Tuesday, September 11, 2012

சில நேரங்களில் சில உணர்வுகள்

மீண்டும் மீண்டும் சிவகாசி விபத்துகள்

ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு குற்ற உணர்வுடன் தான் பட்டாசு ஒலி ஒளி வேடிக்கையை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆபத்தும் விபத்தும் எந்தத் துறையிலும் உண்டுதான் என்றாலும், வருடம் தவறாமல் நிகழும் சிவகாசி விபத்துகள் மனதைப் பிசைகின்றன.

கல்வியைப் பற்றிய புரிந்துணர்வு

நீயா நானா வழங்கி வரும் தரமான விவாதங்களில் கல்வி சம்பந்தப்பட்ட விவாதங்கள் என்றுமே என்னைக் கவர்ந்தவை. சமீபத்திய விவாதம் ஒன்றில் ஒரு மாணவன் கூறியது: எங்களுக்குப் பெற்றோர் சுதந்திரம் கொடுக்கிறார்கள் கல்விப் பிரிவைத் தேர்வு செய்வதில்...ஒன்று இஞ்சினீயருக்குப் படி..அல்லது டாக்டருக்குப் படி..
.
நகைச்சுவை படச் சொன்னாலும் பெரும்பாலான குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆதங்கமும் வெளிப்பட்டது.

நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பதினோராம் வகுப்பில் பொறியியல், மருத்துவம் சார்ந்த பிரிவுகளைத் தேர்ந்தெடுக்காமல், வணிகவியல் அல்லது வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்கப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. பிள்ளைகளின் விருப்பத்தை அடக்கிவைத்துவிடுகின்றனர். இந்த இரண்டு துறைகளைத் தவிர மற்ற படிப்புகள் எல்லாம் நன்கு மதிப்பெண் வாங்காதவர்களுக்கு என்ற பரவலான எண்ணம் பெற்றோர்க்கு மட்டுமல்லாமல் சமூக எண்ணமாகவே ஆகிவிட்டது.

எந்தப் பிரிவிலும் நன்கு படித்து, அத்துறையில் உச்சத்தை அடைய முடியும் என்பது புரியாமலே போகிறது.

கல்வி பற்றிய புரிந்துணர்வு...விழிப்புணர்வு நாம் காண இன்னும் எவ்வளவு தூரம்தான் செல்ல வேண்டும்?!

சில வாழ்வியல் எதார்த்தங்களுக்காய், உளவியல் எதார்த்தங்களும் உண்மையான ஆசைகளும், இயல்புகளும் பலிகொடுக்கப்படுகின்றன.

ஹவுஸ் ஹஸ்பெண்ட்

இந்தியா வந்திருந்த போது, உறவுக்கார இளைஞனைச் சந்திக்க நேர்ந்தது. பெண் பார்க்கும் படலத்தில் இருக்கிறார்கள் குடும்பத்தினர்.

அவனுடைய எதிர்பார்ப்பு: ஒரு டிகிரி இருந்தால் போதும் - குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிகொடுக்க, படித்த பெண் வேண்டும்தான்...ஓரளவு வெளி உலகம் தெரிந்திருக்கும். வேலை பார்க்கும் பெண் வேண்டாம்..வீட்டைக் கவனிக்க முடியாமல் போகும். என் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போவதால் நானும் தம்பியும் ரொம்பக் கஷடப்பட்டிருக்கிறோம்.

இதையே பெண்ணும் எதிர்பார்த்தால் என்ன செய்வாய்? என்ற கேள்விக்கு அவன் தந்த பதில்: வேலைக்குப் போகாமல் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்க நான் ரெடி. என்னால் வீட்டைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் ஹவுஸ் ஹஸ்பெண்டைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யாராவது ரெடியாக இருப்பார்களா?

கேள்வி சரியானதுதான்..பதில் சொல்லத்தான் தெரியவில்லை...

இன்னும் தேடப்படும் நட்புகள்...


முகப்புத்தகத்தின் மூலம் பல முகங்களைத் தேடிப்பிடித்து விடுகின்றோம் என்றாலும், தேடுதலுக்கு அகப்படாத பல நட்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. உலகம் சிறியது என்று சொல்கின்ற போதே இச்சிறிய உலகத்துள் ஒளிந்து கொண்டிருக்கிற சில நட்புகளைத் தேடிப்பிடிக்க முடியாமல் போகின்றதே என்ற ஆதங்கமும் மிகுதியாக இருக்கிறது.

6 comments:

ஹுஸைனம்மா said...


ஊருக்குப் போயிருந்தீங்களா, அதான் காணாமோ!! சொல்லிட்டுப் போயிருக்கலாமே. :-)))))

அந்த “நீயா நானா” விவாதம் நானும் பார்த்தேன் (இணையத்தில்). கல்வி குறித்த மாணவர்களின் கருத்து சரிதான் என்றாலும், பல விஷய்ங்களில் அவர்களின் பார்வை ஒரு மிரட்சியையே தந்தன. பெற்றோராக எங்கே தவறு செய்கிறோம் என்பதும் ஓரளவுக்குப் புலப்பட்டது.

//ஹவுஸ் ஹஸ்பெண்ட்//
ஒரு சிலர் தயாராகவே இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்தான். அதே சமயம், மனமுவந்து மனைவிக்கு உதவுபவர்களை நையாண்டி செய்தே அவர்களை துரத்திவிடுபவர்களும் நட்பு-உறவு வட்டத்தில் உண்டு. :-(((

முகப்புத்தகத்தில் இருப்பதெல்லாம் படித்த (ஓரளவு) மேல்தட்டு வர்க்கம்தான். என்னோடு பள்ளியில் படித்த தோழிகள், மற்றும் கிராமத்து நட்புகள் இதில் தேடினாலும் கிடைக்கப்போவதில்லை. எதேச்சையாக அவர்களை எங்கேனும் சந்திக்கும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் தோழிகளில்பலர் கணினி வீட்டில் இருந்தாலும் பயன்படுத்துவதில்லை.. ஒருதோழி ஆறுமாதம் கழித்து பேஸ்புக்கில் இணைத்துக்கொண்டாள் ..ஆனால் எதும் அவ வரதில்ல போறதில்ல..

கோபிநாத் said...

எல்லாமே ரைட்டு ;))

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஹுஸைனம்மா...அடிக்கடி திடீர்ப் பயணங்கள் போக வேண்டிய சூழல்கள்....அதான் ஒவ்வொரு முறையும் சொல்ல முடியாமல் போகிறது..

நீங்கள் சொல்வது போல கல்வி தவிர்த்த சில சுதந்திரங்களைப் பற்றி அந்த இளைஞர் இளைஞிகள் பேசியது மிரளத்தான் வைத்தது...

கயல் சொல்வது போல கணினி இருப்பவர்களும் கூட தொடர்ந்து உப்யோகப்படுத்துவதில்லை...

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கயல்.....கணினி முன் உட்காருபவர்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லை..என்று சிலர் முணுமுணுக்கக் கேட்டிருக்கிறேன்....

இந்தப் பயன்பாடுகள் இருந்தும் ஆர்வமின்மைதான் காரணம்...ம்ம்ம்..தேடுவோம் தேடுவோம் நட்புகளை...

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கோபி...எல்லாம் ரைட்டா...சரி சரி...