Sunday, September 16, 2012

நான் அறிந்த சிலம்பு - 27

புகார்க்காண்டம் - 04. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 72 -84

வைகறை வரையில் காமன் திரிதல்

அன்னம் போன்ற
மென்னடை;
ஆம்பல் மலர் போன்ற
நறுமணம்;
தேன்நிறைந்த நல்வாசனையுடைய
தாமரை மலர் போன்ற
சிவந்த வாய்;
குளிர்ச்சி பொருந்திய
கருமையான மண்ல் போன்ற
கூந்தல்;

இவை அனைத்தும்
தன்னகத்தே பெற்றவள்
நன்னீர்ப் பொய்கை மகள்.
அவள் விழிப்பதற்கெனப்
பள்ளியெழுச்சி பாடிநின்றன
வண்டுகள்.
பள்ளியெழுச்சி கேட்ட
அவள்தம் குவளை மலர்க்கண்கள்
விழிதெழுந்தன.

பறவைகளின் ஆரவாரச் சத்தம்
முரசொலி போல முழங்கிட,
புள்ளிகள் செறிந்த
சிறகுகள் உடைய
அழகிய சேவல் கூவிட,
முள் போன்ற
கூர்மையான வாயுடைய
சங்கும் ஒலித்து நின்றது.

இங்ஙனம்
தத்தம் முறைமைக்கேற்ப
எழுந்த அதிகாலைக்குரிய
சிறப்பொலிகள்,
துயிலாழ்ந்திருந்த
கடல்போல் பரந்து நின்ற
 புகார் நகரின் மக்களை
எழச் செய்தன.

இருள்மிக்க
இரவுப்பொழுது தொடங்கிப்
புலர்ந்து நின்ற வைகறைப்
பொழுது வரையில்
நொடி ஒன்றும் உறங்காதவனாகத்
தொடர்காவல் நின்றனன்
சற்றும் சோராத மன்மதன்.

மணத்தில் சிறந்த
ஐவகை மலர்களால்
செய்த அம்பினையும்
கரும்பு வில்லையும்
கையில் ஏந்தி
மீன் பொறித்த
வெற்றிக் கொடியுடன்
உலாவிக் கொண்டிருந்தனன்
காவல் காதல் மன்மதன்.

அவன் தம் ஆட்சியில்
காவல் மிக்குச்
சிறந்திருந்தது
பூகார் நகரம்.


வெண்பா

தன்னிடம் உறவு கொண்டார்க்கெல்லாம்
குளிர்ச்சி தந்தருளுமாம்;
பகை கொன்டார்க்கெல்லாம்
வெப்பம் கொண்டு தருமாம்
சிறப்புப் பெற்ற சோழ மன்னனவன்
வெண்கொற்றக் குடையது.
அதனை ஒத்த தன்மைத்து
அந்த நிலவு.

அந்நிலவுதானும்
மலர்கள் இதழ் அவிழ்க்கும்
இரவுப்பொழுதினில்
வானமதில் தவழ்ந்து சென்று....

தலைவனைக் கூடியிருந்த
மாதவிக்கு இன்பத்தையும்
தலைவனைப் பிரிந்துநின்ற
கண்ணகிக்குத் துன்பத்தையும்
தந்து தகித்தது.

(அந்திமாலைச் சிறப்புச்செய் காதை முற்றிற்று. தொடர்வது இந்திரவிழவு ஊர் எடுத்த காதை.)

வல்லமை 25.06.12 இதழில் வெளிவந்தது.

4 comments:

ஜீவி said...

இது மூலம்:

அன்னம் மெல் நடை - நல் நீர்ப் பொய்கை -
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரைத்
தாமரைச் செவ் வாய், தண் அறல் கூந்தல்;//

இது அதற்கான வரிகள்:

//அன்னம் போன்ற
மென்னடை;
ஆம்பல் மலர் போன்ற
நறுமணம்;
தேன்நிறைந்த நல்வாசனையுடைய
தாமரை மலர் போன்ற
சிவந்த வாய்;
குளிர்ச்சி பொருந்திய
கருமையான மண்ல் போன்ற
கூந்தல்;//

ஒவ்வொரு முறையும் இப்படித்தான்.
முதலில் தங்கள் வரிகளைப் படித்து விடுவேன். பின்பு அடிகளாரின் சிலம்பு வரிகளைப் படிப்பேன். அடிகளாரின் வரிகளை எவ்வளவு அழகாக கவிதை நயமும் கெடாமல் உங்கள் வரிகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று ரசிப்பேன். ஒவ்வொரு முறையும் இதுவே எனக்கு வழக்கமாகப் போய் விட்டது. இந்த முறை என் மனம் கவர்ந்த உங்கள் வரிகளிலான சிலம்பின் வரிகளை எடுத்துக் காட்டி என்னால் மகிழாமல் இருக்க முடியவில்லை.

மிக சிரமமான ஒரு பணியை எடுத்துக் கொண்டு கொஞ்சம் கூடச் சோராமல்
அழகாகச் செய்வதை ஒவ்வொரு முறையும் நினைத்துப் பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள், பாசமலர்!

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி ஜீவி...ஒவ்வொரு முறையும் உங்கள் ஊக்கமும் பாராட்டும் உற்சாகம் தருகின்றன....
இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற எண்னம் வருகின்றது...

கோமதி அரசு said...

கவிதை அற்புதம் பாசமலர்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோமதி மேடம்..