Thursday, November 11, 2010

குறளின் குரல் - 14

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 64. அமைச்சு
குறள் எண்: 637

செயற்கை யறிந்த கடைத்து முலகத்
தியற்கை யறிந்து செயல்.


செயற்கை அறிந்தக் கடைத்தும், உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

விளக்கம்:

ஆட்சி செய்யும் போது, முன்னர் ஒரு காலம் எழுதப்பட்ட நூல்களின் மூலம் சட்டதிட்டம் அறிந்து கொண்டாலும், அன்றைய காலகட்டத்திற்கேற்ப உலக நடைமுறையை அறிந்து கொண்டு, நிகழ்காலத்தின் இயற்கைக்கேற்பச் செயல்பட, செயல்படுத்த வேண்டும்.

ஆட்சி செய்வதற்கு மட்டுமல்லாமல் எந்தவொரு செயலைச் செய்வதற்கும் இக்குறள் பொருந்தும். செயலைச் செய்யும்போது, நூற்கல்வி மட்டும் துணைகொள்ளாமல், அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ற உலக நடைமுறையையும் மனதில் கொண்டு செயல்பட, செயல்படுத்த வேண்டும்.
 
------------
 
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 06. வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 58

பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு.


பெற்றாற்பெறின் பெறுவர், பெண்டிர், பெருஞ் சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

விளக்கம்:

நற்குணத்தில் சிறந்த தன்னை மனைவியாகப் பெற்ற கணவனும், அதே நற்பண்புகள் கொண்டவனாய் அமையப் பெற்று இணைந்து வாழ்ந்தால், இவ்வுலகில் மட்டுமல்லாது, தேவருலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவர் பெண்கள்.
------------------
 
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 49. காலமறிதல்
குறள் எண்: 486

ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.


ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

விளக்கம்:

போரிடும் இயல்புடைய ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகக் காலைப் பின்வாங்கித் தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்து பின் தாக்கும். அதே போல், வலிமையுடவர்கள் பகைவர்களை வெல்வதற்கான காலத்துக்காய்க் காத்திருந்து அக்காலம் வரும்போது தாக்குவர்.
-------------------

பால்: பொருட்பால்
இயல்: படையியல்
அதிகாரம்: 88. பகைத்திறம் தெரிதல்
குறள் எண்: 877

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.


நோவற்க, நொந்தது அறியார்க்கு, மேவற்க
மென்மை, பகைவரகத்து.

விளக்கம்:

தமக்கு ஒரு துன்பம் நேர்ந்தபோது, அதைப்பற்றி அறியாதவர்க்கு அத்துன்பத்தை வெளிப்படுத்தக்கூடாது. தம்முடைய மென்மையை, வலிமையின்மையைத் தம் பகைவர்களுக்கு வெளிப்படுத்தவும் கூடாது. இவ்வாறு நடந்து கொள்வதால் பகை தலையெடுக்காமல் தவிர்க்கலாம்.
---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 07. மக்கட்பேறு
குறள் எண்: 63

தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்.


தம் பொருள் என்ப தம் மக்கள்; அவர் பொருள்
தம் தம் வினையால் வரும்.

விளக்கம்:

தமக்கே உரிய செல்வம், சொத்து, உரிமை என்று போற்றி மதிக்கத்தக்கவை தாங்கள் பெற்ற பிள்ளைகள்தாம். மற்ற பொருள் எல்லாம் தத்தம் வினைப்பயனால், உழைப்பின் பயனால் வருவனவாகும்.

No comments: