Tuesday, April 26, 2011

நான் அறிந்த சிலம்பு - பகுதி 9

புகார்க்காண்டம் - 2. மனையறம் படுத்த காதை
புகழ்வாய்ந்த சிறப்பும்
அரசரும் விரும்பும் செல்வமும்
பரதவர் மிகுதியாய் வாழ்வதுமானது
புகார் நகர்தானது.

நீர்வளம் நிறைந்ததொரு சிறப்பு;
அலையெனத் திரண்டு
மக்கள் வெள்ளம் வரினும்
சலிப்பின்றி அள்ளிவழங்கும்
வளம் கொழிக்கும் செழிப்பு;

அலைகடல் வழியே
பெருங்கலம் செலுத்தி,
பெருநில வழியே
வண்டி கொண்டு வாணிபம் செய்து
அரும்பொருட்கள் ஆயிரமாயிரம்
கொண்டு வந்து குவித்ததொரு சிறப்பு.

குலவொழுக்கம் குன்றாத
நற்குடியில் பிறந்த
நல்ல செல்வந்தர்
தான தருமங்கள்
பலவும் செய்து பெறக்கூடிய
'உத்தரகுரு' என்னும் செல்வபூமியை
இப்புகார் நகர் ஒத்திருப்பது
இன்னுமொரு சிறப்பு.

அத்திருநகரில்
எழுநிலை மாடமொன்றின்
இடைநிலையாம்
நான்காம் மாடத்தில்
மன்மதனே செய்தது போன்ற
அழகிய கால்களுடைய
கட்டிலின் மேல் அமர்ந்திருந்தனர்
குவளைமலர்க்கண்ணி
கண்ணகியவளும்
காதல் கணவன் கோவலனும்...

தென்றலைக் கண்டு மகிழ்ந்து, இருவரும் காதல் கைம்மிக நிலா முற்றம் போதல்

அந்தக் காதல் நேரத்தில்
அழகிய தென்றல்தான் என்ன செய்தது?

செங்கழுநீர்மலர், ஆம்பல்மலர்
முழுமையான இதழ்களின் அழகு
குலைந்திடாத முழுக்குவளைமலர்,
வண்டுகள் தேனுண்ண
வாய்ப்பு நல்கும் வண்ணம்
அரும்பவிழ்ந்த தாமரைமலர் --
இவ்வயல்வெளி நீர்நிலைமலர்களின்
வாசம் சுமந்து நின்றது
ஆங்கு வீசிய தென்றல்;

இவற்றினின்று வேறுபட்ட,
மேன்மைபொருந்திய
வெள்ளித்தோடாய் விரிந்த
தாழைமலர் வாசம்,
செண்பகச்சோலையில்
அழகு மாலை போன்று
இதழ்விரித்து மலர்ந்திருக்கும்
மாதவி(குருக்கத்தி) மலர் வாசம்,
இவ்விரண்டும்
தன்வசம் விரவிக்கொண்டது
அவ்விளந்தென்றல்;

தாதுடன் சேர்ந்த தேனதனை உண்டு,
ஒளிபொருந்திய முகம் கொண்ட மகளிர்
திருத்திச் சுருட்டி முடிந்த கூந்தலின்
நறுமணம் நுகர்ந்திட விழைந்து,
அவர்தம் பள்ளியறைப் புகமுயன்று
புகமுடியாததால் ஏக்கமுற்று,
'எப்போது பள்ளியறை திறப்பார்'
என்று எதிர்பார்த்துச்
சுழன்று திரியும் வண்டுகளுடன்
தானும் சேர்ந்துகொண்டு
பள்ளியறை புகுந்திட
வழிதேடியது தென்றல்;

முத்து மணிகளால்
அணிசெய்த நேர்த்தியான
சாளரமொன்றை
அவ்வழகுப் பெண்கள் திறந்தபோது
விரைந்து நுழைந்த வண்டுகளுடன்
தானும் தவழ்ந்து சென்று
உட்புகுந்து உலா வந்தது
நிலாத்தென்றல்;

அழகிய தென்றலைத்
துய்த்து மகிழ்ந்த தம்பதியர்தாமும்
காதலின் மிகுதியால்
கூடிட விரும்பினர்;
மலரம்புகள் ஐந்தினைச்
சுமந்த காமனவன் வீற்றிருக்கும்
அழகிய நிலா மாடம் அடைந்தனர்.

சிலம்பின் வரிகள் 1 - 27 இங்கே

4 comments:

ஜீவி said...

அடிகளார் எடுத்துச் சொல்லும் நேர்த்தியும், காட்சிப்படுத்தும் பாங்கும்
படிக்கப் படிக்க தமிழின் இயல்பு அழகை மேலும் அழகுபடுத்துவது போல உள்ளது.

அதைச் சுவைபடச் சொல்லும் உங்களுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

தங்கள் தமிழில் கணீரென சிலம்பு. தொடருங்கள் மலர்.

கோபிநாத் said...

அழகோ அழகு ;)

சிநேகிதன் அக்பர் said...

அழகுத்தமிழில் சிலம்பொலி அருமை.