டிரைவருக்கு நம்பரைச் சுழற்றி, வீட்டுக்குக் கிளம்பினாள். வீடு பசுமலையில்..வரும் வழியெல்லாம் மனசு பதைத்தது. கணவனுக்கு போன் அடிக்க, அவர் எடுத்தால்தானே..."என்னதான் பிஸியோ..".பேங்கில் என்ன வேலையிருந்தாலும், வீட்டில் யாரிடமிருந்தாவது போன் வரும்போது, தலை போற வேலையாருந்தாலும், அட்லீஸ்ட்15 நிமிடம் கழித்தாவது போன் பேசி விடுவாள்..

"அது சரி..கணவன் என்ன..மாப்பிள்ளை என்ன..இந்த ஆண்கள் எல்லாரும் இப்படித்தான்..அய்யயோ..இது என்ன நானும் வித்யா மாதிரிப் புலம்புகிறேன்..."
இன்னிக்காவது மனசு மாறியிருப்பாளா..என்னாச்சோ தெரியலை என்று குழம்பியபடி வீட்டுக்குள் நுழைந்தாள்.

வித்யாவின் இறுகிய முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

"மாப்பிள்ளை போயிட்டாரா வித்யா.."

"ம்..ம்.."வேறு எதுவும் கேட்காதே என்கிற தோரணை...

"என்ன சொன்னார்.."

"வழக்கமான பல்லவிதான்..வீட்டுக்கு வான்னு...ஹாஸ்பிட்ல்ல மோகன்னு ஒரு டாக்டர்..அவங்க பொண்டாட்டியாம் போர் அடிக்குதுன்னு வேலைக்குப் போறாங்களாம்..இன்னோரு டாக்டரோட பொண்டாட்டி வீட்டுல இருந்தாலும் ஜாலியா இருக்காங்களாம்..இதேதான் புராணம்.."

வேலைக்குப் போகலாமா வேணாமான்னு ஒரு பொண்ணே முடிவெடுக்கிற சூழல் எத்தனை பேருக்கு வாய்க்கும்.....தன்னோட கொடுப்பினை இந்தப் பொண்ணுக்கு ஏன் புரிய மாட்டேங்குது..

இந்தப் பூஜா நாளைக்கு என்ன கூத்தடிக்கப் போறாளோ...கட்டுப்பாடாய்த்தானே வளர்த்தோம்..என்னதான் பண்றதோ..காபி கலக்க கிச்சனுக்குச் சென்றாள் சாரதா..

"யம்ம்மோவ்..."வேலைக்கார சுப்பம்மாவின் குரல்..

"வாங்க மகாராணி..என்ன ரெண்டு நாளா ஆளயே காணோம்..."காபியைக் கொஞ்ச நேரம் மறந்து விட்டு அவளிடம் பாயலானாள் சாரதா..

ஓங்கிக் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் சுப்பம்மா...திரும்பி முதுகைக் காண்பித்து, "அந்தப் பாழாப் போன மனுசன் குடிச்சுட்டு வந்து போட்டு அடியா அடிச்சுட்டான்...காய்ச்சல்ல ரெண்டு நாள் படுத்துட்டேன்..இன்னிக்காவது பொழுதோட வரணும்னு இருந்தேம்மா ...தூங்கிப்புட்டேன்...அதான் லேட்டாயிர்ச்சு.."

என்றவள் வித்யா பக்கம் திரும்பி
"என்ன பாப்பா மாப்பிள்ளை இன்னிக்கு வந்திருப்பாரே..கூடப் போகலியா..."

"ஆமா ..ஆமா..உனக்கெல்லாம் அறிவே இல்லியா...இப்படி அடி வாங்குற..இதெல்லாம் ஒரு பொழப்பு...ஆம்பளையா லட்சணமா உன் புருஷனை வேலைக்குப் போகச் சொல்லாம நீ சம்பாரிச்சுப் போடுற திமிர்...நீ வேலைக்கு வராம, நாலு நாள் பட்னி போடு..வயிறு காஞ்சா எல்லாம் வழிக்கு வந்து சேரும்.."

"என்னம்மா பண்றது..உத்யோகம் புருச லச்சணம்னு சொல்வாக..குடிக்குறதுதான் இந்தாளோட லச்சணமாருக்கு...அதெல்லாம் பாத்தா முடியுமா...அதெல்லாம் பாத்தா என் பொழப்பைப் பாக்க முடியுமாம்மா...நாலு நாள் அந்த ஆள மட்டுமா என் புள்ளயும்தான் பட்னியாக் கெடக்கும்.

பாவம்...என் மகன மாதிரித்தான் அந்தாளும்னு நெனச்சு சமாதானமாப் போக வேண்டியதுதான்..அதுவும்...தப்புச் செஞ்சுப்புட்டு அப்றம் தலையைச் சொறிஞ்சிட்டு வந்து நிக்கும்...எங்க ஆத்தா சொல்லும்...புருசன உன் புள்ள மாதிரி நெனச்சுக்கோ..தப்பு செஞ்ச புள்ளய அடிச்சாலும் பின்ன நம்மதான தாயி அணச்சுக்கிறோம்...புருசனயும் அப்படி மன்னிச்சுட்டா எல்லாம் சரியாப் போய்ரும் தாயி..நீங்க ஒரு புள்ள பெக்கும் போதுதான் பாப்பா உங்களுக்குப் புரியும்...

மாப்பிள்ளைத் தம்பி எவ்ள தங்கமான புள்ள...பொழுத வெட்டியாப் போக்குற மாதிரிக் கோச்சுக்கிறீங்களே பாப்பா..எத்தன உசுரைக் காப்பாத்துது..போன தரம் உங்க ஊருக்கு வந்தப்ப பாத்தேன்..ஆஸ்பத்திரில, எவ்வளவு பேரு வாழ்த்துறாங்க..பாவம் பாப்பா அந்தத் தம்பி...புரிஞ்சு பக்குவமா நடந்துக்காம ஏன் கஷ்டப்படுத்துறீக..

ஒங்க அம்மா அப்பாவும் பாவம்தானே பாப்பா..மனசுக்குள்ள மருகிப் போறாக..இத்தன நாள் சொல்லத் தயக்காமாருந்துச்சு..இன்னிக்கு என்னமோ மனசு தாங்கல..அதான் சொல்லிப்புட்டேன்.."

சுப்பம்மா சொல்லிக்கொண்டேசேலையை இழுத்துச் சொருகியபடி புழக்கடைப்பக்கம் போக, அடுக்களையில் இருந்து காபி குடித்தபடியே வந்த சாரதா, வித்யாவின் முகத்தில் என்றும் இல்லாத மென்மையும் தெளிவும் பொலிவது கண்டு, பெருமூச்செறிந்தாள்.

குறளின் குரல் - 49


பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 50. இடனறிதல்
குரள் எண்: 491

தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது.


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடம் கண்டபின் அல்லது.

விளக்கம்:

பகைவரை எதிர்க்கும்போது முழுமையான வெற்றி கிட்டுவதற்கு ஏற்ற இடங்களைக் கண்டு தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்வதற்கு முன்னால், எந்த ஒரு செயலையும் தொடங்காமல் விட வேண்டும். ஏற்ற இடங்கண்டு பின் எதிர்த்தால் வெற்றி கிட்டுவது உறுதி.

பகைவரை அற்பர் என்று இகழவும் கூடாது. சரியான இடத்தைத் தேர்வு செய்யாவிட்டால் என்ன ஆகிவிடும் என்று இகழ்வாக நினைப்பதும் கூடாது. இவை தோல்விக்கு வழிவகுக்கும்.
----------------


பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 103

பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற் பெரிது.


பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

விளக்கம்:

உதவி செய்வோர் பலர், தமக்கு அதனால் என்ன பயன் உண்டாகும் என்று கருதியே பிறர்க்கு உதவி செய்வர். இந்த உதவி செய்தால் இந்த பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் அன்பு மட்டுமே கருத்தில் கொண்டு பிறர்க்குச் செய்யும் உதவியின் தன்மையை ஆராய்ந்து பார்த்தால், அத்தகைய உதவி கடலை விடப் பெரிதாகும்.
-----------------


பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 125. நெஞ்சொடுகிளத்தல்
குறள் எண்: 1242

காதல வரில ராகநீ நோவது
பேதைமை வாழியென் னெஞ்சு.


காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி, என் நெஞ்சு!

விளக்கம்:

என் நெஞ்சே! நீ வாழ்க! அவர் நம்மிடத்தில் காதல் இல்லாதவராக இருக்கையில், நாம் அவர் பொருட்டு வருந்துவது,  வரவுக்காக ஏங்குவது  நம்முடைய அறிவின்மையாகும்.
-----------------------


பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 67. வினைத்திட்பம்
குறள் எண்: 662

ஊறொரா லுற்றபி னொல்காலை யிவ்விரண்டி
னாறென்ப ராய்ந்தவர் கோள்.


ஊறு ஒரால் உற்றபின் ஒல்காலை இவ்விரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள்.

விளக்கம்:

ஒரு வினை செய்ய முற்படும்போது ...

(1) அதனால் வரக்கூடிய இடையூறுகளை முன்கூட்டியே கணித்து அவற்றைத் தவிர்ப்பது,

(2) எதிர்பாராதது எதுவும் நேர்ந்து அவ்வினை தடைப்பட்டுப் பழுதுபடுமேயானால், அதைக்கண்டு மனம் தளராது உறுதியோடு நிற்பது

இவ்விரண்டும்  வினையாற்றும் நெறிமுறைகளை நன்கு ஆராய்ந்து தேர்ந்தவர்கள் பின்பற்றும் கோட்பாடுகள் ஆகும்.

ஊறு -  இடையூறு, தொடு உணர்வு, உடம்பு, கொலை, காயம்,வல்லூறு, நாசம்

ஒரால் - நீக்குதல், ஒருவுகை

--------------


பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 65. சொல்வன்மை
குறள் எண்: 645

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொ லின்மை புரிந்து.


சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.

விளக்கம்:

ஒருவர் சொற்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும். இந்தச் சொல்லை விடச் சிறந்த சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாமோ என்று பின்னர் எண்ணி வருந்தாதபடி, தாம் பேசிய சொல்லை வெல்லும் சொல் வேறு எதுவும் இல்லை என்றறிந்து சொற்களைப் பயன்படுத்த வேண்டும்

--------------


பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 39. இறைமாட்சி
குறள் எண்: 383

தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்று
நீங்கா நிலனாள் பவர்க்கு.


தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு.

விளக்கம்:

1. செயல்கள் ஆற்றுவதில் சோர்ந்து நில்லாது, காலம் தாழ்த்தாது, விரைந்து முடிக்கும் தன்மை,

2. திறம்பட ஆட்சி செலுத்தும் வகைமுறைகளைக் கற்றுத் தெளிந்த அறிவுடைமை,

3. எதைக் கண்டும் உறுதி குலைந்து விடாமல் துணிவுடன் நன்மை செய்கின்ற தெளிவு

இவை மூன்றும் நிலத்தை ஆள்பவர்களிடம் என்றும் நீங்காது நிலைத்து நிற்கவேண்டிய பண்புகளாகும்.




குறளின் குரல் - 48


பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 71

அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புண்கணீர் பூச றரும்.


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர்
புன்கண் நீர் பூசல் தரும்.

விளக்கம்:

அன்பு என்பது உருவமில்லாத அருவப்பொருள். பிறரிடம் ஒருவருக்கு உள்ள அன்பைக் கண்ணால் காண இயலாது. அந்த அன்பைக் காணும் வழிதான் என்ன?

அன்பு என்ற அற்புதத்தைத் தாழிட்டு அடைத்து வைக்க முடியாது. தம் அன்புக்குரியவரின்  துன்பம் காணும்போது, உள்ளன்பைத் தாழிட்டு வைக்க முடியாமல், பொங்குகின்ற கண்ணீர், 'இதுதான் அன்பு, இதுதான் அன்பு'  என்று கூக்குரலிட்டுத் தன்னைத் தானே வெளிப்படுத்திக்கொள்ளும்.

ஆர்வலர் - அன்புக்குரியவன், கணவன், பரிசிலன்
புன்கண் - துன்பம்
பூசல் - கூப்பாடு, போர், போரொலி, வருத்தம், ஒப்பனை
----------------


பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 66. வினைத்தூய்மை
குறள் எண்: 652

என்று மொருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.


என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

விளக்கம்:

புகழும், நன்மையும் தராத எந்த ஒரு செயலையும் எந்த ஒரு காலத்திலும் செய்யாமல் விட்டு விட வேண்டும்.

ஒருவுதல் - விடுதல், நீங்குதல், கடத்தல், ஒத்தல்
-------------------


பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 110. குறிப்பறிதல்
குறள் எண்: 1093

நோக்கினா நோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்.


நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள்; அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

விளக்கம்:

அவள் என்னைப் பார்த்தாள். பார்த்தவள், நாணத்தால் வளைந்து தலைகவிழ்ந்தாள். அவளின் இந்தச்செயல், எங்கள் அன்புப் பயிர் வளரும் வண்ணம் அதற்கு வார்த்த நீர் போலாயிற்று.

அவளின் நாணம் கலந்த பார்வை காதலை உறுதிப்படுத்துவதாக அமைவதால், காதல் பயிர் மேலும் வளரும் என்பது உறுதியாயிற்று.

இறைஞ்சினாள் - வளைந்தாள், வணங்கினாள், தாழ்ந்தாள்
யாப்பு - அன்பு, கட்டு, செய்யுள், உற்தி, சூழ்ச்சி, பொருத்தம், பாம்பு
அட்டிய - இட்ட, அழித்த, வடித்த, சமைத்த, சுவைத்த, தான சாசனம் தருகின்ற

---------------


பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 21. தீவினையச்சம்
குறள் எண்: 201

தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.


தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

விளக்கம்:

தீவினையே செய்து பழக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் தீவினை செய்வதற்கு அஞ்ச மாட்டார்கள். ஆணவமிகுதியால் அவர்கள் எதற்கும் அஞ்சாமல் மேலும் மேலும் தீவினையே செய்வர்.

ஆனால், நன்மதிப்புடைய சான்றோர்கள் தீவினை என்னும் செருக்கான செயலைச் செய்வதற்கு அஞ்சுவர். நல்லதையே செய்து பழக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் தீவினையைக் கண்டு அஞ்சுவது இயல்பாகிவிடும்.

--------------------


பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 104. உழவு
குறள் எண்: 1031

சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
லுழந்து முழவே தலை.


சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்; அதனால்,
உழந்தும் உழவே தலை.

விளக்கம்:

சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தில் பலவகையான தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாறி மாறி வேறு பல தொழில்கள் செய்து வந்தாலும், ஏரால் உழுது பயிர் விளைவிக்கும் உழவுத் தொழிலைச் சார்ந்தே உலகத்தார் வாழவேண்டியிருக்கிறது.

வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாதாரமும், பொருளாதாரமும் அமைந்திருப்பதால், என்றென்றும் உழவுத் தொழிலே தலைசிறந்த தொழிலாகத் தனிப்பெருஞ்சிறப்புடன் விளங்குகிறது.
-------------


பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 31. வெகுளாமை
குறள் எண்: 304

நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற.


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற?

விளக்கம்:

முகம் மலர சிரித்துப் பேசி மகிழ்வதையும், மனம் மலர மகிழ்ந்து நிறைந்து விளங்கும் உவகையையும் மறையச் செய்து விடும் சினம். சிரித்துப் பேசுவதையும், மகிழ்ந்து உறவாடுவதையும் கெடுத்து விடும் சினம். அத்தகைய தன்மையுடைய சினத்தைவிட ஒருவருக்குப் பகையாய் வாய்க்கக்கூடியது வேறு எதுவும் இல்லை.





Monday, March 5, 2012

ராட்சதப் பூ








ராட்சதப் பூ

உன்னுடனான
என்
பிணக்குகளினால்
ராட்சதப் பூவாய்
மலர்ந்தெழுந்த
கோப மணம்தான்
என்னமாய்க் கமழ்கிறது!


Sunday, March 4, 2012

திடமான பெண்ணும் வலிமையான பெண்ணும் - 'வல்லமை'யில்

வல்லமை மகளிர் வாரச் சிறப்பிதழில்...

ஓர் ஆங்கிலக் கவிதையின் தமிழாக்க முயற்சி..தமிழின் தன்மைக்கேற்ப, சில மாறுதல்களுடன்..

திடமான பெண்ணும் வலிமையான பெண்ணும்

திடமான பெண்
கட்டுடலை வடிவமைக்க
வளைந்து நெளிந்து
உடற்பயிற்சிகள் செய்வாள்;



பலமான பெண்
ஆழமான தன் உள்நோக்குடன்
ஆன்மாவை வடிவமைப்பாள்.



திடமான பெண்
எந்தவொன்றுக்கும்
அஞ்சுவதேயில்லை.



வலிமையான பெண்
பயம் சூழும் தருணங்களில்
மனவுறுதியில் நிலைத்திருக்கத்
தவறுவதேயில்லை.



திடமான பெண்
தன்னுள் சிறந்த
எந்தவொன்றையும்
பிறர் கொள்ள விடுவதில்லை;



வலிமையான பெண்
தன்னுள் சிறந்தவற்றை
அனைவருக்கும்
கொடுக்காமல் இருப்பதில்லை.



திடமான பெண்
தவறுகள் செய்வாள்;
வருங்காலத்தில்
அத்தவறுகள் தவிர்ப்பாள்.



வலிமையான பெண்
நேரும் தவறுகளையும்
வரங்களாய் உணர்ந்து
அவற்றின் பலங்களைச் சுவீகரிப்பாள்.



திடமான பெண்
உறுதியான

தன் கால்களால்
தானே அடியெடுத்து வைப்பாள்;



வலிமையான பெண்
உதவி கோரும் தருணங்களை
நன்கு உணர்ந்திருப்பாள்.



திடமான பெண்
தன் முகத்தில்
நம்பிக்கையின் சாயல்
அணிந்திருப்பாள்.



வலிமையான பெண்
தன் முகத்தில்
கருணையருளின் சாயல்
அணிந்திருப்பாள்:



திடமான பெண்
தன் பயணத்துக்கான பலம்
தன்னில் உள்ளதென
நன்னம்பிக்கை கொண்டிருப்பாள்.



வலிமையான பெண்
தன் பயணத்தில்தான்
தனக்கான பலம் கிடைக்கிறதென்று
நன்னம்பிக்கை கொண்டிருப்பாள்.


ஆங்கிலக் கவிதை:

A strong Woman Versus A Woman of Strength

A strong woman works out every day
to keep her body in shape
but a woman of strength looks deep inside
to keep her soul in shape

A strong woman isn't  afraid
of anything
but a woman of strength shows courage
in the midst  of her fear

A strong woman won't  let anyone
get the best of her
but a woman of strength gives the  best
of her to everyone

A strong woman makes  mistakes
and avoids the same in the future
but a woman of strength realizes life's mistakes
can also be blessings and capitalizes on them

A strong woman walks
sure footedly
but a woman of strength knows
when to ask for  help

A strong woman wears  the look
of confidence on her face
but a woman of strength
wears  grace

A strong woman has  faith
that she is strong enough for the journey
but a woman of strength  has faith
that it is in the journey that she will become  strong

குறளின் குரல் - 47

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 51. தெரிந்து தெளிதல்
குறள் எண்: 504


குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.


குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்
.

விளக்கம்:

ஒருவரை ஒரு பணிக்கு அமர்த்தும்போது, அவருடைய குணம், குற்றம் இரண்டையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். குணம், குற்றம் இரண்டில் எது அதிகமாக இருக்கிறதோ, அதைக் கருத்தில் கொண்டு, அவரைப் பற்றித் தெளிவான ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதன்பின், அவருக்குத் தகுதியான, பொருத்தமான பணியில் அவரை அமர்த்த வேண்டும்.

------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 07. மக்கட்பேறு
குறள் எண்: 67


தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.


தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.







விளக்கம்:


தந்தை தன் மகனுக்குச் செய்யக்கூடிய பெரிய உதவி எதுவென்றால், கற்றவர் நிறைந்த அவையில் சிறந்த புகழுடன் விளங்கும்படி தம் மகனுக்குக் கல்வியறிவு வழங்குவதேயாகும்.
-------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 23. ஈகை
குறள் எண்: 221



வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.


வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம்
குறி எதிர்ப்பை நீரது உடைத்து.


விளக்கம்:

பொருட்செல்வம் இல்லாத ஏழைகளுக்குத் தேவையானதைக் கொடுப்பதே ஈகையாகும். வறியவர் அல்லாத பிறர்க்கு உதவுவது என்பது மீண்டும் எதையாவது எதிர்பார்த்துச் செய்யப்படுவதேயாகும்; அல்லது திரும்பப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகும்; அது ஈகையாகாது.

குறி எதிர்ப்பு - அளவு குறித்துக் கொடுத்துத் திரும்ப வாங்கிக்கொள்வது
------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 99. சான்றாண்மை
குறள் எண்: 981




கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.


கடன் என்ப, நல்லவை எல்லாம், கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.


விளக்கம்:
தமக்குரிய கடமைகள் எவை என்றறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு உலகில் உள்ள நல்லவை எல்லாம் இயல்பான கடமைகளாகி விடும்.
கடன் - கடமை, கடப்பாடு, முறைமை, இருணம், இரவற்பொருள், இயல்பு, வைதிகக் கிரியை, விருந்தோம்பல்,மரக்கால், குடியிறை, மானம், இறுதிக்கடன்
-------------------
பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 30. வாய்மை
குறள் எண்: 300
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.


யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற
.

விளக்கம்:

இவ்வுலகில் மெய்மைப்பொருள் உடையனவாக நான் அறிந்தவற்றுள், 'வாய்மையைவிடச் சிறந்தது' என்று சொல்லத்தக்க தகுதி வாய்ந்தது எதுவும் இல்லை
.--------------------
பால்: பொருட்பால்
இயல்: படையியல்
அதிகாரம்: 77. படைமாட்சி
குறள் எண்: 762

உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது.


உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலை இடத்து
தொல் படைக்கு அல்லால், அரிது
.

விளக்கம்:

போரில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் தருணம் வந்த போதும், ஊக்கம் சற்றும் குறையாமல், காயங்களுக்கு அஞ்சாமல், எதிர்த்து நிற்கும் மனவுறுதி, வழி வழியாகப் பெருமையுடன் விளங்கிவரும் படைக்கன்றி வேறு எந்தப் படைக்கும் முடியாது.

உலைவு - ஊக்கக் குறைவு, தோல்வி, நடுக்கம், கலக்கம், அழிவு, அலைவு, வறுமை
தொலை - அழிவு, ஒப்பு, தூரம், அக்கரைச் சீமை
தொல் படை - பாட்டன், தந்தை, மகன் என அரச குடும்பத்தோடு பரம்பரை பரம்பரையாக வரும் படை

குறளின் குரல் - 46

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 56. கொடுங்கோன்மை
குறள் எண்: 557


துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு.

துளி இன்மை ஞாலத்திற்கு எற்று? அற்றே வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு.


விளக்கம்:

உலகில் மழை இல்லாத போது உலகத்தவர் எவ்வளவு துன்பம் அனுபவிப்பார்களோ, அதைப் போலவே அருளும் கருணையும் இல்லாத அரசின் கீழ் வாழும் குடிமக்களும் அல்லல் படுவர்.

துளி - மழை, சொட்டு, திவலை, சிறிதளவு, நஞ்சு, பெண்மை

அளி - அருள், கருணை, அன்பு, ஆசை, வரவேற்பு, எளிமை, கொடை, வாய், வண்டு, கருந்தேனீ, தேன், மாட்டுக்காடி, கிராதி, மரவுரி மரம், கொடு, காப்பாற்று
---------------------


பால் அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 37. அவாவறுத்தல்
குறள் எண்: 370



ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்.

ஆரா இயற்கை அவா நீப்பின், அந் நிலையே
பேரா இயற்கை தரும்.



விளக்கம்:

ஆசை என்பது ஒரு போது நிரம்பாத, முடிவு காணாத குணம் உடையது.
அப்படிப்பட்ட இயல்புடைய ஆசையை அகற்றி வாழும் நிலை, எப்பொழுதும் மாறாத இன்பமான வாழ்வைத் தரும்.


ஆரா - ஆராத, நிறைவு பெறாத


இயற்கை - இயல்பான தன்மை, வழக்கம், இலக்கணம், கொள்கை, முறைமை
-------------
பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 36. மெய்யுணர்தல்
குறள் எண்: 353


ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.


விளக்கம்:

மனதில் ஏற்படும் ஐயப்பாடுகளைக் களைய நன்கு ஆராய்ந்து உண்மை நிலையை அறிந்து கொள்பவர்களுக்கு, அவர்கள் வாழ்கின்ற இவ்வுலகத்தை விட வானம் மிகவும் அருகில் இருப்பதாய் நினைக்கின்ற ஊக்கமும் உற்சாகமும் பெருகும்.

நணியது - பக்கத்தில் உள்ளது, அண்மையில் உள்ளது

-------------------
பால்: பொருட்பால்
இயல்: கூழியல்
அதிகாரம்: 76. பொருட்செயல்வகை
குறள் எண்: 753


பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று.


பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.


விளக்கம்:

பொருட்செல்வம் என்பது உண்மையான நிலையான அணையா விளக்காகும். அணையா விளக்கு ஒருவர் கையில் இருந்தால், இருள் நிறைந்த இடங்களுக்குக் கூட இடையூறு இல்லாமல் சென்று வர முடியும். இருளை அழித்து ஒளியைக் கொடுக்கும் அவ்விளக்கு.

அது போலவே, பொருட்செல்வம் என்னும் அணையா விளக்கு ஒருவர் கையில் இருந்து விட்டால், அதை உடையவர்கள் நினைத்த இடத்திற்கு சென்று, வழியில் என்ன துன்பம் நேர்ந்தாலும் அதை அழித்து வெற்றி காண முடியும்.
தேயம் - நாடு, இடம், உடல், பொன், பொருள், களவு,அழகு, புகழ், அறிவு, பெருமை, வீரியம்

-----------------
பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 109. தகையணங்குறுத்தல்
குறள் எண்: 1081


அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு
.

அணங்குகொல்? ஆய் மயில்கொல்லோ! கனங்குழை
மாதர்கொல்! மாலும் என் நெஞ்சு.


விளக்கம்:

இவள் அழகாய் இருப்பதால் தெய்வப்பெண்ணோ? சாயலைப் பார்த்தால், மயிலை ஒத்தவளோ? காதில் கனமான தோடுகள் அணிந்திருப்பதால், ஒருவேளை மானுடப்பெண்தானோ? இவள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றது.

தகை - அழகு
அணங்குறுத்தல் - காதல் துன்பத்தை உண்டாக்குதல்
மாலும் - மயங்கும், மாட்சிமைப்படுத்தும்
------------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 59. ஒற்றாடல்
குறள் எண்: 582


எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்..






எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.


விளக்கம்:

நண்பர், பகைவர், அயலார், உற்றார் முதலிய எல்லார்க்கும் நிகழ்கின்ற நிகழ்வுகளை எந்தக் காலத்திலும் தொடர்ந்து ஒற்றர்களின் உதவி கொண்டு விரைவாக அறிந்து கொள்ள வேண்டும். இதுவே ஒரு வேந்தனுக்கு இன்றியமையாத தொழில் மற்றும் கடமையாகும்.