Wednesday, November 28, 2007

கண்ணியம் காப்பாய் பெண்ணியமே

"அச்சம், மடம், நாணம் எல்லாம் மிச்சம் மீதி ஏதுமின்றி
எச்சில் போலத் துப்பிப் போடடி....."

கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஏதோவொரு தொடரின் (புதுமைப்பெண்கள்?) பாடல் இப்படிப் ஒலிக்கிறது..

பெண் விடுதலை, பெண்ணியம் என்று காலம் காலமாகப் பேசி வருகிறோம்...பள்ளி போகாத நிலை, பால்ய விவாகம், சதி,விதவையாகி வீட்டில் முடக்கம், பெற்றோர் காட்டும் ஆண் பெண் குழந்தை பாரபட்சம், முதலிய கொடுமைகள் காலம் காலமாகப்பெண்களுக்கெதிராக நடைபெற்று வந்தன. அதெல்லாம் மாறி இன்றைய நிலையில் குறிப்பிடும் அளவு முன்னேறி இருக்கிறோம்.

சமுதாயத்தில் பெண்கள் நிலையைப் பொருளாதார அடிப்படையில் 3 விதமாகப் பிரிக்கலாம்..இதில் மேல்வகுப்பைச் சேர்ந்தவர்கள்,மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள், அடித்தட்டைச் சேர்ந்தவர்கள்...இதில் 3 ஆவது ரகத்தைத் தவிர(அவர்களுக்குத்தான்
விடிவு காலம் என்று வருமோ தெரியவில்லை) மற்ற பெண்கள் எல்லாம் அடிமைத்தளையிலிருந்து பெரும்பாலும் விடுபட்டவர்கள்தான்...விதிவிலக்குகளும் உண்டு..ஆனால் விழுக்காடு குறைவுதான்..

பெற்றோரால், கூடப் பிறந்தவர்களால் புரிந்து கொள்ளப்பட்டு, பின் கணவன் வீட்டாரால் புரிந்து கொள்ளப்பட்டு...இப்படிப் போகிறது பயணம்..ஆணுக்கும் இப்படித்தான்..ஆனால் சமுதாய மற்றும் உடற்கூறு அமைப்புகளால் ஆணுக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்டு
அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் உண்டு. பெண்களும் தங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும்? உலகத்தரத்தில் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் நம் இந்தியாவின் பெருமை என்னவாகும்?

காலம் காலமாக வழங்கி வரும் சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாய் உடைந்து கொண்டுவருகின்றன..சம்பிரதாயங்கள் உடைந்தாலும் பண்பாடு பாக்கியிருக்கிறது...
உடைத்துவிட்டு நியாயமாக நடப்பது என்பது தனி மனித ஒழுக்கத்தைப் பொறுத்தது..கற்பு நெறி
இருவருக்கும் பொதுவில் வை என்று நாம் யாரைக் கேட்க முடியும் பாரதியைப் போல?
அடிமைக் காலத்தில் எழுந்த பொதுவான கேள்வி அது..இன்று தனி மனிதக் குடும்பங்களில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஒழுக்க நெறியால் விடை காணக்கூடிய கேள்வி...

தேசம், மொழி இவற்றை அன்னை என்னும் நாம் பெண்மைக்கென்று சமுதாயக் கட்டுப்பாட்டுக்காக சில அடையாளங்களை விட்டு வைத்துள்ளோம். ஆண், பெண் தனி இருக்கைகள், பொது இடங்களில் இருவரின் பழக்கவழக்கங்கள்....உடைகள் முதலியன..இவற்றில்
பெரும்பாலானவை மீறப்பட்டுள்ளன...நாகரிகமாக, பிறர் முகம் சுளிக்காவண்ணம் மீறப்பட்டுள்ளன..(மறுபடியும் சொல்கிறேன்..விதிவிலக்குகள் உண்டு..விழுக்காடு நம் நாட்டில் குறைவுதான்..)

பெண்ணியம், பெண் விடுதலை என்று என்னதான் பேசினாலும் இது போன்ற பாடல்கள் முகம் சுளிக்க வைக்கின்றன அநேகம் பெண்களை..அதுவும் என்னைப் போன்ற விடலைப் பருவத்தில் மகள் உள்ள தாய்களை..

நியாயமான சுதந்திரம் கிடைக்காத இடத்தில் போராடிப் பெற வேண்டியதுதான் புதுமைப்பெண்ணின் கடமை..இது போலப் பாடிக் கொண்டிருப்பதல்ல..

பாடிய கவிஞர் ஆண்தானே என்ற வாதத்துக்குச் சத்தியமாக நான் வரவில்லை..

ஆரோக்கிய, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் செயல்பாடுகளும்தான் நம் தற்போதையத் தேவை. தனி மனித வாழ்வின் நெறியே மெல்ல மெல்ல சமுதாய நெறியாக மாறும் என்பது
வரலாறு உரைக்கும் உண்மை.

20 comments:

கீதா சாம்பசிவம் said...

எப்போ மதுரைநகர்ப் பதிவு குழுமத்திலே சேரப் போறீங்க????

G.Ragavan said...

கண்ணியம் காப்பதற்கும் உரிமையைக் கேட்பதற்கும் வேறுபாடு உண்டென்று நினைக்கிறேன்.

அச்சம் எதற்குத் தேவை? அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்.

மடமை ஏன்? மடத்தனமா இருக்கனுமா என்ன?

நாணம்.....இது ஒன்னு போதுங்க...முன்னேற விடாம தடுக்க.

பயிர்ப்பு....இது வேறொரு பதிவுல விவாதிக்க வேண்டியது.

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு போவதற்கும் கண்ணியம் போவதற்கும் தொடர்பில்லை என்பது என் கருத்து.

பாச மலர் said...

உரிமையைக் கேட்பதில், போராடுவதில்தான் கண்ணியம் வேண்டும் என்பது என் கருத்து.

கற்பு போலஅ.ம்.நா.ப.இருவருக்கும் பொதுவில் வைப்போம் என்று சொல்கிறீர்கள்..ஒத்துக் கொள்ள வேண்டிய ஒன்றுதான்...

கண்ணியம் பற்றிக் கூறியது...அந்தப் பாடல் வரிகளின் தாக்கத்தினால்தான்..
(உங்கள் பதிவைக் குறித்து அல்ல..அதில் கண்ணியத்துக்குக் குறைவில்லை.)

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு மட்டும்தான் பெண்மையென்று சொல்வதற்கல்ல...அ.ம்.நா.ப மட்டுமே பெண்மையல்ல...அதையும் தாண்டிப் பெண்களின் சாதனை தொடர்ந்து வருகிறது என்று நாம்தான் பார்க்க ஆரம்பித்து விட்டோமே..

எது எப்படியோ..ராகவன்,நந்தா போல நிறைய பேர் சிந்திக்க, செயல்படத் தொடங்கியதே ஒரு நல்ல மாற்றம்தானே..

பாச மலர் said...

கீதா,

இதோவந்துட்டேன்.வந்துட்டேன்..கட்டம் கட்டமாகத் தெரியும் சில எழுத்துருப் ப்ரச்னைகளால் தாமதம்...சரி செய்துவிட்டு இதோ வந்துடுறேன்...

நந்தா said...

பாசமலர் இது போன்ற பாடல்கள் எதுவுமே, ஏதோ பெண்ணிய நோக்கிலோ அல்லது சமூகத்தில் புரட்சியை உண்டு பண்ணும் நோக்கிலோ இல்லை. டைட்டில் சாங்கைப் பார்த்த உடனே எல்லார்ய்க்கும் ஒரு ஹைப்பைக் கொடுத்து விட வேண்டும் என்பதே இதன் நோக்கங்கள். இதை எல்லாம் பொருட்படுத்தாமலிருக்கலாம்.

முன்னேறி இருக்கிறோம் என்பது வேண்டுமானால் உயர் நடுத்தரக் குடும்பங்களிலோ அல்லது உயர் தட்டு மக்களிடையே வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

ஒரு ஒரு மாசத்துக்கு முன்னாடி எனது நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவரது தூரத்து உறவினர் ஒருவர் தனது மகளுடன் அவரது வீட்ட்லி தங்கி இருந்தார். அந்த பெண் படித்து முடித்ததும், இப்போதான் ஏதோ சென்னையில சின்னதாய் ஒரு வேலை கிடைத்திருக்கிறது போல. அது சார்பாய் மகளை ஹாஸ்டலில் சேர்க்கும் பொருட்டு வந்திருந்து அங்கே தங்கி இருந்தார்.

நான் போய் அவர்கள் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களும் அங்கே இருந்தனர். நான் எனது நண்பர், அவரது உறவினர் மூவரும் உட்கார்ந்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். எனது நண்பர் கேட்ட கேள்விக்கு எல்லாம் அந்தப் பெண் நின்றுக் கொண்டேதான் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

உக்காரும்மா என்று நானும், எனது நண்பரும் சொல்லும் போது அந்தப் பெண் "இருக்கட்டுங்க" என்றுதான் பதிலளித்தார். எனக்கும் சத்தியமாய் அப்போது காரணம் புரிய வில்லை. அப்போதான் என் நண்பர் சொன்னார்.

"அதெல்லாம் அந்தக் காலம்மா. சும்மா உக்காந்து பேசு" என்று. அப்போதான் என் மர மண்டையில் உறைத்தது. அந்த பெண் ஏன் உட்கார மறுத்தார் என்று.

அப்போ அந்த பெண்ணின் அப்பா, பெருமையாகச் சொன்னார், "எங்க வீட்டுல எல்லாம் பொண்ணுங்களை அப்படிதான், மரியாதை கத்துக் கொடுத்து வளர்ப்போம். நீங்க என்ன சொன்னாலும் அவ உக்கார மாட்டா. இந்தா சும்மா உக்காரு" என்று தன் மகளைப் பார்த்துச் சொன்னதுக்கப்புறம்தான் அந்தப் பெண் அமர்ந்தார்.

இதுதான் மரியாதை, இதுதான் அந்த கிராமத்து வெள்ளாந்தி மனசு என்று எவரேனும் வாதாட வந்தால்,கொலைகாரனாய்டுவேன்.

நான் சொல்ல வருவது இன்னும் எங்கள் ஊர் கிராமங்களில் பெண்களின் நிலை மோசமாய்த்தான் இருக்கிறது என்பதே.


http://blog.nandhaonline.com

அரை பிளேடு said...

//நியாயமான சுதந்திரம் கிடைக்காத இடத்தில் போராடிப் பெற வேண்டியதுதான் புதுமைப்பெண்ணின் கடமை..இது போலப் பாடிக் கொண்டிருப்பதல்ல..
//

Well Said.


http://araiblade.blogspot.com/2007/11/blog-post_29.html

Baby Pavan said...

இன்னைக்கு ஒரு பிரசண்ட் போட்டுக்கரேன்

பாச மலர் said...

//இதுதான் மரியாதை, இதுதான் அந்த கிராமத்து வெள்ளாந்தி மனசு என்று எவரேனும் வாதாட வந்தால்,கொலைகாரனாய்டுவேன்.//

நம் கிராமங்களில் இது மாற அரை நூற்றாண்டு போதுமா என்பது சந்தேகந்தான்...இன்னும் அதிகம் காலமாகும்..

பாச மலர் said...

அரை பிளேடு said...

நன்றி ...

Baby Pavan

noted..

Naresh Kumar said...

நந்தா சொன்னது போல் இந்த பாடல் ஒன்றும் பெண்ணிய நோக்கிலோ அல்லது புரட்சி நோக்கிலொ எழுதியிருக்க வாய்ப்பில்லை.

//நம் கிராமங்களில் இது மாற அரை நூற்றாண்டு போதுமா என்பது சந்தேகந்தான்...இன்னும் அதிகம் காலமாகும்..//

என்னைப் பொறுத்த மட்டில் இது போன்ற விஷயங்கள் மாறுவதற்கு வருடங்கள் மட்டுமல்ல, தலைமுறை ரீதியான மாற்றங்கள் தேவை!

பாச மலர் said...

வாங்க நரேஷ்குமார்..

தலைமுறை ரீதியான மாற்றத்திற்காகக் காத்திருப்போம்..

இராம்/Raam said...

அக்கா,

உங்களின் மெயில் ஐடி சொல்லுங்க.... :)

admin@madurainagar.com'க்கு மெயில் பண்ணுங்க...

பாச மலர் said...

malarsaba@gmail.com...

நன்றி இராம்...

புதுகைத் தென்றல் said...

vanakkam

பாச மலர் said...

வணக்கம் புதுகைத்தென்றல் சார்..கருத்து சொல்லாம போயிட்டேங்களே...

புதுகைத் தென்றல் said...

என்ன சொல்றதுன்னு தெரியல. புல்லரிச்சு போச்சு. அதான் அட்டெண்ட்ஸ் மாத்திரம் போட்டுட்டு போயிட்டேன்.

படிச்சத வெளிங்கிக்க கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது அதாங்க.

ஆமாம் husbandology பாடம் ஆரம்பிச்சிருக்கேனே பார்க்கலையா?

மங்களூர் சிவா said...

//
இதுதான் மரியாதை, இதுதான் அந்த கிராமத்து வெள்ளாந்தி மனசு என்று எவரேனும் வாதாட வந்தால்,கொலைகாரனாய்டுவேன்.
//
:-)))))))))))))))))

செம காமெடிய்யா நந்தா

இந்த காலத்துல பெரியவங்களுக்கு யார் மதிப்பு குடுக்குறா எல்லாம் அது அதுங்க இஷ்டத்துக்குதான் திரியுதுங்க!

Divya said...

கண்ணியம் தவறாமல், உரிமைக் கேட்பதே பெண்களுக்குத் தேவை!

அச்சம், மடம் , நாணம் போன்ற பெண்ணின் இயல் குணங்களை விட்டு வெளிவர வேண்டிய அவசியம் இல்லை,
ஆனால் உங்கள்[பெண்கள்] உரிமையை நிலைநாட்ட, முன்னேறிச்செல்ல முடியாமல் தடுத்து,உங்களை பெலவீனப்படுத்தும் ஒரு வேலியாக அவை இருக்க வேண்டியதுமில்லை.

\\நியாயமான சுதந்திரம் கிடைக்காத இடத்தில் போராடிப் பெற வேண்டியதுதான் புதுமைப்பெண்ணின் கடமை..இது போலப் பாடிக் கொண்டிருப்பதல்ல..\\

Well Said!!

என்று பெண் தன் பெண்மையின்..

'அச்சம்' தன்னை கோழையாக்காமல்,
'மடமை' தன்னை மடத்தனமாக்காமல்,
'நாணம்' தன்னை பலவீனப்படுத்தாமல்,

தன்னை மாற்றுகிறாளோ, அதுவரை இப்படி பாடிக்கொண்டிருப்பதை தவிர வேறுவழியில்லை.

Mangai said...

பெண் சுதந்திரம் என்பது இப்போது ஒரு வியாபார நோக்கொடு பார்க்கப் படுகிறது என்றே தோன்றுகிறது.

சுதந்திரம் என்பதே ஒருவருக்கு ஒருவர் மாறு படக் கூடியதாக இருக்கும் போது , இது தான் சுதந்திரம் என்று உடல் சார்ந்த விஷயங்களையே முன்னிறுத்துவது வியாபார நோக்கின் பின்னணியாகவே படுகிறது.

திரைப் படப் பாடல்கள் பல, எல்லை மீறல் என்பதை ஒரு பெண் குரல் வழியாகவோ, பெண் பாத்திரம் வழியாகவோ சொல்ல முயல்வதும் அதன் காரணமாகவே என்று எனக்குப் படுகிறது

பாச மலர் said...

//'அச்சம்' தன்னை கோழையாக்காமல்,
'மடமை' தன்னை மடத்தனமாக்காமல்,
'நாணம்' தன்னை பலவீனப்படுத்தாமல்//

Well said Divya.
இந்தத் தெளிவு ஒரு பெண்ணுக்குள் வர வேண்டும் முதலில்..வந்து விட்டால் வேறு தேவைகள் அவளுக்கேது?

மங்கை,
ஆமாம்.விளம்பர நோக்கில் எழுதித் தள்ளுகிறார்கள்..