Monday, March 17, 2008

ரசனை மாற்றம் Vs கருத்து வேறுபாடு Vs பலப்பரிட்சை

இட்லிக்கு எந்தச் சட்னி பிடிக்கிறது என்று சமையலில் தொடங்கி சகலமும் ரசனைகளின் அடிப்படையில்தான்..ஏதோவொன்றின் மீது ஏற்படும் பிடித்தம் அல்லது ஈடுபாடு அளவுக்கதிமாகும் போது ரசனையாதல் இயல்பு. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை.

பள்ளிப் பருவத்தில் ரஜினி - கமல், ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா/ரத்தி, யேசுதாஸ் - எஸ்.பி.பி , சுஜாதா - பாலகுமாரன், பாலசந்தர் - பாரதிராஜா ... இது போல் பல விஷயங்களுக்காகவும் கட்சி கட்டிக் கொண்டு செய்த வாக்குவாதங்கள், சண்டைகள்..இதெல்லாம் ரசனையா என்ற அற்பத்தனமான விஷயத்துக்கும் அடாவடியாய்ச் சண்டைகள்..ஒரு முறை வாக்குவாதம் தீவிரமாகி ஒரு தோழியுடன் சில நாட்கள் பேசாமல் இருந்ததெல்லம் நினைத்தால் சிரிப்பாக வருகிறது. வேலைகள்/கவலைகள் அதிகமில்லாத காலத்தில் இப்படியிருப்பது இயல்புதான்.

எப்போதும் வேறுவிதக் கவலையில் இருக்கும் உயர்தர வகுப்பினருக்கு இந்தப் பலப்பரிட்சைகள் விவாதங்கள் என்ற பெயரில் அவசியமில்லை. காரியத்தில் மட்டுமே கண். எப்போதும் வயிற்றுப்பாட்டைப் பற்றிய கவலையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை. நடுவில் ஊசலாடும் வர்க்கத்திடம்தான் அதிகம் கூச்சலும், குழப்பமும்.

இவையெல்லாம் தனி மனித விருப்பத்தைப் பொறுத்த ரசனை மாற்றங்கள். கொள்கைப் பிடிப்புக்காய் மாறும் ரசனைகளும் பல உண்டு.

திரைப்படம்/தொலைக்காட்சி/பத்திரிகை - இந்தத் துறைகளை எடுத்துக்கொண்டால் மக்கள் ரசனைக்காகத் தருகிறோம் என்ற பெயரில் வகை வகையான ரசனைகள் வரிசைப்படுத்தப் படுகின்றன.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

மதம் - கேட்கவே வேண்டாம். இதில் ரசனைக்கு இடமில்லைதான். பல சமயம் பிறப்பால், சில சமயம் சுய தேர்வால் ஏற்படுகின்ற ஒரு விஷயம். கொள்கைகளின் அடிப்படையில் ஏற்படும் வேறுபாடுகள் மனிதருக்கு மனிதர் மாறுவதை இங்கும் காணலாம். ஈடுபாடு இல்லாதவர்க்கும் கருத்து வேறுபடு என்ற பெயரில் வாக்குவாதங்களுக்குக் குறைவில்லை. ஆன்மீகத்துக்குப் பல முகமாகிப் போக மதங்கள் மனிதனைக் காப்பாற்றுவதை விட, மனிதன் வரிந்து கட்டிக் கொண்டு மதங்களைக் காப்பாற்ற வேண்டிய பரிதாப நிலை.ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

அரசியல் - இதிலும், பதவிகளில் இருப்பவர்கள், கட்சித் தலைவர்கள் கூட எல்லா விஷயங்களிலும், எல்லா நேரங்களிலும் அதே முக்கியமான கொள்கைப் பிடிப்பிலிருந்து விலகாமல் நிற்கிறார்களா என்பது சந்தேகமே. தலைவர்கள் இப்படியென்றால் தொண்டர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இங்கேயும் கருத்து வேறுபாடுகள், நீயா நானா போட்டிகள், பலப்பரிட்சை..

இப்படி ஒவ்வொரு துறையிலும் ரசனை மாற்றங்கள்..கொள்கைப் பிடிப்புகள் கருத்து வேறுபாடுகளாக உருவெடுத்து போட்டியிலும், பலப்பரிட்சையிலும் தொடர்ந்து..ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

ஆனால் அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறைக்கு இதற்கான ஈடுபாடு இவ்வளவு ஆழமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அன்று தொலைக்காட்சி, கணினி எல்லாம் ஏது? இன்றுள்ள சாதனங்கள் பல வேண்டவே வேண்டாம் என்று துரத்த முடியாத அளவுக்கு நம் வீடுகளில் அழுத்தமாய் வந்து அமர்ந்துள்ளது. இன்றைய வளர்ந்து வரும் குழந்தைகளின் பார்வையில் பலவிதமான செய்திகள், துறைகள்,சவால்கள்....
ஒவ்வொன்றுக்கும் ரசனை வளர்த்துக் கொள்வதற்கே நேரமில்லாத போது,கருத்து வேறுபாடுகளும், பலப்பரிட்சைகளும் சற்று பலவீனப்பட்டுப் போகின்றன.

இவர்களின் விவாதங்கள்..ஈடுபாடு இருந்தாலும் / இல்லாவிட்டாலும் இந்த ரீதியில்தான் இருக்கும்..அடுத்தவர் மீது தன் கருத்தைத் திணிப்பதாக இருக்காது என்றே தோன்றுகிறது.

நபர் 1: எனக்குக் கவிதையே பிடிக்காது. (இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 2: எனக்குக் கதையே பிடிக்காது.(இருக்கட்டும்.)

நபர் 1: பின் நவீனத்துவம் எனக்குப் புரிவதில்லை.(புரிய வேண்டாம்.)
நபர் 2: மொக்கை எனக்குப் பிடிப்பதில்லை.(ஏன் பிடிக்கணும்?)

நபர் 1: இந்த மதம்தான் சரியானது.(இருக்கட்டும்.)
நபர் 2: இல்லை. இந்த மதம்தான் சரியானது.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 3: கடவுளே இல்லை..இருக்கிறார் என்பவன் முட்டாள்.(இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 4: கடவுளே இல்லை என்று சொல்லும் நீ தான் முட்டாள்.(அதுனால் என்ன குறைஞ்சு போச்சு?)

நபர் 1: அஜீத் தான் எங்க தல..சூப்பரா கலக்குறாரு..(வச்சுக்கோ)
நபர் 2: இளைய தளபதிதான் என் சூப்பர் ஸ்டாரு..(வச்சுக்கோ)

நபர் 1: எங்க கட்சித் தலைவருக்குதான் நல்ல எதிர்காலம்...வலுவான கொள்கைப்பிடிப்பு..(நல்லா இருக்கட்டும்)
நபர் 2: அதெல்லாம் தலைவர் காலத்துக்கப்புறம் பாப்போம்..என்ன நடக்குதுன்னு..(நல்லாப் பாரு..)
நபர் 3: புதுத் தலைமைதான் தமிழ்நாட்டுக்குத் தேவை..திராவிடம் போதுமப்பா..(புதுசுதான் வந்துட்டுப் போகட்டுமே.என்ன போச்சு?)
நபர் 4: எந்தப் பழைய கட்சியும் வேணாம்ப்பா..ரசிகர் மன்றக் கொடிகள்தான் கட்சிக்கொடியா வரணும்...நாம் நல்லா உருப்படணும்னா..(நல்லா உருப்பட்டுக்கோ..)

நபர் 1: தங்கமனிகளுக்குதான் அதிகம் கஷ்டம்.(அப்படியா?)
நபர் 2: காலத்துக்கும் ரங்கமணிக்குதான் கஷ்டமோ கஷ்டம்.(அய்யோ, அப்படியா)

இப்படி அடைப்புக் குறிக்குள்ள இருக்கிற மனோபாவம் இன்றைய குழந்தைகளிடம் / வளர்ந்து வரும் தலைமுறையிடம் கொஞ்சம் காண முடிகிறது. அஜீத், விஜய்க்காக சண்டை போடுகிற பள்ளிப்பிள்ளைகள் இன்று பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஏதோ புதுப்படம் வெளிவரும் சமயம்..சில கூத்துகள் மட்டும் இன்றும் தொடர..நடிகர்கள்தான் ரசிகர்களை விடப் படங்களில் ஒருவரை ஒருவர் அதிகம் தாக்கிப் பேசுகின்றனர்.

பழையது பிடிக்காது..ஆனாலும் தவிர்க்க முடியாது என்று ரீ மிக்ஸ் கலாசாரத்தைத் திரைத்துறையில் புகுத்தியது போல்..வேண்டியவற்றை, வேண்டிய முறையில் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இவர்களிடம் நிறையவே உள்ளது.

பலப்பரிட்சையென்ற பெயரில் அர்த்தமில்லாத விவாதங்கள் அளவுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோகாத இந்த இளைய தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் எதார்த்தவாதிகள்தான்.

27 comments:

கிருத்திகா said...

உண்மைதான். இப்போதிருக்கும் இளையதலைமுறையினரின் இந்த போக்கு ஒரு சமயம் ஆரோக்கியமாகவும் அதே சமயம் கவலை கொள்ளத்தக்கதாகவும் இருக்கு மலர். "சோ வாட்" மனநிலையிக் ஒரு மனிதனால் எத்தனை தூரம் கமிட்டெடா இருக்க முடியும்னு தோனலை. இந்த மனப்பான்மையோடு கொஞ்சம் அதிக பொறுப்புணர்ச்சியும் (அவர்கள் விஷயம் தவிர பொது விஷயங்களிலும்) இருக்குமானால் இது வரவேற்கத்தக்க மாற்றமே. வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

\\பலப்பரிட்சையென்ற பெயரில் அர்த்தமில்லாத விவாதங்கள் அளவுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோகாத இந்த இளைய தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் எதார்த்தவாதிகள்தான்.\\

உண்மையிலும் உண்மை..நல்லது தான் ;)

வாழ்க்கையை அனுபவிக்கிறாங்க..;)

சுல்தான் said...

கிருத்திகா சொன்னதுதான்.
தமிழர்களிடம் அதிகமாக இப்போதிருக்கிற உணர்ச்சி வசப்படுதல் இல்லாதிருப்பது நன்மைதான். எனினும்
இப்படியே 'அதுக்கென்ன இருக்கட்டுமே' என்ற இந்த சிந்தனை வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளிலும் நேரங்களிலும் கை கொடுக்காதே என்கிற பயம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

பாச மலர் said...

ஆமம் கோபி..

ஆராயாமல் அனுபவிக்கிறார்கள்..
தேவையில்லாத விஷயங்களுக்கு ஏன் என்று கேள்வி கேட்பதில்லை..

பாச மலர் said...

சுல்தான்,

அதுக்கென்ன இருக்கட்டுமே என்ற போக்கு இருக்கிறது..விரும்பாத துறைகளில் மட்டும்தான்..

அதே போல் தன் விவாத்ததால் அடுத்தவர் மனதை மாற்ற முயலுவதில்லை இந்தப் பிள்ளைகள்..
அவர்களுக்குப் பிடித்து/ அடுத்தவர்க்குப் பிடிக்கவில்லையென்றால் அதை இயல்பு என்று ஏற்கிறார்களே தவிர போராடி ஜெயிக்க நினைப்பதில்லை...

சொந்த விஷயங்களை உணர்ச்சிபூர்வமாகவும், இது போன்ற விஷயங்களை எதார்த்தமாகவும் கையாளுகிறார்கள் என்பதே என் எண்ணம்..

பாச மலர் said...

கிருத்திகா,

இந்த "so what" மனநிலை எல்லா விஷயங்களிலும் குழந்தைகளுக்கு வருவதில்லை..நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு வேண்டிய விஷயத்தில் உஷார்தான்..

நம்மைவிடப் பக்குவமாக நடப்பார்கள் என்றே தோன்றுகிறது..பொது விஷயங்களில் ஈடுபாடு என்பது வரவேண்டிய வயதில் ஓரளவு வந்துவிடுகிறது..ஆனாலும் அடுத்தவரின் ரசனைகள் அவர்களை அதிகம் பாதிக்குமா என்பது சந்தேகமே..

நம்மைப் போல் இந்த விதமான விவாதங்கள்..அவர்களுக்கு அனுபவமில்லாத அவ்வளவாகத்
தேவையில்லாத விஷயங்கள்..
அதனால்தான் இப்படி..

நாம் விவாதம் என்று பேசும் பதிவில் கூறப்பட்ட விஷயங்கள் இன்னும் பல அவர்களுக்கு எட்டவே இல்லை..எட்டினாலும் நம் அளவுக்கு அலட்டிக் கொள்ளப்போவதில்லை..
என்றே தோன்றுகிறது.

இரண்டாம் சொக்கன்...! said...

நல்லா நீள அகலங்களில் அலசி எழுதிருக்கீங்க மலர்...நல்லாருக்கு.

"So what","Then what","Why not"...இவை மூன்றும் அளப்பறிய சக்தியுடைய வார்த்தைகள்னு நினைக்கிறேன்.....இதை பற்றி விலாவாரியாக ஒரு பதிவெழுதனும்னு நினைச்சேன்...நினைக்கிறேன்...நினைப்பேன்....

அதுனால நீங்களே அதை பத்தியும் எழுதீடுங்க, நல்லாருக்கும்...ஹி..ஹி..ம்ம்ம்ம்ம்

சென்ஷி said...

:))

நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க போல.... :))

நீங்க சின்ன லெவல்ல ரசனைய வளர்த்துக்கிட்டீங்க. அடுத்த ஜெனரேஷன்ல நாங்க புதுசா ஏதாவது யோசிக்கலாம்ன்னு இருக்கோம்.

மங்கை said...

//ஒரு முறை வாக்குவாதம் தீவிரமாகி ஒரு தோழியுடன் சில நாட்கள் பேசாமல் இருந்ததெல்லம் நினைத்தால் சிரிப்பாக வருகிறது///

ஆனா அந்த கோபம் அப்ப எல்லாம் எத்தன நாட்களுக்கு இருந்து இருக்கும்..சீக்கிறம் சமாதானம் ஆகிடிவோம்...ஆனா இப்ப..அந்த அளவிற்கு சீக்கிறம் சமாதானம் ஆகறமா மலர்?..ம்ம்ம்

இந்த தலைமுறையினர் சில விஷ்யங்களில் ரொம்ப மெச்சுர்ட்டா தான் இருக்காங்க...மனதை போட்டு அதிகம் குழப்பிக்காமல் எடுத்த முடிவுகளில் தெளிவும்..உறுதியும் இருப்பது தெரிகிறது. இதை ஆக்கப் பூர்மாக, நல்ல வழியில் எடுத்துச் செல்ல அவர்களுக்கு உதவவேண்டும்

பாச மலர் said...

சொக்கரே,

நினைப்போட நிறுத்த வேண்டாம்..எழுதவும் செஞ்சுருங்க..

பாச மலர் said...

சென்ஷி,

..ரசனைகள்..என்றுமே வாழ்க்கைக்கு முக்கியமானவை..அதிக ரசனைகள் வளர்த்துக் கொள்வது மிகவும் சந்ந்தோஷமான விஷயம்.

பாச மலர் said...

உண்மைதான் மங்கை...அப்போ வந்த கோபத்துக்கு ஆயுசு குறைவு..

ஆக்கப்பூர்வமா செயல்படுவதற்கு
கட்டாயம் நாம் உதவ வேண்டும்..நல்வழியில் செல்வார்கள்..புர்நிது கொள்ளும் பக்குவம் அதிகம் இருக்கிறது இவர்களிடம்..

இரண்டாம் சொக்கன்...! said...

தாயே...

தயவு செஞ்சி நீங்களே எழுதீருங்க...என்னை விட நல்லா எழுதுவீங்க..உங்களூக்கு புண்ணியமா போயிரும்...

ஏற்கனவே எழுதறேன்னு ஒத்துகிட்டு எழுதாத பதிவுகள் நெறய இருக்கு...அதுனால ஹெல்ப் ப்ளீஸ்

ஜீவி said...

இப்பொழுது விஷயப் பரவல்கள் அதிகமாகியிருக்கிறது. பொழுது விடிந்தாலே, கிளைக்கும் புதுப்புது விஷயங்கள் எத்தனை?எத்தனை?
இது இன்பர்மேஷன் உலகம். பல விஷயங்கள்--டாலர் மதிப்பு குறைவதிலிருந்து, டாக்டரைப் பர்ர்ப்பது வரை புரிந்து செயல்ப்டத் தவறின் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக எல்லாம் உருவாகி விட்டன. எந்த நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய சவாலும் அதிகம். கொஞ்சம் அசந்தால் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் அதிகம். விஷயப் பெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க ரசனை சம்பந்தப்பட்ட பல ஈடுபாடுகளில் ஆர்வமில்லாமல் போய்விட்டதென்னவோ உண்மைதான்.

Divya said...

பாசமலர்,
நல்லாயிருக்குங்க பதிவு!!

\\நபர் 1: எனக்குக் கவிதையே பிடிக்காது. (இருந்துட்டுப் போகட்டும்.)
நபர் 2: எனக்குக் கதையே பிடிக்காது.(இருக்கட்டும்.)\

ப்ராக்கெட் மெசேஜ்.....ROTFL:)

\\ஒரு முறை வாக்குவாதம் தீவிரமாகி ஒரு தோழியுடன் சில நாட்கள் பேசாமல் இருந்ததெல்லம் நினைத்தால் சிரிப்பாக வருகிறது. வேலைகள்/கவலைகள் அதிகமில்லாத காலத்தில் இப்படியிருப்பது இயல்புதான்.\

சின்ன சின்ன வாக்குவாதம் பெரிய பெரிய சண்டையாகிவிடும், what to do!!

பாச மலர் said...

சொக்கரே,

சரி..யாராவது எழுதுவாங்க..படிக்கலாம்..

பாச மலர் said...

ஜீவி சார்,

கிடைத்த கொஞ்சம் நேரத்தில் அவ்வப்போது மாறும் ரசனைகளை எளிதில் வளர்த்துக் கொண்டாலும் நிலைத்த ரசனை கொஞ்சம் கஷ்டம்தான்..

பாச மலர் said...

திவ்யா,

ஆமா. அதெல்லாம் ஒரு காலம்..இப்போழுதெல்லாம் பசங்க அப்படிச் சண்டை போடுவதில்லைதான்..

நிஜமா நல்லவன் said...

இன்றைய காலச்சூழலில் எதார்த்தவாதிகளாக இருப்பதே மேல்.

பாச மலர் said...

எல்லா விஷயங்களிலும் எதார்த்த ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிட்டது இன்றைய தலைமுறை..ஆமாம்..வீண் வாதங்களை விட இது தேவலாம்தான்..

Arun said...

//பல சமயம் பிறப்பால், சில சமயம் சுய தேர்வால் ஏற்படுகின்ற ஒரு விஷயம்.//

உண்மையான சொற்கள்.

sury said...

சிந்தனையின் சத்தம் எனும் லேபிளில் சத்தமாகவே அதுவும் சுத்தமாகவே நீங்கள் சொன்னதற்கு உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

துவக்கத்தில் நீங்கள் கூறியது போல இந்த "எதற்கெடுத்தாலும் வாதம் " செய்கிற போக்கே அந்த நாள் முதல் இந்த நாள் வரை ஒரு நடுவர்க்கப் பொருளாதாரப் பிரிவைச் சார்ந்தோரிடமே இருந்து வந்திருக்கிறது. இவர்களுக்கு செலவிடுவதற்கு நேரம் அதிகம் இருப்பது ஒரு பக்கம். வேறொன்றும் உபயோகமாக செய்யமுடியாதது இன்னொரு பக்கம். பொருளாதார ரீதியிலே இவர்கள் மேலே இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப் படுபவர்கள். கீழே இருப்பவரை துச்சமாக மதிப்பவர்கள். மற்றும் இதனால் வற்றிவிடாத " நான் தான் சரி " எனும் போக்கை இவர்கள் கொண்டிருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. இது போன்ற நோக்கு நம் நாட்டில் மட்டுமல்ல, ஏனைய வளர்ச்சி அடைந்ததாகச்சொல்லப்படும் நாடுகளிலும் காணப்பட்ட ஒன்றாகும். கல்வியாளரில் பலர் இப்போக்கை நடுவர்க்க மன நிலை எனவும் ( middle class mentality ) வர்ணித்திருப்பதை நான் படித்திருக்கிறேன்.

ஆனால், இன்று இளைஞர் சமுதாயம் ஒரு புதிய தாக்கத்துக்கு உட்பட்டிருக்கிறது. உலகமே ஒரு கிராமம் என்ற அளவுக்கு இன்றைய தகவல், தொடர்பு சாதனங்கள் முன்னேறியிருக்கின்றன். தெரியாதனவற்றை உடன் தெரிந்துகொள்ள கருவிகள் கைவசம் இருப்பதனால், ஒவ்வொருவனும் தனக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதை உடனடியாகவே தெரிந்துகொள்கிறான்.ஒவ்வொருவனும், தான் கற்க வேண்டியது பல இருக்கின்றன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் இன்றைய கணினி உலகம் புகட்டிவிட்டது. ஆதலால், "நாம் தான் சரி" என்ற நிலையில் துவங்கிய‌
நாம், ஒரு கால கட்டத்தில் "நாமும் சரி" எனச் சொல்லி, பிறகு "நாம் சரியா?" என்ற கேள்விதனை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளத் துவங்கி, இன்று நம்மிடையே பலர்
"நாம் அவ்வளவு சரியல்ல" என்ற நிலைக்கு உந்தப்பட்டிருக்கிறோம். இது உலகம் சிறியதாக்கப்பட்டதின் விளைவு. இது நன்மைக்கே என்பது என்னுடைய துணிபு.
எவன் ஒருவன் தன்னைத் தானே ஒரு வினாவிற்கு உட்படுத்திற்கொள்கிறானோ அவன் கண்டிப்பாக முன்னேறுவான் என்பதில் ஐயமில்லை.

இன்றைய இளைஞருக்கு குறிப்பாக ஒரு குறிக்கோளுடன் செயல்படுவோருக்கு நேரமில்லை. இருக்கும் நேரம் போதவில்லை. ஒரு 50 வருடங்கட்கு முன்னால், இருந்த இளைஞருக்கு நேரம் போகவில்லை. இதுதான் வித்தியாசம்.

இன்றைய இளைஞர் சமுதாயம் அறிவு என்றால் என்ன என்பதை அறியத் தலைப்பட்டிருக்கிறது. வாழ்த்துவோம்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://anewworldeveryday.blogspot.com
http://vazhvuneri.blogspot.com

பாச மலர் said...

அருண், சூரி அவர்களுக்கு,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

SanJai said...

ஆஹா.. கொட்டி தீத்துட்டிங்கக்கா.. :)
தலைப்பு = சந்தர்ப்பவாதம்.

ஒரு காலத்தில் மழை இல்லாமல் பயிர்கள் வாடுவதை கண்டு, மழை வந்தால் நல்லா இருக்குமே என்று தோனும். இப்போ எதுக்குடா இப்படி மழை பெய்த்து இம்சை பண்ணுதுனு தோனுது. பின்ன.. இந்த மாதிரி குளிர்ச்சியாவே இருந்தா என் பிஸினஸுக்கு ஆபத்தாச்சே. :P..

ஸோ.. முதிர்ச்சியும் சந்தர்ப்பவதமும் கூட ரசனை மாற்றத்துக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் காரணம் தான். :)

பாச மலர் said...

எத்தனை கோணங்கள் இதில்..சஞ்சய் சொல்வதும் முற்றிலும் சரியே..

திகழ்மிளிர் said...

/பலப்பரிட்சையென்ற பெயரில் அர்த்தமில்லாத விவாதங்கள் அளவுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோகாத இந்த இளைய தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் எதார்த்தவாதிகள்தான்./

உண்மைதான்

ரூபஸ் said...

பெரியவங்கல்லாம் என்ன பேசிகிறீங்கன்னு பார்க்கலாம்னு வந்தேன்.. பரவாயில்ல எங்களைப்பத்தி நல்லாதான் பேசிகிறீங்க..