Saturday, November 22, 2008

சாதனையாளர் முனைவர் மாசிலாமணி


புற்று நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த திருமதி. அனுராதா அவர்களைப் நம்மால் மறக்க முடியாது. இந்நோய் ஒரு கொடிய நோயாக இன்னும் இருந்து வருகின்ற போதும் பலவித சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் பலரையும் நாம் பார்க்கிறோம்.

இத்துறையில் தமிழர்க்கு மகுடம் சூட்டும் வண்ணம் ரியாத்வாழ் தமிழர், முனைவர் பேராசிரியர் மாசிலாமணி அவர்கள் அரும்பணி ஆற்றியுள்ளார். இந்நோயின் ஆரம்பகட்ட காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக அவரது கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. இவர் ரியாத்திலுள்ள கிங் சவுத் பல்கலைக்கழகத்தில் பௌதிகத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சென்னையிலும் இவர் நிறுவிய 'தென்றல்' மையம் மூலம் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து அதில் உள்ள உயிர்மூலக் கூறுகளை லேசர் ஒளி மூலம் பகுத்தெடுத்து, காலையில் எடுக்கப்படும் முதல் சிறுநீர்த்துளியின் மூலக்கூறுகளையும் பகுத்தெடுத்துச் சோதனைகள் செய்தார். இவைகளை ஆய்வுக்குட்படுத்திய போது நோயற்றவர்களிடம் இல்லாத சில மூலக்கூறுகள் புற்றுநோய் உள்ளவர்களிடம் அளவுக்கு மீறி இருந்தது தெரியவர, இதைக் கொண்டு புதிதாக மாசிலா புற்றுநோய் ஆய்வு (Masila Cancer Diagnostic) என்ற புதிய நுட்பத்தைக் கொண்டுவந்தார்.

இதன் மூலம் வெறும் 5 மி.லி இரத்தமும் 5 மி.லி சிறுநீரும் கொண்டு ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா, இருந்து குணமாகி விட்டதா அல்லது மீண்டும் வந்திருக்கிறதா, வர வாய்ப்பிருக்கிறதா என்பன போன்ற பல விஷயங்களை கணிக்கமுடியும். இந்தப் புதிய முறை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் (ICMR) தர நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையின் தொடர் ஆராய்ச்சி காரணமாக நுரையீரல் புற்று நோயை மட்டும் தனித்துக் காட்டும் புது உயிர்மூலக்கூறு பற்றியும் கண்டுபிடித்தார். இந்த முறையின் நம்பகத்தன்மை 80% என்பதும், இதுவரையில் இத்தகைய Biomarker நுரையீரல் புற்றுநோய்க்கு கண்டுபிடிக்கப்படவில்லையென்பதும் மிகச் சிறப்பு வாய்ந்த செய்திகளாகும்.

இந்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை மற்றும் இதர வியாதிகளை எளிதில் கண்டறிவது போல, புற்றுநோயின் அறிகுறிகளையும் அறிந்து தற்காத்துக் கொள்ள முடியும்.சமீப காலமாகத் தமிழகத்தின் பல கிராமங்களிலும் இச்சோதனை முகாம் இவர் நடத்திய போது, பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், வருங்காலத்தில் பாதிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்பதும் அறிய வந்தது. அவர்களுக்கு அடுத்த கட்ட மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இவர் சிறந்த இலக்கியவாதியும் கூட. தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
இவரது சேவையைப் பாராட்டும் முகமாகக் கடந்த வாரம், சவூதி இளவரசர் நாயிஃபா பரிசும் பட்டயமும் அளித்துக் கௌரவித்துள்ளார். அரபு நாடுகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் கௌரவம் இது. முதன் முதலில் இதைப் பெற்றவர் ஒரு தமிழக விஞ்ஞானி என்பது மிகவும் பெருமைப்படத் தக்கதொரு விஷயம்.

9 comments:

தமிழ் பிரியன் said...

சாதனையாளர் மாசிலாமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

மதுரையம்பதி said...

மாசிலாமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

சாதனையாளர் மாசிலாமணி அவர்களுக்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துக்கள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ராமலக்ஷ்மி said...

//சமீப காலமாகத் தமிழகத்தின் பல கிராமங்களிலும் இச்சோதனை முகாம் இவர் நடத்திய போது, பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், வருங்காலத்தில் பாதிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்பதும் அறிய வந்தது. அவர்களுக்கு அடுத்த கட்ட மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.//

அரிய கண்டு பிடிப்பை உலகுக்கு வழங்கியதோடு நில்லாது அதைக் கொண்டு சேவையிலும் ஈடுபடும் மாசிலாமணி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருக்கு எமது வாழ்த்துக்கள். அவரை அறியத் தந்த உங்களுக்கு எங்கள் நன்றிகள்!

சுல்தான் said...

தமிழக விஞ்ஞானிகள் பரவலாக அறியப்படுகிறார்கள். நல்ல செய்தி.

பார்த்தால் ரஜினி மாதிரி தெரியுதே? அறிவியல் துறையில் சூப்பரா வர வாழ்த்துவோம்.:)

கோபிநாத் said...

சாதனையாளர் மாசிலாமணி அவர்களுக்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துக்கள் :)

கிருத்திகா said...

நல்லதொரு அறிமுகம், முற்றிலும் புதிய செய்தி.. நன்றி மலர். இப்போதுதான் 7 நாட்களுக்கு முன்பு எங்கள் குடும்பத்தில் ஒருவரை உணவுக்குழாயில் வந்த புற்றுநோயால் பரிகொடுக்க நேர்ந்தது...இனியாவது இது போன்ற இழப்புக்களை தவிர்க்க நேரும் என்பது ஆசுவாசமாய் உள்ளது.

பாச மலர் said...

உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் அவசியம் அவருக்குத் தெரிவிக்கிறேன்.