Monday, September 29, 2014

நான் அறிந்த சிலம்பு - 47

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
 
கடற்கரைப் பயணம்
 
 
பகைவரை அச்சப்படவைக்கும்
புகார் நகரதனில்
முழுமதி நாள் அன்று
வைகறையில் கடலாடிக் களிக்கவென
இடம்பிடிக்க வேண்டுமென்று
திரள்திரளாகச் சென்றது மக்கள்கூட்டம்.
 
 
அவர்களைப் போலவே,
தாழை புன்னை
மடல் அவிழ்க்கும் சோலைகளில்
தானும் கடல் விளையாட்டைக்
காண வேண்டுமென்று
கோவலனிடம் வேண்டினள் மாதவி.
 
 
தாமரைப் பொய்கைகளில்
துயிலாழ்ந்திருந்த பறவைகள் விழித்து
வாய் விட்டுக் கூவ,
பொழுது புலர்ந்தது என்று
கோழிச்சேவல்கள் கூவி அறிவிக்க,
சங்குகள் முழங்கிட
விழித்தெழுந்த விடிவெள்ளி
பூமி பரவிய இருளை நீக்கியது.
 
 
அவ்வைகறைப் பொழுதினில்
மாலையணிந்த மார்பன் கோவலனோடு
பேரணிகலன்கள் அணிந்தவளாய்ப்
புறப்பட்டனள் மாதவி கடலாடுதற்கென்று.
 
 
மேகம் போன்ற
வன்கையாளன் கோவலன்
அத்திரி வாகனம் அதனிலும்,
மான்விழி மாதவி
மூடுவண்டி அதனிலும்
ஏறிச் சென்றனர்
கடற்கரைப் பயணமாய்.

 
(அத்திரி - கோவேறுக்கழுதை)
 
 
கோடி மதிப்புப்பெறும்
விற்பனைக் குவியல்களாய்ப் பண்டங்கள்
காணப்பெற்ற வணிகர் வீதியையும்,
மாடங்கள் நிறைந்த
பெரிய கடை வீதிகளையும்,
 

மலர்கள் அணிசெய்த
மாணிக்க விளக்குகளை ஏற்றி,
மலர்களையும் அருகம்புல்லையும்
விளக்குகள் மீது தூவி வழிபட்டிருந்து,
வீதிகளின் இரு புறங்களிலும்
தமது அணிகலன்கள் ஒலித்திட,
திரிந்து சென்ற மங்கலத் தாசியர்
கூட்டத்தைக் கடந்தே சென்றனர்
கோவலனும் மாதவியும்.
 
 
திருமகள் குடிகொண்டிருக்கும்
பட்டினப்பாக்கம் கடந்து,
கடல் வளப் பெருமையால்
சிறந்து விளங்கும்
மருவூர்ப்பாக்கம் கடந்து சென்றனர்
தம் பயணத்தடங்களில்.
 
 
பொருள் ஈட்டவென
மரக்கலங்கள் செலுத்திக்
கடல்கடந்து புலம்பெயர்ந்து வந்த
வணிகர் கூட்டம் தங்கியிருக்கும்
கூல வீதிதனில்,
'இது இன்ன பொருள்' என்று
எழுதி அறிவிக்கப்பட்டிருந்த
மாலைச்சேரிப் பகுதிகளையும்
கடந்தே சென்று
நெய்தல் நிலக் கடற்கரைச் சோலையை
அடைந்திட்டனர்.
 
வல்லமை: 19.11.12 அன்று வெளிவந்தது

Friday, September 26, 2014

நான் அறிந்த சிலம்பு - 46

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
 
மாதவியின் அணிகலன்கள்
 
 
முன்கை அணிகள்
 
 
முகப்பில் கட்டிய மாணிக்கக்கற்களுடன்
வயிரங்களும் பதித்துவைத்த
சித்திர வேலைப்பாடமைந்த சூடகம்,
செம்பொன்வளை,
நவமணி வளையாம் பரியகம்
சங்கு வளையாம் வால்வளை
பலவகைப் பவழவளை
ஆகிய அணிகலன்களை
மெல்லிய மயிர்கள் காணப்பெறும்
தன் முன்கைகளில்
பொருத்தமுறவே
மாதவி அணிந்திட்டாள்.
 
 
கைவிரல் அணிகள்
 
 
வாளைமீனின் பிளந்த வாயை ஒத்த
வாயகன்ற முடக்கு வணக்குறு மோதிரம்
செந்நிற ஒளிவீசும் மாணிக்கம் பதித்த
கிளர்மணி மோதிரம்,
சுற்றிலும் ஒளி உமிழும்
வயிரம் சூழ்ந்த மரகதத் தாள்செறி மோதிரம்,
இவ்வகை மோதிரங்களைக்
காந்தள் மலர் போன்ற
தன் விரல்கள் முழுதும் மறையும்படி
மாதவி அணிந்திருந்தாள்.
 
 
கழுத்து அணிகள்
 
 
வீரச்சங்கிலி
நுண்ணியத் தொடர் சங்கிலி
பூணப்படும் சரடு பூண்ஞாண்
புனைவேலைகள் அமைந்த
சவடி, சரப்பளி இவற்றினோடு
முத்தாரம் அதுவும்
அழகிய கழுத்தினில் அணிந்திருந்தாள்.
 
 
பிடரி அணி
 
 
முற்கூறிய சங்கிலிகள் முழுவதையும்
ஒன்றாய் இணைத்துப் பூட்டிய
கொக்கி ஒன்றில் இருந்து
பின்புறமாகச் சரிந்து தொங்கிய,
அழகிய தூயமணிகளால் செய்யப்பட்ட
கோவை அவள் பிடரி மறைத்துக் கிடந்தது.
 
 
காது அணிகள்
 
 
இந்திர நீலக்கற்களுடன்
இடையே பெரிய வயிரங்கள் பதித்த
குதம்பை எனும் அணியை அழகுறத்
தன் இரு காதுகளிலும் அணிந்திருந்தாள்.
 
 
கூந்தல் அணிகள்
 
 
சிறந்த வேலைப்பாடு அமைந்த
செழுநீர், வலம்புரிச்சங்கு,
தொய்யகம், புல்லகம் இவற்றைத்
 
தன் கருத்து நீண்ட கூந்தலில்
அழகுற அணிந்திருந்தாள்.
 
 
அணிகள் பலவும் கொண்டு
அழகுக்கு அணிசேர்த்த மாதவி,
கோவலனுடன் ஊடியும் கூடியும்
மகிழ்வதற்கென்றே அமைக்கப்பட்டிருந்த
பள்ளியறையில் இன்புற வீற்றிருந்தாள்.
 
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 91 -110
 
வல்லமை: 12.11.12 அன்று வெளிவந்தது
 

Thursday, September 25, 2014

நான் அறிந்த சிலம்பு - 45

புகாரக்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
 
விழா முடிந்தபின் மாதவி அலங்காரக்கோலம் பூண்டு கோவலனுடன் கூடியும் ஊடியும் இருத்தல்
 
 
விண்ணவரும் வந்திருந்து
கண்டு களித்திருந்த
இந்திரவிழாவும்
மாதவியின் ஆடலும் கோலமும்
இனிதே நிறைவேறின.
 
 
பலரும் கண்டு மகிழ்ந்திருந்த
தன் ஆடல் அழகை, கோலத்தை
தொடர்ந்தே இராமல்
சடுதியில் முடித்தனள் மாதவி.
 

இதன் காரணமாய்
ஊடல் கொண்டவன் போல்
கோவலன் அவளுடன் பேசுவது தவிர்த்தனன்.
 
 
அவனை மகிழ்வித்து
ஊடல் நீங்க வேண்டி
அலங்காரக் கோலங்கள் பலவும்
புனையலானாள் மாதவி.
 
 
மாதவி நீராடிய முறை
 
 
பத்துவகை மருந்து மணப்பொருட்கள்
ஐந்து வகை நறுமணப் பொருட்கள்
முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப்பொருட்கள்
இவையனைத்தும் ஊறிய
நறுமண நன்னீரிலே
வாசநெய் பூசிய
மணம் கமழும் கரிய கூந்தல்
நலமே பெற்றிட மஞ்சள் நீராடினாள்.
 
 
கூந்தலுக்குக் கத்தூரி
 
நீராடிய பின்
மண அகிற்புகையால் கூந்தல் உலர்த்தி
ஐந்து பகுதியாய் அதைப் பிரித்துக்
கொழுவிய கத்தூரிக் குழம்பது ஊட்டினாள்.
 
 
கால்விரல் அணிகள்
 
 
செம்பஞ்சுக் குழம்பு பூசிய
அழகிய சிவந்த சிறிய அடிகளில்
நன்மை பொருந்திய மென் விரல்களில்
காலாழி, மகரவாய் மோதிரம், பீலி
அணிந்திட்டாள்.
 
 
பாதத்துக்கான அணிகள்
 
 
காலுக்குப் பொருத்தமான
பரியகம், நூபுரம், பாடகம்,
சதங்கை, அரியகம்
முதலான
அணிகலன்களை அணிந்திட்டாள்.
 
 
தொடை அணி
 
திரள்தொடைப் பகுதியில்
குறங்குசெறி எனும்
அணிகலன் அணிந்திட்டாள்.
 
 
இடை அணி
 
 
அளவில் பெரிய
முத்துகள் முப்பத்தியிரண்டால்
கோவையாகத் தொடுக்கப்பட்ட
விரிசிகை எனும் அணியைத்
தன் இடையை அலங்கரித்த
பூவேலைப்பாடு செய்த
நீலப்பட்டாடையின் மீது
மேகலையென அணிந்திட்டாள்.
 
 
தோள் அணி
 
 
கண்டவர் காமமுற வைக்கும்
அழகிய கண்டிகை எனும்
தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த
முத்துவளையைத்
தம் தோளுக்கு அணியாய்
அணிந்திட்டாள்.
 
 
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 74 - 90
 
வல்லமை: 05.11.12 அன்று வெளிவந்தது.

Friday, July 12, 2013

வார்த்தைகள்

 
வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
என்னைச் சுற்றிலும் வார்த்தைகள்.
 
 
என்னில் அவை வளர்கின்றன
இலைகளைப் போலவே.
 
 
உள்ளிருந்து
மெல்ல மெல்ல வளரும்
அந்த வார்த்தைகள்
வளர்வது நிறுத்தும்
என்று
எனக்குத் தோன்றவில்லை.
 
 
ஆனால்,
எனக்கு நானே
சொல்லிக் கொள்கிறேன்.
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
அவற்றிடம் சற்றுக்
கவனத்துடனும்
எச்சரிக்கையுடனும்
இருந்தாக வேண்டும்.
 
 
அவை...
 
 
பலதரப்பட்ட
விஷயங்களாக
இருக்கக்கூடும்.
 

ஓடுகின்ற கால்கள்
சற்றே இளைப்பாறும்
அகன்ற வெளிகளாய்
இருக்கக்கூடும்.
 
 
உறைந்து நிற்கும்
கடல் அலைகளாய்க்
காட்சி தரக்கூடும்.

 
எரிசூட்டுக் காற்றின்
மிகப்பெரிய வீச்சாய்
வெடிக்கக்கூடும்.
 
 
உன்னுடைய
உயிர்த்தோழமையின் கழுத்தை
மனமுவந்து அறுக்கும்
கத்தியாய் இருக்கக்கூடும்.
 
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
ஆனாலும் அவை
மரத்தில் வளர்கின்ற
இலைகள் போல
என்மீது வளர்கின்றன.
 
 
மௌனத்திலிருந்தும்
உள்ளே எங்கேயோ
இனம்புரியாத ஆழத்திலிருந்தும்
முளைத்துக் கிளைத்து வளர்வதை
அவை
நிறுத்துவதாகத் தோன்றவில்லை.
 
 
ஆங்கில மூலம்: Words, Kamala Das
 
அதீதம் இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 44

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 52 - 73

மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
(அடுத்த ஆறு வகைகள்)
 
 
6. குடைக்கூத்து
 
 
சூரனின் படைவீரர்களாகிய அசுரர்
தாம் போர் செய்யவென
எடுத்த படைக்கலங்களைக்
கீழே போட்டுவிட்டுப்
போர் புரிய இயலவில்லையே என
வருத்தமுற்ற தருணத்தில்,
குடையை அவர் முன் சாய்த்து
முருகப்பெருமான் ஆடிய
குடைக்கூத்து இது பாராய்!
 
 
7. குடக் கூத்து
 
 
வாணன் தன் மகள் உழை காரணமாகக்
காமன் மகன் அநிருத்தனைச்
சிறைப் பிடிக்க,
சிறைமீட்டும் பொருட்டு,
வாணாசுரனது 'சோ' எனும்
பெருநகர வீதியில்,
நீள் நிலத்தைத்
தன் பாதங்களில் தாவியளந்த மாயவன்
மண்ணாலும் உலோகங்களாலும் செய்த
குடங்கள் கொண்டு ஆடிய
குடக்கூத்து இது பாராய்!
 
 
8. பேடி ஆடல்
 
 
அநிருத்தனை மீட்கவென
'சோ' நகர வீதிகளில்
தந்தையவன் காமன்
தன் ஆண்தன்மையினின்று மாறுபட்டுப்
பெண்கோலம் புனைந்து ஆடிய
பேடி ஆடல் இது பாராய்!
 
 
 
9. மரக்கால் கூத்து
 
 
 
கொதிக்கின்ற சினம் கொண்ட
அசுரர்கள் தமது வஞ்சத்தால்
பாம்பு தேள் பூரான் உருக்கொண்டு
போரிட்ட தருணமதில்
அவர்தம் கொடுஞ்செயல் பொறுக்காத
மாயவள் துர்க்கை ஆடிய
மரக்கால் கூத்து இது பாராய்!
 
 
10. பாவைக் கூத்து
 
 
சினந்து போர்க்கோலம் பூண்ட அசுரர்கள்
காமத்தின் வயப்பட்டு,
போரினை மறக்கச் செய்ய
செந்நிறத் திருமகள்
கொல்லிப்பாவை வடிவம் கொண்டு ஆடிய
பாவைக் கூத்து இது பாராய்!
 
 
11. கடையம்

 
வாணர் நகராகிய சோ நகரத்தின்
வடக்கு வாயில் கண்ணுள்ள
வயலிடத்தே நின்று
உழத்தியர் வடிவம் கொண்டு
இந்திராணி ஆடிய
கடையக் கூத்து இது பாராய்!
 
 
 
அன்றொரு நாள்
தாது அவிழ்ப் பூம்பொழிலில்
நான் கூறிய உருப்பசி மரபில் வந்த
மாதவி இவள் நடனம் பாராய்!
அனைத்து தெய்வங்கள்
ஆடிய கூத்தையும்
தக்க மரபுகளுடன்
கூத்தநூல் முறைப்படி ஆடிய
அழகு பாராய்!

 
இங்ஙனம்
நிகழ்வுகளைக் காதலிக்கு விவரித்த
விஞ்சையன், அவன் காதலியுடன்
மண்ணுலக மக்கள் அறிந்திராதபடி
விண்ணுலகத் தேவர்களும் வந்திருந்து
இந்திர விழா நிகழ்வுகளைக்
கண்டுதான் களித்திருந்தனர்.
 
வல்லமை 29.10.12 இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 43

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 28 - 30
 
சிலம்பின் வரிகள் இங்கே: 31 - 51
 
விஞ்சை வீரன் தன் காதலியுடன் வந்து விழாக் காணுதல்
 
 
உச்சி உயர்ந்த இமயமலையையும்
வளமையான நீருடைய கங்கையாற்றையும்
அழகு பொருந்திய உச்சயினி நகரத்தையும்
விந்திய மலை சூழ்ந்த காட்டையும்
வேங்கடம் என்னும் மலையையும்
நிலம் கொள்ளாத அளவு
பெருவிளைச்சல் காணும்
காவிரி பாயும் சோழநாட்டினையும்
தன் காதலிக்குக் காட்டிய பின்
இதழ்விரி பூக்கள் நிறைந்த
தோட்டங்களை உடைய
புகார்நகரம் அடைந்தனன்
விஞ்சையன்.
 
 
இந்திரனைத் தொழுது,
எல்லா இடங்களையும்
முறைமைப்படியே
அவளுக்குக் காட்டியபின்
வளம் பொருந்திய புகார் நகர்
இந்திரவிழாவினையும்
மாதவியின் ஆடலையும்
காணலுற்றனர்.
 
 
மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
(முதல் ஐந்து வகைகள்)

 
திருமாலைப் புகழும் தேவபாணியும்
வருணப்பூதர் நால்வரைப் புகழும்
நால்வகைத் தேவபாணியும்
பல வகை உயிர்களும் தம் ஒளியால்
நன்மை பெறும் தன்மையுடைய
வானூர்ந்து செல்லும்
நிலவைப் பாடும் தேவபாணியும்
ஆகிய
இசைப்பாடல்களைப் பாடிய பின்னர்
அவதாளம் நீங்கிய
நல் தாளத்தின் இயல்பு பொருந்த
மாதவி புரிந்த நடன வகைகள்
ஒவ்வொன்றையும் தன் காதலிக்குக்
காட்டி மகிழ்ந்தனன்.
 
 
1. கொடுகொட்டி
 
 
பாரதி(பைரவி) ஆடியமையால்
பாரதியரங்கம் எனப்பட்ட சுடுகாட்டில்...
திரிபுரத்தையும் எரியச் செய்ய
தேவர்கள் வேண்டியதால்,
தீயினைத் தலையாய் உடைய
திருமாலாகிய அம்பினை
ஏவிய சிவன்
திரிபுரத்தைச் சாம்பலாக்கினன்.
 
அத்தருணத்தில்
உமையவளைத் தன் ஒருபாகமாகக் கொண்டு
தேவர் யாவரினும் சிறந்த இறைவன்
வெற்றிக் களியில் கைகொட்டி ஆடிய
கொடுகொட்டி ஆடல்
இது பாராய்!
 
 
2. பாண்டரங்கம்
 
 
தன் தேரின் முன்
பாகன் என நின்றிட்ட
நான்முகன் காணும்படி
பாரதி வடிவம் பூண்டு
திருநீறு அணிந்து
சிவபெருமான் ஆடிய
பாண்டரங்கக் கூத்து
இது பாராய்!
 
 
3. அல்லியம்
 
 
கஞ்சனின் வஞ்சனை
வெல்ல நினைத்து
அவன் ஏவி அனுப்பிய
யானையின் கொம்பை ஒடிப்பதற்காக
அஞ்சன வண்ணன் நின்றாடிய
அல்லியக் கூத்து
இது பாராய்!
 
 
4. மல்லாடல்
 
 
கஞ்சன் அவன் ஏவிய
அசுரர்களை வெல்ல
திருமால் ஆடிய
மல்லாடல் எனும் கூத்து
இது பாராய்!
 
 
5. துடிக் கூத்து
 
 
கருமையான கடலது நடுவே
நீர் அலைகளே அரங்கமெனக் கொண்டு
தன்னை எதிர்த்து முன்நின்ற
வஞ்சச் சூரனை
எதிர்த்துக் கொன்ற முருகன்
துடி கொட்டி ஆடிய
துடிக் கூத்து
இது பாராய்!
 
வல்லமை 22.10.12 இதழில் வெளிவந்தது.

Sunday, May 12, 2013

நான் அறிந்த சிலம்பு - 42

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 1- 27


காமக் கடவுளுக்கு விஞ்சை வீரன் விழா எடுத்தல்

பெரிய வெள்ளிமலையில் அமைந்திட்ட
அகன்ற பெரிய வித்தியாதரர் நகரினிலே
தேன் ஒழுகும் மலர்கள் செறிந்த
பூம்பொழில் ஒன்று.

ஆங்கே
நீண்ட கரிய கயல்களை ஒத்த
கயல்விழிக் காதலியோடு இணைந்து
விஞ்சை வீரன் ஒருவன்
காம தேவன் அவனுக்கு
விருந்திட்டே விழாக் கொண்டாடினன்.

இந்திர விழா பற்றியும், புகார்க் காட்சிகள் பற்றியும் விஞ்சை வீரன் தன் காதலிக்கு உரைத்தல்

காமவிருந்து முடியும் தருணம்
தன் காதலியிடன்
உரைத்தனன் இங்ஙனம்.

வடபுலத்தில் உறையும் நாம்
காமவேள் விழாவது கொண்டாடி
முடிக்கும் நாள் இன்று.

இதே நாள்
தென்திசையதனில் வளம்கொழிக்கும்
புகார் நகர் தன்னில்
இந்திர விழாவினுக்கென்று
கால் கோள் கொடியேற்றித் தொடங்கும்
முதல் நாள்.

விழாக்கோலம் பூண்டிருக்கும்
புகார் தன்னில்
காணும் காட்சிகள்தான்
என்னென்னே!!.
நாளங்காடிக் காட்சிகள்


மிக்க வேகமுடன்
நெருங்கி வந்து எதிர்த்து நின்ற
அசுரர் பெருங்கூட்டம்
தோற்றோடிப் போனது..
இந்திரன் நகரைக் காவல்புரிந்த
புலியின் வலிமையுடைய
வீரக்கழல் அணிந்த
முசுகுந்தன் அவனிடம்.
.
எனினும்
வஞ்சனை மிகுதியால்
அசுரர் கூட்டம்.
போகிற போக்கில்
ஏவியே சென்றது
முசுகுந்தன் மீது
இருள்கணை ஒன்றினை.

முசுகுந்தன் ஏவலுக்காய்
இந்திரன்விட்டுச்சென்ற
காவல் பூதம்
வஞ்சக இருளை நீக்கியது.

என்றென்றும் முசுகுந்தன்
மெய்க்காவலாகி நிற்கவென்று
இந்திரன் இட்ட கட்டளைப்படி
முசுகுந்தன் அவனுடன்
புகார் நகர் நாளங்காடி தங்கியே
பலிபெற்று வருகிறது.
காவல் பூதமது.
.

இத்தகைய சிறப்புப் பொருந்திய
நாளங்காடிக் காட்சிகளை
நாம் காண்போம்.

ஐவகைமன்றக் காட்சிகள்

முன்பு அசுரரால் வந்த
இடரது போக்கியே
அமராவதி நகரைக் காத்தமையால்
மகிச்சியுற்ற இந்திரனால்
கைம்மாறாய் அளிக்கப்பட்டு
சோழ மரபினரால் கொண்டுவரப்பட்டு


என்றும் பொய்க்காமல் நிலைபெற்ற
தனித்தன்மையுடன் அழகுடன்
புகார்நகரில் இலங்குகின்றது
ஐவகை மன்றம்.
 
 
அம்மன்றத்தின் சிறப்பினைக்கண்டு
நாம் மகிழ்வோம்.

உருப்பசி /ஊர்வசி வழித்தோன்றலாகிய மாதவியின் ஆடல் காட்சிகள்

அன்றொரு நாள்
இந்திரன் அவையில்
அகத்தியரை வரவேற்க
நாரத முனிவன்
இசையின்பம் சிறக்கப்
பாடும் பாடலும்,
தோரிய மடந்தையர் பாடிய
வாரப் பாடலும்
ஆயிரம் கண்ணுடைய இந்திரன்
செவியை நிறைத்து நின்றிருக்க...

சயந்தன் நினைவில் மயங்கியபடி
நடனமாடிய உருப்பசியின்
குறை பொருந்திய நடன நாடகம்
இந்திரன் செவியை நிறைக்கவில்லை...


இதே காரணத்தால்
பிற வாத்திய இசைகளும்
தளர்ந்தேதான் போய் நிற்க..

அகத்தியர் தாமும்
சாபமிட்டார் இங்ஙனம்
வீணை மங்கலமிழப்பதாக.
இவள் மண்ணுலகில் பிறப்பாளாக

சாபமதன்படி உருப்பசி
மாதவியென்று பிறந்தனள்
கணிகையர் குலத்தில்.


உருப்பசி மாதவியாக....
அவ்வழித்தோன்றலில் வந்த
பாம்பு போன்ற அல்குல் உடையவள்
இன்னுமொரு மாதவி.

அவள் தம் சிறப்பு நடனக்காட்சிகளும்
நாம் காண்போம்.

சிவந்த இதழ்களும்
உடுக்கை போன்ற இடையும்
உடையவளே!


புகார்நகரில் பூசைகொள்ளும்
அமரர் தலைவன்
இந்திரனை நாமும் வணங்குவோம்..
என்றனன் தன் காதலியிடம்
அவ்விஞ்சை வீரன்.
 
வல்லமை 15.10.12 இதழில் வெளிவந்தது.