Friday, March 9, 2012

உத்தியோகம் பெண்கள் லட்சணம் - நந்தினி


"ஏ மனோ..பேங்க் போயிட்டு வந்துர்றியாப்பா..வீட்டு வாடகை, பால் காசு, மளிகைக் காசு குடுக்கணும்.."

"இதோ கிளம்பிட்டேம்மா...வேற ஏதும் வாங்கிட்டு வரணுமா.."
"அப்பா கண்ணாடி ரிப்பேர்க்குக் குடுத்துருந்தார்..ஒரு எட்டு வாத்தியார் கடைக்குப் போய் அத வாங்கிட்டு வந்துரு..."

"ஏன்..திரும்பியும் ரிப்பேரா...ஃப்ரேம் சுத்தமாப் போய்ருச்சும்மா..ரிப்பேர் பண்ணால்லாம் வேலைக்கு ஆவாது...என்ன பெரிசா செலவு ஆய்றப் போது..புதுசு வாங்கச் சொல்லுங்க."

"ஆமாண்டா....செலவைக் குறைச்சு உங்க அக்கா சுமையைக் குறைக்கணும்னு பாக்குறேன்..எல்லாம் நல்லாத்தான் இருக்கு கண்ணாடி..இன்னும் ஒரு வருஷத்துக்காவது வரும்.." பேசியபடியே உள்ளே நுழைந்தார் சபேசன்.
தனியார் கம்பெனி ஒன்றில் கணக்காளராய் இருந்து ரிட்டையர் ஆனவர்..ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கிய நந்தினிக்கு நல்ல மார்க் வாங்கியும் வசதியில்லாத காரணத்தால், டாக்டருக்குப் படிக்க வைக்க முடியவில்லை..அவள் விருப்பப்படி நர்ஸ் படிப்புதான் படிக்க வைத்தார்...

அவளும் படித்து முடித்து, தம்பி படிப்புக்கும் உதவி, தன் கல்யாணத்துக்காவும் பணம் சேர்க்கும் கடமையில், துபாய் ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை செய்கிறாள் கடந்த 3 வருடங்களாக..

அவள் போகும் போது இளையவன் மனோ 3 வது வருடம் படித்துக் கொண்டிருந்தான். இப்போது படிப்பு முடித்து, தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தவனுக்கு பஹ்ரைனில் வேலைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறாள் நந்தினி.

சபேசனும், அவர் மனைவி மீனாட்சியும் நந்தினி அனுப்பும் பணத்தில் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தது போக பேங்க்கில் அவள் கல்யாணத்துக்கென்று கணிசமான தொகை சேர்த்து வைத்திருந்தார்கள். மனோவும் தன் குடும்பச் சூழல் நன்கறிந்தவன்; அக்கா நந்தினியைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கத் தயாராக இருந்தவனுக்கு இந்த வேலையும் கிடைத்ததும் குடும்பமே குதூகலித்தது.

மனோவும் அடுத்த வார இறுதியில் பஹ்ரைன் கிளம்பி விடுவான். நந்தினியையும் கூடிய சீக்கிரம் வேலையை விட்டு விட்டு இங்கே வரச் சொல்லிவிட்டார்கள்.

மனோவுக்கு வேலை கிடைத்ததும்தான் இவர்களுக்கு நிம்மதி வாய்த்தது. பெண் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பிச் சம்பாதிக்க வைத்ததில், இவர்கள் ஏற்கனவே நொந்து போயிருந்த வேளை, உற்றார் உறவினர் வேறு அவ்வப்போது "ம்ம்ம்...காலம் கெடக்கிற கெடப்பில பொட்டப்புள்ளையை வெளிநாடு அனுப்பிச் சமபாதிக்கணுமா..இங்கே என்ன ஆஸ்பத்திரிக்கா பஞ்சம்...என்னமோ போப்பா.." என்று முடியும் போதெல்லாம் எதையாவது சொல்லி அவர்கள் வேதனையை இன்னும் அதிகப் படுத்தினார்கள்.

அப்பாடா..எல்லாமும் முடிந்து சீக்கிரம் விடிவு காலம் வரப்போகிறது.
.
"மனோ..போயிட்டு வாப்பா நேரமாகுது.."

"இதோ கிளம்பிட்டேம்மா..அம்மா மதியச் சாப்பாட்டுக்கு வர மாட்டேன்...ஃபேக்டரி வரைக்கும் போயி ஸெட்டில்மெண்ட் பணம் வங்கிட்டு வந்துர்றேன்..ஊருக்குப் போறதுக்கு முன்னாடி எல்லாரையும் பாத்த மாதிரியும் இருக்கும்.."என்றபடியே வெளியே கிளம்பிவிட்டான்.

"ஏங்க..சாயந்திரம் வெளிய போறப்ப மறக்காம் டெய்லர் கடைக்கு போயிட்டு மனோ தைக்கக் குடுத்த ட்ரஸ்ஸெல்லாம் வாங்கிட்டு வந்துருங்க.."

"சொல்ல மறந்துட்டேன். டெய்லரைப் பாத்தேன். சாயந்தரம் அவரே குடுத்தனுப்புறதாச் சொல்லிருக்கார். சரிமீனாட்சி.....சமைச்சுட்டியா..கொஞ்சம் சூடா ரசம் தாயேன்..நெஞ்சக் கரிக்கிற மாதிரி இருக்கு"

"ஏங்க மோர் வேணாத் தாளிச்சுக் குடுக்கட்டுமா.."

"வேணாம். ரசமே குடு..ஆனா சூடாக் குடு"

இதோ கொண்டு வர்றேங்க.." அடுக்களைக்குள் விரைந்தாள் மீனாட்சி.
ஈஸி சேரில் சாய்ந்த படியே தொலைக்காட்சியை இயக்கினார் சபேசன்.
செய்திகள் சானல் பக்கம் போக, கர்நாடகச் சட்ட சபையில் மந்திரிகள் மொபைலில் ஆபாச வீடியோப் படம் பார்த்து மாட்டிக்கொண்ட செய்தியை அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருந்தார்கள்.

ரசம் கொண்டு வந்த மீனாட்சியிடமும் அதைப் பற்றி விளக்கிவிட்டு, " இவனுங்களுக்குப் படம் பாக்க வேற இடமே கெடக்கலியா...என்ன தைரியமாக் கொஞ்சம் கூட வெக்கமேயில்லாமக் காமிராவப் பாக்குறாங்க பாரு...கர்மம் கர்மம்..."

அரபு நாட்டில் என்னவெல்லம் நடக்கிறது என்ற கொடுமையை அந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்ததாகப் பாழாய்ப் போன விளக்கம் வேறு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்

"இந்த மந்திரிங்களோட இருக்க அப்பா, அம்மா, பொண்டாட்டி, புள்ளங்க எல்லாம் என்ன பாடு பட்டுப் போவாங்க..ஏன் நாண்டுகிட்டுச் செத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.."

சாயங்காலம் 5 மணி அளவில் மனோ திரும்பி வந்தான்.

"ஏம்ப்பா இப்டி வாடிப் போயிருக்க...சாப்பிட்டியா இல்லியா.."

மீனாட்சிக்குப் பதில் சொல்லாமல் தொலைக்காட்சியை இயக்கிச் செய்திகள் சானலில் வைக்க மீண்டும் கர்நாடக மந்திரிகள் காட்சிகள் ஓட..

"காலேலருந்து இந்தக் கருமத்தைத்தான் காமிக்கிறான்..படம் பாக்குற எடத்தைப் பாரு...சனியன் புடிச்சவனுங்க.."

"இப்போ டான்ஸ் ஆடுன பொண்ணுங்களையும் சேத்துக் காமிக்கிறான்..பாருங்கப்பா...அம்மா நீங்களும் வாங்க.."

"இதுவே கண்றாவி..இனி அந்தக் கண்றாவியை வேறு பாக்கணுமா..."

க்லோஸ் அப் காட்சியாகப் பெண்களின் முகம் வர, விக்கித்துப் போனார்கள் சபேசனும், மீனாட்சியும்..அங்கே அரைகுறை ஆடையில் ஆடிக்கொண்டிருந்தது நந்தினியேதான்....

"பாபுகிட்டச் சொல்லிட்டு வர அவன் ரூமுக்குப் போயிருந்தேன். அப்பதான் டி.வி பாத்தேன்...." அவன் சொல்லிக் கொண்டு போன எதுவும் அவர்கள் காதில் விழவில்லை.

சபேசன் சுதாரித்துக் கொண்டு பார்த்த போது, மனோவும் மீனாட்சியும் ஓங்கிய குரலில் அழுது கொண்டிருந்தார்கள்.

இரண்டாம் நாள் மாலை...

மனோவின் துணியைக் கொண்டு வந்த டெய்லர் பையனும், எடுக்கப்படாத பால் பாக்கெட்டுகளைக் கண்ட பால்காரரும், அன்று எதேச்சையாய்ச் சந்திக்க..வீட்டினுள் இருந்து வந்த துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பிடித்துக்கொண்டே அக்கம் பக்கத்தைக் கூட்டிப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தார்கள்...

போலீஸ் வந்து கதவை உடைத்த அவ்வேளையில், வீட்டுக்குள் போன் மணியடிக்க, "நந்தினிதான் போன் பண்றா போலருக்கு" என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

வல்லமையில் வெளிவந்தது.

6 comments:

கோபிநாத் said...

ஒரே தலைப்பில் பலகதைகள் முயற்சிக்கு பாராட்டுக்கள் ! ;-)

போன கதையில் இருந்த ஒரு தெளிவான முடிவு இந்த நந்தினி கதையில் இல்லைன்னு தோணுதுக்கா ;-)

ஹுஸைனம்மா said...

//போன கதையில் இருந்த ஒரு தெளிவான முடிவு இந்த நந்தினி கதையில் இல்லைன்னு//

எனக்கும்... :)))))

(ஆமா, அந்த அமைச்சர்கள் பார்த்த அந்த வீடியோ அரபு நாட்டில் பிடிக்கப்பட்டதாமா, அப்படியா?)

ராமலக்ஷ்மி said...

சம்பவங்களைக் கோர்த்த விதம் நன்று மலர். உலுக்கும் முடிவு.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி...இன்னும் இதே தலைப்பில் சம்பந்தப்பட்ட பெண்கள் பெயர் சேர்த்துக் கதைகள் வரும்..

இந்தச் சிறுகதைக்காக இரண்டு உத்திகள் கையாண்டிருக்கிறேன்...நந்தினி கடைசிவரையில் கதையில் இருப்பாளே தவிர நேரில் வா மாட்டாள்..கதையின் முடிவைச் சூசகமாகத் தெரிவிப்பதில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாய்ப் பாதிக்கும் என்பதால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது நேரிடையாகச் சொல்லப்படவில்லை...

மனோ வீட்டிற்குத் திரும்பி வரும் பகுதியிலிருந்து மீண்டும் படித்துப்பார்த்தால் (நேரமிருப்பின்) கொஞ்சம் தெளிவாகும் என்று நினைக்கிறேன்...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஹுஸைனம்மா..

இந்தச் சிறுகதைக்காக இரண்டு உத்திகள் கையாண்டிருக்கிறேன்...நந்தினி கடைசிவரையில் கதையில் இருப்பாளே தவிர நேரில் வா மாட்டாள்..கதையின் முடிவைச் சூசகமாகத் தெரிவிப்பதில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாய்ப் பாதிக்கும் என்பதால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது நேரிடையாகச் சொல்லப்படவில்லை...

கோபிக்குச் சொன்னதுதான்..

மனோ வீட்டிற்குத் திரும்பி வரும் பகுதியிலிருந்து மீண்டும் படித்துப்பார்த்தால் (நேரமிருப்பின்) கொஞ்சம் தெளிவாகும் என்று நினைக்கிறேன்...

//(ஆமா, அந்த அமைச்சர்கள் பார்த்த அந்த வீடியோ அரபு நாட்டில் பிடிக்கப்பட்டதாமா, அப்படியா?)//

ஆமாம்..தொலைக்காட்சியில் சொன்னர்களே..சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் விளக்கம் அளித்த போது, அவர் சட்டசபையில் உட்கார்ந்திருந்த போது அந்தச் செய்தி செல்பேசியில் வந்ததாகவும், அரபு நாடுகளில் எப்படியெல்லாம் நடக்கிறது பாருங்கள் என்று அருகில் இருந்தவர்க்குக் காட்டியதாகவும் விளக்கம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி...தொலைக்காட்சியில் அந்தச் செய்திகளைக் கண்ட போது, முதலில் அந்தப் பெண்களைச் சரியாகக் காட்டவில்லை...பின் அடுத்து வந்த இரண்டு நாட்கள் என்று நினைக்கிறேன்...தெளிவாகக் காண்பித்தார்கள்..அப்போது அவர்களைப் பார்த்துப் பாவம் என்று தோன்றியது...