அதற்குள் வருடம் ஒன்று ஓடிவிட்டதா?
2006 டிசம்பர் இறுதி வாரத்தில் முதல் முறையாகக் கல்யாண் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க நேர்ந்தது. உணவு விடுதி ஒன்றில் ஒரு விருந்தில் கலந்து கொண்ட போது..சிரிப்புடன் சின்னதாக ஒரு அறிமுகப் படலம். அன்றிரவு அவர்கள் இந்தியாவுக்கு 2 வார விடுமுறை செல்வதற்கான ஆயத்தத்தில் இருந்தார்கள். அபர்ணா கல்யாண் பெற்றோருக்கு மற்றும் ஊரிலுள்ள அனைவருக்கும் வாங்கிய பரிசுப் பொருட்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 3 வயது வர்ணிகா துறுதுறு குழந்தையாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது, மழலையில் ஓரிரு வார்த்தைகள் பேசியது இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது.
இரண்டாவது முறை பிப்ரவரி 1,2007 அன்று, தூதரக வளாகத்தில் நடைபெற்ற ஒரு தமிழ்மன்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது ஒரு சிறு புன்னகைப் பரிமாற்றம்.
பிப்ரவரி 11ந் தேதி மதியம் கல்யாண் மறைந்த செய்தி..நம்பவே முடியவில்லை..ஆனாலும் நிஜம். ரியாத்தே ஸ்தம்பித்துப் போனது. கல்யாண் குடும்பம் இங்கிருந்து சென்றது முதல் அங்கே இறுதிச் சடங்கு நடந்தவரை நண்பர், அறிந்தோர், அறியாதவர் அனைவரும் மனதளவில் உடனிருந்து வழிநடத்தினோம்.
சில வாரங்கள் முன் கல்யாண் தம்பதி, ஒரு மேடை நாடகத்தில் மணமக்கள் கோலத்தில் மாலையும் கழுத்துமாக இருந்த புகைப்படத்தை ஒரு மடலில் காண நேர்ந்த போது மனம் வெடித்துப் போகாதவர்கள் யாருமே இல்லை. துக்கத்தைத் தொண்டையில் அடக்கி இறுகிப் போயிருந்த அபர்ணா, ஊருக்குப் போகிறோம், அப்பா ஊரில் இருக்கிறார் என்று விவரங்கள் அறியாத வர்ணிகாவின் பேச்சு..மனதைப் பிசைந்தது.
அவரைப் பற்றிய செய்திகள் பலர் அறிந்தது என்றாலும், தமிழ்ச்சங்க உறுப்பினர் என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன் அதுவரை. அதன் பின் நடந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட போதுதான் வலைக்களத்தில் அவர் புரிந்த தொழில்நுட்பச் சேவைகள், தமிழ்ப்பதிவுலகம் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் குழந்தைகளுக்காக வலையில் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது பேராவல் புரிந்தது.
தமிழ் வலையுலக நண்பர்களின் மடல்கள், முக்கியமாக சென்னப்பட்டணம் நண்பர்கள் மடல்களின் மூலமே அவரின் சத்தமில்லாத சாதனைகள் தெரிய வந்தது. எனக்குத் தமிழ் வலையுலகங்களை அறிமுகம் செய்து வைத்தது அவர் மரணம்.
ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர், ரியாத் எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளர், தேன்கூடு திரட்டியைத் தோற்றுவித்தவர், முத்தமிழ்மன்றத்தின் நிர்வாகி என்ற பல முகங்களில் சேவைகள் புரிந்து வந்தவர். காலம் பொழுது கணக்கின்றிக் கணினி முன்னேயே தவமிருந்தவர். காலனின் சதியால் தன் கனவுகள் பலவற்றைப் பாதியில் விட்டுவிட்டுச் சென்று விட்டார்.
அவர் மனைவி அபர்ணா தற்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். வர்ணிகா இப்போது பள்ளியில் படித்து வருகிறாள். இத்தகவல்கள் அவர் நண்பர்கள் மூலம் அறிந்தேன்.
சாகரன் பதிவுகள் பதிந்த இந்த வலைப்பூ இன்று வாசம் மட்டும் ஏந்தி வெறுமையாய் நிற்கிறது.
சுடர் விளையாட்டைத்
துவக்கி வைத்தவர்
சுடராய் இன்று
பலர் இதயங்களில்..
அருகிலிருந்தும்
அறிமுகமில்லாமல் போன
ஆதங்கத்துடன்
ஆழ்ந்த வருத்தத்துடன்
அன்புடன்
நன்றியுடன்
அவருக்கு
என் அஞ்சலிகள்!
(நினைவஞ்சலியா? நினைவாஞ்சலியா? எது சரி?)
Sunday, February 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கஷ்டமாகத்தான் இருக்கு.
ஹ்ம்ம்ம்...ஒரு வருடம் ஓடிவிட்டது..
உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்...
அவரின் மனைவி மற்றும் குழந்தையின் நலனுக்காய் எல்லோருக்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திக்கிறேன்....
ம்ம்ம்ம்
வருடம் ஆனது கூட நம்ப முடியவில்லை
ஒரு வாரம் கல்யாண் பற்றிய விவரங்கள் வந்த வண்ணம் இருந்தன.
அதுவரை அவர் யார், என்ன என்று
விஷயங்கள் தெரியாது.
பிறகுதான் எழுத்துக்கு எத்தனை ஆதரவு இந்தத் தேன்கூடு,, என்று தெரிந்தது.
டூ லேட்:(
இதற்கு முன்பு அவரை பற்றி அதிகம் தெரியாது ஆனால் உங்கள் மூலம் நிறைய தெரியவந்தது.
கஷ்டமாகதான் இருக்கிறது.:(
மனதை மிகவும் கஷ்டப் படுத்தியது இந்தப் பதிவு
அன்புடன் அருணா
Post a Comment