Thursday, October 6, 2011

அரசியல் மங்காத்தா!!

என்ன ஒரு பரிமாண வளர்ச்சி! டார்வின் கோட்பாடு கூறுவது உடற்கூறு தொடர்பான 'survival of the fittest'...ஆனால் நம் தற்கால..ஏன், வருங்கால அரசியலைக் கருத்தில் கொண்டால், டார்வின் கோட்பாடு உடற்கூற்றைத் தாண்டிய உளவியல் தொடர்பானதாக இருப்பது என்ன பெரிய கொடுமை.... யாரை மிதித்து யார் முன்னேறுவது..இதுவும் உளவியல் தொடர்பான survival of the fittest...

எந்த ஒரு கட்சி மீதும் நம்பிக்கையில்லை...எந்த ஒரு தலைவனுக்கும் / தலைவிக்கும் கொள்கைகளும் இல்லை..கொள்கை பெயரளவில் இருந்தாலும் அதைப் பின்பற்றுவதாக இல்லை...எதில் வேறுபட்டாலும் இதில் மட்டும் அரசியல்வாதிகளுக்குத்தான் என்ன ஒற்றுமை!

உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவது கொஞ்சம் மக்களுக்காக ஏதோ செய்து வந்தார்கள்..இந்த உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் அதிசயங்களைப் பார்த்தால், உள்ளூர்த் திட்டங்கள் 10 சதவிகிதமாவது நிறைவேற்றப்படுமா என்று சந்தேகிக்க வைக்கின்றன...

  • வாக்காளர்கள் எண்ணிக்கையோ என்று மலைக்குமளவு வேட்பாளர் எண்ணிக்கை...
  • தேர்தல் அதிகாரி யார் என்று தெரியாத கட்சித் தலைவர்..
  • கூட்டணியை அவ்வப்போது கழற்றி, மீண்டும் சேர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பவாதம்...
  • காசு வாங்கிக்கொண்டு வேட்புமனு திரும்பப் பெறும் வாங்கும் வேட்பாளர்..
  • தன்னையறியாமலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஒரு வேட்பாளர்..
  • அதிக வேட்பாளர்கள் உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை சரியானதுதானா என்று நீதிமன்றத்தில் வரப்போகும் வழக்குகள்...
  • இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..

தொலைக்காட்சிச் செய்திகள் பார்ப்பாவர்கள் தொடர்கள் பார்ப்பவர்களைத் தூற்ற...

தொடர்கள் பார்ப்பவர்கள் செய்திகள் பார்ப்பவர்களைத் தூற்ற..

ஆட்சி அரசியலும் சரி..குடும்ப அரசியலும் சரி...

எதுதான் சரியாக இருக்கிறது?

சரிதான்...inky pinky ponky  முறையில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் என்னதான் ஆகப்போகிறது..

அரசியல் மங்காத்தா ஆட்டத்தில் மீண்டும் மீண்டும் இழப்பது மக்கள் மட்டுமே...

குறளின் குரல் - 33

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 99

இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.


இன் சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ
வன் சொல் வழங்குவது?

விளக்கம்:

பிறர் பேசும் இனிமையான சொற்கள் தமக்கு இன்பம் தருகிறது என்று அனுபவித்து அறிந்தவர், ஏன்தான் பிறரிடம் கடுமையான சொற்கள்
பேசுகின்றாரோ?
------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 152

பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று.


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

விளக்கம்:

தீங்கு செய்தவரைப் பற்றி எண்ணிப் பார்க்கும்போது மூன்று நிலைகளாய் வகைப்படுத்தலாம். அவர் செய்த தீங்கை ஒறுத்தல்(தண்டித்தல்), பொறுத்தல், மறத்தல் என்ற மூன்று நிலைகள்தாம் அவை.

ஒருவர் தீங்கு செய்த போது அவரைத் தண்டிக்க முடியும்; என்றாலும் அவ்வாறு செய்யாமல் அத்தீங்கைப் பொறுத்துக்கொள்ளுதல் சிறந்தது. அத்தீங்கை அப்போதே மறந்துவிடுவது என்பது பொறுத்தலை விடச் சிறந்ததாகும்.தண்டித்தலினும் சிறந்தது பொறுத்தல்;பொறுத்தலினும் சிறந்தது மறத்தல்.
----------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 108. கயமை
குறள் எண்: 1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு.


ஈர்ங் கை விதிரார், கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு.

விளக்கம்:

கயவர்கள், தம் கன்னத்தை உடைக்கும் அளவு வலிமையான முறுக்கி வளைந்த முரட்டுக் கரங்கள் வாய்க்காதவர்க்கு அல்லாது, வேறு எவர்க்கும் தன் எச்சிற்கையைக் கூட உதறமாட்டார்கள்.

தம் கன்னத்தை உடைத்துவிடுவார்களோ என்று அவர்கள் வலிமைக்குப் பயந்துதான் கீழ்மக்கள் ஈவர். உண்ட எச்சிற்கையில் மிஞ்சக்கூடியது சில
பருக்கைகள்தாம். அதைக்கூட ஈவதற்கு கீழ்மக்கள் விரும்பமாட்டார்கள்.

கயமை - நற்குணங்கள் ஏதுமில்லாத கீழ்மக்களின் தன்மை
கயவர் - கீழ்மக்கள்
கொடிறு - கதுப்பு, கன்னம், யானை மதச் சுவடு, குறடு, பூச நாள்
விதிர்த்தல் - உதறுதல், சிதறுதல், தெறித்தல், அஞ்சுதல், நடுங்குதல், சொரிதல், அசைத்தல்
விதிரார் - உதறமாட்டார், சிதறவிடமாட்டார்

------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 241

அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.


அருட் செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருட் செல்வம்
பூரியார் கண்ணும் உள.

விளக்கம்:

அருளாகிய செல்வமே செல்வங்கள் அனைத்துள்ளும் சிறந்த செல்வமாகும். பொருட்செல்வம் என்பது பண்பற்ற இழிந்தவர்களிடத்தும் காணப்படும்.

ஆனால் அருளாகிய செல்வமோ மனிதப் பண்பில் உயர்ந்து சிறந்தவர்களிடம் மட்டுமே காணப்படும்.

பூரியார் - இழிந்தவர், கீழ்மக்கள், கொடியவர்
----------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 92. வரைவின் மகளிர் / வரைவு இல் மகளிர்
குறள் எண்: 919


வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்க ளாழு மளறு.


வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

விளக்கம்:

எந்தவிதப் பாகுபாடும், வரையறையும் இல்லாது, மாட்சிமை கருதாது, பொருள் கொடுப்பவர்க்கெல்லாம் தம் அழகை விற்கும் அழகிய அணிமணிகளைப் பூண்ட இளம் மகளிரின் மெல்லிய தோள்கள், உயர்வில்லாத இழிந்த கீழ்மக்கள் ஆழ்ந்து மூழ்கும் சேறாகும் / நரகமாகும்.

வரைவு - திருமணம், எல்லை, பிரிவு, அளவு, எழுதுதல்

திருமணம் என்ற பந்தம் ஒருவருக்கே உரியோர் என வரம்பு / எல்லை வகுத்துக் கொள்வதால் வரைவு எனப்படும். அத்தகைய வரைவு
வகுத்துக்கொள்ளாமல், பொருள் தருபவர்களுக்கெல்லாம் பயன்படும் பாலியல் தொழிலில் ஈடுபடும் மகளிரை வரைவு இல்லாத மகளிர் என்பர்.

மாண்- மாட்சிமை, மடங்கு, மாணவன், பிரமசாரி

இழை - அணிகலன், கையில் கட்டும் காப்பு, நூல், நூலிழை

புரை - உயர்ச்சி, பெருமை,குற்றம், குரல் வளை, விளக்கு மாடம், உள்ளோடும் புண், பூமி, கண் நோய் வகை, பொய், களவு, மடிப்பு, கூறுபாடு, ஆசிரமம்,
வீடு, தேவாலயம், அறை, மாட்டுத்தொழுவம், பழைமை, ஒப்பு

பூரியர் - கீழ்மக்கள், இழிந்தவர், கொடியவர்

ஆழும் - அமிழும், மூழ்கும்

அளறு - குழை சேறு, நரகம், குழம்பு நீர்
----------------------------

பால்: பொருட்பால்
இயல்: கூழியல்
அதிகாரம்: 76. பொருள் செயல் வகை
குறள் எண்: 751

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.


பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது, இல்லை பொருள்.

விளக்கம்:

ஒரு பொருளாகக் கூடப் பிறரால் மதிக்கப்படாதவர் இருப்பர்; அவரின் தகுதியையும், பிறர் மதிக்கத்தக்கவராய் மாற்றிக் கொடுக்கக் கூடியது
பொருட்செல்வம் மட்டுமே. இப்படிப்பட்டவரையும் உயர்த்திக் காட்டும் பொருட்செல்வத்தைத் தவிர, ஒருவனுக்குச் சிறந்த பொருள் என்று சொல்லிக் கொள்ளக்கூடியது வேறேதுவும் இல்லை. இவ்வாறு பொருட்செல்வத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.

தகுதியற்றவரையும் தகுதியுடையவராக்கிக் காட்டுவது அவரிடம் உள்ள பணமேயன்றி வேறெதுவும் இல்லை.

குறளின் குரல் - 32

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 936

அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னு
முகடியான் மூடப்பட் டார்.


அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட் டார்.

விளக்கம்:

சூது என்னும் தீயசக்தியால் ஆட்கொள்ளப்பட்டவர், வயிறு நிறைய உணவு உண்ணும் வாய்ப்பின்றி வறுமைப்பட்டு, எல்லாத் துன்பங்களுக்கும் ஆளாகி
வருந்துவர்.

இக்குறளுக்கு உரை சொல்ல வந்த பலரும் முகடி - மூதேவி என்றே கூறுகின்றனர். வள்ளுவம் இறைவனைப் பற்றிப் பேசுகிறது / பேசுவதில்லை என்ற வாதம் வருகையில் இக்குறளில் வரும் முகடி என்ற வார்த்தையும் சர்ச்சைக்குள்ளாகிறது.

இவ்விளக்கத்தில் முகடி என்னும் பதத்துக்குத் தீயசக்தி என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

அகடு - வயிறு, உள், நடு, மேடு, நடுவு நிலை, பொல்லாங்கு
முகடி- முகட்டுத்தரத்தில் / மேல்கூரையில் உள்ள பேய், மூதேவி
---------
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 71. குறிப்பறிதல்
குறள் எண்: 707

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்
காயினுந் தான்முந் துறும்.


முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும்?

விளக்கம்:

ஒருவர் மனதில் மகிழ்ச்சியுறும்/விருப்புறும் போதும், சினமுறும்/வெறுப்புறும் போதும், அவ்வுணர்ச்சிய அவருடைய முகம் முந்திக் கொண்டு காட்டி விடுகிறது. அப்படி முன்னறிந்து சொல்லவல்ல முகத்தை விடப் பேரறிவும், அனுபவ அறிவும் வாய்ந்தது வேறேதுவும் உண்டோ?

முதுக்குறை - பேரறிவு, அனுபவம் பெறுதல், பூப்படைதல், பேதைமை
----------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 17. அழுக்காறாமை
குறள் எண்: 165


அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.


அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது.

விளக்கம்:

பொறாமை குணம் உடையவர்க்குத் துன்பம் விளைவிக்க அந்தக் குணம் ஒன்றே போதுமானது. அவர்க்குத் துன்பம் தர வேறு பகைவர்கள் யாரும்
தேவையில்லை. பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் கூட, அப்பொறாமை, அதனை உடையவர்களுக்கே முதலில் தீங்கு விளைவிக்கும்.

அழுக்காறு - பொறாமை
சாலும் - போதும்
ஒன்னார் - பகைவர்
வழுக்கு - கேடு, தோல்வி, சறுக்குகை, மறதி, தவறு, வழுவழுப்பானது
---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 05. இல்வாழ்க்கை
குறள் எண்: 46

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.


அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

விளக்கம்:

ஒருவன் இல்லற வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு முறைப்படி நடத்தி வாழ்ந்து வந்தால், இல்லறத்திற்கு மாறான வேறு வழிகளில் போய்
அடையும் பயன் தான் என்ன? ஒன்றுமில்லை.

அறநெறி கூடிய இல்வாழ்க்கையால் பெறும் பயனை, வேறு எந்த வாழ்க்கை நெறியாலும் அடைந்திட இயலாது.

போஒய் - போய் என்பதன் அளபெடை; ஏளனக் குறிப்பாக வந்துள்ளது.
----------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 133. ஊடல் உவகை
குறள் எண்: 1326

உணலினு முண்ட தறலினிது காமம்
புணர்தலி னூட லினிது.


உணலினும் உண்டது அறல் இனிது; காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

விளக்கம்:

உணவு, மேலும் மேலும் உண்பதை விட, உண்டது செரிப்பது இனியதாகும். அது போல், காமத்தில் கூடியிருப்பதைக் காட்டிலும், இடையிடையே
ஊடலில் பிரிந்து நிற்பது மேலும் மேலும் காதலை வளர்த்து இன்பம் தருவதாகும்.

செரித்தபின் உண்டாகும் பசி, உணவின் இன்சுவை அதிகரிக்கும். ஊடலின்பின் வரும் கூடல் காதலின் சுவை அதிகரிக்கும்.

அறல் - இல்லாமல் போதல், கருமணல், நீர், நெறி, அறுதல், திருமணம், விழா
-----------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 106. இரவு (கேட்டுப்பெறுதல் / பிச்சை)
குறள் எண்: 1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி.


இரப்பான் வெகுளாமை வேண்டும்; நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி.

விளக்கம்:

பொருள் வேண்டிப் பிறரிடம் இரந்து நிற்பவன் பொருள் கிடைக்கவில்லையே என்று கோபப்படுதல் கூடாது. வேண்டிய போதெல்லாம் பொருள் கிடைக்காது; செல்வம் தேவையான சமயத்தில் உதவாது என்பதற்கு அவனது வறுமைத் துன்பம் ஒன்றே போதுமான சான்றாகும்.

கரி - சான்று, சாட்சியம், யானை, நஞ்சு, மிளகு, அடுப்புக்கரி, நிலக்கரி, கரிந்தது, பெண் கழுதை, மரவைரம், விருந்தினன், பயிர் தீய்தல்