மூலம்: Song Unsung, Gitanjali, Selected Poems, Tagore
நான் பாடவந்த ஒரு பாடல்
பாடப்படாமலேயே இருக்கிறது
இன்று வரையில்....
என்னுடையை
இசைக்கருவியின் தந்திகளை
முடுக்கவுமாய் தளர்த்தவுமாய்
என் நாட்களைக் கழிக்கின்றேன்.
முடுக்கவுமாய் தளர்த்தவுமாய்
என் நாட்களைக் கழிக்கின்றேன்.
இன்னும் மெய்மையான அந்த நேரம்
வந்து வாய்த்தபாடில்லை;
வார்த்தைகளும் சரிவர
அமைக்கப்படவில்லை.
காற்று மட்டும் பெருமூச்சுடன்
கடந்து போகின்றது;
இன்னும் மொட்டுகள் அவிழ்ந்து திறக்கவில்லை.
நான் அவனுடைய முகத்தைப் பார்க்கவில்லை
இன்னும்..
அவன் குரலையும் கூடக் கேட்கவில்லை.
அவன் குரலையும் கூடக் கேட்கவில்லை.
என் வீட்டின் முன் செல்லும் சாலையில்
மென்மையான அவன் காலடி அசைவுகளின்
ஒலி மட்டுமே கேட்டிருக்கிறேன்.
இந்த நீண்ட நாள் முழுவதும்
அவனுக்கான இருக்கையைத்
தரையில் விரிப்பதிலேயே கழிந்துபோய்விட்டது.
ஆனால் ஒளிவிளக்கு இன்னமும் ஏற்றப்படவில்லை;
என்னால் வீட்டுக்குள் வரும்படி
அவனை வரவேற்கவும் இயலவில்லை.
அவனைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்
நான் வாழ்கின்றேன்;
ஆனால் அந்தச் சந்திப்பு இதுவரையில்
நிகழவே இல்லை.
அதீதம் 14 செப்டம்பர் 2012 இதழில் வெளிவந்தது.
3 comments:
உணர்வுகளை அழகாய் இசைக்கும் கவிதை ‘பாடப்படாத பாடல்’. மிக அருமையான மொழியாக்கம்.
//காற்று மட்டும் பெருமூச்சுடன்
கடந்து போகின்றது;
இன்னும் மொட்டுகள் அவிழ்ந்து திறக்கவில்லை.//
உன்னதமான உணர்வுகளை வெளிப்படுத்த கவிதை தான் வடிகால் போலிருக்கு.
இருவேறு கவிஞர்கள். இன்னொருவரின் இதே மாதிரியான உணர்வு பூத்த கவிதை பாருங்கள்:
பொத்தி வைச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சி வெக்கத்த விட்டு ..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், பாசமலர்!
Post a Comment