Monday, April 23, 2012

நான் அறிந்த சிலம்பு - 16

புகார்க்காண்டம் - 03. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே..70-81


யாழ்ப் புலவன்


ஏழிசைதனை
இருவரிசைகளாக்கிச் செய்யப்பட்ட
'செம்முறைக் கேள்வி' என்னும்
சிறப்புப் பெயர் பெற்றது யாழ்.

செம்பாலை முதலிய
எழுபாலைப் பண்களையும்
அவற்றுக்கிடையே தோன்றும்
ஐந்து அந்தரப்பாலைப் பண்களையும்
அவற்றின் இணை நரம்புகளையும்
அணைத்து இசைத்துச் சென்றிடும் யாழ்.

இசைத்தமிழின் இலக்கணங்கள்
இம்மியளவும் குறைந்திடாது
வட்டப்பாலையென இசைத்து
அளவைகளின் அழகோடு
அரங்கேற்றுவது யாழ்.

வட்டப்பாலை முடியும் இடத்து
வன்மையாய் நிற்பது 'தாரம்'.
வட்டப்பாலை தொடங்கும் இடத்து
மென்மையாய் நிற்பது 'குரல்'.

'தாரம்' எனும் இசை அணங்குக்குரியவை
அலகுகள் இரண்டு.
'குரல்' எனும் இசை மகளுக்குரியவை
அலகுகள் நான்கு.
 
தாரம் அதன் அலகுகள்
இரண்டில் ஒன்றையும் (1)
குரல் அதன் அலகுகள்
நான்கில் இரண்டையும் (2)
கூட்டியே (1+2 = 3)
தார நரம்பில்
மூன்று (3) அலகுடைய
இனிய இசையை
உண்டாக்கியவிடத்துத்
தோன்றினள் 'கைக்கிளை ' எனும்
 இசை அணங்கு.

தாரம் எனும்
மெய்க்கிளை நரம்பு
கைக்கிளையாகி நின்றது இங்ஙனம்.

(தாரம் 1 அலகு + குரல் 2 அலகு = கைக்கிளை)

தாரம் என்னும் இசைத்தாய்
 பொலிவுடன் வலிவும் உடையவள்;
தன்னிடம் எஞ்சியிருந்த
ஓர் அலகை
அருகில் இருந்த
'விளரி' என்பாளுக்கு வழங்கினள்;
இவ்வழியே
'விளரி' தன் தன்மையது மாறித்
'துத்தம்' எனும் நரம்பாகிப் போனது.

அதுபோலவே
குரல் இளி உழை முதலான
ஏனைய இசை மகளிரும்
தத்தமக்கு ஏற்ற
கிளைஞர் இடங்களை எய்தினர்.

செம்முறை மாறிப்போய்
இங்ஙனம்
பதினாற் கோவையானது
 யாழ்ப் புலவன் இசைக்கும் போது.
 
உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை
இவை கிளைத்த வழியில்
மென்மையாய் நான்கும்
சமனாய் ஏழும்
வன்மையாய் மூன்றும்
இவை பதினான்கு கோவை.

உழை நின்றது முதல் இடம்.
 கைக்கிளை நின்றது இறுதி இடம்.

இப்புதிய கோவைகளாலே தோன்றின
செம்பாலை முதலிய புதிய பண்கள்
புதியதொரு மரபினிலே
யாழிசை தன்னிலே.

(யாழ்ப் புலவன் தலைப்பில் முதல் தொகுப்பு இது..அடுத்த தொகுப்பு அடுத்த பகுதியில் தொடரும்.)

வல்லமை 16.04.12 இதழில் வெளிவந்தது.

Friday, April 20, 2012

நடுநிசிக்குப் பின் மூன்றாம் ஜாமத்தில்...

ஒரு ஹிந்திக் கவிதையின் தமிழாக்கம்

நான் பார்த்திருந்தேன்
என்னிலிருந்து மிகவும் தூரத்தில்
விண்மீன்களை.

நான் அவற்றைப் பார்த்த அந்தக்கணம்
அவற்றிலிருந்து எனக்கும்கூட
அதே தூரம்தான்.

கண்சிமிட்டிக் கடந்து போகும்
அவ்விண்மீன்கள்
கடந்து செல்லும்
காலமது போலவே.

நடு நிசிக்குப் பின்னான
மூன்றாம் ஜாமத்துப் பொழுது
இரவின் ஆழத்தினூடே
வேட்டையாடி விரட்டிச் செல்கிறது
விடியல்தனை.

முழுமையானதொரு தெளிவுக்கு
வரமுடியவில்லை என்னால்.

முதல் முறையாகத்தான்
இந்த வாழ்க்கையை
நான் வாழ்கிறேனா?
இல்லை,
மீண்டுமொருமுறை
திரும்பத்தான் வாழ்கிறேனா?
வாழ்ந்து கொண்டேயிருக்கையில்
சுவாசத்தின் அந்த முதல் கணத்தை
மறந்துதான் போனேனா?

மீனும்கூடத் தண்ணீரைக் குடித்திடுமா?
சூரியனும்கூட வெப்பமது உணர்ந்திடுமா?
ஒளியும்கூட இருளதனைக் கண்டிடுமா?
மழையும்கூட நனைந்துதான் போயிடுமா?
கனவுகளும்கூட நித்திரை குறித்த
வினாக்களைத்தான் வினவிடுமா
என்னைப் போலவே?

நான் நடந்தேன்
நீளமான மிகவும் நீளமான
நடை நடந்தேன்.

அப்போது நான் பார்த்தேன்.
நான் பார்த்த அந்தக்கணம்
எனக்கு மிக அருகில் விண்மீன்கள்.

இன்றைய பொழுது முழுவதும்
மழையது பொழிந்திட
உந்தன் முகத்திலிருந்து
கழுவப்பட்டுப்போயின வார்த்தைகள்.

அதீதம் ஏப்ரல் 09, 2012 இதழில் வெளிவந்தது...

ஹிந்திக் கவிதை

मैंने तारों को देखा बहुत दूर
जितना मैं उनसे
वे दिखे इस पल में
टिमटिमाते अतीत के पल
अँधेरे की असीमता में,
सुबह का पीछा करती रात में
यह तीसरा पहर

और मैं तय नहीं कर पाता
क्या मैं जी रहा हूँ जीवन पहली बार,
या इसे भूलकर जीते हुए दोहराए जा रहा हूँ
सांस के पहले ही पल को हमेशा !

क्या मछली भी पानी पीती होगी
या सूरज को भी लगती होगी गरमी
क्या रोशनी को भी कभी दिखता होगा अँधकार
क्या बारिश भी हमेशा भीग जाती होगी,
मेरी तरह क्या सपने भी करते होंगे सवाल नींद के बारे में

दूर दूर बहुत दूर चला आया मैं
जब मैंने देखा तारों को - देखा बहुत पास,
आज बारिश होती रही दिनभर
और शब्द धुलते रहे तुम्हारे चेहरे से


After Midnight

I saw the stars far off -
as far as I from them:
in this moment I saw them -
in moments of the twinkling past.
In the boundless depths of darkness,
these hours
hunt the morning through the night.

And I can't make up my mind:
am I living this life for the first time?
Or repeating it, forgetting as I live
the first moment of breath every time?

Does the fish too drink water?
Does the sun feel the heat?
Does the light see the dark?
Does the rain too get wet?
Do dreams ask questions about sleep as I do?

I walked a long, long way
and when I saw, I saw the stars close by.
Today it rained all day long and the words were washed away
from your face.


மூலம்: Theesra Pehar   Hindi poem by Mohan Rana
ஆங்கில மொழியாக்கம்: Lucy Rosensteinஆங்கிலக் கவிதையாக்கம்: After Midnight By Bernard O'Donoghue

Sunday, April 15, 2012

நான் அறிந்த சிலம்பு - 15

புகார்க்காண்டம் - 3. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே 56 -60

சிலம்பின் வரிகள் இங்கே 61 - 69

குழலாசிரியன்

இசைநூல் சொல்லிய முறையதன்படி
சித்திரப் புணர்ப்பு வஞ்சனைப்புணர்ப்பு
இவ்விரு கூறுகள் அறிந்தே இசைப்பவன்.
இசையாசிரியன் அவனுக்கு நிகராய்
அறிவுத்திறம் வாய்த்தவன்.

ஏற்றம் இறக்கம் இருவகையுடனே
வர்த்தனைகள் நால்வகையாலே
பண்ணின் மொத்த வகைகள்
மயக்கமின்றி இசைக்க வல்லோன்.
தம்முள் இழைந்திடும்
கூட்டிய இசையாம்
குரல் நரம்பும் இளி நரம்பும்
துல்லியமாய்க் கேட்டுணர்ந்து
தம் இசைநூல் அறிவாலே
இணை நரம்புகளின் வரவும் உணர்ந்து
இசைக்கவல்ல தொழில் வல்லாளன்.

சிறப்பாய்ப் பொருந்திய
பண்ணதனைச் சரியாய் அமைத்து
முழவின் இருகண் நெறிகளுடன்
தாள இயல்புகளின் திறமுமறிந்து
தண்ணுமையாளன் தன்னுடனும்
தக்கவாறு பொருந்தி இசைப்பவன்.

இசையின் இயல்பறிந்து
இசையாசிரியன் பாடுகையில்
இளிநரம்பை முதலாவதாக
யாழின்கண் நிரல்படவைத்து
பண்ணில் வரும் சுரங்கள்
குறைவுபடாது வளர்த்து
பண்ணுக்குரிய சுரங்கள் தவிர
வேற்றுச் சுரங்களின் கலப்பேதுமின்றி
அவற்றோடு ஒற்றியிருந்து,
இன்புற இயக்கி
இசையின் பண்ணிலக்கணத்துடன்
பொருந்திட வைத்துக்
குழலது இசைக்கும் திறமையாளன்.

வாரப்பாடல்களின் இசை
சரிவர நிரம்பச்செய்து
அளவுற அழகுற இசைப்பவன்.

இசைத்திடும் கணமதனில்
வாரப்படலின் இடைத்தோன்றும்
சொல் இசை பொருள் ஒழுங்குகள்
(வாய்ப்பாடல் இசைப்பது போலவே)
இசை எழுத்துருக் கொண்டாற்போல
இயைந்து இசைத்திட
சொற்களின் நீர்மைகள்
சற்றுக்கூடச் சிதைந்திடாமல்
எழுத்து எழுத்தாய்
வழுவின்றி இசைக்கும்
குழலோன் தன்னொடும்..

குறிப்பு::

வர்த்தனை- ஏழிசையைப் படிப்படியாக ஏற்றி இசைத்தல்
நால்வகை வர்த்தனை - ஆயப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை
ஏற்றம் இறக்கம் - ஆரோகணம் அவரோகணம்
பண்ணின் வகைகள் - நூற்று மூன்று வகைகள்
குரல் இளி - சட்சம் பஞ்சமம்
முழவின் இருகண் - இடக்கண், வலக்கண்
நிரல் - வரிசை,ஒப்பு
பண்ணிலக்கணம் - பதினோரு வகை


வல்லமை 09.04.12 இதழில் வெளிவந்தது.

குறளின் குரல் - 56

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 108. கயமை
குறள் எண்: 1080

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.


எற்றிற்கு உரியர் கயவர்? ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து
.

விளக்கம்:

தமக்குத் துன்பம் வந்ததையே காரணமாகக் காட்டி, தம்மை விற்பதற்குக்கூட விரைந்து செல்லும் தன்மையுடையவர் கயவர். இந்த ஒரு செயல் தகுதியைத் தவிர அவர்கள் வேறு எத்தன்மையராயிருப்பதற்கு உரியவர்? பிறரது பொருளையே எதிர்பார்த்து, அவர்களுக்கு அடிமையாக இருப்பார்களே தவிர, முயற்சி செய்யும் தன்மையுடையவர்கள் ஆக மாட்டார்கள்.

-----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 02. வான்சிறப்பு
குறள் எண்: 17


நெடுங்கலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலிதான்ல்கா தாகி விடின்.

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின்.


விளக்கம்:

கடலில் முகந்தெடுத்த நீரை மீண்டும் மழையாகப் பொழிந்து அக்கடலுக்கு உதவுகிறது மேகம். அங்ஙனம் மேகம் உதவாவிடில் கடல் வளம் குறையும். மணி, பவளங்கள் விளையாது போகும். கடல் வாழ் உயிரினங்களும் இல்லாது போகும்.

மனித சமுதாயத்திலிருந்து உயர்ந்து வெற்றியும் புகழும் கண்டவர்கள், மீண்டும் இறங்கி வந்து அச்சமுதாயத்திற்கு உதவினால்தான், சமுதாயமும் சிறக்கும்.
நீர்மை- நீரின் தன்மை, எளிமை, அழகு, ஒளி, நிலைமை, ஒப்புரவு
எழிலி - மேகம்
தடிந்து எழிலி - முகந்த நீரை மீண்டும் பொழியும் மேகம்

--------------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 99. சான்றாண்மை
குறள் எண்: 984


கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்து சால்பு.


கொல்லா நலத்தது, நோன்மை; பிறர்தீமை
சொல்லா நலத்து, சால்பு.


விளக்கம்:

பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது தவம். பிறரின் குற்றங்குறைகளை, அவர் செய்த பழிச்செயலை வாய்விட்டுச் சொல்லாமல் இருப்பது நற்பண்பு.

நோன்மை - தவம், பொறுமை, வலிமை, பெருந்தன்மை
சால்பு - மேன்மை, நற்குணம், தன்மை, கல்வி

--------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 32. இன்னா செய்யாமை
குறள் எண்: 313


செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்.


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்,
உய்யா விழுமம் தரும்.


விளக்கம்:

நாம் பிறர்க்குத் தீங்கு செய்யாத போதும், அவர் நம்மீது கோபம் கொண்டு நமக்குத் தீங்கு செய்ய முற்படுவர். அவர் அங்ஙனம் முற்படுகையில், பதிலுக்கு நாமும் அவர்க்குத் தீங்கு செய்யும் எண்ணம் கொள்ளக் கூடாது. அத்தகைய பழிவாங்கும் என்ணம் நம் மனதில் தோன்றினால், அதனால் மீண்டும் மீண்டும் நேரக்கூடிய துன்பத்திலிருந்து தப்பிக்கும் வழி நமக்கு இல்லாமல் போகும்.

-------------------

பால்: பொருட்பால்
இயல்: அரணியல்
அதிகாரம்: 75. அரண்
குறள் எண்: 741


ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.


ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; அஞ்சித் தற்போற்றுபவர்க்கும் பொருள்.

விளக்கம்:

பகைவர் மீது போர் தொடுத்துச் செல்பவர்க்கும் அரண் பயன்படும் சிறப்பு வாய்ந்தது.  பகைவர்க்கு அஞ்சித் தம்மைத் தற்காத்துக் கொள்ள நினைப்பவர்க்கும் அது பயன்படும் சிறப்பு வாய்ந்தது.

-------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 120. தனிப்படர் மிகுதி
குறள் எண்: 1193


வீழுநர் வீழப் படுவார்க் கமையுமேவாழுந மென்னுஞ் செருக்கு.

வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே,
'வாழுநம்' என்னும் செருக்கு.


விளக்கம்:

தாம் விரும்பும் காதலரால் தாமும் விரும்பப்படுகிறோம் என்று உணரும் மகளிருக்கே,  இணைந்திருக்காமல் பிரிந்திருந்தால் கூட'தாம் இன்புற்று இனிதாய் வாழ்வோம்' என்ற செருக்கு இயல்பாய் அமைந்திருக்கும்.

தற்காலிகமாய்க் காதலர் பிரிந்திருந்தால் கூட, மீண்டும் சீக்கிரம் அவர் வருவார்;கூடி வாழ்வோம் என்ற உறுதியினால் உண்டாகும் செருக்காகும் அது.
வீழுநர் - ஆசைப்படுபவர், நீங்கிச் செல்பவர், வீழ்பவர்

Sunday, April 8, 2012

நான் அறிந்த சிலம்பு - 14

புகார்க்காண்டம் - 3. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே 37 - 55

முத்தமிழ்ப் புலவன்

அலையோசைமிகு
கடல்சூழ் புவிதனில்
தமிழ் நாடு வாழ்
மக்கள் அறிந்த தன்மையன்;
முத்தமிழ் முற்றும் அறிந்தவன் .

வேத்தியல் பொதுவியல் என்றிரு
நாட்டிய நாடக நூல்களின்
விதிக்கூறுகள் நன்கறிந்து
அந்நெறிகள் தவறிடாமல்
கடைப்பிடிப்பவன்.

இசைப்புலவன் வரித்து வைத்திட்ட
நீர்மைகளின் நியதிகளின்
போக்கறிந்தவன்.

இசைப்புலவன் தாளத்தில்
எய்துவைத்த அழகனைத்தும்
தம் கவியதனில்
அறிந்தது அறிந்த வண்னம்
மரபுகள் மீறாமல்
வடித்து வைக்கும்
கவிஞன் தானாவன்.

பகைவர்கள் பேசிவைத்த
வசைமொழிகளின் வகையறிந்து,
தாம் இயற்றும் கவியதனில்
அவ்வசைமொழிகள் வாராமல்
நாடகக்கவி செய்யவல்ல
நன்மைதரு நாவுடையன்.

நல்ல நூலை வழங்கவல்ல
நூலறிவு வாய்ந்தவன்
கவிப்புலவன் அவனொடும்...

தண்ணுமை ஆசிரியன்

(தண்ணுமை - மத்தளம்)

ஆடல் பாடல் இசை வகைகள்
மூவகைத் தமிழ்,
பண்வகைகள்,
இருவகைத்தாளங்கள்,
எழுவகைத்தூக்கு,
இவற்றில் உண்டாகும் குற்றங்கள்,
தமிழில் வழங்கும்
நால்வகைச் சொற்கள்,
நுண்ணிய தெளிவுடன்
கற்றுத் தேர்ந்தவன்.

இரட்டித்து இசைக்கும் இசையை
இசையாசிரியன் மேலும் இரட்டிப்பாக்க
இசை நெகிழாது நிரம்ப நிறைத்து
வகுத்துப் பிரித்து
இசையாசிரியன் இரட்டித்த
இசையதனை
அவன் பகுத்தவாறே
கூட்டிக் குறைத்துத்
தொகுக்கத் தெரிந்தவன்.

யாழுடன் குழலும்
வாய்ப்பாட்டும்
இழைந்து இசைக்க
கேட்பவர் செவிதனில்
இன்பம் சேர்க்க
விரல்களைச் சரிவர அசைத்து
மத்தளம் இசைக்க வல்லவன்.

பிற கருவிகளின்
குறைந்த ஒலியை நிரப்பியும்
மிகுத்த ஒலியை அடக்கியும்
ஈடுகள் செய்திடும் திறனுடையவன்.

மத்தள இசையை
வலிதாக ஆக்குமிடத்தும்
மெலிதாக அடக்குமிடத்தும்
பிற கருவிகளின் இசை
நலிந்திடா வண்ணம்
அதிகமாய் ஒலிக்காமல்
அளவோடு இசைப்பவன்.

இங்ஙனம்
இசையில் பிழை நேராதவாறு
தம் அருந்தொழிலை அழகுறச் செய்யும்
தண்ணுமை ஆசிரியன் அவனொடும்..

வல்லமை 02.04.12 இதழில் வெளிவந்தது..

குறளின் குரல் - 55

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 67. வினைத்திட்பம்
குறள் எண்: 669


துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை.


துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை.


விளக்கம்:
முடிவில் இன்பம் தரக்கூடிய எந்தவொரு செயலையும் செய்யும்போது, எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் பொருட்படுத்தாது, துணிவுடன் செயல்பட்டுச் செய்துமுடிக்க வேண்டும்.

------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 113. காதற் சிறப்புரைத்தல்
குறள் எண்: 1124


வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத
லதற்கன்ன னீங்கு மிடத்து.


வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து.


விளக்கம்:

ஆராய்ந்து அறிந்து அணிகலன்கள் அணிந்த இவள் என்னுடன் கூடியிருக்கும்போது, உடலுடன் ஒன்றிய உயிர் போல் ஆகிறாள்; அதனால் உயிராகிறாள். என்னைவிட்டு நீங்கும் போது, உடலைப் பிரிந்த உயிர் போலாகிறாள்; என் உயிரைக் கொல்லும் சாவாகிறாள்.

ஆயிழை - தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகலன்கள் அணிந்தவள், பெண், கன்னியாராசி

-----------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 48. வலியறிதல்
குறள் எண்: 476


நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க் கிறுதி யாகி விடும்.


நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும்.


விளக்கம்:

மிகவும் வலுவற்றது ஒரு மரத்தின் நுனிக்கொம்பு. மரம் ஏறுபவர் மேலும் மேலும் நுனிக்கொம்பைப் பிடித்துக்கொண்டே ஏற நினைத்தால், அது ஒடிந்து வீழ்ந்து அவர் உயிருக்கே கூட ஊறு விளைவிக்கக்கூடும்.
அது போலவே, தன் எல்லைகளை, வலிமைதனை உணர்ந்து செயலாற்றாதவருக்கும் ஊறுகள் நேர்ந்திடக் கூடும்.

-----------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 100. பண்புடைமை
குறள் எண்: 1000


பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.


பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்தற்று
.

விளக்கம்:

குறையுள்ள பாத்திரத்தில் ஊற்றிவைக்கப்பட்ட பால், கெட்டுப்போகும். பாலில் குற்றமில்லையென்றாலும், கலத்தின் குற்றத்தால் கெட்டுப்போகும்.
சிறந்த பண்புகள் இல்லாதவர் பெற்ற செல்வமும் அத்தன்மைத்தே. நற்பண்பில்லாதவர் செல்வம் யாருக்கும் பயன்படாமல் அழிந்து போகும். பயன் தரும் செல்வம் என்றாலும், அதை உடையவர் பண்பற்றவர் என்பதால் அச்செல்வத்தால் எந்தவொரு பயனுமில்லை.

----------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 105. நல்குரவு
குற்ள் எண்: 1043


தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்கு ரவென்னு நசை.


தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.


விளக்கம்:

நல்குரவு என்பது ஒருவனுக்குத் தொன்றுதொட்டு இருந்து வரும் குடிப்பெருமையைக் கெடுக்கும். அவனுடைய புகழையும்கூடக் கெடுத்து நிற்கும். குடிச்சிறப்புக்குப் பொருந்தாத இழிவும், அவச்சொல்லும் உண்டாக்கும்.
ஆசையுள்ள இடத்தே வறுமையும் இருக்கும் என்பது ஒரு வழக்கு. இந்தக்குறளில் நல்குரவு என்பது ஆசையையும் குறிக்கிறது. நசை உள்ள இடத்து வறுமை உள்ளது. எனவே நசை என்பதே நல்குரவு ஆகும்.

நல்குரவு- நுகர்வதற்கு ஏதுமின்றி வருந்தும் வறுமை
தொல்வரவு - தொன்றுதொட்டு வரும் குடிச்சிறப்பு
தோல் - நற்பேறின்மை, புகழ், சருமம், உடம்பின் மேலுள்ள தோல், கேடகம், துருத்தி, அழகு, சொல், யானை உடம்பு, தோல்வி, பக்கரை, மூங்கில்

--------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 114. நாணுத் துறவுரைத்தல்
குறள் எண்: 1131


காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி.


காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம
மடல் அல்லது இல்லை, வலி.


விளக்கம்:

காமத்தால் துன்புற்று, காதலை நிறைவேற்றிக்கொள்ளவும் வழியில்லாமல் காத்திருக்கும் இளைஞருக்கு மடலூர்வதைத் தவிர வலிமையான துணை வேறொன்றும் இல்லை.

மடலேறுதல் அல்லது மடலேற்றம் என்பது காதலில் தோல்வியுற்ற சங்கத் தலைவன் ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய்த் தங்களை எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர் பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர்.

ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான். (விக்கிப்பீடியா)

குறளின் குரல் - 54

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 28. கூடாவொழுக்கம்
குறள் எண்: 276

நெஞ்சிற் றுவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.


நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.


விளக்கம்:

மனத்தால் பற்றுகளைத் துறந்து வாழ்வதே உண்மையான துறவாகும். மனதிலுள்ள பற்றுகளைத் துறக்காமல், துறந்துவிட்டது போல் வேடம் இட்டுக்கொண்டு, பிறரை ஏமாற்றி வாழ்பவர்களைப் போன்ற கொடியவர்கள் வேறு யாரும் இலர்.
-- ---------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 112. நலம்புனைந்துரைத்தல்
குறள் எண்: 1115


அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.


அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள்; நுசுப்பிற்கு
நல்ல படாஅ, பறை.


விளக்கம்:

தன் மென்மை அறியாதவளாய், அனிச்சப்பூவைக் காம்பு நீக்காமல் அணிந்து கொண்டுவிட்டாள் இவள்; இனி இவள் இடைக்கென மங்கல இசையைப் பறைகள் ஒலிக்காது போய்விடும்.

காம்புடன் சூடிய பூவின் எடை தாங்காமல் இடை ஒடியப் போகிறது என்பது குறிப்பு. ஒடிந்து வாடிய நிலையில் மங்கல வாத்தியம் ஒலித்திட வாய்ப்பில்லை.

கால் - பூவின் காம்பு, நாலில் ஒரு பகுதி,எழுத்தின் நெடிலைக் குறிக்கும் கால் எழுத்து, "வ" என்ற குறியுடைய பின்ன வகை எண், அடிப்பாகம், தூண், தேருருள், வண்டி, கோல், வழி, குறுந்தறி, நெசவுத்தறியின் மிதி, கைப்பிடி, மரக்கன்று, மகள், பிறப்பிடம், வாய்க்கால், பிரிவு, நடை, மரக்கால், பாதம், அளவு, கதிர், மழைக்கால், காற்று, செவ்வி, தடவை, காலன்
களைதல் - நீக்குதல், ஆடையணி கழற்றுதல், அரிசி கழுவுதல், கூட்டி முடித்தல், பிடுங்கி எறிதல்
பெய்தல் - அணிதல், பொழிதல், வார்த்தல், இடுதல், கொடுத்தல், அணிதல், கட்டுதல், தூவுதல்
நுசுப்பு - இடை, இடுப்பு, வயிறு
படா - ஓயாது ஒலிக்கும்
பறை - தோற்கருவி, தப்பு, சொல், வட்டம், விரும்பிய பொருள், மரக்கால், நூல்வகை, கூத்துவகை, குகை, பறவை இறகு, பறவை
-----------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 18. வெஃகாமை
குறள் எண்: 178


அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.


"அஃகாமை செல்வத்திற்கு யாது?"எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப் பொருள்
.

விளக்கம்:

ஒருவருடைய செல்வம் சுருங்கிக் குறைந்து விடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பிறருக்கு உரிய பொருளை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படாமல் இருத்தல் வேண்டும்.
அஃகாமை -  சுருங்காமை, குறையாமை, வற்றாமை, கழியாமை, குறுகாமை,
வெஃகாமை - பிறர் பொருளை விரும்பாமை, அவாவின்மை, வெறுப்பு
--------------------

பால்: பொருட்பால்
இயல்: அரணியல்
அதிகாரம்:  74. நாடு
குறள் எண்: 735

பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல்குறும்பு மில்லது நாடு.

பல் குழுவும்,  பாழ்செய்யும் உட்பகையும், வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு.

விளக்கம்:

சாதி, மத இன்னும் பிற அமைப்புகளால் வேறுபட்டுப் பிரிந்து  நிற்கும் பல குழுக்களும், 
கூட இருந்தே குழிபறிக்கும் உட்பகையும்,
அரசாள்பவர்களை அலைக்கழிக்கும் வண்ணம் கொலை போன்ற பாதகம்  செய்யும்  பொல்லாதவரின்  செயல்களால் விளையும் கேடுகளும்
இல்லாதிருப்பதே நாடாகும். 

---------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 93. கள்ளுண்ணாமை
குறள் எண்: 925


கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.


கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல்
.

விளக்கம்:

தன்னிடமுள்ள பொருளை விலையாகக் கொடுத்து, போதை தரும் பொருளை வாங்குவது, போதைப் பொருளை நுகர்ந்து தன்னிலை மயங்கும் தன்மையடைவது, தாம் என்ன செய்கிறோம், உலகில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதே அறியாத அறிவற்ற நிலையாகும்.

------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 57. வெருவந்த செய்யாமை
குறள் எண்: 564


இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்.


'இறை கடியன்' என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லைக் கெடும்
.

விளக்கம்:

'நம் அரசன் கொடியவன்; அவன் செலுத்தும் ஆட்சி கொடுமையானது;' என்று குடிமக்கள் மனம் நொந்து இன்னாத சொல் பேசும் நிலையைத் தருவிக்கும் எந்தவொரு அரசனின் / தலைவனின் ஆட்சியும், தனது காலமும் பெருமையும் குறைந்து விரைவில் அழியும்.

உறை - இருப்பிடம், பெருமை, நீளம், உயரம், பொருள், மருந்து, உணவு, வெண்கலம்,ஆயுதவுறை, நீர்த்துளி, மழை, காரம், இருப்பிடம், போர்வை, உறுப்பு, பாலிடுபிரை, வாழ்நாள், துன்பம், கிணற்றில் பொருந்த்தும் வளையம், பொன், பாம்பின் நச்சுப்பை
கடுகி - விரைவில், கடிதில்
ஒல்லை - விரைவு, வேகம், தொந்தரவு, பழைமை

Wednesday, April 4, 2012

தனித்த ஓர் இதயத்தின் கதவருகே...

1

நான் தனித்திருக்கவில்லை;
தனிமையை
என் நட்பாக்கிக் கொண்டிருக்கிறேன்.

2

அவன்
திருப்தியாகி விட்டிருந்தான்..

அன்றாட உணவிலிட்ட
சிட்டிகை உப்பினில்;

குறுகிய
இரவதனில்;
குறுகிய பொழுதேனும்
நீ உடனிருக்கும் இரவதனில்;

குறுகிய கனவதனில்;
கனவின் தோள்களில்
ஆள்துயில் கொண்ட உன்னில்;

குறுகிய
உறக்கமதனில்;
உறக்கத்தின் கரைதனில்
நடைபயிலும் உன்னில்;

குழலதன்
கூரிய ஓசைக்கும்
ஆடுமாடுகள் கழுத்து மணியின்
கரகரப்பான ஓசைக்கும்
இடையே ஊஞ்சலாடியபடி..

அவன்
திருப்தியாகி விட்டிருந்தான்.

3

நான் மட்டும்
ஒரே ஒருவனாய்
நின் ஒளிர்வைக்
கவனித்து வருகிறேன்.

சூரியனுக்காகவென
வாராந்திர விடுமுறையைக்
கடவுள் மட்டும் கொடுத்திருந்தால்..

அனைவரும்கூட
அறிந்திருப்பார்கள்
நீ எவ்வளவு ஒளிர்கிறாய் என்று.

4

வெற்றுச் சுவர்,
பழைய சுவர்,
வறட்சியாலும் களிமண்ணாலும்
கனமாக்கப்பட்ட இதயச்சுவர்.

இங்கே
உன் பெயரை
நீ எழுதிக் கொள்ளலாம்.

ஆனால்,
நகங்களால் மட்டும்
கீறி விடாதே.

5

அவன் அங்கங்களில்
கவனமாய் இருந்திடு.

உயர்தர நூல்வகையால்
அவனைத் தைத்திடு.

மடித்துத் தைத்திட்ட
விளிம்புப் பகுதிகளைக்
கிழிக்காமல் இருந்திடு.

அலைந்து திரியும்
அவன் நூல் இழைகளைச்
சேகரித்து வைத்திடு.

நீர் அவனைச்
சூழ்ந்திடும் போது
கொஞ்சம் நெருக்கிப் பிழிந்திடு.

வெறுமனே
ஒரு சட்டை
போலத் தோன்றினாலும்,
உண்மையில்
அவன் ஓர் இதயம் தானே.

6

சுதந்திர நாடுகளில்
பறந்திடும் கொடியது போல்
என் மனதுள் நீ
அசைந்தாடுகின்றாய்.

7

யாருடைய நெஞ்சில்
யார் சாய்ந்து அழுதாரோ?
நனைந்திட்ட சட்டை மட்டுமே
அறிந்திடும் விடைதன்னை.

At the Door of a Lonely Heart -  Arabic poem by: Abboud al Jabiri 
                                                       Translated by: Worod Musawi
1
I am not alone -
the truth is
I befriended my loneliness

2
He's satisfied with a pinch of salt on his daily bread
with a little of you at night
with a short night
with you asleep on dream's shoulder
with a brief dream
with you walking on sleep's shore
with a light sleep
that sways between the keening of the naiand the clanging of goat bells

3
If God gave the sun the weekend off
people would know how you shine all the time
even though I am the only one who notices

4
It is a blank wall,
an old wall -
a heart burdened by drought and clay:
write your name here,
but don't pierce it with nails

5
Be careful with his limbs:
mend him with fine yarn
and don't rip his hem,
gather up his stray threads,
and squeeze him gently
when he is wet -
even if he seems like just an old shirt,
really, he is a heart

6
Like a flag
flying in a free country
you are waving in my heart

7
Who wept on the breast of the other?
Only the wet shirt
knows the answer

ஓர் அரபுக்கவிதையின் மொழிபெயர்ப்பு தமிழின் தன்மைக்கேற்ப சிறு மாற்றங்களுடன்..-அதீதம் இதழில் 13.03.12 அன்று வெளியானது..

Monday, April 2, 2012

சில நேரங்களில் சில உணர்வுகள்

இரண்டு திரைப்படங்கள்:

காதலில் சொதப்புவது எப்படி? தலைப்பு ஒரு மாதிரி இருக்கிறதே என்று யோசனையுடன் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், இந்தக் காலகட்டத்துக்கு
மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆணாக ஆணும், பெண்ணாகப் பெண்ணும் யோசிப்பதில் உள்ள சிக்கல்கள், ஈகோப் ப்ரச்னைகளால் வரும் பிரிவுகள், மேட் ஃபார் ஈச் அதர் என்று ஒன்றும் விசேஷமாக இல்லை..அப்படி ஆக்கிக் கொள்வதுதான் விசேஷம் என்ற படிப்பினை..நன்றாக இருக்கிறது.

மூணு 3: ஒய் திஸ் கொலவெறி கொலவெறி?

இளையராஜா, சூர்யா, ரோஜர் ஃபெடரர்

இந்த மூன்று பேருக்கும் பொதுவான ஒரு சிறப்பு இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம். இவர்களால் கவரப்படாதவர்கள் இருக்கலாம். ஆனால், இவர்களைப் பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. என்றும் இளமையான இளையராஜா பாடல்கள், ரோஜர் விளையாடும் தளங்களில் விசிறிகளின் ஆரவாரம், சூர்யாவின் திரைமுகம் மட்டுமல்ல..  'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி...என்னுடைய இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தி நிற்கின்றது. 'அய்யய்யோ...எனக்கு இவரைப் பிடிக்கவே பிடிக்காது' என்று யாருமே சொல்லிவிட மாட்டார்கள் என்றொரு எண்ணம்.

எழுத்தாளர் சுஜாதாவும் இந்தப் பட்டியலில் இருந்தார்..ஆனால் அவரைப் பிடிக்காது என்னும் சிலரைச் சந்திக்க நேர்ந்தது..

ஒரு தகப்பனா இப்படி?

சமீபத்திய செய்தி ஒன்று...தேர்வில் மதிப்பெண்கள் எதிர்பார்ப்புக்கும் குறைவாக வாங்கிய தன் மகளை, கோவில் வாசல் ஒன்றில் தட்டேந்திப் பிச்சையெடுக்கவைத்தாராம் ஓர் அப்பா...என்னவென்று சொல்வது?

ஆசிரியைகளின் அட்டூழியம்

கொஞ்ச காலம் முன், எல்.கே.ஜி குழந்தையிடம் பாலியல் தொந்தரவுகள் செய்த இரண்டு ஆசிரியைகளைப் பற்றிய செய்திகள்..

கடந்த 2 வாரங்களுக்கு முன், ப்ளஸ் டூ மாணவனிடம் தகாத உறவுகொண்டு, 21 வயதானபின் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளக் காத்திருக்கும் 37 வய்து ஆசிரியை...ஓடிப் போன இவர்களைத் தேடிப்பிடித்த மாணவன் அப்பா...

வக்கிரங்கள் ஆசிரியைகளிடமா? இவர்களை என்ன செய்தால் தகும்?

குறளின் குரல் - 53

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 101. நன்றியில் செல்வம்
குறள் எண்: 1008


நச்சப் படாதவன் செல்வ நடுவூரு
ணச்சு மரம்பழுத் தற்று.


நச்சுப்படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்தற்று
.

விளக்கம்:

எவராலும் விரும்பப்படாதவருடைய செல்வம், ஊருக்கு நடுவே நிற்கும் நச்சு மரம் பழங்கள் பழுத்துக் காணப்படுவதற்குச் சமமாகும்.

நச்சு மரம் தீங்கை விளைவிக்க வல்லது; அதுபோலவே, விரும்பப்படாதவருடைய செல்வமும் தீங்கை விளைவிக்கும்.

நச்சப்படாதவன் - விரும்பப்படாதவன்
நச்சு மரம் - நஞ்சுள்ள மரம், எட்டி மரம்
--------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 23. ஈகை
குறள் எண்: 224


இன்னா திரக்கப் படுட லிரந்தவ
ரின்முகங் காணு மளவு.


இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு
.

விளக்கம்:

இரந்து வருபபவர்கள், ஏதேனும் ஒரு பொருளைப் பெறும்போது, அவர்தம் முகம் மலர்ந்து காணப்படும். அம்மலர்ச்சியைக் காணும் வரைக்கும், இரக்கத்தால் பொருளைக் கொடுத்தவர்க்கும் துன்பமேயாகும்.

இரந்தவரின் துன்பம் நீங்கி, அவர் மலர்ந்த முகம் இரக்கப்பட்டவர் பார்க்கும் வரை இத்துன்பம் நீடித்திருக்கும்.

---------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 111. புணர்ச்சி மகிழ்தல்
குறள் எண்: 1105


வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள்.


வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்
.

விளக்கம்:

பூக்கள் சூடிய தாழ்ந்த கூந்தலையுடைய இவள் தோள்கள், ஒருவர் விரும்பிய பொழுதெல்லாம் விரும்பிய பொருட்கள் வந்து இன்பம் தருவது போலவே, மகிழ்ச்சி தருகின்றன.

வேட்ட - விரும்பிய, ஏற்ற, வேள்வி செய்ய, திருமணம் செய்ய
தோட்டார் - தோடு ஆர்
தோடு - பூ, பூவிதழ், ஓலை, காதணி, பழத்தின் ஓடு, தோல், இலை
கதுப்பு - தலைமயிர், கூந்தல், கன்னம், தாடை, பசுக்கூட்டம்
------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 13. அடக்கமுடைமை
குறள் எண்: 124


நிலையிற் றிரியா தடங்கியான் தோற்ற
மலையினு மாணப் பெரிது.


நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
.

விளக்கம்:

தன் நிலையில் மாறாது நேர்மையுடன் இல்லற நெறிகள் கடைப்பிடித்து அடக்கத்துடன் நடந்து கொள்வோர், பிறர் மனதில் மிகவும் உயர்ந்து நிற்பர். அத்தகைய உயர்ச்சி மலையை விட மிகவும் பெரியதாகும்.

அடக்கம் என்பது பெருமையை விட்டு விடுவதன்று. பெருமை வந்து சேர்ந்தவிடத்தும், தன் நிலையில் மாறாது தற்கட்டுப்பாடு மேற்கொண்டு, அத்தகைய தன்மையால் பிறர் மனதில் உயர்ந்து விளங்குவதேயாகும்

--------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 49. காலமறிதல்
குறள் எண்: 482


பருவத்தோ டொட்ட வொழுக றிருவினத்
தீராமை யார்க்குங் கயிறு.


பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.


விளக்கம்:

மேற்கொள்ள வேண்டிய செயல்களை, தகுந்த காலத்தைக் கருத்தில் கொண்டு, சரியான தருணத்தில் செய்து முடிக்க வேண்டும். நிலையில்லாத செல்வம் ஒரிடத்தில் தங்காது அங்கே இங்கே போய்க்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட செல்வத்தை, அடைந்தவரை விட்டு நீங்காது, அவரிடமே தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் வண்ணம் கட்டி வைக்க வேண்டுமென்றால் காலம் தவறாமல் காரியம் ஆற்ற வேண்டும்.

காலம் கருதிக் காரியம் செய்வது என்பது, தம்மை விட்டு ஓடுகின்ற செல்வத்தை, ஓட விடாமல் கட்டிப்போடும் கயிறாகும்.

திரு - செல்வம், திருமகள், பொலிவு, அழகு, பாக்கியம், மாங்கல்யம், சோதிடம் கூறுவோன், நல்வினை
ஆர்க்கும் - கட்டும், ஒலிக்கும், போர் புரியும், தட்டும், பூணும், மறைக்கும், மின்னும்

---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 34. நிலையாமை
குறள் எண்: 338


குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு.


குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு
.

விளக்கம்:

உடலை விட்டு உயிர் எந்த நேரமும் பிரியக் கூடும். உயிர்க்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு எப்போதும் நிலைத்திருக்கக் கூடியது அன்று.

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு, முட்டைக்கூடு தனியாகக் கிடக்க, அதை விட்டுப் பறவை பறந்துபோய் விட்ட நிலை போன்ற தனமை வாய்ந்தது.

குடம்பை - கூடு, முட்டை, உடல், ஏரி
புள் - பறவை
நட்பு - உறவு, அன்பின் சுற்றம், காதல்

குறளின் குரல் -52

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 102. நாணுடைமை
குறள் எண்: 1012


ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.


ஊண், உடை, எச்சம் எல்லாம் உயிர்க்கு வேறு அல்ல;
நாண் உடைமை மாந்தர் சிறப்பு.


விளக்கம்:

உணவு, உடை, மற்றும் எஞ்சி நிற்கும் இதுபோன்றவை எல்லோர்க்கும் பொதுவான தேவைகளாக, தன்மைகளாக இருக்கின்றன.
உயிருக்கு உயிர் வேறுபடுவதில்லை..

பிறரிடமிருந்து ஒருவரை வேறுபடுத்தி, சிறப்பித்துக் காட்டுவது அவர்தம் நாணுடைமை ஆகும்.

பழி தேடித்தரும் செயல்களைச் செய்ய நாணி, அவற்றைத் தவிர்த்து வாழ்வதே நாணுடமை.

--------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 153


இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.


இன்மையுள் இன்மை விருந்து ஒரால்; வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
.

விளக்கம்:

வறுமையில் கொடிய வறுமை எதுவென்றால், தம்மைத் தேடி வரும் விருந்தினரை வரவேற்று, உபசரிக்க முடியாமல் நீக்கிடும் நிலைமையாகும்.
அது போல, வலிமையில் சிறந்த வலிமை எதுவென்றால், அறிவிலாதாரின் சிறுமைகளைப் பொறுத்துக் கொள்வதாகும்.

இன்மை - இல்லாமை, வறுமை
ஒரால் - நீங்குதல், ஒருவுகை
வன்மை - வலிமை, ஆற்றல், கடினம், வன்சொல், கோபம்
மடவார் - மூடர், பெண்டிர்
பொறை - பொறுமை, வலிமை, கருப்பம், பூமி, பாரம், சுமை, மலை, கல்

--------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 69. தூது 
குறள் எண்: 683


நூலாரு ணூல்வல்ல னாகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.


நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு.


விளக்கம்:

தூதுவனின் பண்பு எப்படி இருக்க வேண்டும்?

ஆட்சிமுறை நூல்களை நன்கு கற்ற அறிஞர்கள் பலருள், அவரைக் காட்டிலும் அந்நூல்களைக் குறித்த அறிவில் மிகச் சிறந்தவராய்த் திகழ வேண்டும்.

அறிவில் சிறந்து விளங்குவதன் மூலம், வேல்தாங்கிய தம் வேந்தனுக்கு வெற்றி தேடித்தரக்கூடிய காரியங்களை எடுத்துரைக்க இயலும்.

வேல்தாங்கிய பகையரசர் அவையில் தன் மன்னனின் வெற்றிச் செய்தியை எடுத்துச் சொல்ல்லும்போது, தன் திறமையால் நயம்படப் பேசித் தன் அரசர்க்குச் சார்பான நிலையை உருவாக்கித் தர முடியும்.

--------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 110. குறிப்பறிதல்
குறள் எண்: 1092


கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.


கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது.


விளக்கம்:

நான் பார்க்காத நேரங்களில் இவள் என்னைக் கள்ளத்தனமாகப் பார்ப்பது எனக்குப் புரிகின்றது; இந்தக் கள்ளத்தனமான கடைக்கண் பார்வை, காதல் இன்பத்தின் சரி பாதி அன்று; அதற்கும் மேலானதாகும்.

செம்பாகம் - சரிபாதி, இனிமை, நல்ல பக்குவம்

-----------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 54. பொச்சாவாமை
குறள் எண்: 537


அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.


அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியால் போற்றிச் செயின்
.

விளக்கம்:

கடமைகள் மறவாமை / எதையும் மறவாமல் சிந்தித்துச் செயலாற்றும் தன்மை - இந்தக் கருவியை ஏந்தி, அக்கறையுடனும், தப்பாத சிந்தனையுடனும் செயல்பட்டால், செய்வதற்கு அரியவை என்று ஒருவரால் முடியாத செயல்கள் ஏதுமில்லை.
---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 29. கள்ளாமை
குறள் எண்: 281


எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு.

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு.


விளக்கம்:

பிறர் தம்மை இகழாமல் இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள், பிறரின் எந்த ஒரு பொருளையும் அவரை வஞ்சித்துக் களவாட நினைக்காமல் தன் மனதைக் காத்துக் கொள்ள வேண்டும்