Saturday, March 31, 2012

நான் அறிந்த சிலம்பு - 13

புகார்க்காண்டம்- 2, மனையறம் படுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே 91 - 94

தம்பதியரின் இனிய இல்லறம்

பின்னிக் கொள்ளும்
பாம்புகள் இரண்டாய்ப்
பிணையல் இன்பத்தில்
மூழ்கித் திளைத்தனர்
காதல் தம்பதியர்.

காமதேவனும்
அவன் மனைவி ரதியுமாய்க்
காம இன்பங்களனைத்தும் 
கண்டே அவர் களித்தனர்.

நிலையாமையுடைத்து
இவ்வுலகம்
அழியும் தன்மையுடைத்து.

இவ்வுண்மை உணர்ந்தவராய்
உடல்தனில் உயிர்  இருந்திடும் போதே
இன்பங்கள் முழுதும்
துய்த்திடும் நோக்கில்
காதல் இன்பத்தில்
இடைவிடாது ஆழ்ந்து
களித்திருந்தனர்.

புகார்க்காண்டம்- 3. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே 1 - 36

மாதவி - பிறப்பு, நாட்டியப் பயிற்சி

தெய்வ மலையாம்
பொதிகை மலைவாழ்
திருமுனி அகத்தியர் சாபமேற்று
விண்ணுலகு விடுத்து
மண்ணுலகில் பிறந்தனர்
இந்திரன் மகன் ஜயந்தனும்
பேரழகி ஊர்வசியும்.

வானவர் உலகில்
நாடகத் தொழிலுடை
ஜயந்தனும் ஊர்வசியும்
மானிடர் உலகில்
நாடக அரங்கொன்றில்
திருமுனியின் கருணையால்
தம் சாபம் நீங்கப் பெற்றனர்.

வானவர் வழிவந்த
ஊர்வசியின்
வழித்தோன்றலாய்ப்
புகார் நகர்தன்னில்
பிறந்தனள் மாதவி.

அவள் தாமும்
குன்றாப் பெருமைவாய்ந்த
பிறப்பினள்;
அழகிய தோள்  உடையாள்;
மடலவிழ் மலரணிச்
சுருள் கூந்தலாள்;

ஆடல் பாடல் அழகு -
இந்த மூன்றிலும்
குறையின்றி முழுமையாய்
ஏழு ஆண்டுகள்
தாம் பயின்றிட்ட
நாட்டியக் கலையை
அரங்கேற்ற விரும்பியே,
தம் பன்னிரண்டாம் வயதில்
வீரர் புடை சூழ்ந்த
கழலணிந்த  சோழமன்னன்
அவைக்கு வந்தனள்.
தம் பரிவாரங்களுடன்.

நாட்டிய  ஆசிரியன்

இருவகைக் கூத்தின்
இலக்கணம் அறிந்தவன்;
இருவகையினின்று
கிளைத்துப் பல வகைப்படும்
கூத்துகள் பதினொன்றின் புணர்விதிகள்
தெரிந்து தெளிந்தவன்;
ஆடல், பாடல், இசைக்கருவி
இவற்றின் கூறுகள்
நூல்களின் இலக்கணப்படிக்
கற்றுத் தேர்ந்தவன்;

ஆடலும், பாடலும்,
தாளமும், தூக்கும்
ஒன்றுடன் ஒன்று கூடி
இணைந்து இயைந்து
வருகின்ற முறைகளைப்
பயிற்றுவிக்க வல்லவன்;

கற்பிக்கும் போது,
கூத்து நெறிகளான
பிண்டி பிணையல்
எழிற்கை தொழிற்கை
பயன்பாடுகள்
வகைப்படுத்தத் தெரிந்தவன்;

கூத்துக் களத்தில்
கூடை வருமிடத்தில்
வாரம் வாராது
வாரம் வருமிடத்தில்
கூடை வாராது
அபிநயம் நிகழ்கையில்
ஆடல் கலவாமல்,
ஆடல் நிகழ்கையில்
அபிநயம் கலவாமல்
விலக்கத் தெரிந்தவன்;

குரவைக்கூத்தும்
வரிக்கூத்தும்
ஒன்றுடன் ஒன்று
கலந்திடாது கற்பிப்பவன்;
தான் ஆடுவதிலும்
பிறரை ஆட்டுவிப்பதிலும்  வல்லவன்
ஆடலுக்கென்றமைந்த
ஆசான் அவனொடும்..

குறிப்பு:
பிண்டி, பிணையல், எழிற்கை, தொழிற்கை, கூடை, வாரம் - நாட்டியக் கூத்து வகைகளில் பின்பற்றப்படும் தாள, இசை விகற்பங்களுக்கு ஏற்ற அபிநயம், ஆடல்..

இசை ஆசரியன்

யாழ்ப்பாடலுமும்
குழல் பாடலும்
தாளக் கூறுகளும்
மிடற்றுப் பாடலும் (வாய்ப்பாட்டு)
தாழ்ந்த சுரத்தில்
இசைத்திடும் மத்தளமும்
நல்லிசையுடன்
இயைந்து புணர்ந்து
இசைக்கத் தெரிந்தவன்;

ஆடல்வகைகளுக்கேற்ற
பாடல்களின்
உரிப்பொருள் உணர்ந்து
இசைக்கூறுகள் அறிந்து
சுவை பொருந்தும்
இசைப் பாடல்களை
இசைக்க வல்லவன்;

தாய்மொழிக்கேயுரிய
சொல்லோசைகள்
சரிவரக் கையாண்டு
தாய்மொழிக்கேற்ற
பிற ஓசை நயங்களையும்
குற்றமறக் கற்றுணர்ந்த அறிவாளன்.

பாடல்கவியின் உள்ளக்குறிப்புடன்,
ஆடல்களின் தொகுதிக்கேற்ப
நாடகங்களின் பகுதிக்கேற்ப
இசைப்பொருத்தம் உணர்ந்து
இசைக்கும் பாங்கு கற்ற்றிந்தவன்.

குற்றமற்ற இசைநூல்
வழக்குகளை நன்கறிந்து
தக்கதொரு இசையை
வகுக்கவும் விரிக்கவும் வல்லவன்.
தளராத மனமுடைய இயல்பினன் 
இசையாளன் அவனொடும்.......

வல்லமையில் 26.03.12 அன்று வெளிவந்தது.

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

வல்லமை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

ராமலக்ஷ்மி said...

நன்று மலர்.

நாட்டிய, இசை ஆசரியன் தாள லயத்தோடு வரிகள் அருமை.

கோபிநாத் said...

அருமை ;-)

ஜீவி said...

//கூத்துக் களத்தில்
கூடை வருமிடத்தில்
வாரம் வாராது
வாரம் வருமிடத்தில்
கூடை வாராது
அபிநயம் நிகழ்கையில்
ஆடல் கலவாமல்,
ஆடல் நிகழ்கையில்
அபிநயம் கலவாமல்
விலக்கத் தெரிந்தவன்;//

சிலம்பின் வரிகளுக்கேற்ப உங்கள் வார்த்தைகள் அற்புதம்!

பாச மலர் / Paasa Malar said...

நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

நன்றி ராமலக்ஷ்மி..

நன்றி கோபி..

நன்றி ஜிவி..

தொடர்ந்து வந்து ஆதரவு தருவதற்கும் என்னை உறசாகப்படுத்துவதர்கும்..