Tuesday, January 27, 2009

தாய்மை விதி


என்ன இவளை இன்னும் காணவில்லை..கடிகாரத்தைப் பார்த்தாள் சுவாதி..மணி காலை 7.15..7.16..அதோ அரக்கப் பரக்க ஓடி வருகிறாளே..


பாவம்.. வாடகை குறைவென்பதால் மூன்றாவது மாடியில் மொட்டைமாடி வீட்டில் இருந்து 40 நாள் குழந்தையையும் அதற்கான மூட்டைகள்,

இவளுக்கான மூட்டைகள் சுமந்து இறங்கி வந்து குழந்தையை நாலு தெரு தள்ளி இருக்கும் ஒரு பெண்ணிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ரியாத்

காலை நேரப் போக்குவரத்து நெரிசலில் நீந்தி வருவதென்றால் சும்மாவா..


வழியில் இருந்த மேற்பார்வையாளரைப் பார்த்துச் சமாளித்து வகுப்பிற்குள் வந்தாள் வந்தனா.


'வந்து ரொம்ப நேரமாச்சா சுவாதி?'


'ம்ம்..6.50க்கு வந்தேன்..என்ன இன்னிக்கும் சிவப்புப் புள்ளிதானா ரிஜிஸ்தர்ல?'


'ஆமா..5 சிவப்புப் புள்ளி வந்தாச்சு 15 தேதிக்குள்ள..இப்பவே ஒரு நாள் சம்பளம் அம்பேல்..கொஞ்சம் இரு வந்திர்றேன்' ..வகுப்பறையில் நுழைந்த வந்தனா குழந்தைகளுக்குக் காலை வணக்கம் சொல்லிப் பணியைத் துவங்கினாள்.


நர்சரி வகுப்பின் இரண்டாவது வாரம்..ஒரே கூச்சலும் குழப்பமும் குவிந்த அறை..மலர்ந்தும் மலராத கண்களுடன் தூக்கத்தில் மலங்க மலங்க விழித்தபடி சில, புரியாத மழலை அரபியில் முனகிக் கொண்டு சில, அழுது தேம்பியபடி சில..இருந்தாலும் ஆசிரியையைக் கண்டதும் ஒரு மலர்ச்சி..ஒரு குழந்தையின் மூக்கைத் துடைத்து, பழச்சாறு குடிக்க முறபட்ட குழந்தையைச் சமாதானப்படுத்தி அதை உள்ளே வைத்து..ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாய்ச் சமாளித்து அவர்களுக்கான படிப்பு மற்றும் விளையாட்டுக் கருவிகளை ஒவ்வொரு குழந்தையின் முன் எடுத்து வைத்தபடியே பேசினாள் வந்தனா..


'இன்னிக்கே தமாம் போகணுமா என்ன..ஒரு நாள் இருந்துட்டுப் போயேன்..'


'இல்ல. ராகுல் தனியா இருப்பானே.'


'கூட்டிட்டு வந்திருக்கலாம்ல அவனையும்..'


'உடனே திரும்பணுமே. அதான் கூட்டிட்டு வரலை. அவனும் பள்ளிக்கு லீவே

போடமாட்டான். பக்கத்து வீட்ல இருப்பான். உன்னைப் பாக்கலாமேன்னு

நான் வந்தேன். ராத்திரிக்குள்ளதான் போய்ருவோமே...'


இருவரும் பள்ளிப்பிராயத்துத் தோழிகள். கல்யாணமாகி வெளிநாடு வந்தும் நட்பு தொடரும் கொடுப்பினை வாய்த்தவர்கள். ரியாத்திலேயே இருந்தவர்கள்தான். ஆனால் இப்போது சுவாதியின் கணவனுக்கு தமாம் மாற்றலாகிவிட்டது.


முதலில் இந்தப் பள்ளியில்தான் சுவாதியும் வேலை செய்தாள். ஆனால் இந்தியப் பிரிவில். வந்தனா வேலையில் இருப்பது அரேபியப் பிரிவில்.


அலுவலகப் பணிநிமித்தம் ரியாத் வரவேண்டியதால் இன்று இங்கே..


'இன்னும் இந்தியப் பிரிவிக்கு மாறலியா வந்தனா?'


'எங்கே..இதுல பழகியாச்சு..கொஞ்சம் அரபியும் பேச ஆரம்பிச்சுட்டேன்.. வேற யாரும் கிடைக்கல..அதான்..எங்கே மாத்தப் போறாங்க..'


'என்னக் கேட்டா இந்த நர்சரி, மர்றும் கே.ஜி. வகுப்பாசிரியர்களுக்குத்தான் சம்பளம் அதிகம் இருக்கணும். அதிகாரம் என் கையில் இருந்தா நான் அதான் பண்ணுவேன்..'


பேச்சும் வேலையுமாய்ப் போய்க் கொண்டிருக்கையில்..


சட்டென்று முகம் மாறினாள் வந்தனா. வலி பொறுக்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டாள்.


'இரு வர்றேன்..' போய்விட்டு அவள் திரும்பியபோது முகத்தில் வேதனை கொஞ்சம் குறைந்திருந்தது.


'இன்னும் பள்ளியில் குழந்தைகள் காப்பகம் வக்கலியா வந்தனா..'


'இடம் பத்தலன்னுதான் சொல்றாங்க இன்னும்..'


வேலையை விடவும் முடியாது. அவள் கணவனுக்குக் குறைவான சம்பளம், வீட்டு வாடகை, சாப்பாடு இத்தனை செலவையும் சமாளிக்க வேண்டுமே. குழந்தைக்குப் பாலூட்ட முடியாத கொடுமைதான்..


'என்னமோ போடி..கஷ்டமாருக்கு..உன் வீட்டுக்காரருக்கு நல்ல வேலை இன்னும் கிடைச்ச பாடில்லயா..'


'எங்கே..அங்கங்கே சொல்லி வச்சுருக்கு..கிடைக்கும்னு நினைக்கிறேன்..'


ஒரு குழந்தை ஓடி வந்து இன்னொரு குழந்தையைக் காட்டி அரபியில்

ஏதோ சொல்ல இவள் சென்று சமாதானப்படுத்தி வந்தாள்.


'அடுத்த மாசம் ஊருக்குப் போறேன், வந்தனா. அம்மாவைப் பாத்துட்டு வர்றேன்..ஏதும் கொடுக்கணுமா அவங்களுக்கு..'


'இல்ல..நா நல்லாருக்கேன்னு சொல்லு..வேற எதுவும் சொல்ல வேணாம். வீணாக் கஷ்டப்படுவாங்க..வெளிநாட்டுல மக நல்ல வாழ்க்கை ஏகபோகமா வாழ்றான்னு நெனச்சுக்கட்டும்..'


'ஊருக்காவது ஒரு நடை போயிட்டு வாயேன்..குழந்தையைப் பாக்க அங்க எல்லாருக்கும் ஆசையா இருக்குமில்ல..'


'போகணும்..'என்று வாய் சொல்ல இயலாமையில் மனம் தளும்பியது. 'நீயும் தமாம்ல வேற வேலை இவருக்கு முயற்சி பண்ணு..ரிலீஸ் கொடுப்பாங்க கம்பெனில..விசா மாத்தறது ப்ரச்னை இருக்காதாம். இவர் சொன்னார்..'


'கண்டிப்பா..ஏற்கனவே நல்ல வேலையாத்தான் உன் கணவருக்காகப் பாத்திட்டிருக்கார் இவர்..'


சுவாதியின் கைபேசி அவள் கணவர் வரவை அறிவிக்க விடைபெற்றுச் சென்றாள் அவள்.


குழந்தைகளுடன் பணியில் மூழ்கிப் போனாள் வந்தனா.


மீண்டும் வலி ....மீண்டும் ஓய்வறைக்குச் செல்லுதல்..என்று இது தொடர்ந்தது 3 முறை...


பள்ளி முடிந்து தனியார் வாகனத்தில்தான் செல்ல வேண்டும். அவள் கணவனால் மதியம் வர முடியாது..அந்தப்பெண்ணின் வீட்டுக்குப் போனாள்..


'இன்று என்னமோ கரைத்த பாலை இவ குடிக்கவே இல்ல..'என்றாள் அந்தப் பெண்.


சட்டென்று ரவிக்கை நனைந்ததைக் கருப்பு பர்தாவுக்குள் உணர முடிந்தது அவளால்.


'குட்டிம்மா..கொஞ்சம் இருங்க..இதோ வீட்டுக்குப் போய்ரலாம்...அப்புறம் வயிறு முட்டக் குடிக்கலாம்..'


மீண்டும் போக்குவரத்து நெரிசல்..இன்னும் அரை மணி தாமதம்..வழியில் அத்தனை குழந்தைகளையும் இறக்கி விட்டு வீடு வருவதற்குள் குழந்தை தூங்கிப் போய்விட்டது பசி மயக்கத்தில்..


படியேறிக் கதவைத் திறக்கையில் நெஞ்சு வலித்தது.


மீண்டும் அழ ஆரம்பித்தது குழந்தை.


....பைகளை விசிறிவிட்டுக் கருப்பு பர்தவைக் கழற்றிவிட்டுக் குழந்தையை வாரியணைத்துப் பாலூட்ட முற்பட்டாள்....பால் கட்டிக் கொண்டுவிட என்ன முயன்றும் முடியாமல் போக...


அதுவரை தொண்டை வரையில் அடைபட்டிருந்த தாழ்கள் திறந்து துக்கம் பீரிட மடிந்து சரிந்து அழ ஆரம்பித்தாள் வந்தனா.
பத்து மாதம் சுமக்க வேண்டும்
தாய்மை விதி..
பாலூட்டி வளர்க்க வேண்டும்
தாய்மை விதி..
இது என்ன விதி?

Sunday, January 25, 2009

குடியரசு.....வல்லரசு


பிறப்பு
கல்வி
உழைப்பு
திருமணம்
இனப்பெருக்கு
பிள்ளை வளர்ப்பு
இறப்பு
-தனிமனிதப் பெருங்கவலை.

நதி நிலம்
சாதி மதம்
இனம் பணம்
மொழி மாநிலம்
முரண்பாடுகள்
வன்முறைகள்
-பொது வாழ்க்கைப் பெருந்தொல்லை.

ஈடேற்ற நேரமில்லா
இல்லத்தரசு.
குடியுரிமையே
கேள்விக்குறியாய்
குடியரசு.

மாற்றுக் கட்சிக்கு
மறுமொழி புகன்றே
மலைத்துக் களைக்கும்
மாநில அரசு.
நலம் பல நல்கவியலா
நடுவண் அரசு.

இதில்..
எங்கே
எப்போது
என்று
எப்படி
யார் காண முடியும்
வல்லரசு?!

என்றாலும்
இதுவும் க(ந)டந்து போம்
என்று
நம்பிக்கையுடன் நம்புவோம்!

குடியரசு தின வாழ்த்துகள்!

Saturday, January 24, 2009

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது

இது வலைப்பூவுக்குப் பூ தொடர்ந்து செல்லும் பட்டாம்பூச்சி விருது.
என் வலைப்பூவிற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்த திவ்யாவுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.


இவ்விருதினை நான் இவர்களுக்குக் கொடுக்க விரும்புகின்றேன்.


கிருத்திகா: இவரின் படைப்புகளில் உள்ள நேர்த்தி மற்றும் தனி அழகு என்னை மிகவும் கவர்ந்தது. கவிதை, கட்டுரை, புத்தக விமர்சனம், என்று பல தரப்பட்ட படைப்புகள் இவர் வலைப்பூவில் காணலாம். எல்லாமே அனுபவங்களை அழகாக வடித்துக் கொடுக்கும் படைப்புகள்.


ரத்னேஷ்: இவரின் வலைப்பூவில் இவர் அலசாத விஷயங்கள் மிகவும் குறைவு. அரசியல் முதல் இலக்கியம் வரை மிகவும் அனாயாசமாக இருக்கும் இவர் அலசல். எந்தவொரு கருத்தையும் தயங்காமல் முன்வைக்கும் இவரது பதிவுகள். அடிக்கடி பதிவிடும் இவரின் பதிவுகள் ஏனோ சமீபகாலமாகக் காணப்படவில்லை. வேலைப் பளு அதிகம் என்று நினைக்கிறேன்.


ராமலக்ஷ்மி: சமீபகாலமாகத்தான் இவரது பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன். இவரது கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவ்வப்போதைய செய்திகளைக் கவிதை வடிவில் தரும் இவர் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்.(இதில் இவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.) சிறுகதைகளில் தவழும் எதார்த்தமும், வட்டார வழக்கும் மிகவும் சிறப்பாக இருக்கும்.


திகழ்மிளிர்: இவரின் வலைப்பூவின் அமைப்பே மிகச் சிறப்பாக இருக்கும். இவரது கவிதைகளில் மிளிரும் தனியழகு கற்பனைச்செறிவு மற்றும் சுருக்கமான அழகான சொல்லடுக்கு எனக்கு மிகவும் பிடித்தவை.


என். கணேசன்: ஆனந்த விகடன் மற்றும் பல பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுதியுள்ளவர். இவரது கட்டுரைகள் படித்ததும் ஒரு புத்துணர்ச்சி பூத்துக் கிளம்பும். சிறுசிறு கதைகள் மூலம் இவர் கூறும் நல்ல கருத்துகளில் கற்றுக் கொள்ளும்படியான விஷயங்கள் ஏராளம் இருக்கும்.


இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:


1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

Wednesday, January 14, 2009

பூவின் சிதறல்

மரணம் என்பது வாழ்க்கையின் முடிவுதான்..ஒவ்வொருவரும் அதை நோக்கி அடுத்த அடி எடுத்து வைத்தபடி இருக்க எங்கோ யாருக்கோ அது நேர்கின்ற போது பத்தோடு பதினொன்று ஆகி நிற்க, நம்முடன் வாழ்ந்த நம்மில் ஒருவராய் வாழ்ந்த நண்பருக்குத் திடீரென்று நேர்கையில் அந்த இழப்பு, அதன் பாதிப்பு இவ்வளவுதான் என்று அளவுகோலிட முடியாத அளவுக்கு அமைந்து விடுகிறது.

அப்படிப்பட்ட ஒரு துயரத்தில்தான் ரியாத்வாழ் தமிழ் நெஞ்சங்கள் அநேகர் இருக்கிறோம். ஜனவரி 6 அன்று பொழுது விடிகையில் யாருமே நினைத்துப் பார்க்கவில்லை திரு. திருமாவளவனின் (35 வயது) முடிவைக் கூவி இப்படி விடியுமென்று. அவரின் மரணச் செய்தி எழுதிப் புலர்ந்த பொழுது அவரது மனைவி, ஒன்பது மற்றும் நான்கு வயது மகள்களுடன் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என்று அனைவரையும் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.

நிமிடத்தில் புரட்டிப் போடப்பட்டது அவர் குடும்பத்தினர் வாழ்க்கை. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரது மனைவி, மக்கள் மற்றும் சுற்றம் அனைத்து பலங்களும் சீக்கிரம் பெறட்டும்.

விதியின் வலிய கைகள்
எழுதிச் செல்லும் மரணக்கதை..
மீண்டும் ஒரு முறை
தன் சரிதம் எழுதி நிற்க

ஊழிக்காற்றின் உல்லாசத்தில்
உருக்குலைந்த பூவொன்று
வெடித்துச் சிதற

அசையாத வேரும்
ஆட்டம் கண்டிட
கிளையும் இலையும்
தளர்ந்து சோர்ந்திட

பூவது உதிர்ந்தாலும்
காற்றில் கலந்துவிட்ட
அதன் வாசமது
வேருக்குச்
சுவாசமாய் அமைந்திட
வேரின் அடித்தளம்
பற்றியே காத்திட

கிளையும் இலையும்
துளிர்த்துத் தழைத்திட
நம்பிக்கைப் பூவாய்
மீண்டும் பூத்திட
வாழ்த்துகளுடன்
என் அஞ்சலிகள்
சமர்ப்பணம்.