Sunday, February 3, 2008

எரிந்த மலர்களுக்கு...

அஞ்சலிகள் மட்டுமே
தொடர்கின்றன
ஆண்டுகள் எட்டு
ஆன பின்னும்...

எந்தப் பாவத்துக்காய்
இந்தத் தீக்குளிப்பு?
தருமம் ஏன்
தவறியது
தருமபுரியில்?

எரித்த அம்புகள்
ஏகாந்தமாய்...
எய்தவர் பவனி
ஏகபோகமாய்...

மரணதண்டனை
தேவையா இல்லையா
விவாதங்கள் தொடர...

சட்டங்கள்
சில்லறைக்காய்ச்
செல்லாமல் போக...

கருவறைச் சுமையைக்
கல்லறையிலும் கண்ட
பெற்றோர் மனம்
செல்லரித்துப் போக...

கண்ணால் கண்டவர்
காதால் கேட்டவர்
நண்பர் அந்நியர்
சிந்தை நொந்து
சித்தம் தெளியாது நிற்க...

(கல்லூரி)
திரைப்படத்தின் உச்சகட்டப்
பரபரப்பு/பரிதாப
உத்திக்காய்...
ஏதோ ஒரு
காரணமற்ற காரியத்துக்காய்
நெருப்புக் கோப்புகள்
மீட்டுத் தர...

அஞ்சலிகள் மட்டுமே
தொடர்கின்றன
ஆண்டுகள் எட்டு
ஆன பின்னும்...

17 comments:

SanJai said...

//அஞ்சலிகள் மட்டுமே
தொடர்கின்றன
ஆண்டுகள் எட்டு
ஆன பின்னும்...//

சட்டங்கள் கடுமையாகும் வரை இது தொடரத் தான் செய்யும். வேறு வழியில்லை.நான் நேரில் கண்டு கண்ணீர்விட்ட கோர சம்பவம். அஞ்சலி செலுத்துவோம் அந்த மலர்களுக்காக.

பாச மலர் said...

சஞ்சய்,

உங்கள் அந்தப் பதிவைப் படித்திருக்கிறேன்...

புதுகைத் தென்றல் said...

மனதில் என்னென்ன கனவுகள் சுமர்ந்தார்களோ?

பாவம். ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இனி இப்படி ஒரு துயரம் நடக்ககூடாது என்று.

ஜோதிபாரதி said...

உள்ளத்தை உருக்கும் உங்கள் கவிதை! இதயத்தை நொறுக்குகிறது!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

aruna said...

//அஞ்சலிகள் மட்டுமே
தொடர்கின்றன
ஆண்டுகள் எட்டு
ஆன பின்னும்...//

இந்த வரிகள் நம் கையாலாகாத்தனத்தை நினைவூட்டி மீண்டும் அந்த நாளை கண்முன் கொண்டு வந்து கண்ணில் நீர் கட்டித் தொண்டை அடைக்க வைக்கிறது..
அன்புடன் அருணா

Divya said...

நெகிழவைத்தது கவிதை வரிகள்......கணமானது இதயம்!

8 ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும், இன்றும் பெற்றொரின் மனம் படும் வேதனையை நினைத்தால், துளிர்விடும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்ல.

கோபிநாத் said...

:((

பாச மலர் said...

புதுகை,

இப்படி ஒன்ரு மீண்டும் நடக்காததே ஒரு நிம்மதிதான்..

ஜோதிபாரதி,அருணா,திவ்யா,கோபி,

நம் அஞ்சலிகள் செலுத்துவோம்..வேறு என்ன செய்வது?

நித்யகுமாரன் said...

//கருவறைச் சுமையைக்
கல்லறையிலும் கண்ட
பெற்றோர் //

வரிகள் அருமை...

இப்படியேதும் இனி நடவாதிருக்க...
இனியொரு விதி செய்வோம்
அதை எந்நாளும் காப்போம்

இரண்டாம் சொக்கன்...! said...

வேதனை ததும்பும் வரிகள்...

பகிர்ந்து கொள்கிறேன்....

அதே நேரத்தில், குடந்தையில் நடந்தது கவனகுறைவால் ஏற்பட்ட விபத்து, தருமபுரியில் நடந்தது திட்டமிட்டு கதற கதற செய்யப்பட்ட படுகொலை...

இரண்டையும் ஒரே அளவுகோலில் வைத்து பார்ப்பது சரியா?

பாச மலர் said...

நித்யகுமாரன்,

இனிமேல் இப்படி நடக்காது என்றே நம்புவோம்..

சொக்கரே,

இதில் கூறப்பட்டுள்ளது தருமபுரிச் சம்பவம் மட்டுமே...

உங்கள் கேள்வி இந்தப் பதிவு தொடர்பாக இல்லாமல், புதிய கேள்வி என்று வைத்துக் கொண்டால்..ஆமாம்..இரண்டு சம்பவங்களும் கொடுமைதான் என்றாலும்..வேறு விதமான கொடுமகள்..

மரணம், பெற்றோர் துயரம் என்று பார்த்தால் அவர்கள் இழப்பு ஒன்றுதான்..

சமூகமாய் நாம் நின்று பார்க்கும்போது இரண்டின் அளவுகோலும் வேறுவேறுதான்..

ரசிகன் said...

உண்மைதான் பாசமலர்.. மனம் கனக்கிறது..

அன்புடன் புகாரி said...

அருமையான பதிவு பாசமலர்!

இறுக்கமும் உருக்கமும் ஒருங்கே இக்கவிதையில் அமைந்திருப்பது அழுத்தமான வேதனையின் வெளிப்பாடாய் இக்கவிதை பதிவாகி இருக்கிறது என்பதைச் சொல்கிறது

------
எரித்த அம்புகள்
ஏகாந்தமாய்...

எய்தவர் பவனி
ஏகபோகமாய்...

சட்டங்கள்
சில்லறைக்காய்ச்
செல்லாமல் போக...
------

இதைத்தான் நான் வெறுக்கிறேன். இந்தச் சம்பவத்தின் ஆணிவேர்கள் அத்தனையிலும் தீவைத்து சுத்தமாய் அழித்துப் போடவேண்டாமா?

அஞ்சலிகளில் என்ன இருக்கிறது?

சட்டம் ஒழுங்கு எப்போது காக்கப்படும்?

----------
கருவறைச் சுமையைக்
கல்லறையிலும் கண்ட
பெற்றோர் மனம்
செல்லரித்துப் போக...
---------

இயலாமைதானே?

--------
அஞ்சலிகள் மட்டுமே
தொடர்கின்றன
ஆண்டுகள் எட்டு
ஆன பின்னும்...
--------

சரியான சாட்டையடி!

பாச மலர் said...

ரசிகன், புகாரி,

பகிர்தலுக்கு நன்றி

RATHNESH said...

இன்றுதான் படித்தேன்.

கனமாக இருந்தது.

மும்பையும் இன்று எரிந்து கொண்டிருக்கிறது (நல்ல வேளையாக இதுவரை உயிர்ப்பலி இல்லை)

"இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகள் எங்களைத் தலைவர் என்றோ தலைவி என்றோ சொல்வதை விட எங்களுக்குக் கேவலம் வேறு இல்லை" என்கிற அளவுக்காவது கட்சித் தலைமைகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். (எவ்வளவு பெரிய பேராசை எனக்கு!)

பாச மலர் said...

//இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகள் எங்களைத் தலைவர் என்றோ தலைவி என்றோ சொல்வதை விட எங்களுக்குக் கேவலம் வேறு இல்லை" என்கிற அளவுக்காவது கட்சித் தலைமைகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். (எவ்வளவு பெரிய பேராசை எனக்கு!)//

பெரிய பேராசைதான்..ஆனால் கலவரம் செய்யும்படி தூண்டிய தலைமக்கு இப்படியெல்லாம் இங்கிதம் வந்து விடுமா என்ன?

நானானி said...

எத்தனை ஆண்டுகள் ஆனால்லென்ன?
இழப்பு ஈடுசெய்ய முடியாததல்லவோ?

எய்தவனும் அம்புகளும் எரிவதெப்போ?
இழப்பென்பதை அவர்களும் அறிவதெப்போ?