Saturday, April 10, 2010

குறளின் குரல் - 3

அதிகாரம்: 113. காதற்சிறப்புரைத்தல்

குறள் எண்: 1127

கண்ணுள்ளார் காத லராகக் கண்ணு
மெழுதேங் கரப்பாக் கறிந்து.


கண் உள்ளார் காதலவராக, கண்ணும்
எழுதேம், கரப்பாக்கு அறிந்து.

விளக்கம்:

எப்போதும்
என்
கண்ணிலேயே
உள்ளார்
என் காதலர்.
அவர்
கண்ணைவிட்டு
மறைய நேருமே
என்றஞ்சுவதால்
மையெழுதும்
பழக்கத்தையே
கைவிட்டுவிட்டேன்.

-----------------
அதிகாரம்: 35. துறவு
குறள் எண்: 341

யாதனின் யாதனி நீங்கியா னோத
லதனி னதனி னிலன்.


யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்.

விளக்கம்:

எவ்வெப்
பொருள் மீது
ஆசை கொள்வதை
ஒருவன்
விடுக்கிறானோ,
அவ்வப்
பொருள் குறித்து
அவன்
துன்பமடைவதில்லை.
-------------------
அதிகாரம்: 2. வான் சிறப்பு
குறள் எண்: 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
துப்பார்க்குத் துப்பு, ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்குத்
துப்பு ஆய தூஉம் மழை.
விளக்கம்:

(துப்பு - உணவு)

உண்பவர்களுக்கு
உணவுப் பொருள்களை
உண்டாக்கித் தருகிறது;
உண்பவர்களுக்குத் தானே
உகந்த
உயர்ந்த
உணவாகவும் ஆகி
உற்ற தாகம் தணித்து
உய்ந்து நிற்கிறது..
உயிர்களை
உய்வித்து
உயிர்தரும் மழை.
------------------
அதிகாரம்: 36. மெய்யுணர்தல்
குறள் எண்: 359

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
சார்புஉணர்ந்து, சார்புகெட ஒழுகின், மற்று அழித்துச்
சார்தரா, சார்தரும் நோய்.

விளக்கம்:

அனைத்திற்கும்
சார்பான
செம்பொருளின்
மெய்யறிந்து
யான் எனது என்ற
பொய்ப்பொருள் மீது
பற்றை விடுத்து
ஒருவன் ஒழுகுவானாயின்
அவனைப் பிற துன்பங்கள்
சார்ந்து வாரா..
-------------------

அதிகாரம்: 5. இல்வாழ்க்கை
குறள் எண்: 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப ரலை.


தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.

விளக்கம்:

தன் குல முன்னோர்
தான் வழிபடும் தெய்வம்
தன் விருந்தினர்,
தன் சுற்றத்தார்,
தான், தன் குடும்பம் போற்றிக் காத்தல் --
தப்பாமல் இவை ஐந்திடத்தும்
தளராத அறத்தைப் பேணுதல்
தலைவனாம் இல்லறத்தானுக்குத்
தலையாய கடமையாகும்.

5 comments:

தமிழ் said...

/எவ்வெப்
பொருள் மீது
ஆசை கொள்வதை
ஒருவன்
விடுக்கிறானோ,
அவ்வப்
பொருள் குறித்து
அவன்
துன்பமடைவதில்லை.
/

அனைத்தும் அருமை

குறிப்பாக‌ இந்த‌ விள‌க்க‌க் க‌விதை அருமை

பாச மலர் / Paasa Malar said...

நன்றி திகழ்

கோபிநாத் said...

அனைத்தும் அருமை... ;)

நம்ம துப்பார்க்குத்....மட்டும் கொஞ்சம் கஷ்டமாக போச்சு....;)))))

பாச மலர் / Paasa Malar said...

ரொம்ப உஉன்னு உருட்டிட்டேன்னு நினைக்கிறேன் கோபி..

ராமலக்ஷ்மி said...

அருமையான விளக்கங்கள் கவிதை வடிவில். தொடருங்கள் பாசமலர்.