Monday, December 20, 2010

குறளின் குரல் - 16

பால்: பொருட்பால் இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 66. வினைத்தூய்மை
குறள் எண்: 660

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.


சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - பசு மண்
கலத்துள் நீர் பெய்து, இரீஇயற்று.

விளக்கம்:

தீய, வஞ்சகச் செயல்களால் ஒருவன் செல்வம் தேடிச் சேர்த்து, அதனை நீண்ட காலத்துக்குக் கட்டிக் காக்கலாம் என் எண்ணுதல், ஈரம் உலராத பச்சை மண் பானையில் தண்ணீரை ஊற்றிக் காத்து வைப்பது போன்றதாகும். பானையும் கரைந்து, நீரும் கசிந்து போவது போல, வஞ்சனையால் செல்வம் பெற்றவனும் அழிந்து, செல்வமும் அழிந்து போகும்.

------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள் எண்: 120

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தம்போற் செயின்.


வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம் போல் செயின்.

விளக்கம்:

வாணிகம் செய்யும் போது பிறர் பொருளையும் தம் பொருள் போலக் கருதி, அப்பொருளின் மதிப்பைக் கூட்டாமல், குறைக்காமல் அப்பொருளின் மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த நேர்மையும் நடுவுநிலைமையும் கருத்தில் கொண்டு செய்வதே சிறந்த வாணிகமாகும்.

----------------

பால்: காமத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 120. தனிப்படர் மிகுதி
குறள் எண்: 1196

ஒருதலையா னின்னாது காமங்காப் போல
விருதலை யானு மினிது.


ஒருதலையா னின்னாது, காமம்; காப் போல
இருதலையானும் இனிது.

விளக்கம்:

காவடியின் இருபக்கமும் சமமான சுமை இருப்பதே சுமப்பவர்க்கு இலகுவாகும், இனியதாகும். அது போல ஆண், பெண் இருவரிடத்தும் காதல் சமமாய் அமைந்திருப்பதே இனியதாகும். இருபக்கமும் காதல் சமமாக இல்லாது ஒருபக்கம் மட்டுமே காதல் இருக்குமென்றால் அது துன்பத்தில்தான் முடியும்.

--------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 45. பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்து தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.


பல்லார் பகை கொளலின் பத்து அடுத்து தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல்.

விளக்கம்:

துணையாக்கிக் கொள்ள வேண்டிய நல்லவர்களுடன் மனம் வேறுபட்டு, அவர் நட்பை விட்டு விடுதல், பலருடன் பகை கொள்வதைக் காட்டிலும் பத்து மடங்கு தீமையைத் தருவதாகும்.
--------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 50. இடன் அறிதல்
குறள் எண்: 498

சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்.


சிறு படையான் செல் இடம் சேரின், உறு படையான்
ஊக்கம் அழிந்து விடும்.

விளக்கம்:

சிறிய படையை உடையவன் தனக்குப் பாதுகாப்பு உடைய இடத்தில் நின்று போர் செய்தால், பெரிய படையுடைய அரசன் ஊக்கம் அழிந்து தோற்றுப் போவான். பெரிய படையானாலும், இடமறியாது சென்றால் தோற்க நேரிடும்.

---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 109

கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்.


கொன்றன்ன இன்னா செய்யினும் அவர் செய்த
ஒன்று நன்று உள்ள, கெடும்.

விளக்கம்:

முன்பு நமக்கு நல்ல உதவியைச் செய்த ஒருவர், பின்பு கொலை போன்ற ஒரு பாதகச் செயலைச் செய்து துன்பம் விளைவிக்க முற்பட்டாலும், அவர் முன்பு செய்த நன்மையை நினைத்தால் அத்துன்பம் தன்னால் நீங்கி விடும். கெட்டதை மறக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1 comment:

கோபிநாத் said...

அரசியல் ஒன்று நல்ல விளக்கம்.

கடை குறளின் விளக்கம் முதலில் சரி என்று நினைத்தாலும் - யோசிக்கும் போது முடியுமான்னு தெரியல!

;)