Tuesday, March 30, 2010

சரிக்குச் சரி

முள்ளானலும்
மலரானாலும்
சரி நிகர் சமானம்.
காதல் பாதையில்
மட்டுமே
சாத்தியமாகின்ற
விந்தை.

அடிகளானாலும்
முத்தங்களானாலும்
சரி நிகர் சமானம்.
காதல் போதையில்
மட்டுமே
சத்தியமாகின்ற
வித்தை.

Saturday, March 27, 2010

குறளின் குரல் - 2

அதிகாரம்: 55. செங்கோன்மை

குறள் எண்: 545

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.


இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

விளக்கம்:

ஆடம்பரம் ஏதுமில்லை.
நடுவுநிலைமை தவறுவதில்லை.
செங்கோல் நெறியில் வழுவில்லை.
இங்ஙனம் இயல்பாய்
ஆட்சி செய்யும்
மன்னன் மட்டும் இருந்துவிட்டால்
பருவமழை பொய்க்காது;
விளைபொருட்கள் குன்றாது.

அதிகாரம்: 59. ஒற்றாடல்

குறள் எண்: 585

கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று.


கடாஅ உருவொடு கண் அஞ்சாது, யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

விளக்கம்:

அடுத்தவர் ஐயுறாத
மாற்றுரு தரித்தவன்;
எவரேனும் அடையாளம்
அறிந்து கொண்டாலும்
அவர்முன் அஞ்சாநெஞ்சன்;
அகப்பட்டாலும்
துன்புறுத்தப்பட்டாலும்
அரசன் தவிர
வேறெவர்க்கும்
தம் ஒற்றுச் செய்தி
சொல்லாத வல்லவன் -
இவனே ஒற்றன்.

அதிகாரம்: 53. சுற்றந் தழால்

குறள் எண்: 523

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.


அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடு இன்றி நீர் நிறைந்தற்று.

விளக்கம்:

குளத்திற்குக் கரை போல்வர்
நம் வாழ்க்கைக்குச் சுற்றத்தார்.
அவரோடு மனங்கலந்து
வாழ்தல் வேண்டும்.
சுற்றம் இல்லா வாழ்வு
கரையில்லாத குளப்பரப்பில்
நிறைந்திருக்கும் நீர் போலப்
பயனற்றதொன்றாகும்.

அதிகாரம்: 71. குறிப்பறிதல்

குறள் எண்: 702

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.


ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தொடு ஒப்பக் கொளல்.

விளக்கம்:

ஒருவர் உள்ளத்து
நினைப்பதைச் சற்றும்
ஐயுறாத வகையில்
உணர்ந்து கொள்பவன்
தெய்வத்துக்குச் சமமாவான்;
சரிவரக் குறிப்பறியும்
இவ்வாற்றல்
தெய்வீக ஆற்றலாகும்.

அதிகாரம்: 87. பகைமாட்சி

குறள் எண்: 864

நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது.


நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

விளக்கம்:

நீங்காத சினத்தைக்
உடையவன்;
பிறரிடத்து
மறைக்க வேண்டிய
செய்திகளை
மறைக்கும்
மனவலிமை இல்லாதவன் -
இவ்விருவரின்
பகை வெல்வது
யார்க்கும் எளிது.

Wednesday, March 24, 2010

ஆ! சிரமம்! ஆசிரமம்!

ஆசிரமங்களில்
ஆசிகள் வழங்கும்
ஆதி பகவன்கள்
ஆண்டவா!

ஆண்டவனைத் தேடி
ஆசிரமம் ஓடி
ஆனந்தலாஹிரியில்
ஆடித் திளைத்து
ஆர்ப்பரிக்கும்
ஆயிரமாயிரம்
ஆண்கள் பெண்கள்..

ஆசை போதையில்
ஆசிரமம் தேடி
அசல் போதையில்
அந்நிய நாட்டவரும்
அமிழ்ந்து திளைக்க..

அலுப்புடன் வியர்வை
அனுதினம் சிந்தி
அன்றாடம்
அல்லலுற்றுப் பிழைக்கும்
அங்கமுத்து தங்கமுத்துவின்
ஆயிரம் கோடி வரிப்பணமும்
ஆசிரம அழகுக் கட்டடங்களின்
அலங்காரச் சுவர்களில்
அல்லவா இழைக்கப்பட்டுள்ளன?

ஆத்திரப்படுவதா?
ஆச்சரியப்படுவதா?
ஆயாசப்படுவதா?
ஆதங்கப்படுவதா?

ஆண்டவா!
ஆண்டவா!

Saturday, March 20, 2010

குறளின் குரல் - 1

1. அழிவி நவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

   அல்லல் உழப்பதாம் நட்பு.

(அதிகாரம்: 79. நட்பு; குறள் எண்: 787)

விளக்கம்:


நண்பர்க்கு அழிவு வரும்போது அவர்க்கு உதவி செய்து அவ்வழிவை நீக்கி, அவரை நிலைபெறச் செய்வது நல்ல நட்பு; நீக்க முடியாத, தவிர்க்க முடியாத அழிவாக இருப்பின்,தானும் அவரோடு துன்புற்று வருந்துவது நல்ல நட்பு.

2. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

    மாண்பயன் எய்தல் அரிது.

(அதிகாரம்: 61. மடியின்மை; குறள் எண்: 606)

விளக்கம்:

நாட்டையே ஆளுகின்ற சிறந்த தலைவனின் நட்பு இருந்த போதிலும், சோம்பேல் உடையவர்களுக்கு அதனால் யாதொன்றும் பயனில்லை.

சிறந்து உறுதுணையாக எந்த சக்தி அருகில் இருந்தபோதும், சோம்பல் என்ற ஒன்று நம்மை ஆட்படுத்திவிட்டால்,எந்தத் துணையாலும் யாதொரும் பயனுமில்லை. சில நேரங்களில் சோம்பல் வருவது அனைவர் வாழ்விலும் நடப்பதுதான். ஆனாலும் எல்லாப் பொழுதுகளிலும் சோம்பலுடன் இருந்தால், சில சமயம் அந்தத் துணைகளின் வெறுப்பையே கூடச் சம்பாதிக்க நேரும்.

3. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

    இகழ்வாரை நோவது எவன்.

(அதிகாரம்: 24. புகழ்; குறள் எண்: 237)
விளக்கம்:

தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காவோ?

ஒரு செயல் கைகூடி வராத சமயத்தில், தன் தவறு அல்லது இயலாமை என்று யாரும் ஒத்துக் கொள்வதில்லை. புகழ் பெற மாற்றுவழியும் யோசிப்பதில்லை. அச்செயலுக்காக இகழப்படும்போது பிறரை நொந்து கொள்வது மிகவும் இயல்பான ஒன்றுதான். ..இன்றளவும் இது தொடர்கிறதுதானே..
 
4.அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
   பேணாது அழுக்கறுப் பான்.

(அதிகாரம்:  17. அழுக்காறாமை; குறள் எண்: 163)

விளக்கம்:

பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்.

பிறரின் உடைமைகளைக் கண்டு பொறாமைப்படுவது தவறு என்ற கருத்துதான் பெரியோரால் எப்போதும் வலியுறுத்தப்படும். ஆனால் வள்ளுவத்தின் சிறப்பு எதையும் சற்றே விரிவாக ஆய்ந்து நோக்குவதுதானே...பிறரின் ஆற்றல், ஆக்கம் கண்டு பொறாமைப்படுவதுடன், பாராட்டாமல் இருப்பதும் தவறே, தனக்கே ஓர் இழப்பே... என்று இன்னுமொரு கோணத்தில் சுட்டிக் காட்டுகிறார்
 
5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
    புண்ணென்று உணரப் படும்.

(அதிகாரம்: 58. புகழ்; குறள் எண்: 575)

விளக்கம்:

கண்ணிற்கு அழகு தரும் ஆபரணம் கண்ணோட்டமே. அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது "புண்" என்றே சான்றோரால் கருதப்படும்.

இரக்க குணம் இல்லாதவர் வாழ்வு அர்த்தமற்ற ஒன்றாகும். இலக்கியம், திரைப்படம், நாடகம்..இவற்றிலுள்ள பாத்திரங்கள் ஏதோவோர் பாதிப்பை நம்முள் ஏற்படுத்துவதற்கு இந்தக் கண்ணோட்டம்தான் காரணம். இயல்பான வாழ்வில் மட்டும், ஏனோ இருக்க வேண்டிய கண்ணோட்டம் பல சமயங்களில் நம்மிடம் இருப்பதில்லை. கண்ணோட்டம் இல்லாத மனிதன் நிலையான வெற்றி பெறுவானா என்பது சந்தேகமே

Monday, March 15, 2010

நான் அறிந்த சிலம்பு (உரை பெறும் கட்டுரை) - பகுதி 5

உரை பெறும் கட்டுரை

அன்று முதல்
மழைவளம் இழந்து
வறுமையெய்தி
அம்மை நோயும்
தொழு நோயும்
பிணி பலவும்
பாண்டி நாட்டில் தொடர்ந்திருக்க...

இடர் தழைய விளைந்தனன்
கொற்கை வேந்தன்
வெற்றிவேல் செழியன்.

பத்தினி கண்ணகியைச்
சாந்தப்படுத்தவென்று
பலிக்களத்தில்
பொற்கொல்லர் ஆயிரம்
பலியிட்டனன்.
வேள்வி விழாச் செய்தனன்.

நங்கையவளும் சாந்தமுற
நாட்டில் நல்மழை பெய்தது;
நோயும் துன்பமும் நீங்கியது.

இது கேள்வியுற்ற
கொங்கு மன்னன் இளங்கோசர்
தம் நாட்டகத்து
நங்கைக்கு விழாவெடுத்து
நற்சாந்தி செய்திட
மழைவளம் என்றும்
பொய்க்காமல் நிலைத்திட்டது.

அதுகேட்ட
கடல்சூழ் இலங்கைவேந்தன்
கயவாகு அவனும்
பலிபீடம் நிறுவிப்பின்
கோவிலொன்றும் கட்டினான்.

துன்பம் அழித்து
இன்பவரம்
அள்ளித் தரும்
அழகு பத்தினிக்கு
ஆண்டுதோறும் ஆடித்திங்களில்

சுற்றம்சூழ விழாவெடுத்துச்
சீரும் சிறப்பும் செய்திருக்க
மாரியது பொய்க்காமல் பொழிந்து
வளம்பல பெருகிப்
பிழையாமல் விளையும்
விளைச்சல் நாடாயிற்று.

சோழன் பெருங்கிள்ளியும்
"வரமும் வளமும்
எதுவாயினும்
தப்பாமல் தரும்
இவள்தானொரு
பத்தினிக் கடவுள்" என்று
நித்தம் விழா எடுத்துச்
சிறப்பித்து நின்றனன்.

சிலம்பின் வரிகள்(உரை பெறும் கட்டுரை) இங்கே....

Sunday, March 14, 2010

குறளின் குரல் ஏன் வசப்படுத்துகிறது?

நம் அனுபவம், உணர்வுகள், நம் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள் பெரும்பாலான நேரங்களில் பிறருக்கும் பொதுவாக அமைகிறது. ஒருவருக்கொருவர் பலவகைகளில் வேறுபட்டு நின்றாலும் சில உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை.

'நீயும் இதை உணர்ந்திருக்கிறாயா?'; 'நீயும் இதை அனுபவித்திருக்கிறாயா?' 'உனக்கும் இதே போல் நடந்திருக்கிறதா?' ஒத்த நிகழ்வுகள், உணர்வுகள் உள்ள நபர்களைப் பார்க்கும் போது, பழகும் போது ...சற்றே ஆழ்ந்து பார்க்கும் போது நம்மையறியாமல் சட்டென்று ஒரு நெருக்கம் வரும். சில புத்தகங்களைப் படிக்கும் போதும், 'அட..இது போல் எனக்கும் நடந்திருக்கிறதே..இதை நானும் உணர்ந்திருக்கிறேனே' என்ற உணர்வுப் பொறி தட்டும்.

அப்படிப் பல பொதுவான உணர்வுகள், நெறிகள்..இவற்றைத் தொகுத்து வழங்கும் திருக்குறள் அனைவரையும் கவர்வதற்கு இதுவே முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் விரவி நிற்பதுதான் மனித வாழ்க்கை. இம்மூன்றின் சார்த்தையும் வடிகட்டிக் கொடுக்கும் வழிகாட்டியாகும் இந்தத் திருநூல்.

வாழ்க்கை அகராதி என்று திருக்குறளைக் கூறலாம். வினாவுக்கு விடையாய், பிரச்சனைக்குத் தீர்வாய், ஐயம் தெளிவிக்கும் விளக்கமாய், வழிகாட்டியாய்...இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பார்த்தேயறியாத வள்ளுவரோடு ஒரு நெருக்கம் வருகிறதென்றால்,...அடடா...இதோ ஒரு கவிஞர்..என்னைப் போலவே நினைக்கிறாரே..எனக்காகவே நினைக்கிறாரே...என் உணர்வுகளைப் பதித்திருக்கிறாரே...என் வாழ்க்கையில் நடப்பதையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கிறாரே....எப்படி நடக்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறாரே..எவையெல்லாம் கூடாது என்று எச்சரிக்கிறாரே..என்று பரந்து விரிந்து கொண்டே போகிறது என் வியப்பு..ஈர்ப்பு.

இதே போல்தான் குறளின் குரல் அனைவரையும் வசப்படுத்தி வாழ்க்கையை வாசப்படுத்தி நிற்கிறது. மனோதத்துவம் அறிந்த புலவனின் வாழ்க்கை அனுபவத் தொகுப்பு எனபதாலேயே இதன் கருத்துகள் காலத்தை வென்று அனைவரையும் கவர்ந்து, ஈடு இணையின்றி இலக்கிய உலகத்தில் கோலோச்சி நிற்கிறது.

இந்தக் குரலின் ஆதிக்கத்தை அனுபவிக்கும் நாம் அனைவரும்தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்!