Friday, April 25, 2008

நிறைமதி காலம்


ஒரு கொடியில்
இரு மலர்கள்

ஒரு கருவில்
இரு சிசுக்கள்

ஒன்று ஆணாய்
ஒன்று பெண்ணாய்
இருந்தால் என்ன
இரண்டும் ஒன்றல்லவா?

ஒன்றுக்குக் கள்ளிப்பால்
ஒன்றுக்குச் சுண்டக் காய்ச்சிய
கள்ளிச் சொட்டாய்ப் பால்;
ஒன்றுக்கு எருக்கம்பால்
ஒன்றுக்கு எருமைப்பால்.
இருபால் என்பதால்
இரு வேறு பால் விதிகள்?!

சுமந்திடும் மாதக்கணக்கு
சுரந்திடும் பால்க்கணக்கு
படித்திடும் செலவுக் கணக்கு
கேளிக்கையின் கழிவுக் கணக்கு

உணர்வுகளின் உயிர்மை
உணர்ச்சிகளின் புணர்ச்சி
உய்யும் வழிமுறை
எய்தும் வகைதொகை
எட்டும் உயரங்கள்
கொட்டும் எண்ணங்கள்
இருபாலர்க்கும் பொதுமையன்றோ?
இரண்டுக்கும் பேதம் காண்பது
இருமுறை வடிகட்டிய
பேதைமையன்றோ?!

ஆணென்றால் வரவாம்,
பரம்பரை வளர்க்கும் வாரிசாம்;
பெண்ணென்றால் செலவாம்,
அடுத்த வீட்டு வாரிசு
சுமக்கும் சுமைதாங்கியாம்.

இரண்டாம் நூற்றாண்டு வழக்கு
இரு பத்து இரு நூறில்
இன்னும் எதற்கு?

அர்த்தநாரித் தொழுகை
ஆலயங்களில்
இருபால் பேதங்கள்
இல்லங்களில்
இரட்டை வேடம்
பூணும் மனசாட்சி
சற்றே மாறினால்
முற்றும் மாறும்
சமுதாயக் காட்சி.

மாறித்தான் வருகிறது
மனதின் காட்சி
மலர்ந்துதான் வருகிறது
சமதள ஆட்சி.
மாறி வரும் மனங்கள்
ஆறி வரும் ரணங்கள்..

மாற்றுப் பாதையில்
வீறு கொண்டு
நிமிரத் தொடங்கிய
நிகழ்காலம்
எழுந்து நிற்கும்
எதிர்காலம்.

இரண்டு கண்ணில்
இரண்டு காட்சி
இரட்டை நிலை
ஏது இன்றைக்கு?
இரண்டும் சமமாகி
இரண்டறக் கலந்து
இயையும் இயல்பு நிலை
காலக் கண்ணாடி
காட்டிடும் நமக்கு.
(வ.வா சங்கத்தின் போட்டிக்கான இரண்டாவது படைப்பு..)

16 comments:

நிஜமா நல்லவன் said...

///அர்த்தநாரித் தொழுகை
ஆலயங்களில்
இருபால் பேதங்கள்
இல்லங்களில்
இரட்டை வேடம்
பூணும் மனசாட்சி
சற்றே மாறினால்
முற்றும் மாறும்
சமுதாயக் காட்சி.//

அக்கா நல்லா எழுதி இருக்கீங்க. கால மாற்றத்தில் காட்சிகள் மாறித்தான் வருகின்றன.

ரூபஸ் said...

//இரண்டாம் நூற்றாண்டு வழக்குஇரு பத்து இரு நூறில்இன்னும் எதற்கு?//

///எண்ணங்கள்இருபாலர்க்கும் பொதுமையன்றோ?இரண்டுக்கும் பேதம் காண்பதுஇருமுறை வடிகட்டிய பேதைமையன்றோ//

என்னைக் கவர்ந்த வரிகள்..குறைந்திருக்கிறது இந்தக்கொடுமை என்றாலும் அடியோடு அழிந்ததாக சொல்லமுடியவில்லை. கல்வியறிவு ஒன்றே இதுபோன்ற அவலங்களுக்கு முடிவு கட்டும்..

Divya said...

அனைத்து வரிகளும் அருமை ,
ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க,

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

\\ஆணென்றால் வரவாம், பரம்பரை வளர்க்கும் வாரிசாம்;பெண்ணென்றால் செலவாம்,அடுத்த வீட்டு வாரிசுசுமக்கும் சுமைதாங்கியாம்.\\

இந்த வரிகள் ஆதங்கத்தை அழகாக வெளிப்படுத்துகிறது!!

கோபிநாத் said...

அக்கா ரொம்ப அழகாக எழுதியிருக்கிங்க...ஒவ்வொரு வரியும் அருமை ;))

மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

பாச மலர் said...

நிஜமா நல்லவன், திவ்யா, கோபி,

நன்றி.

ரூபஸ்,

கல்வியறிவு ஒன்றுதான் உண்மையில் இதைச் சரிசெய்ய முடியும்.

கானா பிரபா said...

வித்தியாசமான சிந்தனை, நன்றாக இருக்கிறது.

பாச மலர் said...

நன்றி பிரபா.

திகழ்மிளிர் said...

/
ஒன்றுக்கு எருக்கம்பால்
ஒன்றுக்கு எருமைப்பால்.
இருபால் என்பதால்
இரு வேறு பால் விதிகள்?!

சுமந்திடும் மாதக்கணக்கு
சுரந்திடும் பால்க்கணக்கு
படித்திடும் செலவுக் கணக்கு
கேளிக்கையின் கழிவுக் கணக்குஆணென்றால் வரவாம்,
பரம்பரை வளர்க்கும் வாரிசாம்;
பெண்ணென்றால் செலவாம்,
அடுத்த வீட்டு வாரிசு
சுமக்கும் சுமைதாங்கியாம்.அர்த்தநாரித் தொழுகை
ஆலயங்களில்
இருபால் பேதங்கள்
இல்லங்களில்
இரட்டை வேடம்
பூணும் மனசாட்சி
சற்றே மாறினால்
முற்றும் மாறும்
சமுதாயக் காட்சி.
/

அருமையான வரிகள்

இந்த கவிதைப் படிக்கும்போது
காசி ஆனந்தனின் கவிதை ஒன்று
நினைவிற்கு வருகிறது.

/ என்னைத்
தெய்வம்
ஆக்கினாய்.

சிவன் பாதி
சக்தி பாதி
என்றாய்.

ஏமாற்றாதே-

உன்
பால் வேறுபாடு
அழுத்தமானது...

சிவனுக்கு
பசுப்பாலும்
சக்திக்கு
கள்ளிப்பாலும்/

வாழ்த்துக்கள்

கிருத்திகா said...

மிகவும் நல்ல கருத்துள்ள கவிதை மலர். தாங்கள் சொல்வது போல் காட்சி மாறித்தான் வருகிறதென்றாலும் இன்னும் கடந்து செல்ல வேண்டிய மைல் கற்களும் உள்ளது என்பது தான் உண்மை... அதை உணர்த்தும் தங்கள் வரிகள் உற்சாகமூட்டுகிறது. வாழ்த்துக்கள்.

பாச மலர் said...

நன்றி திகழ்மிளிர், கிருத்திகா..

Kumaresan said...

அருமையாக எழுதியுள்ளீர்கள் தோழரே
தொடரட்டும் கவிப்பயணம் !

ரசிகன் said...

அடடா...கவிதை... கலக்கலா இருக்குங்க பாசமலர் வாழ்த்துக்கள்:)

பாச மலர் said...

நன்றி குமரேசன், ரசிகன்

aruna said...

அருமையான கருத்துக்களுடன் கூடிய கவிதை....
அன்புடன் அருணா

பாச மலர் said...

நன்றி அருணா.

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொரு வரிகளிலும் பொங்கி எழுந்திருக்கிறீர்கள் பாசமலர்.

//இருபால் என்பதால்
இரு வேறு பால் விதிகள்?!//

//எட்டும் உயரங்கள்
கொட்டும் எண்ணங்கள்
இருபாலர்க்கும் பொதுமையன்றோ?//

//மாற்றுப் பாதையில்
வீறு கொண்டு
நிமிரத் தொடங்கிய
நிகழ்காலம்
எழுந்து நிற்கும்
எதிர்காலம்.//

காலம் சற்று இப்போது மாறி வருவது ஆறுதல். எழுந்து நிற்கட்டும் எதிர்காலம்.

பாராட்டுக்கள்.