Thursday, October 6, 2011

குறளின் குரல் - 33

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 99

இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.


இன் சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ
வன் சொல் வழங்குவது?

விளக்கம்:

பிறர் பேசும் இனிமையான சொற்கள் தமக்கு இன்பம் தருகிறது என்று அனுபவித்து அறிந்தவர், ஏன்தான் பிறரிடம் கடுமையான சொற்கள்
பேசுகின்றாரோ?
------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 152

பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று.


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

விளக்கம்:

தீங்கு செய்தவரைப் பற்றி எண்ணிப் பார்க்கும்போது மூன்று நிலைகளாய் வகைப்படுத்தலாம். அவர் செய்த தீங்கை ஒறுத்தல்(தண்டித்தல்), பொறுத்தல், மறத்தல் என்ற மூன்று நிலைகள்தாம் அவை.

ஒருவர் தீங்கு செய்த போது அவரைத் தண்டிக்க முடியும்; என்றாலும் அவ்வாறு செய்யாமல் அத்தீங்கைப் பொறுத்துக்கொள்ளுதல் சிறந்தது. அத்தீங்கை அப்போதே மறந்துவிடுவது என்பது பொறுத்தலை விடச் சிறந்ததாகும்.தண்டித்தலினும் சிறந்தது பொறுத்தல்;பொறுத்தலினும் சிறந்தது மறத்தல்.
----------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 108. கயமை
குறள் எண்: 1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு.


ஈர்ங் கை விதிரார், கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு.

விளக்கம்:

கயவர்கள், தம் கன்னத்தை உடைக்கும் அளவு வலிமையான முறுக்கி வளைந்த முரட்டுக் கரங்கள் வாய்க்காதவர்க்கு அல்லாது, வேறு எவர்க்கும் தன் எச்சிற்கையைக் கூட உதறமாட்டார்கள்.

தம் கன்னத்தை உடைத்துவிடுவார்களோ என்று அவர்கள் வலிமைக்குப் பயந்துதான் கீழ்மக்கள் ஈவர். உண்ட எச்சிற்கையில் மிஞ்சக்கூடியது சில
பருக்கைகள்தாம். அதைக்கூட ஈவதற்கு கீழ்மக்கள் விரும்பமாட்டார்கள்.

கயமை - நற்குணங்கள் ஏதுமில்லாத கீழ்மக்களின் தன்மை
கயவர் - கீழ்மக்கள்
கொடிறு - கதுப்பு, கன்னம், யானை மதச் சுவடு, குறடு, பூச நாள்
விதிர்த்தல் - உதறுதல், சிதறுதல், தெறித்தல், அஞ்சுதல், நடுங்குதல், சொரிதல், அசைத்தல்
விதிரார் - உதறமாட்டார், சிதறவிடமாட்டார்

------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 25. அருளுடைமை
குறள் எண்: 241

அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.


அருட் செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருட் செல்வம்
பூரியார் கண்ணும் உள.

விளக்கம்:

அருளாகிய செல்வமே செல்வங்கள் அனைத்துள்ளும் சிறந்த செல்வமாகும். பொருட்செல்வம் என்பது பண்பற்ற இழிந்தவர்களிடத்தும் காணப்படும்.

ஆனால் அருளாகிய செல்வமோ மனிதப் பண்பில் உயர்ந்து சிறந்தவர்களிடம் மட்டுமே காணப்படும்.

பூரியார் - இழிந்தவர், கீழ்மக்கள், கொடியவர்
----------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 92. வரைவின் மகளிர் / வரைவு இல் மகளிர்
குறள் எண்: 919


வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்க ளாழு மளறு.


வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

விளக்கம்:

எந்தவிதப் பாகுபாடும், வரையறையும் இல்லாது, மாட்சிமை கருதாது, பொருள் கொடுப்பவர்க்கெல்லாம் தம் அழகை விற்கும் அழகிய அணிமணிகளைப் பூண்ட இளம் மகளிரின் மெல்லிய தோள்கள், உயர்வில்லாத இழிந்த கீழ்மக்கள் ஆழ்ந்து மூழ்கும் சேறாகும் / நரகமாகும்.

வரைவு - திருமணம், எல்லை, பிரிவு, அளவு, எழுதுதல்

திருமணம் என்ற பந்தம் ஒருவருக்கே உரியோர் என வரம்பு / எல்லை வகுத்துக் கொள்வதால் வரைவு எனப்படும். அத்தகைய வரைவு
வகுத்துக்கொள்ளாமல், பொருள் தருபவர்களுக்கெல்லாம் பயன்படும் பாலியல் தொழிலில் ஈடுபடும் மகளிரை வரைவு இல்லாத மகளிர் என்பர்.

மாண்- மாட்சிமை, மடங்கு, மாணவன், பிரமசாரி

இழை - அணிகலன், கையில் கட்டும் காப்பு, நூல், நூலிழை

புரை - உயர்ச்சி, பெருமை,குற்றம், குரல் வளை, விளக்கு மாடம், உள்ளோடும் புண், பூமி, கண் நோய் வகை, பொய், களவு, மடிப்பு, கூறுபாடு, ஆசிரமம்,
வீடு, தேவாலயம், அறை, மாட்டுத்தொழுவம், பழைமை, ஒப்பு

பூரியர் - கீழ்மக்கள், இழிந்தவர், கொடியவர்

ஆழும் - அமிழும், மூழ்கும்

அளறு - குழை சேறு, நரகம், குழம்பு நீர்
----------------------------

பால்: பொருட்பால்
இயல்: கூழியல்
அதிகாரம்: 76. பொருள் செயல் வகை
குறள் எண்: 751

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.


பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது, இல்லை பொருள்.

விளக்கம்:

ஒரு பொருளாகக் கூடப் பிறரால் மதிக்கப்படாதவர் இருப்பர்; அவரின் தகுதியையும், பிறர் மதிக்கத்தக்கவராய் மாற்றிக் கொடுக்கக் கூடியது
பொருட்செல்வம் மட்டுமே. இப்படிப்பட்டவரையும் உயர்த்திக் காட்டும் பொருட்செல்வத்தைத் தவிர, ஒருவனுக்குச் சிறந்த பொருள் என்று சொல்லிக் கொள்ளக்கூடியது வேறேதுவும் இல்லை. இவ்வாறு பொருட்செல்வத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.

தகுதியற்றவரையும் தகுதியுடையவராக்கிக் காட்டுவது அவரிடம் உள்ள பணமேயன்றி வேறெதுவும் இல்லை.

1 comment:

கோபிநாத் said...

நல்ல பகிர்வு ! ;-)

\\தண்டித்தலினும் சிறந்தது பொறுத்தல்;பொறுத்தலினும் சிறந்தது மறத்தல்.\\

விருமாண்டி வசனம் ஞாபகத்துக்கு வருது...!

மன்னிப்பு கேட்குறவான் மனுஷன் மன்னிக்க தெரிஞ்சவன் பெரியமனுஷன் ;-)