Wednesday, November 19, 2008

வேலூர் பொற்கோவில்..அம்மன் Vs அம்மா

பொதுவாகவே கோவில்களுக்குப் போவதென்றால் எனக்கு மிகவும் விருப்பம். ..எந்த மதக் கோவிலாக இருந்தாலும் விரும்பிப் போவது என் வழக்கம். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதனுடன் இணைந்து பரிமளிக்கும் வரலாற்றுச் சிறப்பு, கட்டடக்கலையின் அழகு, அங்கு நெரிசல் கூச்சல் நடுவிலும் பரிமளிக்கும் ஓர் அமைதி..இவற்றை ரசிப்பதற்காகவே கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என்று வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தவறாமல் பார்த்துவிடுவேன். (சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினாவைப் பார்க்க இயலாததும் ஒரு பெரிய வருத்தந்தான்.)

சமீபத்தில் இந்தியா வந்த போது வேலூர் பொற்கோவிலைப் பார்க்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. நிறைய எதிர்பார்ப்பு கூடி வர ஆகஸ்ட் 15 அன்று மாலை 5 மணியளவில் போனோம்.
திருப்பதி போல் கூண்டு கூண்டாக அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் சுமாராக இருந்தும் ஏனோ அன்று ஒரு கூண்டு மட்டும் திறந்திருந்தார்கள்.

அதிக நேரம் காத்திருக்க வேண்டுமோ என்று எண்ணிய பயந்த போது..சடாரென்று கதவு திறக்க...சர சரவென்று நகர்ந்த வரிசையில் வேகமாக முன்னேறினோம். கொஞ்ச தூரம் போனதும் பாதுகாப்பு சோதனை..

நடந்து உள்ளே போனபோது முதலில் தோன்றியது பிரமிப்புதான்.. போகப்போக ஒரு புறம் அம்மனின் படமும், மறுபுறம் 'அம்மா'வின் படமும்..அம்மா என்று அவர்கள் குறிப்பிட்டது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதரை...காவி உடையில் சாந்தமாகக் காட்சியளித்தது அவர் முகம்..பின் 'அம்மா' என்ற வயதான பெண்மணியும் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

நான் மட்டுமல்லாமல் என்னுடன் வந்த உறவினர்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எங்கும் எதிலும் அம்மா..அம்மா..அம்மன் படம் ஒரு மூலையில் தேமே என்று இருந்தது. வளைந்து, நெளிந்து சென்ற பாதையில் செயற்கையாகப் படைக்கப்பட்ட
இயற்கைக்காட்சியமைப்பையும் ரசித்தபடி, எழுதப்பட்டிருந்த பொன்மொழிகள், நன்கொடை விபரங்கள் படித்தபடி ஒருவழியாக சன்னிதிக்கு வரும் போது..ஒரு வேளை வடக்கத்திப் பாணியில் குட்டியூண்டு உருவமாக லட்சுமி நாராயணி இருந்து விடுவாளோ என்று பயந்தேன். ஆனால் நம் பக்கம் போல அளவில் சற்றே பெரியதாக மிகவும் அழகாக ஆபரணங்களோடு ஜொலித்த அம்மனைப் பார்க்கையில் சற்றே ஆறுதல்.

மாலை 6 மணி நெருங்கிவிட்ட படியால், மின்சாரவிளக்குகள் எரியத் தொடங்க, தகதக என்று ஜொலித்தது மிக அழகு.

திரும்பி வந்த பாதை நல்லவேளையாக சீக்கிரம் வெளியே கொண்டுவிட்டது. அப்பாடா என்று நான் நினைத்த வேளை, என் உறவினர்களுக்கு ஒரு சந்தேகம்..அங்கே வெளியே வரும் வழியில் இருந்தது அம்மனின் பாதமா..அம்மாவின் பாதமா....

மொத்ததில் பொற்கோவில் என் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை..நம்ம ஊரிலும் பொற்கோவில் என்ற சாதனை படைத்துவிட்ட சந்தோஷம்..விஜிபி தோட்டத்தின் நடுவில் ஒரு கோவில் இருந்தால் எப்படியிருக்கும்..மைசூர் அரண்மனையில் தங்க நிறப் பெயிண்ட் பூசப்பட்ட ஒரு மண்டபம் இருக்குமே அதைப் பார்த்தால் எப்படியிருக்கும்.. ..அப்படியிருந்தது எனக்கு..நல்ல பரவசமான அனுபவம்..

14 comments:

ராமலக்ஷ்மி said...

இக்கோவிலுக்குச் செல்ல வேண்டுமெனும் ப்ளான் இருக்கிறது ரொம்ப நாளா.பதிவு சீக்கிரம் போகச் சொல்லுது:).

கோபிநாத் said...

\\நல்ல பரவசமான அனுபவம்..\

என்னாமே எனக்கு இந்த கோவிலை படிக்கவே இல்லை...வெளியிலேயே நின்னுட்டேன்...இதுக்கு வேற அம்மாகிட்ட ஒரே பாட்டு வேற..;)

குமரன் (Kumaran) said...

:-)
நான் வேலூருக்குப் போனால் போய் பார்க்கிறேன். :-)

பாச மலர் said...

குமரன், ராமலக்ஷ்மி,

போய்ப் பாருங்க..

கோவி.கண்ணன் said...

புற்றீசல் போல அம்மாக்கள், லோகத்துல பகவான் எல்லோரையும் குழந்தையாக்கி சிலரை மட்டும் அம்மாவாக்கி என்னமா விளையாடுறார்.

பாச மலர் said...

கோபி,

பல பிடிக்காத விஷயங்கள் கோவிலுக்குள்ளே இருக்கத்தான் செய்தன எனக்கும்...

ஆனாலும் அதற்காகப் பார்த்தால் நாம் சில அழகுகளை அனுபவிக்காமல் போக நேருமே..

அடுத்த முறை அவசியம் போங்கள்..ரசிக்கும்படியான விஷயங்கள் நிறைய உள்ளன..

பாச மலர் said...

//பரவசான அனுபவம்//

கோபி,

உங்களுக்கும் தோன்றலாம்..அங்கே உள்ள அழகை மட்டுமே மனதில் கொண்டு ரசித்தால்..

பாச மலர் said...

கோவி,

என்னமோ இந்த அம்மாத்துவம் புரியவேயில்லை..

கிருத்திகா said...

நீங்க கோயிலுக்கு போனீங்கன்னு கேக்க ஆச்சரியமா இருக்கு மலர்.

ஆனா சென்னை தாண்டிப்போயிட்டு எங்களுக்கெல்லாம ஒரு ஹலோ கூடச்சொல்லாமல் போனதற்கு ஒரு கண்டனக்கூட்டம் ஏற்பாடு செய்யலாமான்னு யோசனை. எப்படி வசதி...

பாச மலர் said...

கிருத்திகா,

வாய்ப்புக் கிடைக்கையில் எல்லாம் தவறவிடாமல் கோவிலுக்குப் போவேன்...இது பற்றி முதல் பத்தியில் சொல்லியிருக்கிறேன்.

அடுத்த முறை வரும்போது அவசியம் சென்னை வந்து உங்களைச் சந்திக்கிறேன்..

நாகை சிவா said...

நானும் போய் வந்தேன்...

கோவிலுக்கு சென்று வந்த அனுபவமாக இல்லை. ஒரு ரம்மியமான இடத்தை பார்த்த திருப்தி இருந்தது. அந்த இடத்தை மிக அருமையாக வடிவமைத்து இருக்கிறார்கள்... அதற்காக பாராட்டலாம்.... மற்ற அம்மாவிற்கு குட்டுகள் தான்.

பாச மலர் said...

உண்மைதான் சிவா..ரம்மியமான இடந்தான்..

கண்மணி said...

மலர் போன வருடம் மே மாதம் நான் போயிருந்தேன்.பணம் இருந்தால் எதையும் ஆடம்பரமாகச் செய்யலாம் என்பதற்கு இந்த லஷ்மி நாராயணி கோயில் எடுத்துக் காட்டு.
அந்த 'அம்மா' சாமி என் உறவின்ர் ஒருவரின் பள்ளித் தோழனாம்.ஆனால் இன்று?

திருப்பதி போன்ற வலைக் கூண்டு பெட்டிகள்;விமான நிலைய சோதனை போல மெட்டல் டிடக்டர் கைப்பை,செல்போன் கேமெரா அனுமதியில்லை.
வழி நெடுக அம்மனிம் வெவ்வேறு சிலை வடிவங்களும் நட்சத்திர வடிவில் அமைந்த மண்டப பிரகாரமும் அழகு.
பசுமையான சூழல் அங்கங்கே கழிப்பிட வசதி?கோயிலுக்குப் போக ஏன் கழிப்பிடம்னு கேக்கறீங்க?
வெள்ளி,சனி,ஞாயிறுகளில் கூட்டம் அலை மோதும் நட்சத்திர மண்டபம் சுற்றிச் செல்ல மூன்று மணி நேரமாகும் .அங்கங்கே நிறுத்தி நிறுத்தி கேட்டைத் திறப்பார்கள்.
மற்ற நாட்களில் 20 நிமிடத்தில் உள்ளே போய்விடலாம்.
வி.ஐ.பி களுக்கு ஏழு நிலை வாசல் சொர்க்கத்தின் கதவுகள் போல.
கருவறையைச் சுற்றி கிரானைட் பதித்த அகழி அதில் பக்தர்கள் போடும் சில்லறைகள் மூட்டைக் கணக்கில்.
லஷ்மி கொள்ளை அழகு.நின்ற நிலையில் சர்வாலங்கர பூஷணியாக இருப்பாள்.
வெளியே வரும்போது தயிர்,எலுமிச்சை சர்க்கரைப் பொங்கல் என பிரசாதம்.
எல்லாம் சரி இந்த 'அம்மா' புராணாம் தாங்கலை.
எங்க ஊருக்கு பக்கம் என்பதால் 'தங்கக் கோயிலைப் பார்க்காத' பாவியாகி விடுவேன் என்பதால் சென்றேன்.
மற்றபடி இப்படி பந்தாவான சாமிகளை விட சின்ன சந்தில் இருக்கும் அம்மனோ,பிள்ளையாரோ ரொம்பப் பிடிக்கும்.
இருந்தாலும் தென்னகத்தில் இது ஒரு லேண்ட்மார்க் தான்.
கொசுறு:தங்கக் கோயில் மாதிரியே அருகிலேயே வெள்ளி,வெண்கலக் கோயில்களுக்கான வேலை ஆரம்பித்து விட்டதாம்.
காசிருந்தால் எதுவும் செய்யலாம்.

பாச மலர் said...

கண்மணி,

மேலெழுந்தவாரியாக அறிந்த தகவல்களே போதும் போதும் என்றிருக்க...

நீங்கள் கொடுத்த தகவல்கள் அய்யோ என்றிருக்கின்றன..

//கொசுறு:தங்கக் கோயில் மாதிரியே அருகிலேயே வெள்ளி,வெண்கலக் கோயில்களுக்கான வேலை ஆரம்பித்து விட்டதாம்.
காசிருந்தால் எதுவும் செய்யலாம்//

ஆமாமா..அங்கே இடமும் நிறைய காலியாகத்தான் இருக்கிறது..செய்வார்கள் செய்வார்கள்...புதிதாய்ச் சாதனை படைப்போம்...வெண்கலத்திலும் வெள்ளியிலும் கோவில் செய்து....

உக்காந்து யோசிப்ப்பாங்களோ..

வாழ்க! வளர்க!