Sunday, December 16, 2007

இன்றிரவு எப்படியும் - சும்மா ஒரு கதை

இன்றிரவு எப்படியும் அவனைக் கொலை செய்து விட வேண்டும்..பார் விளையாடும் நேரம்தான் சரியான தருணம்..ஒரு விபத்து போல் ஆகி விடும். அப்புறம் ஆரவாரம் எல்லாம் அடங்கிய பின்னே மெதுவாக ராசி நம் வழிக்கு மீண்டும் வந்து விடுவாள். யோசித்து யோசித்து, மனசாட்சியின் கூக்குரலையும் அடக்கி வைத்துவிட்டு முடிவு செய்தான் மரியோ.

பார் விளையாடும் போது கீழே வலைகள் ஏதும் விரிக்காமல் விளையாடுவதுதான் அவர்கள் சர்க்கஸின் தனித்துவம். அந்தரத்தில் தொங்கிக் கொண்டு, தாவிச் சுழன்று பார் மாறுவதுதான் உச்சக்கட்டம். அப்படி மூன்றாவது முறை மாறும் போது எதேச்சையாக நிகழ்ந்தது போல் ராஜுவின் கையை விட்டுவிட வேண்டும். பின் என்ன சங்குதான்..

காலடியில் இருந்த பழத்தைக் கொத்திக் கொண்டிருந்த அந்தப் பஞ்சவர்ணக்கிளியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் மரியோ...சற்று தூரத்தில் இருந்த கூடாரத்திலிருந்து லேசான புகை வந்து கொண்டிருந்தது. வழக்கம்போல் பாலுதான் சமைத்துக்கொண்டிருப்பான். சர்க்கஸ் முதலாளிக்குத் தெரிந்தால் ப்ரச்னையாகிவிடும். எத்தனை முறை கண்டித்தாலும் இவன் கேட்பதில்லையே என்று நினைத்தான் மரியோ. தீ விபத்து நேரும் அபாயம் இருப்பதால் சமைப்பதற்குத் தடை விதித்திருந்தார் முதலாளி.

அந்தக் காலை நேரத்திலேயே லேசாக வெயில் உரைக்க ஆரம்பித்திருந்த கோடைக்காலமது. அவன் மனம் மட்டும் பனி மூட்டமாய்..எப்படி என்னை ஏமாற்றத் துணிந்து விட்டாயே ராசி...அநேகமாக எல்லோருக்கும் தெரியும் அவர்கள் காதலர்களென்று...மரியோ அனாதை
விடுதியிலிருந்து வந்தவன்..சிறு வயதிலேயே இந்த சர்க்கஸ் முதலாளியிடம் சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று முக்கியமான"பார்" விளையாட்டில் முன்னணி நாயகன். அவன் சேர்ந்த ஐந்து ஆண்டுகளின் பின் வந்து சேர்ந்தவள் ராசி. நட்பு முறையில் ஆரம்பித்த பழக்கம் காதலாகிக் கனிந்துருகி கல்யாணம் செய்யும் முடிவுக்கு வந்திருந்தனர். ராசியின் பெற்றோரும் சம்மதித்து விட்டனர்.

அப்போதுதான் இடையில் வந்து சேர்ந்தான் இந்த ராஜு..சர்க்கஸ் வட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுபவன் அவன். தனித்திறமைகள் நிறைய வாய்ந்தவன். கோமாளி, மேஜிக் வித்தைகள், மரணக்கிணறு மோட்டார் சைக்கிள், பார் விளையாட்டு என்று அனைத்திலும் அசத்தும் ஓர் ஆல் ரவுண்டர். அவன் பழைய கம்பெனி நொடித்துப் போனதும் இங்கே வந்து சேர்ந்தான், மரியோவின் காதலுக்கு எமனாக.

ராசியும், அவள் பெற்றோரும் மனம் மாறிக் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பக்கம் சாயத் தவிப்புக்குள்ளானான் மரியோ..அனைவரும் பலவிதப் பயிற்சிகளும் ராஜுவிடம் பெற்றுக் கொள்ளும்படி முதலாளியின் ஆணை. முதலில் இதை நம்ப மறுத்த அவன் இதயம் அவர்கள்
இருவரையும் பயிற்சி நேரம் நெருக்கமாகப் பார்த்த பல தருணங்களில் குமைந்து போனது. போதாக்குறைக்கு அவன் நண்பர்கள் வேறு "என்னடா ரூட் மாறிப்போகுது போலருக்கு" என்று பேச ஆரம்பித்தனர். ராசியின் பெற்றோரும் கூட மாறிப் போயினர்.துணிந்து விட்டான் மரியோ...புழுங்கிப் புழுங்கி ...இதோ இன்று கொலை பண்ணும் அளவுக்கு..

இரவு ஆட்ட நேரம் வந்தது..ஆவலுடன் எதிர்பார்த்த பார் விளையாட்டு..இதோ முதல் சுற்று மாறியாகிவிட்டது..இன்னும் ஒரு சுற்று போக வேண்டும்..இரண்டாவது சுற்றில் தயார்நிலைக்கு வந்தான் மரியோ...அடுத்த சுற்றில் ராஜுவின் கையைப் பிடிக்காமல் தவற விட
வேண்.......அடடா..இது என்ன யார் விழுந்து கொண்டு இருப்பது...எல்லாமே சுற்றுவது போல்..மிதந்து மிதந்து கீழே...தரையை முத்தமிடும் உச்சந்தலை... ரத்தவெள்ளத்தில் மரியோ..

ஆரவாரம்...போலீஸ்...எல்லாம் முடிந்து ராஜு நினைத்துக் கொண்டான்...அப்பாடா..முரண்டு செய்த ராசி என் வழிக்கு வந்து விடுவாள்...திட்டமிட்டபடி இரண்டாவது சுற்றில் அவள் காதலனைக் கொலை செய்தாயிற்றே..."இன்னும் கொஞ்ச நாள் பொறு மனமே ராசி உனக்குத்தான்" என்று சொல்லிக் கொண்டான்...

(எப்போதோ பார்த்திருந்த ஓர் ஆங்கிலப் படத்தின் தழுவல் தான் இது...பெயர் மறந்து விட்டது..கணவன் மனைவியைக் கொல்ல நினைக்க, மனைவி அதே போல் திட்டமிட்டுக் கடைசிக் காட்சியில் கணவனைக் கொல்லும் கதை..களமும் பாத்திரங்களும் சற்றே மாற்றி...)

15 comments:

கோவி.கண்ணன் said...

மாறுபட்ட கதைக்களம், ஏற்கனவே வந்த கதை என்று நீங்கள் நேர்மையாக குறிப்பிட்டிருந்தாலும், நல்ல நடையில் இயல்பாக இருக்கிறது.

மங்களூர் சிவா said...

நல்ல கொலை வெறி........

கதையில

இப்னு ஹம்துன் said...

கலக்குறீங்க.. சகோதரி.
எந்தவித அதிகப்படி வார்த்தைகளும் இல்லாமல் சொல்லவந்த கதையை கச்சிதமாகக் கொண்டு போயிருக்கிறீர்கள்.

நேர்மையும் கூர்மையுமான எழுத்து.

பாராட்டுகள்.

பாச மலர் said...

கோவி.கண்ணன்,

படித்துப் பார்த்ததும் சில இடங்களில் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது..

சிவா,

நல்ல வேளை கொலைவெறி எனக்குன்னு சொல்லலியே..

இம்னு ஹம்துன்,

வார்த்தை மாற்றம் இன்னும் கொஞ்சம் தேவையென்று தோன்றுகிறது எனக்கு..

ஊக்குவிப்புக்கு நன்றிகள் பல..

ரசிகன் said...

அவ்வ்வ்வ்.......


கொலைவெறி கதையா இருந்தாலும்..
ரெண்டு பேருமே தப்பா சிந்திச்சு ஒருத்தன் முந்திக்கிட்டான்.. அதனால நோ ஃபீலிங்ஸ்..

நல்லா ஆர்வமா எழுதியிருக்கிங்க....

நாகை சிவா said...

படிக்கும் போதே முடிவை யூகிக்க முடிந்தது. நல்ல முயற்சி.. :)

பாச மலர் said...

ரசிகன், சிவா.

கருத்துக்கு நன்றி..

அரை பிளேடு said...

ராஜேஷ் குமார் ஒரு கதைஎழுதி இருக்கார்.

காதலன் தன் காதலியை மலைஉச்சியில இருந்து தள்ளி கொல்ல திட்டம் போட...

காதலி அதுக்கு முன்னாடி அவனை மலையில இருந்து தள்ளி கொன்னுடுவா.

சீரியலா கூட வந்தது. கதை பேர் நியாபகம் இல்லை.

இந்த கதைய படிக்கிறப்போ அந்த கதை நியாபகம் வந்தது :))

கதை நல்லாயிருக்கு. :)

பாச மலர் said...

அரை பிளேடு சார்,

வருகைக்கு நன்றி..

Seetha said...

மலர்,
பெண்களென்றாலே அழுதுவடியும் கதைதான் எழுதுவார்களென்ற எண்ணத்தில் இடி விழும்படி இருந்தது உங்கள் கதை.உன்ங்கள் நேர்மை அதைவிட சூபெர்.

TamilNenjam said...

வன்முறை ஒரு முறையல்ல - இது ஒரு தற்காப்பு ஆயுதமல்ல..இது ஒரு தற்கொலைக்கான ஆயுதம். கத்தியெடுத்தவன் கத்தியாலே சாவான்.
இது தெரிந்தும் தொடர்கிறானே அவனே கொடுமையான வன்முறையாளன்

காட்டாறு said...

எனக்கும் சிறுவயதில் (?) ராஜேஷ்குமார் கதை ஒன்று படித்த ஞாபம் வந்தது. நீங்கள் சொல்லும் ஆங்கில திரைப்படம் எது? நெறையாபடம் இது போல இருக்குதுன்னு பக்கத்துல சொல்லிக்கிட்டாங்க. :-)

கோபிநாத் said...

நல்ல எழுத்து நடை விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கிங்க...

இந்த சர்க்கஸ் பார் விளையாட்டு என்றதும் எனக்கு சார்ளி சாப்ளின் சர்க்கஸ் படம் தான் நினைவுக்கு வந்தது ;)

ராம்குமார் - அமுதன் said...

அசத்தல் கதை.... வாழ்த்துக்க்கள்!!!

பாச மலர் said...

சீதா, தமிழ்நெஞ்சம், காட்டாறு, கோபிநாத், ராம்குமார்‍ ‍‍அமுதன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.