பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 71
அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புண்கணீர் பூச றரும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர்
புன்கண் நீர் பூசல் தரும்.
விளக்கம்:
அன்பு என்பது உருவமில்லாத அருவப்பொருள். பிறரிடம் ஒருவருக்கு உள்ள அன்பைக் கண்ணால் காண இயலாது. அந்த அன்பைக் காணும் வழிதான் என்ன?
அன்பு என்ற அற்புதத்தைத் தாழிட்டு அடைத்து வைக்க முடியாது. தம் அன்புக்குரியவரின் துன்பம் காணும்போது, உள்ளன்பைத் தாழிட்டு வைக்க முடியாமல், பொங்குகின்ற கண்ணீர், 'இதுதான் அன்பு, இதுதான் அன்பு' என்று கூக்குரலிட்டுத் தன்னைத் தானே வெளிப்படுத்திக்கொள்ளும்.
ஆர்வலர் - அன்புக்குரியவன், கணவன், பரிசிலன்
புன்கண் - துன்பம்
பூசல் - கூப்பாடு, போர், போரொலி, வருத்தம், ஒப்பனை
----------------
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 66. வினைத்தூய்மை
குறள் எண்: 652
என்று மொருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
விளக்கம்:
புகழும், நன்மையும் தராத எந்த ஒரு செயலையும் எந்த ஒரு காலத்திலும் செய்யாமல் விட்டு விட வேண்டும்.
ஒருவுதல் - விடுதல், நீங்குதல், கடத்தல், ஒத்தல்
-------------------
பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 110. குறிப்பறிதல்
குறள் எண்: 1093
நோக்கினா நோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்.
நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள்; அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
விளக்கம்:
அவள் என்னைப் பார்த்தாள். பார்த்தவள், நாணத்தால் வளைந்து தலைகவிழ்ந்தாள். அவளின் இந்தச்செயல், எங்கள் அன்புப் பயிர் வளரும் வண்ணம் அதற்கு வார்த்த நீர் போலாயிற்று.
அவளின் நாணம் கலந்த பார்வை காதலை உறுதிப்படுத்துவதாக அமைவதால், காதல் பயிர் மேலும் வளரும் என்பது உறுதியாயிற்று.
இறைஞ்சினாள் - வளைந்தாள், வணங்கினாள், தாழ்ந்தாள்
யாப்பு - அன்பு, கட்டு, செய்யுள், உற்தி, சூழ்ச்சி, பொருத்தம், பாம்பு
அட்டிய - இட்ட, அழித்த, வடித்த, சமைத்த, சுவைத்த, தான சாசனம் தருகின்ற
---------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 21. தீவினையச்சம்
குறள் எண்: 201
தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
விளக்கம்:
தீவினையே செய்து பழக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் தீவினை செய்வதற்கு அஞ்ச மாட்டார்கள். ஆணவமிகுதியால் அவர்கள் எதற்கும் அஞ்சாமல் மேலும் மேலும் தீவினையே செய்வர்.
ஆனால், நன்மதிப்புடைய சான்றோர்கள் தீவினை என்னும் செருக்கான செயலைச் செய்வதற்கு அஞ்சுவர். நல்லதையே செய்து பழக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் தீவினையைக் கண்டு அஞ்சுவது இயல்பாகிவிடும்.
--------------------
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 104. உழவு
குறள் எண்: 1031
சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
லுழந்து முழவே தலை.
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்; அதனால்,
உழந்தும் உழவே தலை.
விளக்கம்:
சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தில் பலவகையான தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாறி மாறி வேறு பல தொழில்கள் செய்து வந்தாலும், ஏரால் உழுது பயிர் விளைவிக்கும் உழவுத் தொழிலைச் சார்ந்தே உலகத்தார் வாழவேண்டியிருக்கிறது.
வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாதாரமும், பொருளாதாரமும் அமைந்திருப்பதால், என்றென்றும் உழவுத் தொழிலே தலைசிறந்த தொழிலாகத் தனிப்பெருஞ்சிறப்புடன் விளங்குகிறது.
-------------
பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 31. வெகுளாமை
குறள் எண்: 304
நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
விளக்கம்:
முகம் மலர சிரித்துப் பேசி மகிழ்வதையும், மனம் மலர மகிழ்ந்து நிறைந்து விளங்கும் உவகையையும் மறையச் செய்து விடும் சினம். சிரித்துப் பேசுவதையும், மகிழ்ந்து உறவாடுவதையும் கெடுத்து விடும் சினம். அத்தகைய தன்மையுடைய சினத்தைவிட ஒருவருக்குப் பகையாய் வாய்க்கக்கூடியது வேறு எதுவும் இல்லை.
No comments:
Post a Comment