Monday, April 2, 2012

குறளின் குரல் - 53

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 101. நன்றியில் செல்வம்
குறள் எண்: 1008


நச்சப் படாதவன் செல்வ நடுவூரு
ணச்சு மரம்பழுத் தற்று.


நச்சுப்படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்தற்று
.

விளக்கம்:

எவராலும் விரும்பப்படாதவருடைய செல்வம், ஊருக்கு நடுவே நிற்கும் நச்சு மரம் பழங்கள் பழுத்துக் காணப்படுவதற்குச் சமமாகும்.

நச்சு மரம் தீங்கை விளைவிக்க வல்லது; அதுபோலவே, விரும்பப்படாதவருடைய செல்வமும் தீங்கை விளைவிக்கும்.

நச்சப்படாதவன் - விரும்பப்படாதவன்
நச்சு மரம் - நஞ்சுள்ள மரம், எட்டி மரம்
--------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 23. ஈகை
குறள் எண்: 224


இன்னா திரக்கப் படுட லிரந்தவ
ரின்முகங் காணு மளவு.


இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு
.

விளக்கம்:

இரந்து வருபபவர்கள், ஏதேனும் ஒரு பொருளைப் பெறும்போது, அவர்தம் முகம் மலர்ந்து காணப்படும். அம்மலர்ச்சியைக் காணும் வரைக்கும், இரக்கத்தால் பொருளைக் கொடுத்தவர்க்கும் துன்பமேயாகும்.

இரந்தவரின் துன்பம் நீங்கி, அவர் மலர்ந்த முகம் இரக்கப்பட்டவர் பார்க்கும் வரை இத்துன்பம் நீடித்திருக்கும்.

---------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 111. புணர்ச்சி மகிழ்தல்
குறள் எண்: 1105


வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள்.


வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்
.

விளக்கம்:

பூக்கள் சூடிய தாழ்ந்த கூந்தலையுடைய இவள் தோள்கள், ஒருவர் விரும்பிய பொழுதெல்லாம் விரும்பிய பொருட்கள் வந்து இன்பம் தருவது போலவே, மகிழ்ச்சி தருகின்றன.

வேட்ட - விரும்பிய, ஏற்ற, வேள்வி செய்ய, திருமணம் செய்ய
தோட்டார் - தோடு ஆர்
தோடு - பூ, பூவிதழ், ஓலை, காதணி, பழத்தின் ஓடு, தோல், இலை
கதுப்பு - தலைமயிர், கூந்தல், கன்னம், தாடை, பசுக்கூட்டம்
------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 13. அடக்கமுடைமை
குறள் எண்: 124


நிலையிற் றிரியா தடங்கியான் தோற்ற
மலையினு மாணப் பெரிது.


நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
.

விளக்கம்:

தன் நிலையில் மாறாது நேர்மையுடன் இல்லற நெறிகள் கடைப்பிடித்து அடக்கத்துடன் நடந்து கொள்வோர், பிறர் மனதில் மிகவும் உயர்ந்து நிற்பர். அத்தகைய உயர்ச்சி மலையை விட மிகவும் பெரியதாகும்.

அடக்கம் என்பது பெருமையை விட்டு விடுவதன்று. பெருமை வந்து சேர்ந்தவிடத்தும், தன் நிலையில் மாறாது தற்கட்டுப்பாடு மேற்கொண்டு, அத்தகைய தன்மையால் பிறர் மனதில் உயர்ந்து விளங்குவதேயாகும்

--------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 49. காலமறிதல்
குறள் எண்: 482


பருவத்தோ டொட்ட வொழுக றிருவினத்
தீராமை யார்க்குங் கயிறு.


பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.


விளக்கம்:

மேற்கொள்ள வேண்டிய செயல்களை, தகுந்த காலத்தைக் கருத்தில் கொண்டு, சரியான தருணத்தில் செய்து முடிக்க வேண்டும். நிலையில்லாத செல்வம் ஒரிடத்தில் தங்காது அங்கே இங்கே போய்க்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட செல்வத்தை, அடைந்தவரை விட்டு நீங்காது, அவரிடமே தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் வண்ணம் கட்டி வைக்க வேண்டுமென்றால் காலம் தவறாமல் காரியம் ஆற்ற வேண்டும்.

காலம் கருதிக் காரியம் செய்வது என்பது, தம்மை விட்டு ஓடுகின்ற செல்வத்தை, ஓட விடாமல் கட்டிப்போடும் கயிறாகும்.

திரு - செல்வம், திருமகள், பொலிவு, அழகு, பாக்கியம், மாங்கல்யம், சோதிடம் கூறுவோன், நல்வினை
ஆர்க்கும் - கட்டும், ஒலிக்கும், போர் புரியும், தட்டும், பூணும், மறைக்கும், மின்னும்

---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 34. நிலையாமை
குறள் எண்: 338


குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு.


குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு
.

விளக்கம்:

உடலை விட்டு உயிர் எந்த நேரமும் பிரியக் கூடும். உயிர்க்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு எப்போதும் நிலைத்திருக்கக் கூடியது அன்று.

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு, முட்டைக்கூடு தனியாகக் கிடக்க, அதை விட்டுப் பறவை பறந்துபோய் விட்ட நிலை போன்ற தனமை வாய்ந்தது.

குடம்பை - கூடு, முட்டை, உடல், ஏரி
புள் - பறவை
நட்பு - உறவு, அன்பின் சுற்றம், காதல்

No comments: