Friday, March 16, 2012

நான் அறிந்த சிலம்பு - பகுதி 11

புகார்க்காண்டம் - 2: மனையறம் படுத்த காதை

கோவலன் கண்ணகியின் நலம்பாராட்டுதல்

சிலம்பின் வரிகள் 53 - 72 இங்கே..

கருமையடர்ந்த
பெரிய தோகை வாய்த்த
நீல நிற மயிலும்
நின்
அழகிய சாயலுக்கு
அஞ்சித் தோற்றுக்
குளிர் காடு தேடித்தான்
ஓடி ஒளிந்ததுவே!

நல் நெற்றியாளே!
நன்னடை பயிலும்
அன்னப் பறவையது
நின்
மென்னடைக்கு
அஞ்சித் தோற்று
நன்னீர் சூழ்
வயற்காடு தன்னில்
அடர்ந்து செறிந்த
மலர்க்கூட்டம் நடுவே
மறைந்துதான் கொண்டதுவே!

இச்சின்னஞ்சிறு
பச்சைப்பசுங்களியோ
இரக்கத்துக்குரியது.

குழலிசை யாழிசையோடு
அமிழ்தமும் குழைந்து இழைகின்ற
நின் மழலை மொழிக்கு
வருந்திச் சோர்ந்ததுவே!

எனினும்
மடநடை மாதே,
நின்
மலர்வாய் மழலை
கற்றுத் தேர்ந்திட
நின்
மலர்க்கரம்
நீங்காது தங்கி
நினைப் பிரியாமல் பொருந்தியதுவே!

நறுமலர்கள்
நறுங்கூந்தலில் சூடிய
நறுமலர்ப் பெண்ணே!

மாசற்ற மாற்றற்ற
இயற்கை தந்த
இனிய அழகே
நினக்கு
நல்லதொரு அணியாய்
வாய்த்திருக்க..

நின்
மாங்கல்ய மங்கல அணி
மேலும் அழகு சேர்த்திருக்க..

நின்னை
ஒப்பனையில் மேலும்
அழகூட்ட நினைப்பவர்
இன்னும் பல
அணிகலன்கள் அணிவித்ததால்
ஆனதொரு பயன்தான் என்ன?!

பல்வகைத் தோற்றம் கொண்டு
பொலிகின்ற நின்
கருங்கூந்தல் அதனுக்குச்
சில மலர்கள் மட்டும் சூட்டிச்
சிங்காரிப்பதை விடுத்துப்
பல மலர்கள் கூடி அணிசெய்யும்
ஒளிவீசும் மாலை
தேடிச் சூட முயன்றனரே!
அம்மாலையோடு
அவர்க்குள்ள உறவுதான் என்ன?!

அகிற்புகையின்
நறுமணமொன்றே போதும்
நின்
கூந்தலை மணமாக்க
என்றிருக்க
வாசனையூட்ட வேண்டிக்
கத்தூரிக் குழம்பு கொணர்ந்தவரின்
உள்நோக்கம்தான் என்ன?!

அழகுத்திரு மார்புகளுக்கு
அணியது சேர்த்திடச்
சந்தனக் குழம்பினால்
தீட்டிய கோலங்களே
போதுமென்றானபின்
முத்து வடம் கொணர்ந்தவர்க்கு
அதனுடனுள்ள உறவுதான் என்ன?!

மதி முகத்தில்
முத்து முத்தாய்
வியர்வையது அரும்பிடவும்,
அணிகலனின் கனம் தாங்காது
துவண்டு நலியும்
நின் சிற்றிடை வருந்திடவும்,
மென்மேலும்
மென்மைப் பெண்மீது
அணிகலன் பூட்டுகின்றனரே.
இவருக்கு என்னதான் நேர்ந்திட்டது?!

வல்லமையில் தொடராக வெளிவருகிறது...

8 comments:

ஜீவி said...

//கோவலன் தந்த
மாங்கல்ய மங்கல அணி...//

கோவலன் கூறுவதாக தற்கூற்றாக அமைந்த வரிகளில், 'கோவலன்' என்று வருவது ஒரு நெருடலாகப் பட்டது.

அடிகள் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன். அவரோ, கோவலனாகவே உருமாறியிருந்தார்! 'காதலில் ஒருமித்து கரம் பற்றியவளை' எந்தக் கவிஞனும் வர்ணித்திராத வர்ணிப்பில் திளைத்து இலக்கிய சாம்ராட்டாக உச்சாணிக் கொம்பில் வீற்றிருந்தார்!

இராஜராஜேஸ்வரி said...

கோவலன் தந்த
மாங்கல்ய மங்கல அணி
மேலும் அழகு சேர்த்திருக்க..

அழகு அணிவகுத்த அருமையான கவிதை வரிகள்.. பாராட்டுக்கள்..

கோபிநாத் said...

ஒவ்வொரு என்னவும் செம கலக்கல் ;-)

இம்புட்டு லேட்டுக்கு என்ன அப்படின்னு கேட்ட மட்டும் பதிலே இல்ல ;-))))

ராமலக்ஷ்மி said...

மிக அருமை மலர். தொடருங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி..இதை
//கோவலன் தந்த
மாங்கல்ய மங்கல அணி...//

இப்படி மாற்றிவிட்டேன்...

//நின்
மாங்கல்ய மங்கல அணி
மேலும் அழகு சேர்த்திருக்க..//


ஒவ்வொரு சிறு குறிப்பிலும் கவனம் தேவை என்பதை மீண்டும் எனக்கு வலியுறுத்திக் கொள்கிறேன்..

ஆமாம்..அடிகளார் பாத்திரமாகவே உருமாறியிருக்கிறார்...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...சிலம்பின் அழகு படிக்கப் படிக்க இன்பம்தான்..

பாச மலர் / Paasa Malar said...

எனக்கே இவ்வளவு தாமதம் ஆனது குறித்து மிக்க வருத்தம்தான்..
சோம்பேறித்தனம்தான் கோபி..வேறு என்ன காரணம் சொல்வது..
இனிமேல் தாமதம் இருக்காது...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி...இனிமேல் தாமதமின்றித் தொடரும்..