Wednesday, May 21, 2008

தோள் கொடுக்கிறதா தோழமை?

இயந்திர முலாம் பூசிய செயற்கையான வாழ்க்கைமுறை நடுவில் உறவுகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது கூடப் பல சமயங்களில் இயலாமல் போய்விட்ட ஒன்று. 'வாழ்வு முழுவதும் தொடரும் தோழமை' என்ற கூற்று அர்த்தமற்றதாகி
வருகின்றதோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.

'உயிர் காப்பான் தோழன்', 'உடுக்கை இழந்தவன் கை' என்ற வாக்கியங்கள் இலக்கிய அளவில்மட்டும்..ஏட்டுச் சுரைக்காயாக மட்டும்உலவி வருகின்றன. தோள் கொடுக்கும்
தோழமை தோளை மீண்டும் எதிர்பார்க்கிறது. அதில் தவறில்லை என்றாலும் எதிர்பார்ப்பற்ற தன்னலம் கருதாத நட்பு என்பது அரிதாகி வருகிறதோ என்ற உணர்வு.

உறவுகளுக்குள் நட்பு என்பது அடிக்கடி பேசப்படுகின்ற ஒன்று. ஆனால் நட்பு என்ற உறவு? 'உன் நண்பனைக் காட்டு. உன் குணத்தைச் சொல்கிறேன்' என்பார்கள். இப்போது பலருக்கும், குறிப்பாகக் குழந்தைகள் மட்டும் இளைஞர்கள் பலருக்கு அப்படி ஒரு ஆத்மார்த்தமான நட்பைச் சுட்டிக் காட்ட முடியுமா என்பது சந்தேகம்தான். நட்பு வட்டாரம் என்ற ஒன்று இருக்கின்றது..ஒத்த வயதையுடைய நண்பர் கூட்டம் இருக்கிறது..என்றாலும் எங்கேயோ ஏதோ குறைந்து வருகின்றது..

இதற்குக் காரணங்கள் பல: ஒரே இடத்தில் நீண்ட நாள் குடியிருக்கும் வாய்ப்பு இல்லாத நிலைமை, பலவித படிப்பு மற்றும் அலுவல்களால் நட்புக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலைமை, தொலைக்காட்சி, கணினி போன்ற சாதனங்களின் நட்பு மயக்கம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தெரு முனைகளில் தவறாமல் கூடும் நண்பர்கள், கெக்கே பிக்கே என்று ஏதாவது பேசிச் சிரிக்கும் பெண்கள் கூட்டம், குடும்பத்தினரிடம் கூடப் பேச முடியாத பல விஷயங்களைத் தங்களுக்குள் பேசித் தீர்வு, ஆறுதல் காண்கிற மனங்கள் அரிதாகி வருகின்றன.

நாம் அனுபவித்த, இன்னும் கூட அனுபவித்து வருகின்ற நட்பின் அருமை பெருமைகள் பலவற்றை நம் குழந்தைகள் அனுபவிக்கிறார்களா? என்னவென்றே அறியாமல் அவர்கள் தொலைத்த பலவித சந்தோஷங்களுள், உரிமைகளுள் இதுவும் ஒன்று.

காரணங்கள் புரிந்தாலும் காரியமாற்ற முடியாத ஒரு நிலைமையில் தள்ளப்பட்டுதான் நிற்கிறோம்.

20 comments:

புதுகைத் தென்றல் said...

நாம் அனுபவித்த, இன்னும் கூட அனுபவித்து வருகின்ற நட்பின் அருமை பெருமைகள் பலவற்றை நம் குழந்தைகள் அனுபவிக்கிறார்களா? என்னவென்றே அறியாமல் அவர்கள் தொலைத்த பலவித சந்தோஷங்களுள், உரிமைகளுள் இதுவும் ஒன்று.//

சரியா சொன்னீங்க பாசமலர்,
எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு.

சென்ஷி said...

உண்மைதாங்க்கா...

எல்லாமே இருந்தும் பிரண்ட்ஸ் இல்லாம இருக்கற கொடும நிறைய அனுபவிச்சுட்டேன்.. அனுபவிச்சுட்டு இருக்கேன் :((

எல்லோரையும் தோழனா ஏத்துக்கற பக்குவம் கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சுட்டு வர்ற மாதிரி ஒரு ஃபீலிங்க் :(

Divya said...

யதார்த்தமான உண்மைதான் பாச மலர்:))

ஆத்மார்தமான நட்பு அரிதாகி போய்விட்டது!!

\\கெக்கே பிக்கே என்று ஏதாவது பேசிச் சிரிக்கும் பெண்கள் கூட்டம்,\\

இவ்வரிகளை படிக்கையில் வந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள இயலவில்லை.....நல்லா இருக்கு அப்படியே ஒரு flow வில் நீங்கள் எழுதியிருப்பது!!

கிருத்திகா said...

மலர், இப்போது குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள் அவர்கள் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களை நேர்த்தியாக தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள், அந்த நட்பை மிகவும் முதிர்ச்சியாக கையாண்டுகொள்கிறார்கள். இது நான் கண்கூட என் மகன்களிடம் காணும் விஷயம். கிட்டத்தட்ட நம்மை போலவே அவர்களும் நல்ல நட்பை பராமரிக்கும் இரகசியம் அறிந்திருக்கிறார்கள் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது.

பாச மலர் said...

நன்றி புதுகைத்தென்றல், திவ்யா

பாச மலர் said...

உண்மைதான் சென்ஷி..சந்தர்ப்பவாதம் எது உண்மை எது என்று அறியத் தடுமாறுவதை விட தனிமையே மேல் என்ற நிலைக்கு ஆளாகி விடுகிறோம்.

பாச மலர் said...

கிருத்திகா,

உங்கள் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்தான்..

umakumar said...

நீங்க‌ சொல்ற‌து புரியுது நியுக்கிளிய‌ர் ஃபேமிலி..வெளியூர் வேலை..என‌.த‌ன்னை சுற்றி வ‌ட்ட‌ம் போட்டுகொண்டு தீவாய் மாறி வ‌ருகிறோம்

கோபிநாத் said...

நல்ல பதிவு ;)

\\தெரு முனைகளில் தவறாமல் கூடும் நண்பர்கள்\\\

ம்ம்ம்...இப்ப எல்லாம் எங்க வீட்டை விட்டு வெளியில் வராங்க...எல்லாமே தான் வீட்டுக்குள்ளவே கிடைச்சிடுது ;)

கயல்விழி முத்துலெட்சுமி said...

சின்ன வயசிலிருந்தே நாலு அஞ்சு பேரோடயே எப்பவும் இருக்கும் எனக்கு இப்ப நட்புகளை சிக்கனமா தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கறது கொடுமையா இருக்கு..நான் பழகுபவர்கள் என் குழந்தைகளுக்கும் பழக ந்ல்லவர்களா என்று பார்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.. பெட்டர் குழந்தைகளின் நட்பு யாரிடமோ அவர்களின் பெற்றவர்கள் நட்பாக்கிக்கொள்வது என்று தேர்ந்தெடுக்கிற கட்டாயம் .. :(

பாச மலர் said...

உமாகுமார், கோபி, கயல்விழி,

உங்கள் ஆதங்கம் புரிகிறது..

அறிவன்#11802717200764379909 said...

மலர்,சரியான ஒரு விதயம் தொட்டிருக்கிறீர்கள்.ஆனாலும் வெளிநாடுகளில் வாழும் குடும்பக் குழந்தைகளுக்கும்,பெரும் நகரத்தில் வாழும் குடும்பங்களுக்கும்தான் இக்குறை பெரிதும் கவிகிறது என்பது என் அவதானிப்பு.
என்னுடைய சிதைந்து வரும் சிறுவர் உலகம் பதிவிலும் இவ்விதயத்தைத் தொட்டிருக்கிறேன்

ரசிகன் said...

/காரணங்கள் புரிந்தாலும் காரியமாற்ற முடியாத ஒரு நிலைமையில் தள்ளப்பட்டுதான் நிற்கிறோம்.//
உண்மைதான்:)

Aruna said...

நாம் அனுபவித்த, இன்னும் கூட அனுபவித்து வருகின்ற நட்பின் அருமை பெருமைகள் பலவற்றை நம் குழந்தைகள் அனுபவிக்கிறார்களா? என்னவென்றே அறியாமல் அவர்கள் தொலைத்த பலவித சந்தோஷங்களுள், உரிமைகளுள் இதுவும் ஒன்று.


உண்மை உண்மை....100% உண்மை
அன்புடன் அருணா

பாச மலர் said...

உண்மைதான் அறிவன்..கிராமங்களில் இன்னும் இந்த நிலை ஓரளவு நீடித்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய இரு விஷயம்..

பாச மலர் said...

ரசிகன், அருணாவும் ஆதங்கப்படுபவர்கள் பட்டியலில்தான்..

cheena (சீனா) said...

பாசமலர்,

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு வருகிறேன். அருமையான பதிவு.

இன்றைய தினம் நட்பு என்பது அக்கால நட்பினைப் போன்றது இல்லை. இது சும்மா நேரத்தினைச் செலவழிக்கும் நட்பு. உணமையான நட்பில்லை.

என்ன செய்வது - காலம் மாறுகிறது - நட்பின் குணம் மாறுகிறது - பயனில்லாத நட்பு - அத்தி பூத்தாற் போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக உணமை நட்பும் இருக்க்த்தானே செய்கிறது

ஜீவி said...

நல்லதொரு பதிவிட்டிருக்கிறீர்கள், பாசமலர்!
எனக்கும் தி.தி.ச.-த்தில் 'நட்பு' பற்றி எழுத முன்னாலேயே யோசித்து வைத்திருந்தாலும், இப்பொழுது
இன்னும் கூடிய புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்..

'காரணங்கள் புரிந்தாலும்' என்று
நீங்கள் குறிப்பிட்டிருப்பனவற்றை அலச முயற்சிக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

NambikaiPandian said...

ஆமாங்க பாசமலர்!
நல்ல நட்புகள் குறைஞ்சுட்டு வருது, என்பது வருத்தத்திற்குரிய உண்மைதான்!நிதர்சங்களை பிரதிபலிக்கும் பதிவு!

SanJai said...

//தெரு முனைகளில் தவறாமல் கூடும் நண்பர்கள், கெக்கே பிக்கே என்று ஏதாவது பேசிச் சிரிக்கும் பெண்கள் கூட்டம், குடும்பத்தினரிடம் கூடப் பேச முடியாத பல விஷயங்களைத் தங்களுக்குள் பேசித் தீர்வு, ஆறுதல் காண்கிற மனங்கள் அரிதாகி வருகின்றன//

ஆமாம்க்கா.. ரொம்ப கொடுமையான விஷய்ம் இது.. ஆனா வேற வழி இல்லை. :(