பூமுடி சூட்டிடப்
பலரும் விரும்பும்
பூவொன்று கேட்டுப்
பூமகளிடம்* வந்தனள்
காதல் தேவதை.*
புலவர்தம் பாக்களில்
புகழ்ப் பாமாலை
பல்லாயிரம் சூடிய
ரோஜாவும் அல்லியும்
நெடுங்காலமாய்ப் போட்டி
பூவரசி பட்டத்துக்காய்..
பூத்தது போராட்டம்
ஆன்மக் கடவுளின்*
அழகு நந்தவனத்தில்..
புயலென மாறிய
பூக்களின் போட்டி.

பூவரசி யார்?
"அழகு தேவதை ஜூனோவின்*
அம்சங்கள் பொருந்தியது அல்லியே!
ரோஜாவுக்கு இந்த
அழகு இல்லையே"
என்றது ஒரு பூக்கூட்டம்..
"அல்லி மட்டும் அழகா என்ன?
ரம்ய சுகந்தம்
அள்ளித்தரும் ரோஜாவுக்குப்
போட்டியா என்ன?"
என்றது ஒரு பூக்கூட்டம்.
எந்தப்பூ?
காதல் தேவதை மயங்கினள்.
சற்றே குழம்பினள்..
பின் தெளிந்தனள்.
ரோஜாவின் காந்த சுகந்தம்
அல்லியின் கம்பீர அழகு
இரண்டும் சரிவர மேவிய
புத்தம் புதிய
பூவொன்று வேண்டினள்.

எந்த நிறம்?
ரோஜாவின் இளஞ்சிவப்பா?
அல்லியின் தூயவெண்மையா?
மயங்கினள் மீண்டும்
காதல் தேவதை.
இரண்டும் இழைத்த
இனிய வண்ணம் வேண்டினள்.
பூமகள் தந்தனள்
புதுமலர் தாமரை
இளஞ்சிவப்பு, தூயவெண்மை
இரண்டும் இணைந்த
புத்தம்புது வண்ணத்தில்
புதுப்பொலிவுடன்
பூவரசி தாமரை!

கொஞ்சம் நம் இந்தியக் கலாசாரத்தையும் ஒத்திருக்கும் கிரேக்க/ரோமானியக் கலாசாரத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுள் உண்டு..
பூமகள் - Flora ......... (Roman Goddess of Flowers)
காதல் தேவதை - Love/Venus (Goddess of Love)
அழகு தேவதை - Juno .......... (A Beautiful Roman Goddess)
ஆன்மக் கடவுள் - Psyche...... (Goddess of the Soul)
Toru Dutt எழுதிய The Lotus என்ற கவிதையின்
மொழிபெயர்ப்பு முயற்சிதான் இது.
13 comments:
மொழிபெயர்ப்பு வேலை நடந்து கொண்டு இருப்பதாக உங்கள் பின்னூட்டங்களில் படித்திருக்கிறேன். இதுதான் உங்கள் முதல் மொழிபெயர்ப்பு கவிதையா? எனக்கு ஆங்கிலப்புலமை எல்லாம் கிடையாது. ஏதோ பேருக்கு எழுத்துக்கூட்டி படிப்பேன். அதனால் மூலக்கவிதை எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தமிழில் படிக்க நன்றாகவே இருக்கிறது.
மலரால்
மலர்க்கவிதை
மணம் மாறாமல்
மாற்றம் கண்டிருக்கிறது....
பூவரசி தாமரை.....
வலைப்பூவரசி????!!!!!
நன்றி நிஜமா நல்லவன்..ஆங்கிலக் கவிதை லிங்க் பண்னியிருக்கிறேனே..The Lotus என்று..
இது இரண்டாவது..முதல் கவிதை
ஷேக்ஸ்பியரின் ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பு.. உவமைகளில் மெய்யும் பொய்யும் என்ற தலைப்பில் மொழிபெயர்ப்புப் பகுதியில் என் வலைப்பூவில் வரும்..
கலக்கல் ;))
நன்றி கோபி..ஒரு வகையில் மொழிபெயர்ப்பு வேலைகள் சீக்கிரம் ஆரம்பிக்க நீங்கதான் எனக்குத் தூண்டுகோலா இருந்தீங்க..நன்றி..
இந்த கவிதைய பள்ளிக்கூடத்துல இருக்கும்போது பாடமா இருந்தது ஞாபகத்துக்கு வருது. நன்றிகள்
//பாச மலர் said...
நன்றி கோபி..ஒரு வகையில் மொழிபெயர்ப்பு வேலைகள் சீக்கிரம் ஆரம்பிக்க நீங்கதான் எனக்குத் தூண்டுகோலா இருந்தீங்க..நன்றி..//
மாப்பி... கலக்குறே போ :))
மலர்,
இருமொழிகளும் நன்கு அறிதல் மொழி மாற்றத்திற்கு நன்கு உதவும். அது தான் மலருக்குக் கை வந்த கலை ஆயிற்றே. பூவரசி தாமரை - தேர்வுக்கு பாராட்டுகள். இளஞ்சிவப்பு, வெண்மை, சுகந்தம், கம்பீரம் - ரோஜாவும் அல்லியும் கலந்த தாமரை.
எளிய அழகுச் சொற்கள் - தமிழ் துள்ளிக் குதிக்கிறது கவிதைகளில் - கருத்து மாறாமல் - நல்ல நடையில் - ம்ம்ம் - சூப்பர் - Hats Off
ஆங்கிலக் கவிதை படித்தேன் - ஒரு அடி கூட விடாமல் - கருத்து மாற்றமில்லாமல் - மொழி மாற்றம் - அருமை அருமை. பாராட்டுகள்
இது நான் படிக்கும் காலத்தில் எங்களது பாடத்திட்டத்தில் இருந்த பாடல். மனப்பாடமாக இன்னும் இருக்கிறது. நல்ல மொழிபெயர்ப்பு.
சென்ஷி, தமிழ்பிரியன்,
பள்ளியில் படிச்சிருக்கீங்களா? ஆமா..நேத்து என் போண்ணும் பரிட்சைக்குப் படிக்கிறப்போ கண்ணில் பட்டது இது..மொழிபெயர்ப்பு முயற்சிக்காக சுட்டுட்டேன்..
நன்றி சீனா சார்..
பாசமலர் மேடம்,
நல்ல தமிழ் உணர்வாளர்கள் / ரசனையாளர்கள் மத்தியில் சொல்லக் கூடாத கமெண்ட்:
இந்தக் கவிதையில் அரசியல் குறிப்பு ஏதும் இல்லையே!
(தாமரை / நேருவின் ரோஜா / சில அல்லி ராணிகள் . . .)
ரத்னேஷ் சார்,
இந்த கோணமும் நன்றாகத்தான் இருக்கிறது..
நல்லா எழுதறீங்க மொழிபெயர்ப்பு அதோட அந்த மூலக்கவிதையும் லிங்க் குடுத்துடுங்க... அதையும் உணர்ந்து ரசிக்க இந்த் மொழி பெயர்ப்பு என்னைப்போன்றவர்களுக்கு உதவும்...
லிங்க் இருக்கிறது முத்துலட்சுமி..இப்போது பார்த்திரூப்பீர்களென்று நினைக்கிறேன்..
Post a Comment