Monday, December 27, 2010

குறளின் குரல் - 17

பால்: பொருட்பால் இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 628

இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான்
றுன்ப முறுத லிலன்.


இன்பம் விழையான்; 'இடும்பை இயல்பு' என்பான்
துன்பம் உறுதல் இலன்.

விளக்கம்:

இன்பத்தை விரும்பமாட்டான். வாழ்க்கையில் துன்பம் வருவது இயல்பு எனப் புரிந்து கொள்வான். இத்தகையவனைத் துன்பங்கள் ஒருபோதும்
துன்பப்படுத்துவது இல்லை.

------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 29. கள்ளாமை
குறள் எண்: 289

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.


அளவு அல்ல செய்து, ஆங்கே வீவர், களவு அல்ல
மற்றைய தேற்றாதவர்.

விளக்கம்:

களவாடுவதைத் தவிரப் பிற நல்ல வழிகளைத் தெரிந்து கொள்ளாதவர், அளவில்லாத தீய செயல்களை, வரம்பு மீறிய செயல்களைச் செய்து
கெட்டழிவர்.

-------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
னருளாதான் செய்யு மறம்.


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்-தேரின்,
அருளாதான் செய்யும் அறம்.

விளக்கம்:

அருள் இல்லாதவன் அறச்செயலைச் செய்தல் கூடும். ஆனால் அச்செயலை ஆராய்ந்து பார்த்தால், அது தெளிந்த ஞானமில்லாதவன் உண்மைப் பொருளைக் கண்டறிந்ததற்கு ஒப்பாகும்.

-------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 59. ஒற்றாடல்
குறள் எண்: 581

ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் கண்.


ஒற்றும் உரை சான்ற நூலும், இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

விளக்கம்:

ஒற்று, புகழமைந்த அறநூல் - இவ்விரண்டையும் அரசன் தன் இரு கண்களெனக் கொள்ள வேண்டும். (புறக்கண்களால் காண முடியாதவற்றை
இவையிரண்டும் புலப்படுத்தும் என்பதால் இவற்றைக் கண் எனக் கொள்ள வேண்டும்.)

----------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 44. குற்றங்கடிதல்
குறள் எண்: 432

இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு.


இவறலும், மாண்பு இறந்த மானமும், மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

விளக்கம்:

செலவு செய்ய வேண்டிய இடத்திலும் செலவு செய்யாத கருமித்தனம், பெருமைதராத மான உணர்வு, தகுதியற்ற மகிழ்ச்சி - இவை எந்தவொரு
தலைவனுக்கும் கேடு தரும் குற்றங்களாகும்.
------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 30. வாய்மை
குறள் எண்: 295

மனத்தோடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ்செய் வாரிற் றலை.


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.

விளக்கம்:

ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்துமாறு வாய்மையுள்ள சொற்களையே பேசுவானேயானால், அவன் தவமும் தானமும் செய்பவர்களை விட மேலான சிறப்புடையவனாவான்.

Monday, December 20, 2010

காதல் கொள்!

நிகழ்வுகள்
கிடுக்கிப்பிடியில்
கழுத்தை நெரிக்கும்.

காதல் கொள்.
அது
கழுத்து நீவிக்
கவலைகள் சுத்திகரிக்கும்.

உணர்வுகள்
உடலெங்கும்
ஊசிகள் குத்தும்.

காதல் கொள்.
அது
ஊசிகள் பிடுங்கி
உபாதைகள் நீக்கும்.

குழப்பங்கள்
கடலில் அலையெனச்
சுழன்று தொடரும்.

காதல் கொள்.
அது
எதிர்நீச்சல்
கற்றுக் கொடுக்கும்.

வாழ்வில்
வெற்றி கொள்ள..
வாழ்வை
வெற்றி கொள்ள...

காதல் கொள்.

குறளின் குரல் - 16

பால்: பொருட்பால் இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 66. வினைத்தூய்மை
குறள் எண்: 660

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.


சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - பசு மண்
கலத்துள் நீர் பெய்து, இரீஇயற்று.

விளக்கம்:

தீய, வஞ்சகச் செயல்களால் ஒருவன் செல்வம் தேடிச் சேர்த்து, அதனை நீண்ட காலத்துக்குக் கட்டிக் காக்கலாம் என் எண்ணுதல், ஈரம் உலராத பச்சை மண் பானையில் தண்ணீரை ஊற்றிக் காத்து வைப்பது போன்றதாகும். பானையும் கரைந்து, நீரும் கசிந்து போவது போல, வஞ்சனையால் செல்வம் பெற்றவனும் அழிந்து, செல்வமும் அழிந்து போகும்.

------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள் எண்: 120

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தம்போற் செயின்.


வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம் போல் செயின்.

விளக்கம்:

வாணிகம் செய்யும் போது பிறர் பொருளையும் தம் பொருள் போலக் கருதி, அப்பொருளின் மதிப்பைக் கூட்டாமல், குறைக்காமல் அப்பொருளின் மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த நேர்மையும் நடுவுநிலைமையும் கருத்தில் கொண்டு செய்வதே சிறந்த வாணிகமாகும்.

----------------

பால்: காமத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 120. தனிப்படர் மிகுதி
குறள் எண்: 1196

ஒருதலையா னின்னாது காமங்காப் போல
விருதலை யானு மினிது.


ஒருதலையா னின்னாது, காமம்; காப் போல
இருதலையானும் இனிது.

விளக்கம்:

காவடியின் இருபக்கமும் சமமான சுமை இருப்பதே சுமப்பவர்க்கு இலகுவாகும், இனியதாகும். அது போல ஆண், பெண் இருவரிடத்தும் காதல் சமமாய் அமைந்திருப்பதே இனியதாகும். இருபக்கமும் காதல் சமமாக இல்லாது ஒருபக்கம் மட்டுமே காதல் இருக்குமென்றால் அது துன்பத்தில்தான் முடியும்.

--------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 45. பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்து தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.


பல்லார் பகை கொளலின் பத்து அடுத்து தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல்.

விளக்கம்:

துணையாக்கிக் கொள்ள வேண்டிய நல்லவர்களுடன் மனம் வேறுபட்டு, அவர் நட்பை விட்டு விடுதல், பலருடன் பகை கொள்வதைக் காட்டிலும் பத்து மடங்கு தீமையைத் தருவதாகும்.
--------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 50. இடன் அறிதல்
குறள் எண்: 498

சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்.


சிறு படையான் செல் இடம் சேரின், உறு படையான்
ஊக்கம் அழிந்து விடும்.

விளக்கம்:

சிறிய படையை உடையவன் தனக்குப் பாதுகாப்பு உடைய இடத்தில் நின்று போர் செய்தால், பெரிய படையுடைய அரசன் ஊக்கம் அழிந்து தோற்றுப் போவான். பெரிய படையானாலும், இடமறியாது சென்றால் தோற்க நேரிடும்.

---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 109

கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்.


கொன்றன்ன இன்னா செய்யினும் அவர் செய்த
ஒன்று நன்று உள்ள, கெடும்.

விளக்கம்:

முன்பு நமக்கு நல்ல உதவியைச் செய்த ஒருவர், பின்பு கொலை போன்ற ஒரு பாதகச் செயலைச் செய்து துன்பம் விளைவிக்க முற்பட்டாலும், அவர் முன்பு செய்த நன்மையை நினைத்தால் அத்துன்பம் தன்னால் நீங்கி விடும். கெட்டதை மறக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

Thursday, November 11, 2010

நான் அறிந்த சிலம்பு - பகுதி 8

புகார்க்காண்டம் - கோவலன் கண்ணகி திருமணச் செய்தி அறிவித்தல்


குணத்தில் சிறந்த
கோவலன் கண்ணகி
இருவர்தம் பெற்றோர் பெருமக்கள்
நல்லதொரு திருநாளில்
நங்கைக்கும் நாயகனுக்கும்
நல்மணம் செய்திட விழைந்தனர்.

யானை ஒன்றை அலங்கரித்து
அதன் அம்பாரிமீது
அணிமணிகள் பூண்ட
அம்மணிகளை
அமரச் செய்து
தாம் உறுதிசெய்த
திருமணத் திருநாளை
மாநகர மக்களுக்கு அறிவித்து
அழைத்து மகிழ்ந்தனர்.

கோவலன், கண்ணகி திருமணம்

மணவீடதனில்
முரசுகள் முழங்கின;
மத்தளங்கள் ஆர்ப்பரித்தன;
முறையாக எழுந்தன
சங்கின் ஒலியலைகள்.

அரசனவன்
நகர்வலம் வருகையில்
எழுகின்ற எண்ணற்ற
வெண்கொற்றக்குடைகள் போலவே
இம்மணவுலாவிலும்
எழுந்திட்டன மிகுதியாக....

இவ்வழகு மொத்தமும்
அளவின்றிச் சிறந்தெழ
புகார்நகரம் முழுவதும்
புனைந்திட்டது விழாக்கோலம்.
அதுவோர் மணவிழாக்காலம்.

மணமலர் மாலைகளால்
அலங்கரிக்கப்பட்ட
அழகிய உச்சியதனையும்
வயிரமணித் தூண்களையும்
கொண்டிருந்த மணப்பந்தலது
நீலநிறப் பட்டினாலானது.

வான் தவழ் நிலவது
ரோகிணியைச் சேர்ந்த நன்னாளதனில்
முதிய அந்தணன்
வேதநூல் முறையின்படி
சடங்குகள் செய்திட....

அருந்ததி விண்மீன்போன்ற
கற்புடைய கண்ணகியைக்
கோவலனாம் மணமகன்
திருமணம் புரிந்திட்டுத்
தீவலம் வந்த
திருக்காட்சியைக்
கண்டவர் கண்கள்தாம்
செய்திட்ட தவம் என்னே!

மங்கல வாழ்த்து மற்றும் மங்கல அமளி ஏற்றுதல்

தளிர்மேனியுடைய
மங்கைப் பருவத்து மகளிர்
நறுமணப் பொருட்களையும்
நல்மண மலர்த்தட்டுகளையும்
கைகளில் ஏந்தி
உரைவாயிலாகவும்
பாடல் வாயிலாகவும்
பாராட்டி உடன் நின்றனர்.

ஒதுங்கிய கடைக்கண்பார்வையுடைய
மடந்தைப் பருவத்து மகளிர்
சாந்து, நறும்புகை
மலர்மாலை ஏந்திநின்றனர்.

ஈன்ற குழந்தைக்காய்ப்
பால்சுரந்து தளர்ந்த
இளமுலை கொண்ட
அரிவைப் பருவத்து மகளிர்
இடித்த சுண்ணப்பொடி,
விளக்கு, அணிகலன்கள்,
முளைத்த பாலிகைக் குடங்கள்
தாங்கி வந்தனர்.

பூத்துநிற்கும் புன்முறுவல்கொண்ட
தெரிவைப் பருவத்து மகளிரும்

விரிமலர் சூடிய கூந்தலுடன்
அழகிய பொற்கொடி வடிவுடைய
பேரிளம் பெண்டிரும்
சூழ்ந்து நின்றிருக்க,

செம்முதுபெண்டிரும்
சேர்ந்து நின்று
வாழ்த்தி மகிழ்ந்தனர்
இங்ஙனமே..

கண்ணகியிவள்தாம்
காதலனைத் தன்
கண்ணிலும் மனத்திலும்
பிரியாது வாழ்க!

கோவலன் இவன் தான்
காதலி அவளை
அணைத்து இறுக்கிய
கைகள் நெகிழாமல்
இணைந்து வாழ்க!

மணமக்கள் இவர்தாம்
தீதின்றி நெடுங்காலம்
வாழிய வாழியவே!

இவ்வாறெல்லாம்
பொன்மொழிகளுடன்
பூமலர்கள் தூவி
வாழ்த்திசைத்தனர்.

அதன்பின்
அருந்ததி போன்ற
கற்புடைய கண்ணகியை
மங்கல அமளியில்
ஏற்றி மகிழ்ந்தனர்.

'கோபம் பொருந்திய
வேலது கொண்ட
சோழன் கரிகாலன் தன்
வெற்றிக்கு அறிகுறியாய்
இமயத்துக்கு இப்பக்கம்
வென்று பொறித்த
வாளதன் வரிகள் போன்ற
வரிகளுடைய புலிச்சின்னக் கொடியானது
பொன் கோட்டுடைய
இமயத்துக்கு அப்பாலும் சென்று
போரில் வென்று
புகழ்பரப்பி நிற்பானாக!'..

'மாறுபாடற்ற நீதியுடன்
தன் ஆணைச் சக்கரத்தை
உலகின் எந்தப்பக்கமும்
மன்னவனவன் உருட்டுவானாக!'

இங்ஙனம்
மணமக்கள் தம்மோடு
மன்னனையும் வாழ்த்தி நின்றனர்
ஐவகைப் பெண்டிர்.

(ஏழு வகைப் பெண்டிருள், குழந்தைத்தனம் மிகுதியால் பேதைப் பருவத்தினரும், நாணத்தின் மிகுதியால் கன்னிப்பருவத்து பெதும்பைப் பெண்டிரும் இக்குழுவில் இடம்பெறவில்லை என்பது வழக்கு.)

சிலம்பின் வரிகள் இங்கே..40 - 50

சிலம்பின் வரிகள் இங்கே..51 - 68

குறளின் குரல் - 15

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 242

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை.


நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க! பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை.

விளக்கம்:

நல்ல வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து, அருளைக் கைகொள்ள வேன்டும். பல வகையாக ஆராய்ந்து தெளிந்து தேடினாலும் அருள் என்னும் அறமே எப்போது துணை நிற்கும்.
----------------
 
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 95. மருந்து
குறள் எண்: 945

மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி
னூறுபா டில்லை வுயிர்க்கு.


மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்,
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

விளக்கம்:

தன் உடலின் இயல்பினையறிந்து, அந்த இயல்பு மாறாதவாறு தனக்குப் பொருத்தமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்டால், அவர்தம் உடல் நலம் சிறிதும் குன்றாது, மாறுபாடு இல்லாது, நோயற்று விளங்கும்.
------------------
 
பால்: காமத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 112
குறள் எண்: 1116

மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்.


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

விளக்கம்:

இவளுடைய முகம் நிலவை ஒத்திருப்பதால், வானிலுள்ள நிலவையும் பூமியில் உள்ள இவளையும் கண்ட விண்மீன்கள் வேறுபாடு அறிந்து கொள்ள முடியாமல் எது நிலவு என்று குழம்பிப்போய் விழிக்கின்றன.
----------------
 
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 23. ஈகை
குறள் எண்: 230

சாதலி னின்னாத தில்லை மினிததூஉ
மீத லியையாக் கடை.


சாதலின் இன்னாதது இல்லை இனிது, அதூஉம்
ஈதல் இயையாக் கடை.

விளக்கம்:

ஒருவருக்கு இறப்பைவிடத் துன்பமான நிலைமை வேறெதுவும் இல்லை. ஒருவருக்கு ஒரு பொருளை ஈய இயலாத நிலையென்பது இறப்பைவிடத் துன்பம் தருவதாகும். ஈதல் இயலாத நிலையை வருகையில் இறத்தல் கூட இனியதாகும்.
-----------------------
 
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 01. கடவுள் வாழ்த்து
குறள் எண்: 10

பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார்.


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.

விளக்கம்:

பிறவியாகிய பெருங்கடலில் நீந்த இறைவனின் திருவடிகளைச் சேர வேண்டும். அங்ஙனம் சேராதார், பிறவிப் பெருங்கடலில் நீந்த முடியாமல் அதனுள் மூழ்கிப் போய்விடுவர்.

குறளின் குரல் - 14

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 64. அமைச்சு
குறள் எண்: 637

செயற்கை யறிந்த கடைத்து முலகத்
தியற்கை யறிந்து செயல்.


செயற்கை அறிந்தக் கடைத்தும், உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

விளக்கம்:

ஆட்சி செய்யும் போது, முன்னர் ஒரு காலம் எழுதப்பட்ட நூல்களின் மூலம் சட்டதிட்டம் அறிந்து கொண்டாலும், அன்றைய காலகட்டத்திற்கேற்ப உலக நடைமுறையை அறிந்து கொண்டு, நிகழ்காலத்தின் இயற்கைக்கேற்பச் செயல்பட, செயல்படுத்த வேண்டும்.

ஆட்சி செய்வதற்கு மட்டுமல்லாமல் எந்தவொரு செயலைச் செய்வதற்கும் இக்குறள் பொருந்தும். செயலைச் செய்யும்போது, நூற்கல்வி மட்டும் துணைகொள்ளாமல், அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ற உலக நடைமுறையையும் மனதில் கொண்டு செயல்பட, செயல்படுத்த வேண்டும்.
 
------------
 
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 06. வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 58

பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு.


பெற்றாற்பெறின் பெறுவர், பெண்டிர், பெருஞ் சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

விளக்கம்:

நற்குணத்தில் சிறந்த தன்னை மனைவியாகப் பெற்ற கணவனும், அதே நற்பண்புகள் கொண்டவனாய் அமையப் பெற்று இணைந்து வாழ்ந்தால், இவ்வுலகில் மட்டுமல்லாது, தேவருலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவர் பெண்கள்.
------------------
 
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 49. காலமறிதல்
குறள் எண்: 486

ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.


ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

விளக்கம்:

போரிடும் இயல்புடைய ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகக் காலைப் பின்வாங்கித் தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்து பின் தாக்கும். அதே போல், வலிமையுடவர்கள் பகைவர்களை வெல்வதற்கான காலத்துக்காய்க் காத்திருந்து அக்காலம் வரும்போது தாக்குவர்.
-------------------

பால்: பொருட்பால்
இயல்: படையியல்
அதிகாரம்: 88. பகைத்திறம் தெரிதல்
குறள் எண்: 877

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.


நோவற்க, நொந்தது அறியார்க்கு, மேவற்க
மென்மை, பகைவரகத்து.

விளக்கம்:

தமக்கு ஒரு துன்பம் நேர்ந்தபோது, அதைப்பற்றி அறியாதவர்க்கு அத்துன்பத்தை வெளிப்படுத்தக்கூடாது. தம்முடைய மென்மையை, வலிமையின்மையைத் தம் பகைவர்களுக்கு வெளிப்படுத்தவும் கூடாது. இவ்வாறு நடந்து கொள்வதால் பகை தலையெடுக்காமல் தவிர்க்கலாம்.
---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 07. மக்கட்பேறு
குறள் எண்: 63

தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்.


தம் பொருள் என்ப தம் மக்கள்; அவர் பொருள்
தம் தம் வினையால் வரும்.

விளக்கம்:

தமக்கே உரிய செல்வம், சொத்து, உரிமை என்று போற்றி மதிக்கத்தக்கவை தாங்கள் பெற்ற பிள்ளைகள்தாம். மற்ற பொருள் எல்லாம் தத்தம் வினைப்பயனால், உழைப்பின் பயனால் வருவனவாகும்.

Monday, November 1, 2010

சீனா தம்பதியர்க்கு வாழ்த்துகள்!

வாழ்த்துகள்...



ஓய்வென்பது
அலுவலகப்பணிகளில் மட்டுமே...

இல்லறக் கடமைகள்
நின் குடும்பத்துகாய்
இன்னமும் உண்டு..

சமுதாயப் பணிகள்
வலையுலகின் பணிகள்
வளர்ந்து கொண்டே போகும் நன்று..

மணியான தம்பதியர்க்கு
மணிவிழா வாழ்த்துகள்!



உங்களை வாழ்த்தும்
உன்னத வேளையில்
உங்களின் ஆசி
வேண்டி நிற்கிறோம்!

Wednesday, October 27, 2010

மாற்றம்

மாற்றம் பலம்
நம்பிக்கை சேர்கையில்

மாற்றம் பலவீனம்
நம்பிக்கை சோர்கையில்

மாற்றம் மலைப்பு
வளரும் பிள்ளை பார்க்கையில்

மாற்றம் சலிப்பு
தோற்க நேர்கையில்

மாற்றம் பூரிப்பு
வெற்றிவாகை சூடுகையில்

மாற்றம் இயல்பு
மணவாழ்க்கை காண்கையில்

மாற்றம் கொடுமை
உறவொன்று மரிக்கையில்

மாற்றம்
செய்யாத தவறுக்கான
அனாவசிய தண்டனை
மொழியின் எழுத்துகள்
சிதையில் சிதைகையில்...

Sunday, October 24, 2010

தமிழ்மணம் மற்றும் அனைத்து வலைஞர்களுக்கும் ஓர் அவசர வேண்டுகோள் - Unicode மாற்றங்கள்...

ஒருங்குறியில் (Unicode)  ஏற்கனவே உள்ள கிரந்த /சமஸ்கிருத எழுத்துகள் அனைவரும் அறிந்தவையே. ஓரளவு பலராலும் உபயோகப்படுத்தக்கூடிய எழுத்துகளான ஜ, ஷ, ஸ போன்றவை தவிர இன்னும் நாம் பார்த்தே அறியாத சில  எழுத்துகளை  ஒருங்குறியில் சேர்க்கும் முயற்சி முழுமை பெற்று இன்னும் இரண்டு நாட்களில் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. சத்தமில்லாமல் ஓர் அநியாயம் நடக்கவிருக்கிறது...

திரு. சர்மாவின் இது குறித்த பரிந்துரை இந்தச் சுட்டியில் காணவும்....
http://www.filefactory.com/file/b3h848d/n/Extended_Tamil_proposal_-_Sharma_1_.pdf


இந்தச் சுட்டி சொடுக்கினால் இதற்கான ஆதாரங்கள் உங்களுக்குப் புரிய வரும்.


http://www.archive.org/stream/bhojacharitrama00sastgoog#page/n30/mode/1up

http://www.infitt.org/pressrelease/UTC_Gantha_Indic_Characters_draft1.pdf


http://www.infitt.org/pressrelease/UTC_Unicode_Grantha_Letters_SMP.pdf


இதைத் தடுத்து நிறுத்த நம்மால் ஆன முயற்சி..நம்முடைய

 எதிர்ப்பைத் தெரிவிப்பதுதான்...

மேலும் பல கிரந்த எழுத்துக்களைத் தமிழ் அட்டவணையில் இணைக்கக் கோரும் கோரிக்கையை,  ஏற்க மறுக்கக் கோரும் தமிழ் அறிஞர் / இந்திய அறிஞர் பட்டியலில் இடம் பெற கீழ்க்கண்ட முகவரிகளில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அஞ்சல் அனுப்பவும்.



unicore@unicode.org,


x3l2@unicode.org

 rick@unicode.org

ed@infitt.org

kaviarasan@yahoo.com

smaniam@pacific.net.sg



உடனடியாக அஞ்சல் அனுப்பவும்...

Friday, October 22, 2010

குறளின் குரல் - 13

பால்: பொருட்பால்

இயல்:அரசியல்
அதிகாரம்: 40. கல்வி
குறள் எண்: 397

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.


யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால்; என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு?


விளக்கம்:

கற்றவனுக்கு எந்த நாடாகும் தன் நாடாகும். எந்த ஊரும் தன் ஊராகும். இந்த உண்மையை நன்றாக அறிந்திருந்தும், இறக்கும் வரையில் கல்வி கற்காமல் காலம் கழிப்பது ஏன்?
-----------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 24. புகழ்
குறள் எண்: 235

நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா தரிது.


நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்,
வித்தகர்க்கு அல்லால் அரிது.


விளக்கம்:

சிலர்தம் துன்பம் புகழைத் தரும் துன்பமாகும். (எ-டு): பொது வாழ்க்கைக்காகத் தம் சொந்த வாழ்க்கைக்கையைத் தியாகம் செய்பவர்களின் துன்பம் கூட அவர்க்குப் புகழையே தரும்.

இது போன்ற சிலர் இறந்தாலும் என்றென்றும் தம் புகழால் வாழ்ந்து வருவர்.

புகழால் வரும் துன்பம், இறந்தும் வாழும் அமரத்துவம்..இவையிரண்டும் சிறந்த அறிவுத்திறம் உடையவர்க்கு மட்டுமே வாய்க்குமன்றிப் பிறர்க்கு வாய்க்காது.
-------------------
 
பால்: காமத்துப்பால்

இயல்: களவியல்
அதிகாரம்: 114. நாணுத் துறவுரைத்தல்
குறள் எண்: 1140

யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.


யாம் கண்ணின் காண நகுபு, அறிவு இல்லார்;
யாம் பட்ட தாம் பாடாவாறு.

விளக்கம்:

காதலன் பிரிவால் வருந்தும் தலைவியை, அப்பிரிவைக் காணாத தோழியர் கேலி செய்து பேசுகின்றனர்.

வருந்துகின்ற தலைவி கூறுகின்றாள்: நான் பிரிவால் படுகின்ற துன்பத்தை இவர்கள் அனுபவிக்காததால்தான், அறிவில்லாத இவர் நான் கண்ணால் காணும்படி என்னை எள்ளி நகையாடுகின்றனர்.
-------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 24. புலால் மறுத்தல்
குறள் எண்: 256

தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்.


தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும்
விலைபொருட்டால் ஊன் தருவார் இல்.


விளக்கம்:

உண்ணும் பொருட்டு உயிர்களை உலகத்தார் கொல்லாமல் இருப்பார்கள் எனில்,விலையின் பொருட்டு ஊனை விற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

Sunday, October 17, 2010

நான் அறிந்த சிலம்பு - பகுதி 7

கண்ணகியின் குலமும் நலமும்


இப்பெருஞ்சிறப்புடைப்
புகார் நகர் தன்னில்
மழைக்கு நிகராய்
மலைமலையாய்க்
கொடைதரும் கைகள்கொண்ட
மாபெரு வணிகனாம்
மாநாய்கன் குலத்தில்
பொற்கொடியாய்ப்
பொலிந்து திகழ்ந்தாள்
பன்னிரு வயதுப் பெண்ணொருத்தி.

அவள்
தாமரை மலரமர்
திருமகளுக்கு
நிகரான புகழுடைய
பேரழகு வாய்ந்தவள்.

யாதொரு குற்றமில்லா
அருந்ததிக்கு நிகரான
கற்புத்திறத்தினள்..

பெருங்குணங்கள் மீதுள்ள
அளவற்ற காதலின்
திருவுருவானவள்..

ஆதலால்
அம்மாநகர மங்கையரால்
தொழுது போற்றப்படுபவள்.

அவள்தம் திருப்பெயர்தான்
கண்ணகி...

கோவலன் சிறப்பு


அப்புகார்தனில்
வாழ்ந்தனன்
மாசாத்துவான் என்னும்
வணிகன்.


பெரியதொரு நிலவுலகைத்
தனியொருவனாய் நின்றாளும்
சோழமன்னன்
தம் குடிகள் பலவற்றுள்
முதல் குடியாய் வைத்து மதிக்கும்
உயர்ந்தோங்கிய செல்வமுடையவன்.

அவன் தான்
அறநெறியில் ஈட்டிய
பெருஞ்செல்வம் அதனைப்
பலருக்கும் பகிர்ந்தளித்து உதவும்
சீர்குணமுடையவன்.


இருநிதிக் கிழவனென்றும்
சிறப்புப் பெயர்கொண்ட
மாசாத்துவானின் திருமகன்
பதினாறு வயதினன்.

அத்திருமகனும்
பூமியே சிறுத்துக் குறுகும்படிச்
சிறந்த புகழ் வாய்ந்தவன்.

மதி போன்ற முகமுடையோன்;
பாடலின் இனிமையும்
தோற்றுப் போகும்படியான
குரல்மொழிவளம் மிக்கவன்...

அவனைக் கண்டதும்
தம்முள் கிளர்ந்த
காதலால் கன்னிகையர்
'இவன் நாம் வணங்கத்தக்க முருகவேள்'
என்று காதற்குறிப்பைத் தம்
தோழிக்கு உணர்த்தச் செய்யும்
திறம் கொண்டவன்.

அவன்தம் திருப்பெயர்தான்
கோவலன்....

சிலம்பின் வரிகள் இங்கே (23-39)

Sunday, October 10, 2010

குறளின் குரல் - 12

அதிகாரம்: 76. பொருள் செயல்வகை
குறள் எண்: 757

அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ
செல்வச் செவிலியா லுண்டு.



அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும்
செல்வச் செவிலியால், உண்டு.

விளக்கம்:

அன்புத்தாய் பெற்ற, உயிர்களின் துன்பத்தைப் போக்க வல்ல அருள் என்னும் குழந்தை, பொருட்செல்வம் என்னும் செவிலித்தாயால்
வளர்க்கப்படுவது சிறப்பு.

-------------

அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 630

இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்த
னொன்னார் விழையுஞ் சிறப்பு.


இன்னாமை இன்பம் எனக் கொளின், ஆகும், தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.

விளக்கம்:

ஒரு செயலுக்காய் முயற்சிக்கும் போது துன்பங்கள் வரும். தன் செயலே முக்கியமெனக் கருதுபவன் அத்துன்பத்தையும் இன்பம் என்று கொள்வான்.
அந்த மனப்பக்குவம் இருப்பதால் பகைவரும் விரும்பும் சிறப்பை அடைவான்.

-----------------

அதிகாரம்: 07. மக்கட்பேறு
குறள் எண்: 68

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.

தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது.

விளக்கம்:

தம்மைவிடத் தம் மக்களைச் சிறந்த அறிவுடையவராக வளர்ப்பது, இச்சமுதாய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அத்தகைய சிறப்பு,
பெற்றோருக்கு மட்டுமல்லாமல், இந்தப் பெரிய உலகிலுள்ள உயிர்கட்கெல்லாம் இனிமை தரும்.

------------

அதிகாரம்: 78. படைச்செருக்கு

குறள் எண்: 776

விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து.


விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து.

விளக்கம்:

சிறந்த வீரன் ஒருவன் தன் வாழ்நாட்களை நினைவுகூர்ந்து கணக்கிட்டுப் பார்க்கையில், தன் மார்பில் விழுப்புண் படாத நாட்கள் எல்லாம்
பயனற்று வீணாய்க் கழித்த நாட்கள் என்று எண்ணிக் கொள்வான்.

--------------

அதிகாரம்: 05. இல்வாழ்க்கை
குறள் எண்: 44

பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியஞ்ச லெஞ்ஞான்று மில்.


பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின், வாழ்க்கை
வழி அஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

விளக்கம்:

உலகில் பழி வந்து நம்மைச் சேர்வதற்கான சூழல்களே பலவாகும். அத்தகைய பழிக்குப் பயந்து அது சேராமல் பார்த்துக் கொண்டு,
உள்ளதைப் பிறருடன் பகுத்துண்டு வாழ்ந்தால், வாழ்க்கையில் ஒரு போதும் குறைகள் நேராதிருக்கும்..

----------------------------

Wednesday, October 6, 2010

ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களின் கவனத்திற்கு...

CBSE பாடத்திட்டம் எப்போதும் எந்தப் பாடத்தையும் சற்றே அதிகமான விளக்கங்களுடன் வழங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது, மாற்றியைமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் விதம் மிக நேர்த்தியாக உள்ளது. பாடத்தின் எந்தவொரு வரியிலிருந்தும் கேள்விகள் வரக்க்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பாடத்தின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடத்தையும் வரிவிடாமல் படிப்பது எளிதான செயலல்ல.

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் என் மகளுக்கு உதவுவதற்காக, சமூக அறிவியல், மற்றும் அறிவியல் பாடத்தின் ஒவ்வொரு வரியிலிருந்தும் கூடுமான வரையில் எதையும் விட்டுவிடாமல் கேள்விகள் தயாரித்து வருகிறேன்.

அதை வலையில் பதிந்து வைக்கத் தோன்றியது. புதிய வலைப்பு ஒன்றில் பதிந்துள்ளேன்.

http://malar-studyroom.blogspot.com/

இரண்டாம் பருவத்திற்கான அறிவியல், சமூக அறிவியல் பாடக் கேள்விகள் இதில் இடம்பெறும்.

Monday, October 4, 2010

வானம் மட்டுமா வசப்படும்?!

மயிலைப் பார்த்து
'வான்கோழியே'
என்று விளிக்குமாம்
வான்கோழி.

வானவில்லைப் பார்த்து
'மயக்கும் மஞ்சள்''
என்று வர்ணிக்குமாம்
காமாலை பூத்த கண்கள்.

மணவீட்டில் மணமகனை
'உயிரில்லாப் பிணம்'
என்று கூறுமாம்
பொறாமையில் குமுறுகின்ற மனம்...

மனித மனங்களை
விமர்சிக்கும் பரிகசிக்கும்
அன்றாடம் ஆயிரம்
மனித நாக்குகள்...

வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு பாதையிலும்
வேகத்தடைகள்...

விமர்சனத்தை விழாவாக்கிப்
பரிகாசத்தைப் பரிசாக்கிக்
குதூகலத்துடன் கொண்டாடு...

தடைகளைப் படிகளாக்கி
வெற்றியோடு முன்னேறு....

வானம் என்ன
பிரபஞ்சமே வசப்படும்!

Thursday, June 24, 2010

நான் அறிந்த சிலம்பு - பகுதி 6

புகார்க்காண்டம் - மங்கலவாழ்த்துப்பாடல்


வாழ்த்து, வணக்கம்


திங்களைப் போற்றுவோம்!
திங்களைப்  போற்றுவோம்!
பூந்துகள் மணங்கமழ்
ஆத்திமாலை அணிந்த சோழனின்
குளிர் வெண்கொற்றக்கொடை போல,
அழகிய இவ்வுலகைக்
காத்து நிற்பதால்
திங்களைப் போற்றுவோம்!

கதிரவனைப் போற்றுவோம்!
கதிரவனைப் போற்றுவோம்!
காவிரி மன்னன்
ஆணைச்சக்கரம் போலப்
பொன்னிறம் கொண்ட
உச்சியை உடைய
மேருமலையை வலம் வருதலால்
கதிரவனைப் போற்றுவோம்!

சிறந்த மழையைப் போற்றுவோம்!
சிறந்த மழையைப் போற்றுவோம்!
அச்சம் தரும்
கடல்சூழ் உலகிற்குச்
சோழன் தன் அருள்கொண்டு
காவல் நிற்பது போல்...
கீழிருந்து விண்ணோக்கி
நகர்ந்து நின்று
அருட்காவல் நிற்பதால்..
சிறந்த மழையைப் போற்றுவோம்!

பூம்புகாரைப் போற்றுவோம்!
பூம்புகாரைப் போற்றுவோம்!
செறிந்த கடல்நீரதனை
வேலியாய்க் கொண்ட
இப்பூவலகில்,
சோழர் குலத்தோடு பிறந்து
காலம் காலமாய்ப்
புகழது பரவி
உயர்ந்து சிறந்து நிற்பதால்
பூம்புகாரைப் போற்றுவோம்!

புகார் நகரின் சிறப்பு

பொதிகை மலை,
இமய மலை,
தன்னைவிட்டுப் பெயராத
பழங்குடியினர் நிறைபுகழ்ப்
புகார் நகரம்....
இம்மூன்று இடங்களிலும்
சிறப்புமிக்க உயர்ந்தோர் வாழ்வதால்
அந்நகரம்
நடுக்கமின்றி நிலைபெற்று
வாழுமே தவிர
அழியக்கூடியதன்று....என்பர்
முதிர்ந்த கேள்விஞானம் பெற்ற
சான்றோர் பெருமக்கள்.

அதனால்,
நாகநீள் எனப்படும்
தேவரின் உலகத்தோடும்
நாகநாடு எனப்படும்
நாகர் உலகத்தோடும்
ஒப்பிடத்தக்க
பெருமையும் செல்வமும்
நீண்ட புகழும்
பொலிந்து நிற்கும்
புகார் நகரம்.

சிலம்பின் வரிகள் (1-22) இங்கே...

குறளின் குரல் - 11

அதிகாரம்: 44. குற்றங்கடிதல்
குறள் எண்: 437

செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்.


செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்

விளக்கம்:

செல்வம் தன்வசம் உள்ள போது அதனை உரிய வழிகளில் தேவைக்காகக் கூடப் பயன்படுத்தாமல் சேமித்து வைப்பான் கருமி.

அவனுடைய செல்வம் நிலையற்ற தன்மை கொண்டு, அவனைக் காக்க வேண்டிய நேரத்தில் காத்து நிற்காமல் வீணாக அழிந்து போகும்.

---------------

அதிகாரம்: 23. ஈகை
குறள் எண்: 221

வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாமங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.


வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து

விளக்கம்:

குறி எதிர்ப்பு - அளவு குறித்துக் கொடுத்துத் திரும்ப வாங்கிக் கொள்வது; இது உலக வழக்கு. இது ஈகையாகாது.

வறியவர்க்கு, அவர்களுக்கு உதவுவதற்காக மட்டும், வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்குவதுதான் ஈகையாகும்.

பலன் எதிர்பார்த்து, அளந்து தாம் கொடுப்பது, மீண்டும் தனக்கு வந்து சேரும் என்றெண்ணி வழங்குவது ஈகையாகாது.

-----------

அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை
குறள் எண்: 614

தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.


தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடி கை
வாள் ஆண்மை போலக் கெடும்.

விளக்கம்:

படையைக் கண்டு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாள் மூலம் வீரமான ஆண்மைச் செயல் எதுவும் தோன்ற வாய்ப்பில்லை.

அது போல, விடாமுயற்சி இல்லாதவன் பிறருக்கு நல்லது செய்கிறேன், உதவுகிறேன் என்று சொல்லவும் வாய்ப்பில்லை.
-------------------
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 626

அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புத றேற்றா தவர்.


'அற்றேம்' என்று அல்லற்படுபவோ 'பெற்றேம்' என்று
ஓம்புதல் தேற்றாதவர்.

விளக்கம்:

செல்வம் வந்த போது, அதை உரிய முறையில் போற்றிக் காத்து நிற்காதவர்கள், வறுமைக் காலத்தில் 'அய்யோ! செல்வம் இழந்தோம்' என்று துன்பப்படுவது ஏனோ?!

----------------

அதிகாரம்: 37. அவா அறுத்தல்
குறள் எண்: 367

அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.


அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

விளக்கம்:

ஒருவன் ஆசைகளை முற்றும் அறுத்து விட்டால்,
அவன் கெடாமல் நல்வாழ்வு வாழ்வதற்கான நல்வினைகள் எல்லாம்
அவன் விரும்பியபடியே எந்தத் துன்பமும் இன்றி
அவனை வந்து சேரும்.

குறளின் குரல் - 10

அதிகாரம்: 89. உட்பகை குறள் எண்:  881

நிழல்நீரு மின்னாத வின்னா தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.


நிழல் நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னா ஆம் இன்னா செயின்.

விளக்கம்:

நிழலிலுள்ள நீர்நிலையின் நீரானது, நுகரும் காலத்தில் இன்பம் தருவதாகத்தான் இருக்கும். ஆனால் பிறிதொரு காலத்தில் அதுவே நோய் விளைவிக்கும் தன்மையுடையதாக மாறும்.

அதுபோலத் தீய இயல்புடையவரின் உட்பகை ஆரம்ப காலத்தில் இன்பம் தருவதாகத் தோன்றினாலும், இறுதியில் துன்பமே விளைவிக்கும்.

--------------------

அதிகாரம்: 8. அன்புடைமை
குறள் எண்: 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.


அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த்தற்று.

விளக்கம்:

வன்மையான மேட்டு / பாலை நிலத்தில் உள்ள மரம் காய்ந்து போய், துளிர்க்கும் வழியில்லாது நிலையற்ற தன்மையுடன் தவித்திருக்கும்.

அது போல், அன்பு என்னும் ஈரம் உள்ளத்தில் இல்லாதவரின் வாழ்க்கையும் உலர்ந்த தன்மையுடன் தளிர்க்க இயலாமல் தவித்திருக்கும்.
--------------------

அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள் எண்: 115.

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.


கேடும் பெருக்கம் இல் அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

விளக்கம்:

வாழ்வில் செல்வம் அழிவதும், செல்வம் பெருகுவதும் இல்லாதது அல்ல; அனைவருக்கும் ஏற்படுவதுதான்.

செல்வம் நிலையானது அல்ல. அத்தகைய நிலையற்ற ஒன்றுக்காக மனம் தவறி, நடுவுநிலைமை தவறி நடப்பது அழகல்ல.

நெஞ்சத்தில் நடுவுநிலைமை கொண்டு, இடர் வந்த போதும் அந்நெறியிலிருந்து தவறாமல் வாழ்தலே சான்றோர்க்கு அழகாகும்.
--------------------

அதிகாரம்: 4. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 37

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.


'அறத்து ஆறு இது' என வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

விளக்கம்:

பல்லக்குத் தூக்குபவன் பாவம் செய்தவன்; பல்லக்கில் அமர்ந்திருப்பவன் புண்ணியம் செய்தவன்..

இதெல்லாம் முன்வினைப்பயன் என்றும்,

முன்வினைப்பயன் படி பலன் நுகர்வதுதான் அறவழி என்றும் உணர்த்த வேண்டாம்.

நாம் எல்லோரும் சமம், எவ்வித வேறுபாடும் நமக்குள் கிடையாது என்றுணர்த்துவதே அறவழியாகும்.
-----------------

அதிகாரம்: 22. ஒப்புரவறிதல்
குறள் எண்: 213

புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
யொப்புரவி னல்ல பிற.


புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல் அரிதே-
ஒப்புரவின் நல்ல பிற.

விளக்கம்:

எல்லோருக்கும் பயன் தரும் பொது நன்மைகளைச் செய்யும் ஒப்புரவு மிகவும் நல்லதொரு செயலாகும்.

அதற்கு ஈடான நன்மை தரும் வேறு ஒன்றை இவ்வுலகிலும் பெற முடியாது; தேவருலகிலும் பெற முடியாது.

Friday, June 18, 2010

ஒற்றைச் சிவப்பு ரோஜா


நந்தவனச் சோலையில்
பதமான சூழலில்
இதமான நறுமணத்துடன்
வானவில் நிறத்துடன்
ஆயிரமாயிரமாய்ப்
பூத்து நிற்கும்
ரோஜாக்கூட்டமாய் உறவுகள்..

பாலைவனச் சோலையில்
பதப்படுத்தப்பட்ட சூழலில்
மிதமான மணத்துடன்
சிவப்பு நிறத்துடன்
தனிமையில்
பூத்துச் சிரிக்கும்
ஒற்றை ரோஜாவாய்க் காதல்...

Thursday, June 10, 2010

கொலையாகும் நம்பிக்கைகள்

பஞ்சுப்பொதிதான்....
என்றாலும்
கடலினுள் அமிழ்கையில்
கனக்கத்தான் செய்கிறது.

நினைவு மேகமூட்டங்கள்
இறுதி யாத்திரை செல்ல...
கனவுப் பூந்தோட்ட மலர்கள்
கல்லறையை அலங்கரிக்க...

உண்மைகள்
உயிரைக் குடிக்கும் போது...
நிதர்சனம்
கழுத்தை நெறிக்கும் போது...
மரணிக்கும்
நம்பிக்கைகளுக்கு
மறுபிறவி ஏது?

குறளின் குரல் - 9

அதிகாரம்: 89. உட்பகை
குறள் எண்: 881

நிழல்நீரு மின்னாத வின்னா தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.

நிழல் நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னா ஆம் இன்னா செயின்.


விளக்கம்:

நிழலிலுள்ள நீர்நிலையின் நீரானது, நுகரும் காலத்தில் இன்பம் தருவதாகத்தான் இருக்கும். ஆனால் பிறிதொரு காலத்தில் அதுவே நோய் விளைவிக்கும் தன்மையுடையதாக மாறும்.
அதுபோலத் தீய இயல்புடையவரின் உட்பகை ஆரம்ப காலத்தில் இன்பம் தருவதாகத் தோன்றினாலும், இறுதியில் துன்பமே விளைவிக்கும்.

--------------------

அதிகாரம்: 8. அன்புடைமை
குறள் எண்: 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த்தற்று.

விளக்கம்:

வன்மையான மேட்டு / பாலை நிலத்தில் உள்ள மரம் காய்ந்து போய், துளிர்க்கும் வழியில்லாது நிலையற்ற தன்மையுடன் தவித்திருக்கும்.

அது போல், அன்பு என்னும் ஈரம் உள்ளத்தில் இல்லாதவரின் வாழ்க்கையும் உலர்ந்த தன்மையுடன் தளிர்க்க இயலாமல் தவித்திருக்கும்.

--------------------

அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள் எண்: 115.

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

கேடும் பெருக்கம் இல் அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

விளக்கம்:

வாழ்வில் செல்வம் அழிவதும், செல்வம் பெருகுவதும் இல்லாதது அல்ல; அனைவருக்கும் ஏற்படுவதுதான்.

செல்வம் நிலையானது அல்ல. அத்தகைய நிலையற்ற ஒன்றுக்காக மனம் தவறி, நடுவுநிலைமை தவறி நடப்பது அழகல்ல.

நெஞ்சத்தில் நடுவுநிலைமை கொண்டு, இடர் வந்த போதும் அந்நெறியிலிருந்து தவறாமல் வாழ்தலே சான்றோர்க்கு அழகாகும்.

--------------------

அதிகாரம்: 21. தீவினை அச்சம்
குறள் எண்: 205

இலனென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகு மற்றும் பெயர்த்து.

'இலன்' என்று தீயவை செய்யற்க; செய்யின்,
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து.

விளக்கம்:

'பொருள் வளம் இல்லாதவன் ஆகிவிட்டேனே' என்று மனம் வருந்தி, பொருள் ஈட்டுவதற்காகத் தீய செயல்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

அவ்வாறு தீயவை செய்ய முற்பட்டால் அனைத்தும் இழந்து மீண்டும் மீண்டும் வறுமையைச் சந்திக்க நேரிடும்.
---------------

அதிகாரம்: 90. பெரியாரைப் பிழையாமை
குறள் எண்: 891

ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை, போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

விளக்கம்:

தாம் எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்கவல்லவர்களின் துணையை இகழ்ந்து அலட்சியம் செய்து ஒதுக்குதல் கூடாது.

தமக்குத் தீங்கு வரக்கூடாது என்று தற்காத்துக் கொள்பவர்கள் செய்து கொள்ள வேண்டிய காவல்களுள், இதுவே முதாலான, சிறந்த காவலாகும்

குறளின் குரல் - 8

அதிகாரம்: 73. அவையஞ்சாமை
குறள் எண்: 728

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு
ணன்கு செலச்சொல்லா தார்.

பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செலச் சொல்லாதார்.

விளக்கம்:

ஒருவர் பல நூல்களைக் கற்றவராய் இருக்கலாம். ஆனாலும் நல்லவர்கள் நிறைந்த அவையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்துகளை அவரால் கூற இயலாதென்றால், அவரால் எந்தவொரு பயனும் யார்க்கும் இருக்க வாய்ப்பில்லை.

---------------

அதிகாரம்: 66. வினைத் தூய்மை
குறள் எண்: 655

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

எற்று! என்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்,
மற்று அன்ன செய்யாமை நன்று.

விளக்கம்:

ஒருவர் 'அய்யோ! என்ன தவறு செய்து விட்டோம்' என்று நினைத்து நினைத்து வருத்தப்படக் கூடிய செயலைச் செய்யாதிருக்க வேண்டும்.
அவ்வாறு செய்து விட்டாலும், அதை நினைத்து நினைத்து வருத்தப்படாமல், அத்தகைய செயலை மீண்டும் செய்யாமல் தவிர்ப்பது நன்றாகும்.

-----------------

அதிகாரம்: 79. நட்பு
குறள் எண்: 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

நிறை நீர, நீரவர் கேண்மை, பிறை மதிப்
பின் நீர, பேதியார் நட்பு.

விளக்கம்:

இனிமையான பண்புடையோரின் நட்பானது வளர்பிறை போல் நாளுக்கு நாள் வளர்ந்து நிறைவடையும் முழுமதி போன்றதாகும்.

அறிவிலார், இனிய பண்பிலார் நட்பானது அம்முழுமதி நாளுக்கு நாள், படிப்படியாய்க் குறைவடையும் தேய்பிறை போன்றதாகும்.

---------------

அதிகாரம்: 50. இடனறிதல் (இடம், காலமறிந்து வெற்றிக்காகச் செயலாற்றுதல்)
குறள் எண்: 495

நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி
னீங்கி னதனைப் பிற.

நெடும் புனலுள் வெல்லும் முதலை; அடும், புனலின்
நீங்கின், அதனைப் பிற.

விளக்கம்:

ஆழமான நீரில் வாழும் முதலை பிற உயிரினங்களை வெற்றி கொள்ளும்.
நீரை விட்டு வெளியே வந்தால் பிற உயிரினங்கள் முதலையை வெற்றி கொள்ளும்.

ஒருவர் தனக்குப் பொருத்தமான இடத்தில் இருக்கும் போது பகைவரை வெற்றி கொள்வர். பொருத்தமற்ற இடத்தில் இருக்கும் போது பகைவர் அவரை வெற்றி கொள்வர்.

----------------

அதிகாரம்: 20. பயனில சொல்லாமை
குறள் எண்: 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மை உடையார் சொலின்.

விளக்கம்:

நல்ல பண்புடைய பெரியோர் பயனில்லாதவற்றைப் பேசினால்,
அவர்களுடைய மதிப்பும் பெருமையும் சிறப்பும் அவரை விட்டு நீங்கும்.

குறளின் குரல் - 7

அதிகாரம்:90. பெரியாரைப் பிழையாமை
குறள் எண்: 896

எரியாற் சுடப்பனு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்.

விளக்கம்:

ஒருவன் நெருப்பில் அகப்பட்டுச் சுடப்பட்டாலும் பிழைத்து விட வாய்ப்புண்டு.
ஆனால், வலிமை மிக்க பெரியோருக்கு எதிராய்த் தவறான செயல் புரிபவர்கள் பிழைக்க வழியேயில்லை.
-----------

அதிகாரம்: 101. நன்றியில் செல்வம்
குறள் எண்: 1002

பொருளானா மெல்லாமென் றீயா திவறு
மருளானா மாணாப் பிறப்பு.

பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான், ஆம், மாணாப் பிறப்பு.

விளக்கம்:

பொருளினால் எல்லா நலன்களும் எப்போதும் உண்டாகும் என்றெண்ணி, அதன் மீது மயக்கம் கொண்டு, அதை எவருக்கும் கொடுக்காமல் காத்து வைப்பவனுக்கு, சிறப்பில்லாத இழிபிறப்புதான் தொடர்ந்து உண்டாகும்.
----------------

அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 245

அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி.

அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லன் மா ஞாலம் கரி.

விளக்கம்:

அருள் உடையவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை.
வாரி வழங்கும் காற்றினால் வாழும் உயிர்களே இதற்குச் சான்றாகும்.
(உலகைக் காற்று காப்பது போல், அருளுடையவர்களை அருள் காத்து நிற்கும்.)

--------------------

அதிகாரம்: 47. தெரிந்து செயல்வகை
குறள் எண்: 469

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை.

விளக்கம்:
பிறருக்கு நன்மை செய்வதிலும் தவறு நேரும் வாய்ப்புண்டு. எப்படி? ஒருவருடைய பண்பை, இயல்பை ஆராய்ந்து அறிந்து கொண்ட பின்னே அவர்களுக்கு நன்மை தரக்கூடிய உதவிகள் செய்ய வேண்டும்.

சான்றாக, பொறாமையுணர்வு மற்றும் சுயநலம் கொண்ட ஒருவருக்குச் செய்த உதவியே தவறாகக் கூடிய வாய்ப்புண்டு. பெற்றுக் கொண்ட உதவியால் தாம் முன்னேறிவிட்டு,

ஏதேனும் ஒரு சமயத்தில் தமக்கு உதவி செய்தவருக்கே தீங்கு விளைவிக்க வழி வகுக்கும் அவர் இயல்பு. அவர்கள் இயல்பை ஆராய்ந்து இது போன்ற உதவிகளைத் தவிர்த்து விட வேண்டும்.
----------------------------

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை (தந்நலம் நீத்தார் பெருமை)
குறள் எண்: 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணின் கொண்டற்று.

விளக்கம்:

உலகப்பற்றை விட்டு நீங்கியவரின் பெருமையை அளந்து சொல்வது, பிறந்து இறந்தவர் எண்ணிக்கைக் கணக்கெடுப்பதற்கு ஒப்பாகும்.

பிறந்தார் இறந்தார் கணக்கு எல்லையில்லாது தொடர்ந்து கொண்டேயிருக்கும். அது போலத் துறந்தார் பெருமையும் எல்லையற்றது. அப்பெருமையே சிறந்த பெருமையாகும்.

-------------

Saturday, June 5, 2010

கண்டனம் செய்யப்பட வேண்டிய பதிவுதான்...

என்ன உள்குத்தோ..வெளிக்குத்தோ..புனைவோ..நிஜமோ...நிஜம் சார்ந்த புனைவோ..

இருந்து விட்டுப் போகட்டும்..தம் கருத்தைப் பதிவு செய்வது பதிவர் சுதந்திரம்தான்...ஆனாலும் அதற்கான வார்த்தைப் பிரயோகங்களில் ஒரு வரைமுறை வேண்டும்...

கடந்த சில தினங்களாக என்னவென்றே புரியாத நிலையில் சில பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த வேளையில், சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை இன்று படிக்க நேர்ந்தது.

இது போன்ற விஷயங்கள்...ஆண், பெண் பதிவர் பாகுபாடின்றி அனவரும் தீவிரமாக எதிர்க்க வேண்டியவை..

வார்த்தைகள் வரம்பு மீறியிருக்கின்றன. என்ன தவறு எங்கே நிகழ்ந்ததோ..புரியவில்லை...

அனைத்துத் தரப்பிலும் நியாயம் / அநியாயம் இருக்கலாம்...

ஆனாலும்...இது தொடராமல் இருக்க பதிவர்கள் அனைவருமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

Tuesday, May 4, 2010

இன்னுமோர் உலக அதிசயம்!

வார்த்தைகளின் கீறலில்
பதிந்து நிற்கும் ரணங்கள்...

மௌனத்தின் கனத்தில்
சூழ்ந்து சுழலும் பயங்கள்...

சிந்தனைகளின் சத்தத்தில்
உதிர்ந்து விழும் உணர்வுகள்...

நாளதன் ஓட்டத்தில்
நலிந்து மறையும் சினங்கள்...

ஊடல் மடியும் கணத்தில்
வான்வரை வியாபிக்கும் காதல்....

இனிமையான
இன்னுமோர் உலக அதிசயம்!

Monday, May 3, 2010

ஆலங்கட்டி மழை ரியாத்துக்கு வந்தாச்சா...

மதியம் சுமார் 2 மணியிருக்கும்..திடீரென்று சன்னல் வழியே பார்க்கும்போது, குளிர்கால சாயந்திரம் 5 மணி போல் ஒரே கும்மிருட்டு.....யோசித்துக் கொண்டிருக்கும்போதே....

மழையின் சத்தம்..காற்றின் பிளிறல்..கூடவே...டங் டங் என்று உலோகச் சத்தம்...சட்டென்று புரிந்தது...ஆஹா...இது ஆலங்கட்டி மழையாச்சே....நான் ஓரிரு முறை இந்த வளைகுடாப் பகுதியில் இதைப் பார்த்திருந்தலும்..என் மகள் பார்த்திருக்கவில்லை...பயந்த அவளை ஒரு வழியாகச் சமாதனப்படுத்தி இறங்கிப்போய்க் கீழே பார்த்தால் ஒரே வெள்ளம்
ஓடிக் கொண்டிருக்கிறது சாலையில்...

தண்ணீரில் மிதக்கும் ஐஸ் கட்டிகள்....

அடடா...வித்தியாசமான சிலீர் அனுபவம்.....

ஆனாலும் எத்தனை எத்தனை பேர் இங்கே இதனால் கஷ்டப்பட்டார்களோ
தெரியவில்லை...

மழைக்கு முன் வந்த காற்று..
செம்மணல் மண்டலம்....
புகைப்படக்கருவி வழியே...



(மேலே உள்ள புகைப்படங்கள்: நண்பர் விஜயக்குமார் எடுத்தவை..)

(கீழ்க்காணும் புகைப்படங்கள் என் கணவர் அலுவலகத்திலிருந்தபடி வெளித்தோற்றத்தை எடுத்தவை)

தமிழ் மேல் காதல்

இலக்குகளை இயம்பி நின்ற
இலக்கியப்பூக்களால்
இதயங்களில் வேரூன்றிய
தமிழ்க்காதல்,
மனதின் இறுக்கங்கள் தளர்த்திய
இளவேனில் காலமன்று.

தமிழே டாமில் ஆகித்
தன் முகவரி
தானே தேடியலைந்து
தேக்கம் கண்டு வெம்பி நிற்கும்
இலையுதிர்காலமின்று.

பிறநாட்டுச் சாத்திரங்கள்
தமிழில் மொழிபெயர்ப்போம்
என்றதொரு காதல்.

டாடி, மம்மி,
தேங்க்ஸ், ரோடு
எல்லாமே தமிழே
என்பதொரு காதல்.

தாயாம் தமிழை
அன்னை இல்லத்தில் வைத்து
அழகு பார்த்ததொரு காதல்.

முதியோர் இல்லத்தில்
முடக்கிப் பார்க்கும்
இயலாமையில் ஒரு காதல்.

தற்காப்புக் காதலாய்ச்
செதுக்கி நின்றதொரு காதல்.

தற்கொலைப் பாதையில்
சிதைந்து நிற்பதொரு காதல்.

இலையுதிர்காலம் இன்று..
என்றாலும்
இளவேனில் வருமென்று
சற்றும் குறையாத நம்பிக்கையுடன்
முற்றிலும் எம்மை இயக்குகிறது
தணியாத தமிழ்க்காதல்.

குறளின் குரல் - 6

அதிகாரம் - 21. தீவினையச்சம் குறள் எண் - 206

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல் வேண்டா தான்.

தீப் பால தான் பிறர்கண் செய்யற்க-நோய்ப்பால
தன்னை அடல் வேண்டாதான்!

விளக்கம்:

எறிந்த பந்து போலத் தீமை மீண்டும் செய்தவனையே வந்து சேரும்.
துன்பம் / தீவினை தனக்கு வரக்கூடாது, தன்னை வருத்தக்கூடாது என்று விரும்புபவன் அத்தீவினைகளைப் பிறரிடமும் செய்யாதிருக்க வேண்டும்.
---------

அதிகாரம் - 19. புறங்கூறாமை
குறள் எண் - 181

அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது.
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது.

விளக்கம்:

ஒருவன் எந்தவொரு அறமும் செய்யாமல் இருந்தாலும், அவன் பிறரைப் பற்றிப் புறம் கூறாதவனாக இருக்கிறான் என்பது இனியதாகும்.

(புறங்கூறாமை மற்ற அறங்களைத் தானாகவே வரவழைக்கும்.)
-------------

அதிகாரம்: 57. வெருவந்த செய்யாமை

குறள் எண்: 570

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.

கல்லார்ப் பிணிக்கும், கடுங்கோல்; அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
விளக்கம்:

கற்கவேண்டியவற்றைக் கற்காது, எப்போதும் தனக்குத் துணையாக மூடர்களையே சேர்த்துக் கொள்வது கொடுங்கோல் ஆட்சியது;
இந்த ஆட்சி அல்லாமல் பூமிக்குப் பாரம் வேறு எதுவும் இல்லை.
-------------------

அதிகாரம்: 51. தெரிந்து தெளிதல்
குறள் எண்: 501

அறம்பொரு ளின்ப முயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.


அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும்.

விளக்கம்:

ஒருவன் மீது நம்பிக்கை வைக்கும்போது நான்கு இயல்புகளின் அடிப்படையில் ஆராய வேண்டும்.

அறம் தவறாமல் நடப்பவனா, பொருள் மீது பற்றுள்ளவனா, இன்பத்தில் ஆசைமிக்கவனா, உயிருக்கு அஞ்சுபவனா என ஆராய்தல் வேண்டும்.

இவற்றால் மனம் பிறழாமல் இருப்பவனே நம்பத்தகுந்தவன்.
------------------

அதிகாரம்:11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 105

உதவி வரைத்தன் றுதவி யுதவி
செய்ப்பட்டார் சால்பின் வரைத்து.

உதவி வரைத்து அன்று, உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

விளக்கம்:

ஓர் உதவியின் மேன்மை அந்த உதவியின் அளவைப் பொறுத்தது அன்று.

அது உதவி செய்யப்பட்டவரின் தன்மையை, சிறப்பைப் (சால்பைப்) பொறுத்ததாகும்.

(உதவியைப் பெற்றுக்கொண்டவரின் சிறப்பால் உதவியே பெருமைப்படும்.)
-------------

Saturday, May 1, 2010

குறளின் குரல் - 5

அதிகாரம்: 84. பேதைமை
குறள் எண்: 833

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

நாணமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும்
பேணாமை பேதை தொழில்.

விளக்கம்:

பழிக்கு வெட்கப்படாதிருத்தல், சிந்தித்துச் செயல்படாதிருத்தல், அன்புடையவர் முகம் சுருங்க அவரன்பு முறியப்பேசுதல்,பேண வேண்டிய பொருளைப்பேணிக் காவாதிருத்தல்...

இவை தவிர்த்த வேறு நற்குணங்கள் அறியார் பேதையர்.ஆதலால் இவை மட்டுமே பேதைகளுக்குரிய தொழிலாகும்.
----------

அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 624

மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.
மடுத்த வாய்எல்லாம் பகடு அன்னான்உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

விளக்கம்:

தடைப்படும் இடங்களில் எல்லாம் தளர்ந்து சோர்ந்து விடாமல் பாரவண்டி இழுத்துச் சென்றிடும் எருது;

அது போலக் காரியமது கைவிடாது தொடர்ந்து இறுதிவரை முயன்று வென்றிடும் ஊக்கமுடையவன் தான் கண்டால் துன்பமே துன்புற்று வருந்த நேரிடும்.
-------------------------

அதிகாரம்: 100. பண்புடைமை
குறள் எண்: 1000

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை பாற்றிரிந் தற்று.

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம் தீமையால் திரிந்தற்று.

விளக்கம்:

நல்ல பசுவின் பாலது அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் குற்றமிருந்தால் திரிந்து போகும். அது போலத்தான் முன்செய்த நல்வினையாலே பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் ஒருவருக்கும் பயன்படாமல் கெட்டுப் போகும்.
----------------

அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 153

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

இன்மையுள் இன்மை விருந்து ஒரால், வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

விளக்கம்:

விருந்தைப் போற்றாது புறக்கணித்தல் வறுமையுள் வறுமையாகும்.
அறிவிலார் செய்யும் சிறுமையைப் பொறுத்துக் கொள்ளுதல் வலிமையுள் வலிமையாகும்.
--------------
அதிகாரம்: 46. சிற்றினஞ் சேராமை
குறள் எண்: 451

சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.


சிற்றினம் அஞ்சும் பெருமை, சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

விளக்கம்:

பெருமைமிக்க பெரியோர் சிறியார் இனத்தோடு நட்புக் கொள்ள அஞ்சி ஒதுங்குவர்.

சிறுமை மிக்க சிறியாரோ சிறியாரைக் கண்டவுடன் அவர்களைத் தம் சுற்றமாய் நினைத்துத் தம்முடன் இணைத்துக் கொள்வர்.

குறளின் குரல் - 4

அதிகாரம்: 68. வினை செயல் வகை
குறள் எண்: 672

தூங்குக தூங்கிச் செயற்பால் தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

விளக்கம்:

காலம் தாழ்த்திச் செய்யக்கூடிய செயல்களை க்காலம் தாழ்த்தியே செய்தல் வேண்டும்; காலம் கடத்தாமல் செய்யக்கூடிய செயல்களை விரைவில் செய்ய வேண்டும்.
---------------

அதிகாரம்: 42. கேள்வி
குறள் எண்: 419நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.


நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.
விளக்கம்:

நுட்பமான கேள்வியறிவில்லாதவர் பணிவான சொற்களைப் பேசுதல் அரிது; கேள்வியறிவு பெறப்பெற பணிவு பெருகும்; செருக்கழியும்.
--------------

அதிகாரம்: 81. பழைமை (பல காலமாய்ப் பழகி வரும் நட்பு)
குறள் எண்: 806
எல்லைக் கணின்றார் துறவார் தொலைவிடத்துத்
தொல்லைக்க ணின்றார் தொடர்பு.


எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.


விளக்கம்: 1

தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் நட்புதானது தொல்லைகள் தந்தாலும் தொடர்பது அழிக்காது தெய்வ நட்பின் எல்லைக்குள் தொடர்ந்தே நிலைபெறுமே.

விளக்கம்: 2

தொன்றுதொட்டுத் தொல்லைகளின் போது தோளது கொடுத்துத் தொடர்ந்துதவிய நட்புதானது தொலைவான எல்லைக்குப் போனாலும்
தொடர்ந்திடுமே மாறிடாது.

(இவ்விரு விளக்கங்களும் சற்றே மாறுபடுகின்றன. என்றாலும் இரண்டுமே பொருத்தமாகத்தான் தோன்றுகின்றன.)
----------------------------------

அதிகாரம்: 65. சொல்வன்மை
குறள் எண்: 641

நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
யாநலத் துள்ளதூஉ மன்று.


நா நலம் என்னும் நலன் உடைமை; அந் நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று.

விளக்கம்:

நாவன்மை என்பது நலங்களில் மிகச் சிறந்த நலமாகும்; நாநலம் பிற நலத்தினுள், சிறப்பினுள் அடங்காத நன்னலமாய் விளங்கும் தனித்தன்மை
நிறைந்ததாகும்.
---------------

அதிகாரம்: 34. நிலையாமை
குறள் எண்: 334

நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.
நாள்என ஒன்றுபோல் காட்டி, உயிர், ஈரும்
வாள்--அது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்:

நேற்று ஒரு நாள் இன்று ஒரு நாள் என்று நாள்தோறும் நாள் கணக்கு எண்ணி வாழ்கிறோம்;

உண்மையில் அது நாள் அல்ல; நாள் என்ற மாயத் தோற்றத்தை வெளியில் காட்டி உள்ளே உயிரைச்சிறிது சிறிதாகஅறுக்கும் வாள்....

இந்த உண்மை உணர்பவர் பொழுதைப் பயனுள்ளதாகக் கழிப்பர்.

Wednesday, April 21, 2010

பாவேந்தருக்கு நினைவாஞ்சலி!








தமிழே!
தமிழால் வணங்குகின்றேன்!

பள்ளிப் பருவத்தில்
செய்யுள் பயிலுகையில்
இலக்கியத்தேனூட்டி
வளர்த்த ஆசிரியையைதான்
அத்தனை பாடல்களையும்
இயற்றியவர் என்றெண்ணி
வாய்பிளந்து பார்த்திருந்த பருவமது;

நின் தலைவனாம்
மீசைக்காரனின் முழக்கத்தினுக்கும்
அவன் அடியொற்றிய தாசனாம்
உன் வார்த்தைகட்கும்
அர்த்தங்கள் அறிய ஆரம்பிக்க....

எத்துணை துயரங்கள்
கடந்து வந்திருக்கிறோம்
என்றுணர்த்தித்
தமிழ்ச் சாட்டை சொடுக்கிச்
சரித்திரம் போதித்தவர்கள் நீங்கள்!

புரட்சி
வீரம்
விவேகம்
விடுதலை
தத்துவம்
குடும்பம்
பெண்..............

சமூகத்தின் பன்முகங்களில்
எதைத்தான் விட்டுவைத்தாய் நீ!

தமிழ்பால் தணியாத தாகம்
என்னுள்ளே தான் வளர்த்து
எளிய வார்த்தைகளில்
தெள்ளுதமிழ் அள்ளித்தந்து
தாலாட்டியவன் நீ!

இன்று யாம்
இன்னமும்
தமிழ்பேசி,
தமிழ்படித்துத்
தரணியில் உலவுகிறோம்..........

இதற்கெல்லாம்
இன்றியமையாக் காரணமாய்
இலங்குகின்ற
இலக்கியச் சோலையில்
அழியாத மரமாய்
வேரூன்றி நீ!

தமிழே!
நின் தமிழுக்குத்
தலைவணங்குகின்றேன்!
நின் தமிழால் வணங்குகின்றேன்!

தமிழே!
நானறிந்த தமிழ்கொண்டு
எண்ணமலர்கள் தூவி
நான் செய்கின்ற
அஞ்சலி ஏற்றிடு!
எம் தமிழ்
என்றென்றும் காத்திடு!

Monday, April 19, 2010

என் புதிய வலைப்பூக்கள்:

நட்பு செஞ்சங்களுக்கு,


சமையலுக்காகவென்று என் புதிய வலைப்பூக்கள்:

ஆங்கிலத்தில்...Malar's Kitchen

http://malar-kitchen.blogspot.com/ 


தமிழில்...சமையலும் கைப்பழக்கம்


http://www.maiyaludansamaiyal.blogspot.com/ 

Tuesday, April 13, 2010

தெருக்காட்சியும் தொலைக்காட்சியும்

குப்பைத் தொட்டியில்
வாழ்க்கை தேடும்
அழுக்குப் பெண்,
கூலி வேலையில்
பள்ளிப் பருவம் தொலைத்த
பசித்த சிறுவன்,
நடுத்தெருவில் மனைவியை
நையப் புடைக்கும்
இந்தியத் திருக் 'குடி'மகன்

தெருக்காட்சியைப்
பார்த்துப் பரிதவித்து
இல்லம் நுழைய...

ஐபிஎல் அட்டவணை
சானியா திருமணம்
சந்தை நிலவரம்

மந்திரி அறிக்கை
கல்லூரிச் சேர்க்கை
புதுப்பட விமர்சனம்

மெய்யான கதைகள்
பொய்யான புனைவுகள்........

தொலைக்காட்சியைப்
பார்த்துப் பல்லிளித்துப்
பரவசமடைந்ததில்
தெருக்காட்சியது
தேய்ந்தே போனது.

Saturday, April 10, 2010

குறளின் குரல் - 3

அதிகாரம்: 113. காதற்சிறப்புரைத்தல்

குறள் எண்: 1127

கண்ணுள்ளார் காத லராகக் கண்ணு
மெழுதேங் கரப்பாக் கறிந்து.


கண் உள்ளார் காதலவராக, கண்ணும்
எழுதேம், கரப்பாக்கு அறிந்து.

விளக்கம்:

எப்போதும்
என்
கண்ணிலேயே
உள்ளார்
என் காதலர்.
அவர்
கண்ணைவிட்டு
மறைய நேருமே
என்றஞ்சுவதால்
மையெழுதும்
பழக்கத்தையே
கைவிட்டுவிட்டேன்.

-----------------
அதிகாரம்: 35. துறவு
குறள் எண்: 341

யாதனின் யாதனி நீங்கியா னோத
லதனி னதனி னிலன்.


யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்.

விளக்கம்:

எவ்வெப்
பொருள் மீது
ஆசை கொள்வதை
ஒருவன்
விடுக்கிறானோ,
அவ்வப்
பொருள் குறித்து
அவன்
துன்பமடைவதில்லை.
-------------------
அதிகாரம்: 2. வான் சிறப்பு
குறள் எண்: 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
துப்பார்க்குத் துப்பு, ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்குத்
துப்பு ஆய தூஉம் மழை.
விளக்கம்:

(துப்பு - உணவு)

உண்பவர்களுக்கு
உணவுப் பொருள்களை
உண்டாக்கித் தருகிறது;
உண்பவர்களுக்குத் தானே
உகந்த
உயர்ந்த
உணவாகவும் ஆகி
உற்ற தாகம் தணித்து
உய்ந்து நிற்கிறது..
உயிர்களை
உய்வித்து
உயிர்தரும் மழை.
------------------
அதிகாரம்: 36. மெய்யுணர்தல்
குறள் எண்: 359

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
சார்புஉணர்ந்து, சார்புகெட ஒழுகின், மற்று அழித்துச்
சார்தரா, சார்தரும் நோய்.

விளக்கம்:

அனைத்திற்கும்
சார்பான
செம்பொருளின்
மெய்யறிந்து
யான் எனது என்ற
பொய்ப்பொருள் மீது
பற்றை விடுத்து
ஒருவன் ஒழுகுவானாயின்
அவனைப் பிற துன்பங்கள்
சார்ந்து வாரா..
-------------------

அதிகாரம்: 5. இல்வாழ்க்கை
குறள் எண்: 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப ரலை.


தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.

விளக்கம்:

தன் குல முன்னோர்
தான் வழிபடும் தெய்வம்
தன் விருந்தினர்,
தன் சுற்றத்தார்,
தான், தன் குடும்பம் போற்றிக் காத்தல் --
தப்பாமல் இவை ஐந்திடத்தும்
தளராத அறத்தைப் பேணுதல்
தலைவனாம் இல்லறத்தானுக்குத்
தலையாய கடமையாகும்.

Tuesday, March 30, 2010

சரிக்குச் சரி

முள்ளானலும்
மலரானாலும்
சரி நிகர் சமானம்.
காதல் பாதையில்
மட்டுமே
சாத்தியமாகின்ற
விந்தை.

அடிகளானாலும்
முத்தங்களானாலும்
சரி நிகர் சமானம்.
காதல் போதையில்
மட்டுமே
சத்தியமாகின்ற
வித்தை.

Saturday, March 27, 2010

குறளின் குரல் - 2

அதிகாரம்: 55. செங்கோன்மை

குறள் எண்: 545

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.


இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

விளக்கம்:

ஆடம்பரம் ஏதுமில்லை.
நடுவுநிலைமை தவறுவதில்லை.
செங்கோல் நெறியில் வழுவில்லை.
இங்ஙனம் இயல்பாய்
ஆட்சி செய்யும்
மன்னன் மட்டும் இருந்துவிட்டால்
பருவமழை பொய்க்காது;
விளைபொருட்கள் குன்றாது.

அதிகாரம்: 59. ஒற்றாடல்

குறள் எண்: 585

கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று.


கடாஅ உருவொடு கண் அஞ்சாது, யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

விளக்கம்:

அடுத்தவர் ஐயுறாத
மாற்றுரு தரித்தவன்;
எவரேனும் அடையாளம்
அறிந்து கொண்டாலும்
அவர்முன் அஞ்சாநெஞ்சன்;
அகப்பட்டாலும்
துன்புறுத்தப்பட்டாலும்
அரசன் தவிர
வேறெவர்க்கும்
தம் ஒற்றுச் செய்தி
சொல்லாத வல்லவன் -
இவனே ஒற்றன்.

அதிகாரம்: 53. சுற்றந் தழால்

குறள் எண்: 523

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.


அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடு இன்றி நீர் நிறைந்தற்று.

விளக்கம்:

குளத்திற்குக் கரை போல்வர்
நம் வாழ்க்கைக்குச் சுற்றத்தார்.
அவரோடு மனங்கலந்து
வாழ்தல் வேண்டும்.
சுற்றம் இல்லா வாழ்வு
கரையில்லாத குளப்பரப்பில்
நிறைந்திருக்கும் நீர் போலப்
பயனற்றதொன்றாகும்.

அதிகாரம்: 71. குறிப்பறிதல்

குறள் எண்: 702

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.


ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தொடு ஒப்பக் கொளல்.

விளக்கம்:

ஒருவர் உள்ளத்து
நினைப்பதைச் சற்றும்
ஐயுறாத வகையில்
உணர்ந்து கொள்பவன்
தெய்வத்துக்குச் சமமாவான்;
சரிவரக் குறிப்பறியும்
இவ்வாற்றல்
தெய்வீக ஆற்றலாகும்.

அதிகாரம்: 87. பகைமாட்சி

குறள் எண்: 864

நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது.


நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

விளக்கம்:

நீங்காத சினத்தைக்
உடையவன்;
பிறரிடத்து
மறைக்க வேண்டிய
செய்திகளை
மறைக்கும்
மனவலிமை இல்லாதவன் -
இவ்விருவரின்
பகை வெல்வது
யார்க்கும் எளிது.

Wednesday, March 24, 2010

ஆ! சிரமம்! ஆசிரமம்!

ஆசிரமங்களில்
ஆசிகள் வழங்கும்
ஆதி பகவன்கள்
ஆண்டவா!

ஆண்டவனைத் தேடி
ஆசிரமம் ஓடி
ஆனந்தலாஹிரியில்
ஆடித் திளைத்து
ஆர்ப்பரிக்கும்
ஆயிரமாயிரம்
ஆண்கள் பெண்கள்..

ஆசை போதையில்
ஆசிரமம் தேடி
அசல் போதையில்
அந்நிய நாட்டவரும்
அமிழ்ந்து திளைக்க..

அலுப்புடன் வியர்வை
அனுதினம் சிந்தி
அன்றாடம்
அல்லலுற்றுப் பிழைக்கும்
அங்கமுத்து தங்கமுத்துவின்
ஆயிரம் கோடி வரிப்பணமும்
ஆசிரம அழகுக் கட்டடங்களின்
அலங்காரச் சுவர்களில்
அல்லவா இழைக்கப்பட்டுள்ளன?

ஆத்திரப்படுவதா?
ஆச்சரியப்படுவதா?
ஆயாசப்படுவதா?
ஆதங்கப்படுவதா?

ஆண்டவா!
ஆண்டவா!

Saturday, March 20, 2010

குறளின் குரல் - 1

1. அழிவி நவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

   அல்லல் உழப்பதாம் நட்பு.

(அதிகாரம்: 79. நட்பு; குறள் எண்: 787)

விளக்கம்:


நண்பர்க்கு அழிவு வரும்போது அவர்க்கு உதவி செய்து அவ்வழிவை நீக்கி, அவரை நிலைபெறச் செய்வது நல்ல நட்பு; நீக்க முடியாத, தவிர்க்க முடியாத அழிவாக இருப்பின்,தானும் அவரோடு துன்புற்று வருந்துவது நல்ல நட்பு.

2. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

    மாண்பயன் எய்தல் அரிது.

(அதிகாரம்: 61. மடியின்மை; குறள் எண்: 606)

விளக்கம்:

நாட்டையே ஆளுகின்ற சிறந்த தலைவனின் நட்பு இருந்த போதிலும், சோம்பேல் உடையவர்களுக்கு அதனால் யாதொன்றும் பயனில்லை.

சிறந்து உறுதுணையாக எந்த சக்தி அருகில் இருந்தபோதும், சோம்பல் என்ற ஒன்று நம்மை ஆட்படுத்திவிட்டால்,எந்தத் துணையாலும் யாதொரும் பயனுமில்லை. சில நேரங்களில் சோம்பல் வருவது அனைவர் வாழ்விலும் நடப்பதுதான். ஆனாலும் எல்லாப் பொழுதுகளிலும் சோம்பலுடன் இருந்தால், சில சமயம் அந்தத் துணைகளின் வெறுப்பையே கூடச் சம்பாதிக்க நேரும்.

3. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

    இகழ்வாரை நோவது எவன்.

(அதிகாரம்: 24. புகழ்; குறள் எண்: 237)
விளக்கம்:

தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காவோ?

ஒரு செயல் கைகூடி வராத சமயத்தில், தன் தவறு அல்லது இயலாமை என்று யாரும் ஒத்துக் கொள்வதில்லை. புகழ் பெற மாற்றுவழியும் யோசிப்பதில்லை. அச்செயலுக்காக இகழப்படும்போது பிறரை நொந்து கொள்வது மிகவும் இயல்பான ஒன்றுதான். ..இன்றளவும் இது தொடர்கிறதுதானே..
 
4.அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
   பேணாது அழுக்கறுப் பான்.

(அதிகாரம்:  17. அழுக்காறாமை; குறள் எண்: 163)

விளக்கம்:

பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்.

பிறரின் உடைமைகளைக் கண்டு பொறாமைப்படுவது தவறு என்ற கருத்துதான் பெரியோரால் எப்போதும் வலியுறுத்தப்படும். ஆனால் வள்ளுவத்தின் சிறப்பு எதையும் சற்றே விரிவாக ஆய்ந்து நோக்குவதுதானே...பிறரின் ஆற்றல், ஆக்கம் கண்டு பொறாமைப்படுவதுடன், பாராட்டாமல் இருப்பதும் தவறே, தனக்கே ஓர் இழப்பே... என்று இன்னுமொரு கோணத்தில் சுட்டிக் காட்டுகிறார்
 
5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
    புண்ணென்று உணரப் படும்.

(அதிகாரம்: 58. புகழ்; குறள் எண்: 575)

விளக்கம்:

கண்ணிற்கு அழகு தரும் ஆபரணம் கண்ணோட்டமே. அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது "புண்" என்றே சான்றோரால் கருதப்படும்.

இரக்க குணம் இல்லாதவர் வாழ்வு அர்த்தமற்ற ஒன்றாகும். இலக்கியம், திரைப்படம், நாடகம்..இவற்றிலுள்ள பாத்திரங்கள் ஏதோவோர் பாதிப்பை நம்முள் ஏற்படுத்துவதற்கு இந்தக் கண்ணோட்டம்தான் காரணம். இயல்பான வாழ்வில் மட்டும், ஏனோ இருக்க வேண்டிய கண்ணோட்டம் பல சமயங்களில் நம்மிடம் இருப்பதில்லை. கண்ணோட்டம் இல்லாத மனிதன் நிலையான வெற்றி பெறுவானா என்பது சந்தேகமே

Monday, March 15, 2010

நான் அறிந்த சிலம்பு (உரை பெறும் கட்டுரை) - பகுதி 5

உரை பெறும் கட்டுரை

அன்று முதல்
மழைவளம் இழந்து
வறுமையெய்தி
அம்மை நோயும்
தொழு நோயும்
பிணி பலவும்
பாண்டி நாட்டில் தொடர்ந்திருக்க...

இடர் தழைய விளைந்தனன்
கொற்கை வேந்தன்
வெற்றிவேல் செழியன்.

பத்தினி கண்ணகியைச்
சாந்தப்படுத்தவென்று
பலிக்களத்தில்
பொற்கொல்லர் ஆயிரம்
பலியிட்டனன்.
வேள்வி விழாச் செய்தனன்.

நங்கையவளும் சாந்தமுற
நாட்டில் நல்மழை பெய்தது;
நோயும் துன்பமும் நீங்கியது.

இது கேள்வியுற்ற
கொங்கு மன்னன் இளங்கோசர்
தம் நாட்டகத்து
நங்கைக்கு விழாவெடுத்து
நற்சாந்தி செய்திட
மழைவளம் என்றும்
பொய்க்காமல் நிலைத்திட்டது.

அதுகேட்ட
கடல்சூழ் இலங்கைவேந்தன்
கயவாகு அவனும்
பலிபீடம் நிறுவிப்பின்
கோவிலொன்றும் கட்டினான்.

துன்பம் அழித்து
இன்பவரம்
அள்ளித் தரும்
அழகு பத்தினிக்கு
ஆண்டுதோறும் ஆடித்திங்களில்

சுற்றம்சூழ விழாவெடுத்துச்
சீரும் சிறப்பும் செய்திருக்க
மாரியது பொய்க்காமல் பொழிந்து
வளம்பல பெருகிப்
பிழையாமல் விளையும்
விளைச்சல் நாடாயிற்று.

சோழன் பெருங்கிள்ளியும்
"வரமும் வளமும்
எதுவாயினும்
தப்பாமல் தரும்
இவள்தானொரு
பத்தினிக் கடவுள்" என்று
நித்தம் விழா எடுத்துச்
சிறப்பித்து நின்றனன்.

சிலம்பின் வரிகள்(உரை பெறும் கட்டுரை) இங்கே....

Sunday, March 14, 2010

குறளின் குரல் ஏன் வசப்படுத்துகிறது?

நம் அனுபவம், உணர்வுகள், நம் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள் பெரும்பாலான நேரங்களில் பிறருக்கும் பொதுவாக அமைகிறது. ஒருவருக்கொருவர் பலவகைகளில் வேறுபட்டு நின்றாலும் சில உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை.

'நீயும் இதை உணர்ந்திருக்கிறாயா?'; 'நீயும் இதை அனுபவித்திருக்கிறாயா?' 'உனக்கும் இதே போல் நடந்திருக்கிறதா?' ஒத்த நிகழ்வுகள், உணர்வுகள் உள்ள நபர்களைப் பார்க்கும் போது, பழகும் போது ...சற்றே ஆழ்ந்து பார்க்கும் போது நம்மையறியாமல் சட்டென்று ஒரு நெருக்கம் வரும். சில புத்தகங்களைப் படிக்கும் போதும், 'அட..இது போல் எனக்கும் நடந்திருக்கிறதே..இதை நானும் உணர்ந்திருக்கிறேனே' என்ற உணர்வுப் பொறி தட்டும்.

அப்படிப் பல பொதுவான உணர்வுகள், நெறிகள்..இவற்றைத் தொகுத்து வழங்கும் திருக்குறள் அனைவரையும் கவர்வதற்கு இதுவே முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் விரவி நிற்பதுதான் மனித வாழ்க்கை. இம்மூன்றின் சார்த்தையும் வடிகட்டிக் கொடுக்கும் வழிகாட்டியாகும் இந்தத் திருநூல்.

வாழ்க்கை அகராதி என்று திருக்குறளைக் கூறலாம். வினாவுக்கு விடையாய், பிரச்சனைக்குத் தீர்வாய், ஐயம் தெளிவிக்கும் விளக்கமாய், வழிகாட்டியாய்...இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பார்த்தேயறியாத வள்ளுவரோடு ஒரு நெருக்கம் வருகிறதென்றால்,...அடடா...இதோ ஒரு கவிஞர்..என்னைப் போலவே நினைக்கிறாரே..எனக்காகவே நினைக்கிறாரே...என் உணர்வுகளைப் பதித்திருக்கிறாரே...என் வாழ்க்கையில் நடப்பதையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கிறாரே....எப்படி நடக்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறாரே..எவையெல்லாம் கூடாது என்று எச்சரிக்கிறாரே..என்று பரந்து விரிந்து கொண்டே போகிறது என் வியப்பு..ஈர்ப்பு.

இதே போல்தான் குறளின் குரல் அனைவரையும் வசப்படுத்தி வாழ்க்கையை வாசப்படுத்தி நிற்கிறது. மனோதத்துவம் அறிந்த புலவனின் வாழ்க்கை அனுபவத் தொகுப்பு எனபதாலேயே இதன் கருத்துகள் காலத்தை வென்று அனைவரையும் கவர்ந்து, ஈடு இணையின்றி இலக்கிய உலகத்தில் கோலோச்சி நிற்கிறது.

இந்தக் குரலின் ஆதிக்கத்தை அனுபவிக்கும் நாம் அனைவரும்தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்!