Monday, December 10, 2007

மீண்டும் நீ வருவாயா பாரதி?



சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம் என்ற
உன் சேதுக் கனவுகள் சேதாரமாய்
கேள்விக்குறியாய் கேலிக்குரியதாய்க்
காலத்தின் பதிலுக்காய்க்
காத்துக் கிடக்கிறது.

காவிரி, முல்லை, பாலாறு
கூட்டணிச் சதியில்
மும்முனைப் போரில்
முடங்கிக் கிடக்கும்
நம் தமிழ் நாட்டு விவசாயம்.
இங்கு நதிகள் அல்ல
வறட்சி மட்டுமே வற்றாமல் பாய்கிறது.

யாமறிந்த மொழிகளிலே
தமிழை மட்டும் காணவே காணோம்.
தமிங்கலம் என்ற திமிங்கலம்
வாய் பிளந்து சிரித்திருக்க
எங்கும் எதிலும் தமில்,டமில்,டேமில்..

புதுமைப் பெண்கள்
கொஞ்சம் சாதனை மிச்சம் வேதனை
ஒரு சுனிதா வில்லியம்ஸ்
உருவாகும் நேரம்
ஓராயிரம் சுப்பம்மாக்களும்
அல்லவா உருவாகின்றனர்?
முப்பத்து மூன்று விழுக்காடு என்று
மூன்று தலைமுறையாய்ச் சொல்கிறார்கள்
இன்னும் முப்பத்து மூன்று வருடங்களாவது
இதைச் சொல்ல மட்டுமே செய்வார்கள்.

விளையாடும் பாப்பாக்கள் ஓடுவதற்கு
ஏது இடம்? ஏது நேரம்?
நான்கு சுவற்றுக்குள்
கணினியுடன் தனிமையுடன்..
இல்லையேல் பட்டாசுடன், பட்டினியுடன்
சிவகாசிச் சிறுவனின்
பேரனாவது பள்ளி காண்பானா?
இல்லை தாத்தா பட்ட கடனுக்காகத்
தற்குறியாய் நிற்பானா?

உன் காணி நிலக் கனவுகள்
கோணிக்குள் பதுங்கிட
உணவுக்கும் உடைக்குமே
பஞ்சமோ பஞ்சம்...

சாதிகள் இல்லையடி பாப்பா!
இன்று சாதிகள்
கொஞ்சம் நஞ்சம் இல்லையடி பாப்பா!
வஞ்சகம் இல்லாமல்
பல்கிப் பெருகிய கிளைகளடி பாப்பா!

வெந்து தணிகின்றன
சேரிக் குடிசைகள்
வெடித்து மடிகின்றன
கொத்துக் கொத்தாய் உயிர்கள்
தீராத விளையாட்டு
தீப்போல் பரவும்
தீவிரவாத விளையாட்டு!

அச்சம் அச்சம் அது
எங்குதான் இல்லை?
எதில்தான் இல்லை?

நல்லதோர் வீணை செய்வானேன்?
அதை நலம்கெடப் புழுதியில் எறிவானேன்?
நாங்கள் வீணைகள் செய்வதே
வீணென்று விட்டொழித்தோம்!

மீசைக் கவிஞனே!
உன் வானவில் கனவுகள்
வண்ணம் பெறும் காலம்
கூடிவரவில்லை இன்னும்.
கோடித்துயரிலும்
நாடி தளர்ந்திடாமல்
நம்பிக்கை மட்டும் வாழ்கிறது இன்னும்.

ஒளிபடைத்த கண்னும்
உறுதி கொண்ட நெஞ்சும்
மீட்டுக் கொஞ்சம் தந்திட
உன் பாட்டுத் திறத்தாலே
எம்மைப் பாலித்திட
நீ பிறந்த நாளில்
மீண்டும் பிறந்து வருவாயா பாரதி?

21 comments:

pudugaithendral said...

புதுமைப் பெண்கள்
கொஞ்சம் சாதனை
மிச்சம் வேதனை....

விளையாடும் பாப்பாக்கள்
நான்கு சுவற்றுக்குள்
கணினியுடனும்
தனிமையுடனும்..

// சரியாகச் சொன்னீர்கள். மனத்தில் பதிந்துவிட்டன வரிகள் //

யாழ்.பாஸ்கரன் said...

நல்ல வரிகள், பாராட்டுக்கள்

பாச மலர் / Paasa Malar said...

புதுகைத்தென்றலுக்கும் பாஸ்கரனுக்கும் நன்றி..

Geetha Sambasivam said...

அருமை, பாசமலர், உங்கள் அனுமதி கிடைத்தால் இதை முத்தமிழ்க் குழுமத்தில் இடுகிறேன். நல்லதொரு பகிர்வு, அங்கு அனைவருக்கும் பிடிக்கும். :))))))))

பாச மலர் / Paasa Malar said...

கீதா,

நிச்ச்யமாக கீதா..இதற்காக நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..

பாச மலர் / Paasa Malar said...

இப்போது தோன்றிய ஒரு கருத்தையும் சேர்த்திருக்கிறேன்..பாருங்கள்..

பாச மலர் / Paasa Malar said...

தமிழ் பற்றிப் பேசவில்லையே..அதனால் இந்த வரிகள்..இப்போது இணைத்தேன்..

RATHNESH said...

மேடம்,

இன்று அந்த மகாகவியின் பிறந்தநாள் என்று தெரியுமா?

நல்ல நினைவு போற்றல். அருமை.

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி ரத்னேஷ் சார்...

Divya said...

\\புதுமைப் பெண்கள்
கொஞ்சம் சாதனை
மிச்சம் வேதனை....\\

யதார்த்தமான உண்மை.

\\விளையாடும் பாப்பாக்கள்
நான்கு சுவற்றுக்குள்
கணினியுடனும்
தனிமையுடனும்..\\

'ஒடி விளையாடு பாப்பா' என்றார் பாரதி, இன்று வீட்டினுள் கம்பியூட்டர் கேம்ஸிலும், தொலைக்காட்சியிலும் குழந்தைகள் லயித்துப்போய், ஓடி ஆடி விளையாடுவதை மறந்தே போனார்கள்.

மிகவும் அருமையாக, தெளிவாக எழுதியுள்ளீர்கள், மனமார்ந்த பாராட்டுக்கள்!!

பாரதியின் ஜனன நாளான இன்று உங்களது இந்த படைப்பை படித்தது எனக்கு மிகுந்த சந்தோஷம்.

பாச மலர் / Paasa Malar said...

திவ்யா,

மிக்க நன்றி...

seethag said...

மலர் எனக்கு கவிதையெல்லாம் தெரியாது.என்னைப்போன்ற சாம்பிரணிக்கே பீடிச்சிருக்கு உங்க கவிதை.உண்மைதான் மலர், இப்பீடி ஆயிட்டோமே, நாம்..

நென்சு பொறுக்கிதில்லயே இந்த நிலை கெட்ட மாந்தரைக்கண்டு.....

இந்தியாவை நினைக்கும்போது எனக்கு இப்பொதெல்லாம் 'நல்லதோர் வீணை செய்தே 'வரீகள் தான் நினைவுக்கு வருதூ.

நாடோடி இலக்கியன் said...

பாரதியின் கவிதைகளை நினைவுப் படுத்தி அதை உங்கள் படைப்பில் கையாண்டுள்ள விதம் மிக அருமை.
வாழ்த்துக்கள்!!!

பாச மலர் / Paasa Malar said...

சீதா,

நன்றி..நான் குறிப்பிட மறந்த பாடலை நினைவுபடுத்தி இருக்கிறீர்கள்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


நாடோடி இலக்கியனுக்கும் நன்றி.

நாகை சிவா said...

நல்லா இருக்கு...

மீண்டும் தான் வர வேண்டும் போல.. நிலைமை அப்படி இருக்கு...

பாச மலர் / Paasa Malar said...

கருத்துக்கு நன்றி நாகை சிவா

cheena (சீனா) said...

முண்டாசுக் கவிஞனின் கனவுகள் பலிக்க வில்லையே எனக் கலங்குவது புரிகிறது. என்ன செய்வது. வரிக்கள் அருமை - கருத்துகள் அருமை

வாழ்த்துகள்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சீனா சார்...

கோவி.கண்ணன் said...

//அச்சம் அச்சம்
அது
எங்குதான் இல்லை
எதில்தான் இல்லை...
//

பாசமலர்,
கலக்கலாக எழுதி இருக்கிறீர்கள், இவ்வளவு நாள் படிக்காமல் தவறவிட்டுவிட்டேன் என்று வருத்தம் மிஞ்சியது படித்து முடித்ததும்.

பாச மலர் / Paasa Malar said...

பாராட்டுக்கு நன்றி கோவி. கண்ணன்...

ராதா செந்தில் said...

அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.