பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 28. கூடாவொழுக்கம்
குறள் எண்: 276
நெஞ்சிற் றுவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
விளக்கம்:
மனத்தால் பற்றுகளைத் துறந்து வாழ்வதே உண்மையான துறவாகும். மனதிலுள்ள பற்றுகளைத் துறக்காமல், துறந்துவிட்டது போல் வேடம் இட்டுக்கொண்டு, பிறரை ஏமாற்றி வாழ்பவர்களைப் போன்ற கொடியவர்கள் வேறு யாரும் இலர்.
-- ---------------
பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 112. நலம்புனைந்துரைத்தல்
குறள் எண்: 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.
அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள்; நுசுப்பிற்கு
நல்ல படாஅ, பறை.
விளக்கம்:
தன் மென்மை அறியாதவளாய், அனிச்சப்பூவைக் காம்பு நீக்காமல் அணிந்து கொண்டுவிட்டாள் இவள்; இனி இவள் இடைக்கென மங்கல இசையைப் பறைகள் ஒலிக்காது போய்விடும்.
காம்புடன் சூடிய பூவின் எடை தாங்காமல் இடை ஒடியப் போகிறது என்பது குறிப்பு. ஒடிந்து வாடிய நிலையில் மங்கல வாத்தியம் ஒலித்திட வாய்ப்பில்லை.
கால் - பூவின் காம்பு, நாலில் ஒரு பகுதி,எழுத்தின் நெடிலைக் குறிக்கும் கால் எழுத்து, "வ" என்ற குறியுடைய பின்ன வகை எண், அடிப்பாகம், தூண், தேருருள், வண்டி, கோல், வழி, குறுந்தறி, நெசவுத்தறியின் மிதி, கைப்பிடி, மரக்கன்று, மகள், பிறப்பிடம், வாய்க்கால், பிரிவு, நடை, மரக்கால், பாதம், அளவு, கதிர், மழைக்கால், காற்று, செவ்வி, தடவை, காலன்
களைதல் - நீக்குதல், ஆடையணி கழற்றுதல், அரிசி கழுவுதல், கூட்டி முடித்தல், பிடுங்கி எறிதல்
பெய்தல் - அணிதல், பொழிதல், வார்த்தல், இடுதல், கொடுத்தல், அணிதல், கட்டுதல், தூவுதல்
நுசுப்பு - இடை, இடுப்பு, வயிறு
படா - ஓயாது ஒலிக்கும்
பறை - தோற்கருவி, தப்பு, சொல், வட்டம், விரும்பிய பொருள், மரக்கால், நூல்வகை, கூத்துவகை, குகை, பறவை இறகு, பறவை
-----------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 18. வெஃகாமை
குறள் எண்: 178
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
"அஃகாமை செல்வத்திற்கு யாது?"எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப் பொருள்.
விளக்கம்:
ஒருவருடைய செல்வம் சுருங்கிக் குறைந்து விடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பிறருக்கு உரிய பொருளை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படாமல் இருத்தல் வேண்டும்.
அஃகாமை - சுருங்காமை, குறையாமை, வற்றாமை, கழியாமை, குறுகாமை,
வெஃகாமை - பிறர் பொருளை விரும்பாமை, அவாவின்மை, வெறுப்பு
--------------------
பால்: பொருட்பால்
இயல்: அரணியல்
அதிகாரம்: 74. நாடு
குறள் எண்: 735
பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல்குறும்பு மில்லது நாடு.
பல் குழுவும், பாழ்செய்யும் உட்பகையும், வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு.
விளக்கம்:
சாதி, மத இன்னும் பிற அமைப்புகளால் வேறுபட்டுப் பிரிந்து நிற்கும் பல குழுக்களும்,
கூட இருந்தே குழிபறிக்கும் உட்பகையும்,
அரசாள்பவர்களை அலைக்கழிக்கும் வண்ணம் கொலை போன்ற பாதகம் செய்யும் பொல்லாதவரின் செயல்களால் விளையும் கேடுகளும்
இல்லாதிருப்பதே நாடாகும்.
---------------------
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 93. கள்ளுண்ணாமை
குறள் எண்: 925
கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல்.
விளக்கம்:
தன்னிடமுள்ள பொருளை விலையாகக் கொடுத்து, போதை தரும் பொருளை வாங்குவது, போதைப் பொருளை நுகர்ந்து தன்னிலை மயங்கும் தன்மையடைவது, தாம் என்ன செய்கிறோம், உலகில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதே அறியாத அறிவற்ற நிலையாகும்.
------------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 57. வெருவந்த செய்யாமை
குறள் எண்: 564
இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்.
'இறை கடியன்' என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லைக் கெடும்.
விளக்கம்:
'நம் அரசன் கொடியவன்; அவன் செலுத்தும் ஆட்சி கொடுமையானது;' என்று குடிமக்கள் மனம் நொந்து இன்னாத சொல் பேசும் நிலையைத் தருவிக்கும் எந்தவொரு அரசனின் / தலைவனின் ஆட்சியும், தனது காலமும் பெருமையும் குறைந்து விரைவில் அழியும்.
உறை - இருப்பிடம், பெருமை, நீளம், உயரம், பொருள், மருந்து, உணவு, வெண்கலம்,ஆயுதவுறை, நீர்த்துளி, மழை, காரம், இருப்பிடம், போர்வை, உறுப்பு, பாலிடுபிரை, வாழ்நாள், துன்பம், கிணற்றில் பொருந்த்தும் வளையம், பொன், பாம்பின் நச்சுப்பை
கடுகி - விரைவில், கடிதில்
ஒல்லை - விரைவு, வேகம், தொந்தரவு, பழைமை