Sunday, April 8, 2012

நான் அறிந்த சிலம்பு - 14

புகார்க்காண்டம் - 3. அரங்கேற்று காதை

சிலம்பின் வரிகள் இங்கே 37 - 55

முத்தமிழ்ப் புலவன்

அலையோசைமிகு
கடல்சூழ் புவிதனில்
தமிழ் நாடு வாழ்
மக்கள் அறிந்த தன்மையன்;
முத்தமிழ் முற்றும் அறிந்தவன் .

வேத்தியல் பொதுவியல் என்றிரு
நாட்டிய நாடக நூல்களின்
விதிக்கூறுகள் நன்கறிந்து
அந்நெறிகள் தவறிடாமல்
கடைப்பிடிப்பவன்.

இசைப்புலவன் வரித்து வைத்திட்ட
நீர்மைகளின் நியதிகளின்
போக்கறிந்தவன்.

இசைப்புலவன் தாளத்தில்
எய்துவைத்த அழகனைத்தும்
தம் கவியதனில்
அறிந்தது அறிந்த வண்னம்
மரபுகள் மீறாமல்
வடித்து வைக்கும்
கவிஞன் தானாவன்.

பகைவர்கள் பேசிவைத்த
வசைமொழிகளின் வகையறிந்து,
தாம் இயற்றும் கவியதனில்
அவ்வசைமொழிகள் வாராமல்
நாடகக்கவி செய்யவல்ல
நன்மைதரு நாவுடையன்.

நல்ல நூலை வழங்கவல்ல
நூலறிவு வாய்ந்தவன்
கவிப்புலவன் அவனொடும்...

தண்ணுமை ஆசிரியன்

(தண்ணுமை - மத்தளம்)

ஆடல் பாடல் இசை வகைகள்
மூவகைத் தமிழ்,
பண்வகைகள்,
இருவகைத்தாளங்கள்,
எழுவகைத்தூக்கு,
இவற்றில் உண்டாகும் குற்றங்கள்,
தமிழில் வழங்கும்
நால்வகைச் சொற்கள்,
நுண்ணிய தெளிவுடன்
கற்றுத் தேர்ந்தவன்.

இரட்டித்து இசைக்கும் இசையை
இசையாசிரியன் மேலும் இரட்டிப்பாக்க
இசை நெகிழாது நிரம்ப நிறைத்து
வகுத்துப் பிரித்து
இசையாசிரியன் இரட்டித்த
இசையதனை
அவன் பகுத்தவாறே
கூட்டிக் குறைத்துத்
தொகுக்கத் தெரிந்தவன்.

யாழுடன் குழலும்
வாய்ப்பாட்டும்
இழைந்து இசைக்க
கேட்பவர் செவிதனில்
இன்பம் சேர்க்க
விரல்களைச் சரிவர அசைத்து
மத்தளம் இசைக்க வல்லவன்.

பிற கருவிகளின்
குறைந்த ஒலியை நிரப்பியும்
மிகுத்த ஒலியை அடக்கியும்
ஈடுகள் செய்திடும் திறனுடையவன்.

மத்தள இசையை
வலிதாக ஆக்குமிடத்தும்
மெலிதாக அடக்குமிடத்தும்
பிற கருவிகளின் இசை
நலிந்திடா வண்ணம்
அதிகமாய் ஒலிக்காமல்
அளவோடு இசைப்பவன்.

இங்ஙனம்
இசையில் பிழை நேராதவாறு
தம் அருந்தொழிலை அழகுறச் செய்யும்
தண்ணுமை ஆசிரியன் அவனொடும்..

வல்லமை 02.04.12 இதழில் வெளிவந்தது..

10 comments:

கோபிநாத் said...

\\பிற கருவிகளின்
குறைந்த ஒலியை நிரப்பியும்
மிகுத்த ஒலியை அடக்கியும்
ஈடுகள் செய்திடும் திறனுடையவன்.\\

மத்தளம் இசைப்பவரை சொல்றிங்களா இல்லை இவரு வேற ஆளா! அதவாது சவுண்ட் இன்ஜீனியரா !..லைட்டா டவுட்டு ;-))

பாச மலர் / Paasa Malar said...

கோபி,

இசை நூல் இலக்கணப்படி எல்லா இசைஞர்களுமே சவுண்ட் இஞ்ஜினியர்களாக இருந்திருக்கிறார்கள் ...பிற வாத்தியங்களின் ஒலியைக் கூட்டுவது குறைப்பது என்பது தம் வாத்தியத்தின் இசையாலே...எல்லா வாத்தியக்காரர்களைப் பற்றிப் பேசும் போதும் இங்ஙனம் குறிப்பிடப்படுகிறது...பிறர் இசைக்கும் இசைக்கு ஏற்ப தம் வாத்தியத்தின் ஒலியை மாற்றி இசைக்கும் தன்மை அனைவரிடமும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்...

இளங்கோவடிகள் வரிசையாகச் சொல்லிவைத்த இசைக்கலைஞர்களுக்கான இலக்கணம் மலைக்க வைக்கிறது...அனைத்து இலக்கணங்களும் முறைப்படி பின்பற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது..

பாச மலர் / Paasa Malar said...

பாடகன் முதலான அனைத்து இசைக்கலைஞர்களும் இவ்வாறே இசைநூல் மரபுக்குக் கட்டுப்பட்டு இசைத்திருக்கிறார்கள்...இப்போது சந்தேகம் ஒருவாறு தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன் கோபி...

ஒவ்வொரு குறிப்பையும் விரித்து விளக்கியுள்ளார்கள் ஆய்வுகளில்..இளங்கோவடிகள் மேலோட்டமாகச் சொல்லும் இசை சம்பந்தப்பட்ட technical termsக்கு விரிவான விளக்கம் இணையத்தில் இருக்கிறது...

www.tamilvu.org

தேவையானவற்றுக்குத் தகுந்த விளக்கம் தர முற்பட்டுள்ளேன்....

பாச மலர் / Paasa Malar said...

http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=500&subid=500022

இது சரியான இணைப்பு

ராமலக்ஷ்மி said...

ரசித்து வாசித்தேன் மலர்.

/பிற கருவிகளின்
குறைந்த ஒலியை நிரப்பியும்
மிகுத்த ஒலியை அடக்கியும்
ஈடுகள் செய்திடும் திறனுடையவன்.

மத்தள இசையை
வலிதாக ஆக்குமிடத்தும்
மெலிதாக அடக்குமிடத்தும்
பிற கருவிகளின் இசை
நலிந்திடா வண்ணம்
அதிகமாய் ஒலிக்காமல்
அளவோடு இசைப்பவன்./

மிக அருமை.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி....இதை எழுத ஆர்ம்பிக்கும்போது மிகவும் எளிமையாக இருக்கும் என்றே நினைத்தேன்..ஆனாலும் இது ஒரு இனிய சவாலாகவே இருக்கிறது..

ராமலக்ஷ்மி said...

புரிகிறது. இனிய சவாலாக ஏற்றுக் கொண்டதாலேயே தமிழும் இத்தனை இசைவாக ஒத்துழைக்கிறது. தொடரட்டும் அரும் பணி!

அமைதிச்சாரல் said...

அருமையாக நடக்கிறது சிலம்பாட்டம்.. தொடருங்கள்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சாரல்....வார்த்தைகள் உற்சாகப்படுத்துகின்றன..

ஜீவி said...

//மத்தள இசையை
வலிதாக ஆக்குமிடத்தும்
மெலிதாக அடக்குமிடத்தும்
பிற கருவிகளின் இசை
நலிந்திடா வண்ணம்
அதிகமாய் ஒலிக்காமல்
அளவோடு இசைப்பவன்.//

கோபி குறிப்பிட்டிருக்கிற மாதிரி இந்த இடம் அருமை, இல்லையா? அடிகளார் பின்வரும் காலங்களில் வழிவழியாக வரப்போகிற இசைக் கலைஞர்களுக்கு ஆசிரியராய் இருந்து ஒரு வகுப்பே நடத்துகிறாரே என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

//இளங்கோவடிகள் வரிசையாகச் சொல்லிவைத்த இசைக்கலைஞர் களுக்கான இலக்கணம் மலைக்க வைக்கிறது...அனைத்து இலக்கணங்களும் முறைப்படி பின்பற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது..//

எனக்கும் இந்த மலைப்பு தான்! எப்பொழுதோ படித்து மகிழ்ந்தவை களை, இப்பொழுது நினைவில் மீட்டிப் பார்த்து இன்பமடையும் வாய்ப்பைத் தருகிறீர்கள். அதுவும், எதையும் விட்டு விடாமல் முழுதான ஈடுபாட்டைக் குவித்து எளிமையாகத் தரும் புலமைக்கு மிக்க நன்றி, பாசமலர்!