Monday, March 31, 2008

யார் பித்தன்?

இன்றைக்குக் கொஞ்சம் லேட்டாகிவிட்டது..அய்யோ பஸ் போயிருக்குமோ என்னவோ..அந்த ஆரப்பாளையம் நேர் பஸ்ஸை விட்டு விட்டால் பெரியார் பெருந்து நிலையம் போய் மறுபடியும் வேறு பஸ் பிடித்துப் போவதற்கு நேரமிருந்தாலும், கனகாவுக்கு என்னவோ அது பிடிப்பதில்லை. இதில் போனால் சீக்கிரமாகவே பள்ளிக்குப் போய்விடலாம். அரக்கப் பரக்க ஓட வேண்டிய அவசியமிருக்காது.

வீட்டில் புறப்படும் போது ஒலிக்க ஆரம்பித்த "காதலின் தீபமொன்று" பாடலை நின்று கேட்டு ரசிக்க நேரமில்லை..பருத்திப் புடவை மடிப்புகளைச் சரிசெய்யவென்று 5 நிமிடம் அதிகம் நேரம் ஒதுக்கிய அவகாசத்தில் ஒலித்திருக்கக்கூடாதா அந்தப் பாடல்..காலில் செருப்பைப் போடும் போது ஒலிக்க ஆரம்பித்தது..முனை டீக்கடையில் "..பொன்னிலே பூவையள்ளும் புன்னகை மின்னுதே.."மனதுக்குள் வரிகளை ரசித்தபடி வேக நடை போட்ட கனகாவின் கால்கள் பேருந்து நிறுத்தத்தை நெருங்கியதும் தன்னிச்சையாகத் தயங்கின.

இன்றும் அவன் வருவானோ? அய்யோ..தூரத்தில் இருந்தபடிப் பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டாள்..நல்லவேளையாகஅவன் அறிகுறி எதுவும் தென்படவில்லை..இதோ சுந்தரமூர்த்தி மாமாவும் வந்துவிட்டார்..அவருக்கும் அதே பஸ்தான்..

"என்னம்மா இன்னிக்கு லேட் போலருக்கே?"

"ஆமாம் மாமா." கடையில் ஒலித்த.."என்னை நான் தேடித்தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்.."பாடலை ரசித்துக் கொண்டே இருக்கையில் அவன் அதோ வந்து விட்டான்..நாக்கு சட்டென்று மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. பயத்துடன் சுந்தரமூர்த்தி அருகில் நெருங்கி நின்று கொண்டாள் கனகா. "வந்துட்டானா" என்று வரவேற்கத் தயாரான முணுமுணுப்புகள் அங்கங்கே..நின்றிருந்த ஒன்றிரண்டு பள்ளிப் பிள்ளைகளும் கனகா போலவே பயந்தனர்.

அவனுக்கு வயது 15 இருக்கும். சற்று மீறிய வளர்ச்சி..மன நலம் சரியில்லாதவன்..
பூக்காரம்மாவின் பையன். பூ வியாபாரம் முடித்து அந்தம்மா இரண்டு மூன்று வீடுகளில் வேலை செய்து பிழைத்து வந்தார். கணவன் இறந்துவிட, இருக்கும் ஒரே பிள்ளையும் இப்படி.

அந்தம்மா அப்படிப் போனதும் இவன் இப்படி வருவது வாடிக்கையான ஒன்றுதான். சில நேரம் அவன் பாட்டுக்கு அமைதியாய் நிற்பான். அல்லது நடந்து கொண்டேயிருப்பான். சிலநேரம் அங்கே இருக்கின்றவர்களிடம் வம்பு செய்வான். காசு கேட்பான்,கொடுத்ததும் வாங்கிக் கொண்டு போய்விடுவான். ஆனால் சமீப காலமாகப் பெண்களைப் பார்த்தால் அசிங்கமான சைகைகள் புரிவது வழக்கமாகிவிட்டது..தர்மசங்கடத்தில் நெளிய வேண்டிய தருணங்கள்..

என்றைக்குத் தான் மாட்ட போகிறோமோ என்ற பயம் கனகாவுக்கு..

பயத்தைப் புரிந்து கொண்டவராய் சுந்தர மூர்த்தி மாமா, " பயப்படாதேம்மா..ஒன்றும் செய்ய மட்டான் " என்று கூறியும் சமாதானமாகவில்லை..ஏதாவது நடந்து விட்டால் எவ்வளவு அசிங்கம்..என்ன இந்த பஸ் இன்னும் வரவில்லையே என்று பார்க்குப் போது, ஒரு வழியாக அன்று சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்தது பஸ்.

அப்பாடா தப்பித்தோம் என்று பஸ் ஏறி வழக்கமான இடத்தில் உட்கார்ந்தாள் கனகா. என்ன இருந்தாலும் அந்த அம்மா இவனை இப்படி விட்டு விடுப் போகக் கூடாது. என்றைக்கு என்ன செய்வானோ என்ற பயத்துடன் எத்தனை நாள் இருக்க முடியும்..அந்தப் பையன் மீது கோபம் வந்தது..

அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்.
"பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற நீயே பயப்பட்டா எப்படி.."

அதுவும் சரிதான். அதற்காகப் பயம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டுமானால் முடியும். பயம் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?

சரியான கிறுக்கன்..கனகாவுக்குக் கோபம் கோபமாய் வந்தது. இப்படிப் பொறுப்பில்லாமல் வெளியே அந்தப் பையனை அனுப்பிய அவன் அம்மா மீது..அவன் நினைவே எரிச்சலை மூட்ட இதே போல் எத்தனை நாள் போகுமோ என்று எண்ணியபடி பள்ளியை அடைந்தாள். வேலைப்பளுவில் சற்றே மறந்தாலும் ஒவ்வொரு காலையிலும் இம்சை தருகின்ற அந்தத் தருணங்கள் மனதின் ஓரம் வந்து வந்து போயின.

அன்று சாயந்திரம் அதே பஸ்ஸில் வீடு திரும்புகையில், அவள் கண்முன் கண்ட காட்சி மனதைப் பற்றியெரிய வைத்தது. அவ்வளவு அதிகமாகக் கூட்டமில்லை. சற்று முன் நின்று கொண்டிருந்த பள்ளிச் சிறுமியின் மீது சாய்வதும், பின் விலகுவதுமாகப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த நடுத்தர வயது மனிதரைக் கோபத்துடன் வெறித்தாள் கனகா. தற்செயலாக நடப்பது போல் காட்டிக் கொண்டாலும், அந்தப்பாவியின் வக்கிரபுத்தி பார்த்த மாத்திரத்தில் உரைத்தது. அந்தச் சிறுமி பாவம், நகர்ந்து சென்றாலும் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தது அந்த ஜடம்.

ஏதோ ஒரு படத்தில் யாரோ சொன்ன வசனம் நினைவுக்கு வந்தது. "இப்பல்லாம் வயசுப்
பசங்கள விடப் பெரிசுககிட்டதான் ஜாக்கிரதையா இருக்கணும்."

இருக்கையில் இருந்து எழுந்த கனகா அந்தச் சிறுமியிடம் சென்றாள்.

"இங்கே உட்கார்ந்துக்கோம்மா. நான் இறங்கப் போகிறேன்."

"தேக்ஸ் அக்கா." என்றபடி சிறுமி நகர்ந்தாள். அங்கே நின்ற கனகா பார்வையால் அந்த ஆசாமிக்குச் சவால் விட, நெளிந்து குழைந்தார் ஆசாமி. அடுத்த நிறுத்தம் வர, இறங்க வேண்டுமோ அல்லது பயமோ இறங்கிப் போனது அந்த ஜென்மம்.

ஏனோ கிறுக்கனின் முகம் கண்முன் வந்தது. இந்த வக்கிர நடத்தையை அவன் திடீரென்றுதானே தொடர்கிறான்..யாரோ ஒரு விஷமிதான், வக்கிரபுத்திக்காரன் தான் இதைச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். பஸ்ஸில் பார்த்த ஆசாமிக்கும் சித்தம்
சுவாதீனமாகவே இருக்க, அவன் என்ன பித்தனா? கிறுக்கனுக்குச் சைகை செய்யச் சொல்லிக் கொடுத்த ஆசாமிக்கும் மன நலம் நன்றாகவே இருக்க..அவன் பித்தனா? இல்லை எதுவும் புரியாமல் பித்தன் என்று பெயரைச் சுமக்கும் சிறுவன் பித்தனா? யார் பித்தன்?

நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கேறிய தசைநார்கள் நொடியில் இறுக்கம் தளர்ந்து இலகுவாக...சட்டென்று ஒரு நெகிழ்வு பிரவகித்தது மனதில். பெரியப்பா மன நல மருத்துவர்தானே. அந்தப் பையனைக் கூட்டிக் கொண்டு போய் அவரைப் பார்த்தால் என்ன? முதலில் அவன் அம்மாவை பார்த்துப் பேச வேண்டும். சுந்தர மூர்த்தி மாமா இந்நேரம் வந்திருப்பார். அவருக்குதான் அவன் வீடு தெரியும். ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியவளாய் சுந்தரமூர்த்தி வீடு நோக்கி நடக்கலானாள் கனகா. மனதில் இனம் புரியாத அமைதி நிலவியது.

23 comments:

கபீரன்பன் said...

கதையை நன்றாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்.
மனம் தெளியும் போது வழியும் பிறக்கிறது.
பாராட்டுகள்

Divya said...

தெளிவான நடை,
ஆழமான கருத்து, அதனை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்,

\\சுவாதீனமாகவே இருக்க, அவன் என்ன பித்தனா? கிறுக்கனுக்குச் சைகை செய்யச் சொல்லிக் கொடுத்த ஆசாமிக்கும் மன நலம் நன்றாகவே இருக்க..அவன் பித்தனா? இல்லை எதுவும் புரியாமல் பித்தன் என்று பெயரைச் சுமக்கும் சிறுவன் பித்தனா? யார் பித்தன்?\

நச்சென்ற கேள்வி!

பாராட்டுக்கள்!!

Divya said...

\\வீட்டில் புறப்படும் போது ஒலிக்க ஆரம்பித்த "காதலின் தீபமொன்று" பாடலை நின்று கேட்டு ரசிக்க நேரமில்லை..பருத்திப் புடவை மடிப்புகளைச் சரிசெய்யவென்று 5 நிமிடம் அதிகம் நேரம் ஒதுக்கிய அவகாசத்தில் ஒலித்திருக்கக்கூடாதா அந்தப் பாடல்.\\

Realistic touch, superb!!!

பாச மலர் said...

நன்றி கபீரன்பன், திவ்யா.

sury said...

//பெரியப்பா மன நல மருத்துவர்தானே. அந்தப் பையனைக் கூட்டிக் கொண்டு போய் அவரைப் பார்த்தால் என்ன? முதலில் அவன் அம்மாவை பார்த்துப் பேச வேண்டும். .... ஏதாவது செய்ய வேண்டும் //


அன்பின் வழியது உயிர் நிலை, அஃது இலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு ..(அன்புடைமை..10)..வள்ளுவப்பெருந்தகை.

உதவி செய்யவேண்டும் என எண்ணியதிலேயே நீங்கள் செய்யப்போகும்
உதவிக்குப் பாதி தூரம் வந்து விட்டீர்கள். சோராது செயல் படுங்கள்.
உங்கள் வழியாக அந்தப்பையனுக்கு நல்லதொரு வழி கிடைப்பதும்
ஆண்டவன் செயலே.

இது குறித்து மேலும் படிக்க, சிந்திக்க‌
http://meenasury.googlepages.com/http%3Ameenasury.googlepages.commyhappinessisinmywill


சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

பி.கு: எனது பதிவில் உங்கள் கால் சுவடுகள் தெரிந்தன. மனமுவந்த நன்றி.
http://arthamullavalaipathivugal.blogspot.com

கயல்விழி முத்துலெட்சுமி said...

நல்ல கதை.. நல்ல கருத்து..

கிருத்திகா said...

மலர் கதையை கொண்டு சென்ற பாங்கு மிகவும் நன்றாக உள்ளது. எந்த ஒரு விஜயசாந்தித்தனமும் இல்லாமல் மிகவும் எதார்த்தமாக தெளிநிலை மட்டுமே எந்த ஒரு பித்தத்தையும் தெளிவிக்கும் என்று முடித்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

பாச மலர் said...

நன்றி சூரி, முத்துலட்சுமி.

ஆமாம் கிருத்திகா.விஜயசாந்தித்தனம் (நல்ல வார்த்தைப் பிரயோகம்) எத்தனை பேரிடம் இருக்கிறது நிஜத்தில்..

நிஜமா நல்லவன் said...

///நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கேறிய தசைநார்கள் நொடியில் இறுக்கம் தளர்ந்து இலகுவாக...சட்டென்று ஒரு நெகிழ்வு பிரவகித்தது மனதில்.///


அந்த ஒரு நொடி பலருக்கு வாய்ப்பதேயில்லை.
நல்ல கதை. பாராட்டுக்கள்.

பாச மலர் said...

//அந்த ஒரு நொடி பலருக்கு வாய்ப்பதேயில்லை.//

சில நேரங்களில் சில விஷயங்களுக்காக வாய்க்கும்..

menaka said...

//அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்.
"பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற நீயே பயப்பட்டா எப்படி.."

அதுவும் சரிதான். அதற்காகப் பயம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டுமானால் முடியும். பயம் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?//
வழியில் பயம் ஏற்படாமல் இருப்பதற்கு சஷ்டி கவசம் சொல்லலாம்.
www.kaumaram.com
இல்லை எனின், இந்த வீடியோ பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=1a4-jwXejc0
மீனாட்சி பாட்டி
தஞ்சை.

ஜீவி said...

இயல்பான நடை.
அந்தப் பாட்டைத் தொடர்ச்சியாகக்
கொண்டு போனவிதம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

பாச மலர் said...

மீனாட்சிப் பாட்டி, ஜீவி சார்,

நன்றி..

aruna said...

///நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கேறிய தசைநார்கள் நொடியில் இறுக்கம் தளர்ந்து இலகுவாக...சட்டென்று ஒரு நெகிழ்வு பிரவகித்தது மனதில்.///

இதை படித்த நொடியில் அதே நெகிழ்வு பிரவகித்தது மனதில்
அன்புடன் அருணா

aruna said...

///நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கேறிய தசைநார்கள் நொடியில் இறுக்கம் தளர்ந்து இலகுவாக...சட்டென்று ஒரு நெகிழ்வு பிரவகித்தது மனதில்.///

இதை படித்த நொடியில் அதே நெகிழ்வு பிரவகித்தது மனதில்
அன்புடன் அருணா

ரசிகன் said...

//பஸ்ஸில் பார்த்த ஆசாமிக்கும் சித்தம்
சுவாதீனமாகவே இருக்க, அவன் என்ன பித்தனா? கிறுக்கனுக்குச் சைகை செய்யச் சொல்லிக் கொடுத்த ஆசாமிக்கும் மன நலம் நன்றாகவே இருக்க..அவன் பித்தனா? இல்லை எதுவும் புரியாமல் பித்தன் என்று பெயரைச் சுமக்கும் சிறுவன் பித்தனா? யார் பித்தன்?//

நியாயமான கேள்வி.. கதை நல்லாயிருக்கு பாசமலர்.

கோபிநாத் said...

ஆகா..எப்படி மிஸ் ஆச்சு!!

அட்டகாசமான நடை...கலக்குறிங்க அக்கா ;))

\மனதில் இனம் புரியாத அமைதி நிலவியது.\\

கதையை படித்து முடித்தவுடன் எனக்குள்ளும் அமைதி நிலவியது ;)

வாழ்த்துக்கள் ;)

பாச மலர் said...

அருணா, கோபி, ரசிகன்

நன்றி.

பாச மலர் said...

அருணா, கோபி, ரசிகன்

நன்றி.

SanJai said...

ஒரு சினிமா பாடலையும் விட்டு வைக்கிறதில்லை போல.. :)

பாச மலர் said...

ஒரு சினிமா பாடலையும் விட்டு வைக்கிறதில்லை போல.. :)//

இல்லியா பின்னே!

SanJai said...

காலேஜ்லையும் பாடுவிங்களா? :))

பாச மலர் said...

நாம பாடலைக் கேக்கறதோட சரி..பாடினா ஊர் தாங்குமா.