Friday, July 12, 2013

வார்த்தைகள்

 
வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
என்னைச் சுற்றிலும் வார்த்தைகள்.
 
 
என்னில் அவை வளர்கின்றன
இலைகளைப் போலவே.
 
 
உள்ளிருந்து
மெல்ல மெல்ல வளரும்
அந்த வார்த்தைகள்
வளர்வது நிறுத்தும்
என்று
எனக்குத் தோன்றவில்லை.
 
 
ஆனால்,
எனக்கு நானே
சொல்லிக் கொள்கிறேன்.
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
அவற்றிடம் சற்றுக்
கவனத்துடனும்
எச்சரிக்கையுடனும்
இருந்தாக வேண்டும்.
 
 
அவை...
 
 
பலதரப்பட்ட
விஷயங்களாக
இருக்கக்கூடும்.
 

ஓடுகின்ற கால்கள்
சற்றே இளைப்பாறும்
அகன்ற வெளிகளாய்
இருக்கக்கூடும்.
 
 
உறைந்து நிற்கும்
கடல் அலைகளாய்க்
காட்சி தரக்கூடும்.

 
எரிசூட்டுக் காற்றின்
மிகப்பெரிய வீச்சாய்
வெடிக்கக்கூடும்.
 
 
உன்னுடைய
உயிர்த்தோழமையின் கழுத்தை
மனமுவந்து அறுக்கும்
கத்தியாய் இருக்கக்கூடும்.
 
 
வார்த்தைகள் 
தொல்லை தருபவைதான்.
 
 
ஆனாலும் அவை
மரத்தில் வளர்கின்ற
இலைகள் போல
என்மீது வளர்கின்றன.
 
 
மௌனத்திலிருந்தும்
உள்ளே எங்கேயோ
இனம்புரியாத ஆழத்திலிருந்தும்
முளைத்துக் கிளைத்து வளர்வதை
அவை
நிறுத்துவதாகத் தோன்றவில்லை.
 
 
ஆங்கில மூலம்: Words, Kamala Das
 
அதீதம் இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 44

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 52 - 73

மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
(அடுத்த ஆறு வகைகள்)
 
 
6. குடைக்கூத்து
 
 
சூரனின் படைவீரர்களாகிய அசுரர்
தாம் போர் செய்யவென
எடுத்த படைக்கலங்களைக்
கீழே போட்டுவிட்டுப்
போர் புரிய இயலவில்லையே என
வருத்தமுற்ற தருணத்தில்,
குடையை அவர் முன் சாய்த்து
முருகப்பெருமான் ஆடிய
குடைக்கூத்து இது பாராய்!
 
 
7. குடக் கூத்து
 
 
வாணன் தன் மகள் உழை காரணமாகக்
காமன் மகன் அநிருத்தனைச்
சிறைப் பிடிக்க,
சிறைமீட்டும் பொருட்டு,
வாணாசுரனது 'சோ' எனும்
பெருநகர வீதியில்,
நீள் நிலத்தைத்
தன் பாதங்களில் தாவியளந்த மாயவன்
மண்ணாலும் உலோகங்களாலும் செய்த
குடங்கள் கொண்டு ஆடிய
குடக்கூத்து இது பாராய்!
 
 
8. பேடி ஆடல்
 
 
அநிருத்தனை மீட்கவென
'சோ' நகர வீதிகளில்
தந்தையவன் காமன்
தன் ஆண்தன்மையினின்று மாறுபட்டுப்
பெண்கோலம் புனைந்து ஆடிய
பேடி ஆடல் இது பாராய்!
 
 
 
9. மரக்கால் கூத்து
 
 
 
கொதிக்கின்ற சினம் கொண்ட
அசுரர்கள் தமது வஞ்சத்தால்
பாம்பு தேள் பூரான் உருக்கொண்டு
போரிட்ட தருணமதில்
அவர்தம் கொடுஞ்செயல் பொறுக்காத
மாயவள் துர்க்கை ஆடிய
மரக்கால் கூத்து இது பாராய்!
 
 
10. பாவைக் கூத்து
 
 
சினந்து போர்க்கோலம் பூண்ட அசுரர்கள்
காமத்தின் வயப்பட்டு,
போரினை மறக்கச் செய்ய
செந்நிறத் திருமகள்
கொல்லிப்பாவை வடிவம் கொண்டு ஆடிய
பாவைக் கூத்து இது பாராய்!
 
 
11. கடையம்

 
வாணர் நகராகிய சோ நகரத்தின்
வடக்கு வாயில் கண்ணுள்ள
வயலிடத்தே நின்று
உழத்தியர் வடிவம் கொண்டு
இந்திராணி ஆடிய
கடையக் கூத்து இது பாராய்!
 
 
 
அன்றொரு நாள்
தாது அவிழ்ப் பூம்பொழிலில்
நான் கூறிய உருப்பசி மரபில் வந்த
மாதவி இவள் நடனம் பாராய்!
அனைத்து தெய்வங்கள்
ஆடிய கூத்தையும்
தக்க மரபுகளுடன்
கூத்தநூல் முறைப்படி ஆடிய
அழகு பாராய்!

 
இங்ஙனம்
நிகழ்வுகளைக் காதலிக்கு விவரித்த
விஞ்சையன், அவன் காதலியுடன்
மண்ணுலக மக்கள் அறிந்திராதபடி
விண்ணுலகத் தேவர்களும் வந்திருந்து
இந்திர விழா நிகழ்வுகளைக்
கண்டுதான் களித்திருந்தனர்.
 
வல்லமை 29.10.12 இதழில் வெளிவந்தது.

நான் அறிந்த சிலம்பு - 43

புகார்க்காண்டம் - 06. கடல் ஆடு காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 28 - 30
 
சிலம்பின் வரிகள் இங்கே: 31 - 51
 
விஞ்சை வீரன் தன் காதலியுடன் வந்து விழாக் காணுதல்
 
 
உச்சி உயர்ந்த இமயமலையையும்
வளமையான நீருடைய கங்கையாற்றையும்
அழகு பொருந்திய உச்சயினி நகரத்தையும்
விந்திய மலை சூழ்ந்த காட்டையும்
வேங்கடம் என்னும் மலையையும்
நிலம் கொள்ளாத அளவு
பெருவிளைச்சல் காணும்
காவிரி பாயும் சோழநாட்டினையும்
தன் காதலிக்குக் காட்டிய பின்
இதழ்விரி பூக்கள் நிறைந்த
தோட்டங்களை உடைய
புகார்நகரம் அடைந்தனன்
விஞ்சையன்.
 
 
இந்திரனைத் தொழுது,
எல்லா இடங்களையும்
முறைமைப்படியே
அவளுக்குக் காட்டியபின்
வளம் பொருந்திய புகார் நகர்
இந்திரவிழாவினையும்
மாதவியின் ஆடலையும்
காணலுற்றனர்.
 
 
மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
(முதல் ஐந்து வகைகள்)

 
திருமாலைப் புகழும் தேவபாணியும்
வருணப்பூதர் நால்வரைப் புகழும்
நால்வகைத் தேவபாணியும்
பல வகை உயிர்களும் தம் ஒளியால்
நன்மை பெறும் தன்மையுடைய
வானூர்ந்து செல்லும்
நிலவைப் பாடும் தேவபாணியும்
ஆகிய
இசைப்பாடல்களைப் பாடிய பின்னர்
அவதாளம் நீங்கிய
நல் தாளத்தின் இயல்பு பொருந்த
மாதவி புரிந்த நடன வகைகள்
ஒவ்வொன்றையும் தன் காதலிக்குக்
காட்டி மகிழ்ந்தனன்.
 
 
1. கொடுகொட்டி
 
 
பாரதி(பைரவி) ஆடியமையால்
பாரதியரங்கம் எனப்பட்ட சுடுகாட்டில்...
திரிபுரத்தையும் எரியச் செய்ய
தேவர்கள் வேண்டியதால்,
தீயினைத் தலையாய் உடைய
திருமாலாகிய அம்பினை
ஏவிய சிவன்
திரிபுரத்தைச் சாம்பலாக்கினன்.
 
அத்தருணத்தில்
உமையவளைத் தன் ஒருபாகமாகக் கொண்டு
தேவர் யாவரினும் சிறந்த இறைவன்
வெற்றிக் களியில் கைகொட்டி ஆடிய
கொடுகொட்டி ஆடல்
இது பாராய்!
 
 
2. பாண்டரங்கம்
 
 
தன் தேரின் முன்
பாகன் என நின்றிட்ட
நான்முகன் காணும்படி
பாரதி வடிவம் பூண்டு
திருநீறு அணிந்து
சிவபெருமான் ஆடிய
பாண்டரங்கக் கூத்து
இது பாராய்!
 
 
3. அல்லியம்
 
 
கஞ்சனின் வஞ்சனை
வெல்ல நினைத்து
அவன் ஏவி அனுப்பிய
யானையின் கொம்பை ஒடிப்பதற்காக
அஞ்சன வண்ணன் நின்றாடிய
அல்லியக் கூத்து
இது பாராய்!
 
 
4. மல்லாடல்
 
 
கஞ்சன் அவன் ஏவிய
அசுரர்களை வெல்ல
திருமால் ஆடிய
மல்லாடல் எனும் கூத்து
இது பாராய்!
 
 
5. துடிக் கூத்து
 
 
கருமையான கடலது நடுவே
நீர் அலைகளே அரங்கமெனக் கொண்டு
தன்னை எதிர்த்து முன்நின்ற
வஞ்சச் சூரனை
எதிர்த்துக் கொன்ற முருகன்
துடி கொட்டி ஆடிய
துடிக் கூத்து
இது பாராய்!
 
வல்லமை 22.10.12 இதழில் வெளிவந்தது.