Sunday, June 17, 2012

நான் அறிந்த சிலம்பு - 21

புகார்க்காண்டம் - 03. அரங்கேற்ற காதை


சிலம்பின் வரிகள் இங்கே: 160 - 179


மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்


காவல் வேந்தன்


அழகுபட ஆடியே
முடித்தனள் மாதவி;
ஆடலது ரசித்திட்டே
அகமகிழ்ந்தனன்
காவல் வேந்தன் .


அவன் தான் அணிந்திருந்த
'பச்சை மாலைப்' பரிசினையும்
கூத்து நெறிகள்
தவறிடாமல் ஆடியதால்
'தலைக்கோலி' பட்டமும்
பெற்றனள் மாதவி.


'முதன்முதலாய் மேடையேறி
முதன்மை பெற்று விளங்கி
அரங்கேற்றம் நிகழ்த்திய
நாடகக் கணிகையர்க்குரிய
பரிசின் அளவு இது'
என்று நூலோர் வகுத்திட்ட
விதியதன் படியே
ஆயிரத்தெட்டு கழஞ்சுப் பொன்னை
மன்னனிடமிருந்து பரிசாகப்
பெற்றனள் மாதவி.


மாதவியின் மாலையைப் பெற்றுக் கோவலன் அவளுடன் இருத்தல்


பத்துப் பத்தாய் அடுக்கிய நூறுடன்
எட்டையும் இணைக்க
மற்ற எதனுக்கும் இல்லாததொரு
சிறப்பில் மேம்பட்ட
பசும்பொன்னால் ஆனது
ஆயிரத்தெட்டு கழஞ்சுப் பொன்மாலை.


இத்தகைய பெருமதிப்புவாய்ந்த
பொன்மாலையதனை
அதிகப் பொன் கொடுத்து
வாங்க வல்லவன்
மாதவியின் மணாளனாக ஏற்றவன்
என்றெண்ணினள்
மாதவியின் தாய் சித்ராபதி.


இவ்வெண்ணத்துடனேயே
பொன்மாலையதனை
மருண்டு நோக்கும் மான்விழிகொண்ட
கூனியொருத்தி கைதனில் கொடுத்தே
நிறுத்திவைத்தனள் 
மாலை விற்பனர் போலவே..
செல்வந்த இளைஞர்கள்
வலமது வந்திடும்
நகரின் பெருவீதிகளில்.


மாமலராம் தாமரை போன்ற
நெடிய கண்களையுடைய
மாதவியள் மாலையை
வாங்கிய கோவலனும்
கூனியவளுடன் தான் சென்று
மாதவியின் மணமனை புகுந்தனன்.


அம்மனைதன்னில்
மாதவியைத் தன்னுடன்
சேர்த்து அணைத்த அப்பொழுதினில்
மதி மறந்தே மயங்கினன்.


அவள்தனை ஒருபோதும்
நீங்கிட முடியாத
பெருவிருப்பினன் ஆயினன்.


குற்றங்கள் ஏதுமற்ற
சிறப்புகள் மட்டுமே பெற்ற
தன் மனை மனைவி
முற்றிலும் மறந்தனன்.


வெண்பா


அனைத்துக் கலைகளின் கருவிகளாம்
கணிதம் இலக்கணம் - இவ்விரண்டு
இயற்றமிழ்ப் பிரிவுகள் ஐந்து
(எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி)
இசைத்தமிழின் பண்கள் நான்கு
நாடகத் தமிழின் கூத்துகள் பதினொன்று -


- இவையனைத்தையும்
தம் ஆடல் பாடல் திறத்தினாலே
புவிவாழ் மக்கள் அனைவரும்
ஆழ்ந்து அறிந்து
அனுபவித்துப் போற்றிடும்படி
நிகழ்த்திக்காட்டினள்
அழகிய புகார் நகரதனில் பிறந்திட்ட
பொன்வளை அணிந்திட்ட
மாதவியெனும் கணிகை.

(அரங்கேற்ற காதை முற்றிற்று.)

வல்லமை 21.05.12 இதழில் வெளிவந்தது.

4 comments:

கோபிநாத் said...

\\குற்றங்கள் ஏதுமற்ற
சிறப்புகள் மட்டுமே பெற்ற
தன் மனை மனைவி
முற்றிலும் மறந்தனன்.\\

குறை ஒன்னும் இல்லை என்றாலும் அதுவும் ஒரு குறை தான் போல...அருமையான பகுதி ;-)

ஜீவி said...

கதையாய்ச் செல்லும் காட்சிகள் தங்கள் கைவண்ணத்தில் எளிய மொழிச் சிறப்புகள் பூண்டு வாசிக்க வெகு எளிமையாய் இருக்கிறது.

சிலம்பை ரசித்துப் படித்துத் தொடர உண்மையிலேயே அருமையான வாய்ப்பு இது.

தொடருங்கள், தொடருகிறோம்.

பாச மலர் / Paasa Malar said...

கணவனைக் கேள்வி கேட்காதது ஒரு குறைதானே...(கேட்டிருந்தால் மட்டும்?!)

அன்று அந்தக் குறை பெற்றிருக்கவில்லை கண்ணகி...கண் அவன் என்று அமைதியாய் இருந்துவிட்டாள்...

வருகைக்கு நன்றி கோபி...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி...