Friday, October 24, 2008

வேற்றுமையில் ஒற்றுமை

அரசியல் கட்சிகளில்
ஆயிரம் வேற்றுமை


ஆளுங்கட்சி எதிர்க்கட்சி
இலக்கணங்களில்
பதவி பண ஆசைகளில்
கட்சித் தாவலில்
வாக்குறுதி வழங்கலில்
வார்த்தை மீறலில்
இரட்டைநாக்கு மொழிகளில்
அடடா என்ன ஒற்றுமை..


தொலைக்காட்சி அலைவரிசைகளில்
ஆயிரம் வேற்றுமை


நிகழ்ச்சிகளின் நிரலில்
தொடர்களின் தரத்தில்
குடியரசு தினம் தொடங்கி
மதவாரியாய்ப் பண்டிகைகள் வரை
நடிகையின் நாய்க்குட்டியும்
நல்கும் பேட்டிகள்
அடடா என்ன ஒற்றுமை..


வடக்கு தெற்கு என்று
ஆயிரம் வேற்றுமை


பட்டினி பசியில்
குழந்தைத் தொழிலாளர்களின்
குறைந்திடாத எண்ணிக்கையில்
லஞ்ச லாவண்யங்களில்
சுரண்டிப் பிழைக்கும்
சுயலவாதிகளின் சூழ்ச்சியில்
அடடா என்ன ஒற்றுமை..


உலகெங்கும்
மதங்களில் இனங்களில்
ஆயிரம் வேற்றுமை


உட்பிரிவுப் பூசல்களில்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் மோதலில்
விதிகள் மட்டுமே போற்றி நின்று
வீதி வீதியாய்த் தீவிரவாதம்
வளர்த்து நிற்கும் பாங்கினில்
சந்திராயன் காலத்திலும்
சாகாத மூட நம்பிக்கைகளில்
அடடா என்ன ஒற்றுமை..

18 comments:

ஜீவி said...

வேற்றுமையில் ஒற்றுமை இருப்பின் அத்தனை வேற்றுமைகளும் காணாமல் போகும். வேற்றுமையில் ஒற்றுமை--இதுவும் எவ்வளவு அழகான வார்த்தை!
வெறும் வார்த்தையளவில் இல்லாமல் சமதர்ம சகவாழ்வுக்கும்
பூவுலக அமைதிக்கும்
பிரார்த்திப்போம்.

ராமலக்ஷ்மி said...

அற்புதமாய் எழுதியிருக்கிறீர்கள் பாசமலர்.

http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post.html என் முதல் பதிவிலிருந்து சில வரிகள் தங்கள் பார்வைக்கு:

//நம் போல
வேற்றுமையிலே
ஒற்றுமை கண்டிட-
வேறெரு தேசம்
இனிப் பிறந்துதான்
வர வேண்டும்-என
பெருமிதமாய் பேசிக்
களித்திருந்த
கணங்கள் யாவும்-
இன்று
கனவுக் காட்சிகளோ எனக்
காற்றோடு காற்றாய்
கரைந்து போயின.
இந்தியத் தாயின்
கண்ணீருக்கு
மெளன சாட்சிகளாய்-
மண்ணோடு மண்ணாய்
மறைந்து போயின.
மனம் வலித்தாலும்
மறுக்க முடிகிறதா ?//

cheena (சீனா) said...

அன்பின் மலர்,

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியத் திருநாட்டின் தாரக மந்திரம். ம்ம்ம் என்ன செய்வது - நாடு இப்படித்தான் இப்பொழுது போய்க் கொண்டிருக்கிறது.

கவிதை அருமை - சிந்தனைச் சத்தம் ஓங்கி ஒலிக்கிறது

நல்வாழ்த்துகள்

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளும்

திகழ்மிளிர் said...

அருமை

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இந்த வேற்றுமைகளைக்கூட சகிச்சுக்கலாம் ..ஒற்றுமைகள் .. அய்யோ கொடுமையான ஒற்றுமை..

பாச மலர் said...

ஆமாம் ஜீவி சார்..

பூவுலக அமைதி கூடிய சீக்கிரம் கிடைக்கட்டும்..

நன்ரி ராமலக்ஷ்மி..உங்கள் வரிகளில் உள்ள உண்மை சுடுகிறது..

பாச மலர் said...

நன்றி சீனா சார்.

குடும்பத்தினர் அனவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

பாச மலர் said...

நன்றி திகழ்மிளிர்..

கொடுமைதான் முத்துலட்சுமி..இந்த ஒற்றுமைகள் வேண்டாம் அல்லவா..

தமிழ் பிரியன் said...

வெல்கம் பேக் டூ சவுதி அரேபியா!

பாச மலர் said...

நன்றி தமிழ் பிரியன்..நலமா..

sury said...

வேற்றுமையிலும் என்ன ஒற்றுமை என வியந்து எழுதியிருக்கிறீர்கள்.

முரண்பட்ட பல குணங்களைப்பெற்ற பலரிடத்தும் சில சில ஒற்றுமைகளைப் பார்க்க இயலும். உலக இயற்கையில் இது சாத்தியமே.

ஒற்றுமையில் வேற்றுமைதனைக் கவனித்து இருக்கிறீர்களா ?

ஒரு ஆல மரமோ அரச மரமோ ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன.
பார்ப்பதற்கு எல்லாமே ஒன்று போலத் தோன்றினாலும், அவை ஒன்றோடு
மற்றொன்று பொருந்தாது. No leaf is congruent with any other leaf.

ஆக, வேற்றுமையில் ஒற்றுமையும், ஒற்றுமையில் வேற்றுமையும்
இயற்கையின் நியதி.


சுவைபட எழுதியமைக்கு பாராட்டுக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://arthamullavalaipathivugal.blogspot.com

பாச மலர் said...

நன்றி சுப்புரத்தினம் அவர்களே.

Divya said...

மிக அற்புதமான படைப்பு, அருமை!!!

கிருத்திகா said...

வாங்க மலர் கலக்கிட்டீங்க...
எத்தனை ஒற்றுமை வேற்றுமையில்...
:)

பொடியன்-|-SanJai said...

//வளர்த்து நிற்கும் பாங்கினில்
சந்திராயன் காலத்திலும்
சாகாத மூட நம்பிக்கைகளில்
அடடா என்ன ஒற்றுமை.. //

அக்கா.. சும்மா நச்சின்னு இருக்கு இந்த வரிகள்.. :)

பாச மலர் said...

நன்றி கிருத்திகா, திவ்யா, பொடியன்..

கோபிநாத் said...

கவிதை நல்லாயிருக்கு..! ;)

RATHNESH said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

//சந்திராயன் காலத்திலும்
சாகாத மூட நம்பிக்கைகளில்//

சந்திராயன் பற்றியே மூடநம்பிக்கைகள் கொடிகட்டினவே!

தாமதமாய் வந்ததற்குக் கிடைத்த போனஸ், ராமலக்ஷ்மி அவர்களின் கவிதையும் sury அவர்களின் பின்னூட்டத்தில் படிக்கக் கிடைத்த புதிய செய்தியும்.

அவர்களுக்குப் பாராட்டுக்கள். உங்களுக்கு நன்றி.