Saturday, December 8, 2007

உவமைகளில் பொய்யும் மெய்யும்

சூரியனின் சாயல்கள்
சுமக்காத கண்கள்
பவளத்தின் சாயல்கள்
பளிச்சிடா இதழ்க‌ள்
ப‌னியின் வெண்மை
பார்ர்த்திராத பழுப்பு நிறம்
கம்பிக‌ளை ஒத்த‌ கேச‌ம் ...‍‍
இவைதான் என் காதலி!

செந்நிற‌ம் மேவிய‌
வெண்ணிற‌ ரோஜாக்க‌ள்
தோட்ட‌த்தில் பார்த்த‌துண்டு
அவ‌ள் க‌ன்ன‌த்தில்
பார்த்த‌தில்லை.

திர‌விய‌ங்க‌ளின் சுக‌வாசத்தில்
ம‌ய‌ங்கிய‌துண்டு
என் காதலியின் சுவாச‌த்தில்
நான்
பொசுங்கிய வாசமும்
நுகர்ந்ததுண்டு.

என் காதலியின்
குரலழகு கேட்ட‌துண்டு
அத‌னினும் இனிமையான‌
இன்னிசையில் ந‌னைந்த‌துண்டு.

தேவதைகள் பூமிக்குக்
கால் நடந்து வந்த காட்சி
ப‌ல‌ர் கூற‌க் கேட்ட‌துண்டு
கண்டதில்லை இதுவரை..
ஆனால்
என் காதலியின்
காலடிகளில்
நில‌ம‌து அதிர்ந்த‌
நித‌ர்ச‌ன‌ம் க‌ண்ட‌துண்டு.

என்றாலும்
என் காதல்
அழகானது
அபூர்வமானது
பொய்யான உவமைகளில்
புனையப்படாதது.

என் காத‌லி
உவமைகளை எல்லாம்
பொய்யாக்கிக்
காத‌லை மட்டுமே
மெய்யாக்கியவள்!

என்ன‌வாயிருக்கும் இது என்று குழ‌ப்ப‌மா? ஷேக்ஸ்பிய‌ர் இய‌ற்றிய‌ sonnets என்ற‌ க‌விதைத் தொகுப்பிலுள்ள‌ 130 ஆம் க‌விதையின் மொழிமாற்ற‌ம் இது..வார்த்தைக்கு வார்த்தைக்கான‌ மொழியாக்கம் அல்ல‌..கொஞ்ச‌ம் என் க‌ற்ப‌னையும் க‌ல‌ந்த‌து.

ந‌ம் கவிஞர்களின் உவ‌மைக‌ள் சில நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌..

சுட்டும் விழிச் சுடரே ...

முத்து பவளம் முக்கனி சர்க்கரை..

நீர‌லைக‌ள் இட‌ம் மாறி நீந்துகின்ற‌ குழலோ..

நீ ஆடை அணிக‌ல‌ன் சூடும் அறைக‌ளில்
ரோஜா ம‌ல்லிகை வாசம் ..

பூவில் மோத‌ப் பாத‌ம் நோக‌...

பேசுவ‌து கிளியா இல்லை
பெண்ண‌ர‌சி மொழியா ...

உவ‌மைக‌ளில் பொய்யென்ன‌ மெய்யென்ன‌ எல்லாமே அழ‌குதான்!

15 comments:

pudugaithendral said...

அருமையான மொழியாக்கம் மற்றும் நீங்கள் தந்திருக்கும் எடுத்துக்காட்டுகளும்.

pudugaithendral said...

kindly send me ur email id.

mine is pdkt2007@gmail.com

பாச மலர் / Paasa Malar said...

நன்றி புதுகை..எடுத்துக்காட்டுகள் நிறைய மேற்கோள் காட்டத் தோன்றியது..எனினும் மொழியாக்கத்துக்குப் பொருத்தமானதோடு நிறுத்திக் கொண்டேன்.

சுரேகா.. said...

நல்ல மொழியாள்கை கைவந்திருக்கிறதுங்க..

அற்புதமாக இருக்கிறது.

இதை அப்படியே சுட்டு
ஏதாவது பத்திரிக்கையில்
லேசா மாத்தி
போட்டுறப்போறாங்க..!


கலக்குங்க..!

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சுரேகா வருகைக்கும் கருத்துக்கும்

RATHNESH said...

என்ன மேடம் பயமுறுத்தறீங்க?

// என் காதலியின்
காலடிகளில்
நில‌ம‌து அதிர்ந்த‌
நித‌ர்ச‌ன‌ம் க‌ண்ட‌துண்டு//

அவ்வளவு மெலிவா?

(கவிதை படிக்கத் தெரியாத கபோதி என்று திட்டத் தோன்றும் பரவாயில்லை).

கவிதை நன்றாக இருக்கிறது.

பாச மலர் / Paasa Malar said...

//My mistress, when she walks, treads on the ground://

அது ஷேக்ஸ்பியரின் வரிகள் ரத்னேஷ் சார்...

நம்ம மொழியாக்கம் இப்படி ஆக்கிவிட்டது..ஷேக்ஸ்பியர் மன்னிப்பாராக...

மிக்க நன்றி

cheena (சீனா) said...

கவிதை அழகு தமிழில் அருமையாக இருக்கிறது - எடுத்துக்காட்டுகள் அருமை - சொல்வன்மை - பாராட்டத்தக்கது

//திர‌விய‌ங்க‌ளின் சுக‌வாசத்தில்
ம‌ய‌ங்கிய‌துண்டு
என் காதலியின் சுவாச‌த்தில்
நான்
பொசுங்கிய வாசமும்
நுகர்ந்ததுண்டு.//

காதலுக்கு கண்ணில்லை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மொழிமாற்றம் அருமை!
கவிதைக்கு பொய் தானே அழகு..

பாச மலர் / Paasa Malar said...

மொழிமாற்றம் செய்கிறோமே..முதுகுல டின்தான்னு நினைத்தேன்...
தப்பித்துவிட்டேன்..

சீனா சார், யோகன்,

நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அழகிய கவிதை.
சானட்ஸ்கள் ஷேக்ஸ்பியரின் அழகோவியங்கள்.
Love is not love which alters when it alteration finds என்ற வரிகளடங்கிய சானட்ஸின் கவிதை படித்திருக்கிறீர்களா?
உலகெங்கும் காதலோ,அழகோ நிரம்பிய நெஞ்சர்கள் வர்ணிப்பில் இறங்குவது கண்கூடு.
இதில் அடங்கிய என்னுடைய கவிதை-கல்லூரிக் காலத்தில் எழுதியது-
வானம் அவளுக்கு நிலமாக
தூவும் பனித்துளி இதழாக
மேவும் தென்றல் காற்றதுவும்
எனை மேயும்பார்வை அதுவாக
வஞ்சிப் பூவின் மணமதுவும்
வஞ்சியவளின் மணமாக,
சிதறும் பவழ சிகப்பழகும்
அதரம் கண்டு வெட்கியழ...
எனத் தொடரும் ஒரு கவிதை...

பாச மலர் / Paasa Malar said...

அறிவன்,

உங்கள் கவிதை உவமைநயம் நன்றாக உள்ளது..பாராட்டுகள்..sonnets என்னை மிகவும் கவர்ந்தவை..நீங்கள் குறிப்பிட்டிருப்பதும் என்னைக் கவர்ந்த ஒன்று..

இரண்டாம் சொக்கன்...! said...

காதல் ரசம் சொட்டிய மொழிபெயர்ப்பு...

நல்லாருக்கு...

நீர‌லைக‌ள் இட‌ம் மாறி நீந்துகின்ற‌ குழலோ..இந்த உவமைதான் என்னோட சாய்ஸ்.

Divya said...

அர்புதமான மொழிமாற்றத்தில் .......ஒரு அழகான கவிதை, மிகவும் ரசித்தேன் பாச மலர், பாராட்டுக்கள்!!

கோபிநாத் said...

\\\என்ன‌வாயிருக்கும் இது என்று குழ‌ப்ப‌மா? ஷேக்ஸ்பிய‌ர் இய‌ற்றிய‌ sonnets என்ற‌ க‌விதைத் தொகுப்பிலுள்ள‌ 130 ஆம் க‌விதையின் மொழிமாற்ற‌ம் இது..வார்த்தைக்கு வார்த்தைக்கான‌ மொழியாக்கம் அல்ல‌..கொஞ்ச‌ம் என் க‌ற்ப‌னையும் க‌ல‌ந்த‌து.\\

கலக்கியிருக்கிங்க...பாராட்டுகள்...;;))