Tuesday, May 1, 2012

நான் அறிந்த சிலம்பு - 17

புகார்க்காண்டம் – 03.அரங்கேற்று காதை

யாழ்ப் புலவன் – சென்ற பகுதியின் தொடர்ச்சி

சிலம்பின் வரிகள் இங்கே 82 – 94:

உச்சத்தில் நிற்கும் தாரம்;
அதன் தாக்கத்தால்
இறுதியில் நின்ற கைக்கிளை முதலாய்
அனைத்து இசைகளும்
நூல் முறைக்கேற்பத் தத்தமக்குப்
பொருந்திய முறையான
திரிபுகள் பெற்றுப் பொலிந்தன.

(உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை
வலமுறை: கைக்கிளை, துத்தம், குரல்
இடமுறை: தாரம், விளரி, இளி)

வலமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி
கைக்கிளை படுமலைப் பாலையாய்
துத்தம் செவ்வழிப் பாலையாய்
குரல் அரும் பாலையாய்த் திரிந்தன.

இடமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி
தாரம் கோடிப் பாலையாய்
விளரி விளரிப் பாலையாய்
இளி மேற்செம் பாலையாய்த் திரிந்தன.

இங்ஙனம்
படுமலைப் பாலை தொடங்கி
மேற்செம் பாலை இறுதியாகத் தொடர்கையில்
நீண்டு கிடக்கும் சுரங்களின் வரிசையுடைத்து
யாழதன் இசை.

ஆதியும் அந்தமுமாய்
நின்றிருக்கும் நரம்புகளைப்
பொருத்தமுறக் கொண்டிருப்பது
யாழதன் இசை.

அரும்பாலை முதலான
இடமுறைப் பாலைகள்
மெலிந்து இசைக்கும்
யாழ் தன்னில்.

கோடிப்பாலை முதலான
வலமுறைப் பாலைகள்
மெலிந்து இசைக்கும்
குழல் தன்னில்.

வலிவு மெலிவு சமம்
இம்மூவகை ஓசைகளின்
நரம்படைவு கெடாத
பண்ணீர்மை குன்றாத
முறையான இயக்கம்
எழுத்து எழுத்தாய்
இசையச் செய்திடவல்ல
யாழ் ஆசிரியன் தானும்…

(வலிவு – மேல் / உச்சம்; தாரம்
மெலிவு – கீழ் /மந்தம்
சமம் – சமன் / மத்திமம்)

ஆடல் ஆசான் தன்னொடு
இசையோன் தன்னொடு
முத்தமிழ்ப் புலவன் தன்னொடு
தண்ணுமை ஆசிரியன் தன்னொடு
குழலோன் தன்னொடு
யாழ்ப் புலவன் தானும்
ஒருமித்திருந்தனன்
நாட்டிய அரங்கதனில்.

வல்லமை 23.04.12 இதழில் வெளிவந்தது.

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

முத்தமிழ்ப் புலவன் தன்னொடு
தண்ணுமை ஆசிரியன் தன்னொடு
குழலோன் தன்னொடு
யாழ்ப் புலவன் தானும்
ஒருமித்திருந்தனன்
நாட்டிய அரங்கதனில்.

சிறப்பான சிலம்பின் வரிகள்..

ஜீவி said...

//ஆடல் ஆசான் தன்னொடு
இசையோன் தன்னொடு
முத்தமிழ்ப் புலவன் தன்னொடு
தண்ணுமை ஆசிரியன் தன்னொடு//

தன்னொடு?...

யாழ்ப் புலவன் தானும்
ஒருமித்திருந்தனன்..

எவ்வளவு அழகாக அடிகளார் கொண்டு வந்து முடிக்கிறார் என்று வியக்கத் தான் வேண்டியிருக்கிறது!

தொடர்ந்து செல்லுங்கள்..
தொடர்ந்து வருகிறோம்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்....ஒவ்வொரு வாத்தியக் கருவி அறிமுகம் முடியும்போதும் ஆசான் தானும்...என்று முடித்து இறுதியில் அனைவரும் ஒருமித்திருந்தனர் என்று அடிகளார் முடித்திருக்கிறார்....மிகவும் அழகுதான்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி...ஒவ்வொரு வாத்தியக் கருவி அறிமுகம் முடியும்போதும் ஆசான் தானும்...என்று முடித்து இறுதியில் அனைவரும் ஒருமித்திருந்தனர் என்று அடிகளார் முடித்திருக்கிறார்....

அதையெல்லாம் தொகுத்துச் சொல்லும் போது ஒவ்வொர் ஆசானுடனும் தன்னொடு தன்னொடு என்று சேர்த்துக்கொண்டேன்....

ஏனோ தெரியவில்லை...போன 16 வது பகுதியை வழக்கமாக வரும் நீங்கள், கோபி மற்றும் ராமலக்ஷ்மி வாசிக்கவில்லை..

அதன் சுட்டி இதோ:

http://www.pettagam.blogspot.com/2012/04/03.html

பாச மலர் / Paasa Malar said...

தமிழ்மணத்திலும் கடந்த ஒரு வாரமாக இந்தப் பெட்டகம் வலைப்பூப் பதிவுகளை இணைக்க முடியவில்லை..நீங்கள் தமிழ்மணத்தில் இல்லை..மீண்டும் சேரவும் என்று குறிப்பு வருகிறது...சவூதியில் தமிழ்மணம் தடைசெய்யப்பட்டுள்ளது..என்னுடய சமையல் வலைப்பூவை இணைக்க முடிகிறது...இது மட்டும் ஏனோ முடியவில்லை..ஊருக்குப் போகும்போதுதான் மீண்டும் இணைக்க வேண்டும்..