Saturday, January 19, 2008

இரட்டைச் சிறுகதை - ஒரே தலைப்பில்(2)

மறுமணம் - இரண்டாவது கதை.

ஏன் இப்படி நடக்க வேண்டும் எனக்கு? மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்த கல்பனாவைப் பார்த்துக்
குமுறினான் மோகன். வாய் விட்டுக் கதறியழ நினைத்தான் முடியவில்லை....அருகில் இருக்கும் சொந்தங்கள் .. வாயில் துணி பொத்திச் சிறிய விசும்பல்கள், துக்க முகம் என்று அடக்கி வாசித்தார்கள். கல்பனாவின் தாயார் மட்டும் சற்றுப் பெருங்குரலில் அவ்வப்போது அழ..ஒரு இறுக்கமான மௌனம் நிலவியது.

வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலின் கீழ் ஆண்கள் அமர்ந்திருக்க,
உணவகத்திலிருந்து தருவித்த சிற்றுண்டிகள் பக்கம் ஒன்றிரண்டு பேராய்த் தொடர்ந்து சென்று பசியாறிக் கொண்டிருந்தார்கள்.

"ஈவ்னிங் 4.30 க்கு மேல்தான் எடுப்பார்களாம்."

"எலெக்ட்ரிக் சுடுகாடுன்னாலே இது ஒரு கஷ்டம்..அவன் கொடுக்கற டைமுக்குதான் நாம் போகணும்."

"இல்ல. மோகன் தான் லேட் பண்றான்..ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணப்போ கல்பனா ஒரே ஒரு தடவை வீட்டுக்குப் போகணும் போல இருக்குன்னு சொல்லிருக்கா..டாக்டர்கள் அனுமதிக்கலயாம். அதுகுள்ள இப்டியாகி விட்டது..அதுனால கொஞ்சம் நேரம் வீட்ல
வச்சுருக்க நெனக்கிறான்.."

"ஆம்புலன்ஸ் வருதாம்..சரியான டைமுக்கு வருமோ வராதோ..நைட்டே போகணும் ஊருக்கு. லீவில்ல...பஸ், ட்ரெய்ன் எல்லாம் கூட்டம்..எப்படிப் போகப் போகிறோமோ.."

அவரவர் கவலைப்படும் இடைவெளியில், கல்பனாவுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்கலாம். முதல் குழந்தை பிறக்கும் போது சுகப் பிரசவந்தான். இரண்டாவது குழந்தைக்குப் பிரசவ நேரம் நெருங்கிய போது வடபழனி மருத்துவமனையில் சேர்த்தார்கள்.சற்றுச் சிக்கல் என்று தெரியவர சிசேரியன் செய்து பெண் குழந்தை பிறந்தது. எனினும் ரத்தப் போக்கு நிற்காததால், மீண்டும் ஒரு
அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றிக் கல்பனா கண்மூடினாள். இப்படி ஒரு துர்பாக்கியம் எப்போதாவது ஒரு முறை நிகழக்கூடும் என்று மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

நான்கு வயதில் ஒரு மகன் கார்த்திக், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை விட்டு விட்டுக் கண்மூடிய 28 வயது கல்பனா ஒரு பொறியாளர்.மோகனை (30 வயது)
விடச் சற்று வசதியான குடும்பத்தில் வந்த பெண். அவளுக்கு ஓர் அண்ணன். அவனுக்குக் குழந்தையில்லை. பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த மோகன்,மூன்று அக்காக்களுக்கு ஒரே தம்பி. சரியான வேலையில்லாமல் இருந்தவனுக்கு, கல்பனாவின் அப்பாதான் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தந்து, ஒரு விட்டையும் கொடுத்து, தன் பெண்ணைக் கொடுத்தார்.
கல்பனா மோகன் வீட்டைச் சேர்ந்தவருக்கு உதவுவதில் மிகவும் உறுதுணை புரிந்தவள். அவன் அக்கா பையன்கள், பெண் சென்னையில் படிக்க வந்த போது, அவர்கள் வீட்டில் தங்கிக் கொள்ள மட்டுமின்றி, படிப்புக்காகப் பண உதவியும் செய்தவள்.

இன்று மூத்த அக்கா, நர்ஸ், தலைமாட்டில் அமர்ந்து இன்னமும் மூக்கில் இருந்து கசியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது அக்காவின் மகள் சௌம்யா தான் கல்பனா வீட்டில் தங்கிக் கலைக்கல்லூரியில் முதல் வருடமும், கல்பனா அறிவுரையின்படி வேறு சில தனி விசேட வகுப்புகளுக்கும் சென்று வந்தாள். மாமியார் இறந்து விட, மாமனாருக்கான கடமைகளையும் நன்கு செய்து வந்தாள். அலுவலகம், வீடு இரண்டுக்காகவும் உழைத்தவளுக்கு அதிகம் உதவியாக இருந்தது அவள் பெற்றோர்.மோகனின் அதிர்ஷ்டத்தைப் பாராட்டாதவர்களே கிடையாது.

ஆயிற்று. எல்லாம் முடிந்து கல்பனாவை எரித்து விட்டு வந்தாயிற்று. பிறந்த குழந்தையைக் கல்பனா வீட்டார் தங்களுடன் எடுத்துச் சென்று விட்டனர். அவர்கள் வீடு சற்றுப் பக்கம்தான். தன் அறையிலேயே மோகன் பெரும்பாலும் அடைந்து கொள்ள, தொடர்ந்த நாட்களில்
அக்காக்கள் கச்சேரி ஆரம்பம்.

"பாவம். எப்படி இந்தப் பிள்ளைகளை வளர்க்கப் போகிறானோ..வீடு கல்பனா பெயரில்தானே இருக்கிறது..." அக்கா 1.

"ஆமாம். சௌம்யாதான் நல்லா ஒத்தாசையா இருந்தா..கார்த்திக் அவகிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டான்.." அக்கா 2.

"சரிடி..எதுக்கு ரூட் போடறன்னு தெரியுது நல்லா..." அக்கா 3.

"சௌம்யா சின்னப் பொண்ணுதானேடி..படிச்சு வரட்டும்..எம் பொண்ணு கலாவுக்கும் மாப்பிள்ளை பாக்கலாம்னு இருந்தோம்..இப்ப தம்பியக்கேக்க வேண்டியதுதான்..அவன எப்படி இப்டியே விட்டுற முடியும்?" அக்கா 1.

"ஒனக்கென்னம்மா..அத்தானும் நீயும் சம்பாரிக்கிறீங்க..மகனும் வேலக்குப் போகப்போறான்..
சௌம்யாவுக்கு முடிச்சுக்கிறேன்.."அக்கா 2.

"அது சரிடி...தம்பி விஷயத்துல நீங்க என்ன பேசுறது...நல்லாருக்கே நியாயம்.."அக்கா 3.

"உனக்கு மகள் இல்ல..நீ ஏன் பேசமாட்டே?" ..அக்கா 2.

இப்படி அவர்களுக்குள்ளே பேசினாலும் தம்பியிடம் யாரும் பேசவில்லை. ஆனால் அக்கா 2 மட்டும் சௌம்யாவைவிட்டு கார்த்திக்கும், மோகனுக்கும் பணிவிடைகள் செய்யச் சொன்னாள்.
காரணம் புரிந்த போது சௌம்யா தயங்கினாள்.

பிறந்த குழந்தையைக் கல்பனாவின் அண்ணன் குடும்பம் சேலத்துக்கு எடுத்துப் போய்விட்டார்கள். கார்த்திக் மற்றும் மோகனை அவ்வப்போது வந்து பார்த்துப் போவார்கள் கல்பனாவின் பெற்றோர். அக்கா 2 மட்டும் தற்காலிகமாகக் குடும்பத்தோடு அங்கேயே தங்கிவிட, அக்கா 1,3 ஊருக்குப் போய்விட்டார்கள். அக்கா 1 அவ்வப்போது வந்து போவாள் அப்பாவை, தம்பியைப்
பார்க்கும் சாக்கில்.

மறுமணப் பேச்சை அக்காக்கள் எடுத்த போது பிடி கொடுக்காமல் இருந்தான் மோகன்.

"முதல்ல ஒன் மகள இங்க கூட்டிட்டு வந்துருப்பா..நானும் சௌம்யாவும் பாத்துக்க மாட்டோமா.."அக்கா 2.

"வீடு கல்பனா பேர்ல இருக்குது. புள்ள இல்லன்னா அனாதப் பிள்ளைய எடுத்து வளர்க்க வேண்டியதுதானே.அம்மா சொத்து மகளுக்குன்னு சட்டமிருக்குல்ல..வீட்டக் காபந்து பண்ணிக்கடா தம்பி.." அக்கா 1.

அவனுக்குப் புரிய ஆரம்பித்தது அக்காக்களின் எண்ணம். "நான் மறுமணம் பண்ணிக்கிறதா இல்ல..இதப் பத்திப் பேச வேண்டாம்"னு அவர்களை அடக்கினான். இருந்தாலும் பல இடங்களிலிருந்து பலவித அறிவுரைகள் இது குறித்து..ஏன், கல்பனாவின் பெற்றோரே
இதை வலியுறுத்தினார்கள். மகளைப் பிரிய முடியாமல் கூட்டி வந்து விட்டான்.

கல்பனா இறந்து எட்டு மாதங்கள் கழிந்தது. மனம் மாறி மறுமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துள்ளான் மோகன். அவன் கலாவையோ, சௌம்யாவையோ மணக்கத் தன் மனம் ஒப்பவில்லை என்று கூறிவிட்டான். ஆதரவற்ற விதவை, குழந்தைகளற்ற விதவைக்கு முன்னுரிமை, அல்லது அதிக காலம் மணமாகாத பெண்..தன்னை விட வயது சற்று அதிகமானாலும் பரவாயில்லை என்று சம்மதம் தெரிவிக்க, தகுந்த பெண் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

(இதுவும் உண்மைச் சம்பவம்தான்.மன்னிக்கணும் மக்களே..கொஞ்சம் நீ...ள....மாகி விட்டது)
மறுமணம்-முதல் கதை - http://pettagam.blogspot.com/2008/01/blog-post_17.html

10 comments:

வல்லிசிம்ஹன் said...

நீளமானால் என்ன மலர்.?

சரியான கதைதான்.
சம்பவங்கள் நடப்பதை அப்படியே எழுதாவிட்டால் என்னைப் போன்றவர்களுக்குப் புரிவது கடினம்.


மோகனைப் பாராட்டுகிறேன்.

நல்லபடியாக இருக்கட்டும்.

பாச மலர் said...

வல்லி மேடம்..காப்பத்திட்டீங்க..

கோபிநாத் said...

\\மோகனைப் பாராட்டுகிறேன்.

நல்லபடியாக இருக்கட்டும்.\\

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்

பாச மலர் said...

உண்மைதான் கோபி..நல்ல மனம் கொண்ட மனிதர்..

கிருத்திகா said...

வாழ்த்துக்கள் எதார்த்தமான எந்த புனைவு கலப்புக்களும் இல்லாத கதை.. தொடர்ந்து எழுதுங்கள்...

பாச மலர் said...

நன்றி கிருத்திகா..ஊக்குவித்தமைக்கு..

ரூபஸ் said...

உங்களின் கதை சொல்லும்விதம் மிகவும் அருமை.. உண்மைக்கதைன்னு சொல்ரீங்க.. நல்லாயிருக்கு.. தொடருங்கள்.

பாச மலர் said...

ஊக்குவித்தமைக்கு நன்றி ரூபஸ்

குமரன் (Kumaran) said...

பாசமலர். நீங்க எழுதின ரெண்டு 'மறுமணம்' நிகழ்வுகளையும் படிக்க இன்று தான் வாய்ப்பு கிடைத்தது. சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளை நன்கு சொல்லியிருக்கிறீர்கள்.

பாச மலர் said...

நன்றி குமரன்..