Monday, September 10, 2012

என்னை நான் வெளிப்படுத்துகிறேன்...

ஓர் அரேபியக் கவிதையின் தமிழாக்கம்: ஆங்கிலத் தலைப்பு: I Reveal Myself


நான்...


கடல்வழித் தாக்குதல் நிகழ்த்தும்
மாலுமிகளின் வம்சத்தவள்;
மாவீரன் சாம்சனையே*
வலுவிழக்கச் செய்து வீழ்த்திய
பெண் மகளின் வாரிசு;
அலைகளுக்கும் நினைவுகளுக்கும்
மகளாகி நிற்பவள்;
பழமையின் சேகரிப்பில்
புதியதாக முளைத்திட்டவள்;


நான்...


என் கைகளை  விரிக்கும் தருணத்தில்
இந்தப் பிரபஞ்சம் தொடங்கும்.
சிரிக்கையில் என் கன்னி இதழ்களில்
தேன் ததும்பி நிற்கும்.
எடுத்து வைக்கும் ஓர் அடியில்
இந்தப் புவியே
தன் கட்டுப்பாட்டை இழந்து நிற்கும்.


என் சிரிப்பினில்
பூகம்பம் எதிரொலிக்கும்.
எரிமலைகள் பூமியின் பரப்புகளில்
விசையுடன் பீறிட்டெழும்.


நான்...


அறிவின்மைக்கும் அடக்கத்துக்கும்
மகளாகப் பிறந்தவள்;
துன்மார்க்கத்துக்கும் தூய்மைக்கும்
மகளாகப் பிறந்தவள்;
கறுப்புக்கும் வெள்ளைக்கும்
வாரிசாகி நிற்பவள்;


என் விரல் நுனிகள்
நட்சத்திரங்களைத் தட்டிச் சென்று
அவற்றைத் தடம்புரளச் செய்யும்.

மூடிக் கொண்ட என் கண்களை
நான் திறந்திடும் பொழுது வரை
உலகெங்கும் வியாபித்து நிற்கும்
கிரகண இருட்டு;
என் கண்கள் திறந்திடும் பொழுதினிலோ
உலகையே குளிப்பாட்டி நிற்கும் தங்கத் தகதகப்பு.


என் கூந்தல் கற்றைகளைச் சற்றே சுழற்றி நான்
பின்புறம் தள்ளி விட...
என் பலம் கண்ட இந்தப் பிரபஞ்சம்
அச்சத்தால் நடுநடுங்கி நின்றிடும்.


இன்றையப் பொழுதும் நான் தான்
நாளையப் பொழுதும் நான் தான்
விண்வெளியின் அரியணையில்
முடிசூட்டிக் கொண்ட அரசியும் நான் தான்


ஒரு முறை நான் கண் இமைத்தால் போதும்;
வயல்கள் முழுவதும் பச்சையாய் நுரைத்தெழுந்து
கோதுமைப் பயிர்கள் நிறைத்து நிற்கும்.
கோதுமைப் பயிர்களும் நான் தான்.
பச்சை நிறமும் நான் தான்.
முதல் அறுவடையும் நான் தான்.
இறுதி அறுவடையும் நான் தான்.


குறிப்பு: சாம்சன் பைபிளில் வரும் ஒரு பாத்திரம். அதிக வீரம் கொண்டவனாகக் கடவுளால் படைக்கப்பட்டவன்.
மேலும் செய்திகளுக்கு: http://en.wikipedia.org/wiki/Samson

அரேபிய மொழியில் மூலக்கவிதை:  Fatena Al-Gharra
ஆங்கில மொழிபெயர்ப்பு: Fatena Al-Gharra


அதீதம் இதழில் 22.06.12 அன்று வெளிவந்தது.

4 comments:

வரலாற்று சுவடுகள் said...

//என் சிரிப்பினில்
பூகம்பம் எதிரொலிக்கும்.
எரிமலைகள் பூமியின் பரப்புகளில்
விசையுடன் பீறிட்டெழும்//

அருமையான வரிகள் நண்பரே!

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை. சிறப்பான மொழியாக்கம் மலர். நன்றி.

கோபிநாத் said...

ரொம்ப நல்லாயிருக்கு அக்கா ;)) "நான்" எல்லாம் சூப்பரு..நல்ல முயற்சி..தொடருங்கள் ;)

ஜீவி said...

கவிதையில் பிரகடனப்படுத்தும் அட்டகாசம் ததும்பி வழிகிறது..
ஆரம்ப அறிமுகமே அவ்வளவு நேர்த்தி!

//அறிவின்மைக்கும் அடக்கத்துக்கும்
மகளாகப் பிறந்தவள்;
துன்மார்க்கத்துக்கும் தூய்மைக்கும்
மகளாகப் பிறந்தவள்;
கறுப்புக்கும் வெள்ளைக்கும்
வாரிசாகி நிற்பவள்;//

எதிரும் புதிருமானவற்றின் இடையில் எத்தனை எக்காளம்!

//கோதுமைப் பயிர்களும் நான் தான்.
பச்சை நிறமும் நான் தான்.
முதல் அறுவடையும் நான் தான்.
இறுதி அறுவடையும் நான் தான்.//

ஓ! சர்வமும் நானே தானோ?..

மூலமும், மொழிபெயர்ப்பும் கைகோர்த்து இதில் அது அமிழ்ந்து அதில் இது தோய்ந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் ஒன்றெனத் தெரிவது தெரிகிறது!

கங்கிராட்ஸ், பாசமலர்!