Saturday, October 13, 2012

நான் அறிந்த சிலம்பு - 29

புகார்க்காண்டம் – 05 இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 21- 30
சிலம்பின் வரிகள் இங்கே: 31 - 39

மருவூர்ப்பாக்கம் – பகுதி – 2

இது இது இன்ன இன்னது
என்று பிரித்தறியச் சுலபமாக,
குவித்து வைக்கப்பட்ட பொருட்களுடன்
கூலவீதிகளில்
எண்வகைத் தானியங்கள்
குவிந்தேதான் இருந்தன.

பிட்டு வணிகர்
அப்ப வணிகர்
கள் வணிகராம் வலைச்சியர்
மீன் வணிகராம் பரதவர்
வெள்ளை உப்பு வணிகராம்
உமணர் உமட்டியர்

கயிறு திரித்து விற்கும் பாசவர்
வெற்றிலை வணிகர்
வாசனைப் பொருள் வணிகர்
பல வகை மாமிச வணிகர்
எண்ணெய் வணிகர்
நிறைந்து காணப்படும்
ஊன்மிக்க வாழிடங்கள் இருந்தன.

வெண்கலத்தில் பாத்திரம் செய்யும் கன்னார்
செப்பு வேலை செய்யும் கொட்டிகள்
மரவேலை செய்யும் தச்சர்
வலிமை மிக்க கைகளுடைய கொல்லர்
ஓவிய வினைஞர்
மண்பாண்டம் செய்யும் குயவர்
பொன் வேலை செய்யும் கொல்லர்
இரத்தின வேலை செய்பவர்

துணிவேலை செய்யும் தையற்காரர்
தோல்பொருள் செய்யும் செம்மார்
துணிகள் கொண்டு
படம் முதலியன செய்வோர்
நெட்டிக் கோரைகள் கொண்டு
விலங்கு பறவை பூங்கொத்து முதலிய
கலைப்பொருள் செய்வோர்
என்று பலவாகக்
குற்றமற்ற கைத்தொழில்
செய்திடுவோர் பலரும்
வாழும் இடங்கள் இருந்தன.

குழல் கொண்டு யாழ் கொண்டு
குரல் முதலான ஏழிசைகளைக்
குற்றமற இசைத்து
அவ்விசைவழி தோன்றும்
திறங்களையும்
திறமையுடன் பாடவல்ல
பெரும்பாணர் வாழிடங்கள் இருந்தன.

சிறு சிறு கைத்தொழில் செய்வார்
பிறர் கட்டளைக்குப் பணிந்து
குற்றேவல் புரிந்து நிற்பவர்
வாழும் இடங்களும் இருந்தன.

கடலதன் பரப்பில்
யவனர் இருக்கை தொடங்கி
நகரதன் வீதிகளில்
பல்பொருள் அங்காடிகள் கொண்டு
பலதரப்பட்ட குடிமக்கள்
வாழும் இடங்களைக் கொண்டு
குற்றமறச் செழித்து நின்றது
மருவூர்ப்பாக்கம்.

வல்லமை 16.07.12 இதழில் வெளிவந்தது.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லா தொழில் செய்பவர்களும் வந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்....

ஜீவி said...

பண்டைய தமிழகத்து வணிகப் பாங்கையும், வணிகத்திற்கேற்பவான வணிகம் முனைவோர் பெயர்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பேற்பட்டது.
இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்பது எவ்வளவு உண்மை!

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொரு தொழில் செய்பவருக்குமான பெயர்களை அறியத் தருகிற பாடலுக்கு அழகான விளக்கம். அருமை மலர்.

பாச மலர் / Paasa Malar said...

வாங்க தனபாலன்...ஆமாம் எத்தனை வகைத் தொழில்கள்..

பாச மலர் / Paasa Malar said...

இசை, தொழில் இன்னும் போகப் போக கூத்து வகைகள், பெண்களின் அணிகலன்கள் என்று பலப்பல புதுப்பெயர்களையும் தெரிந்து கொள்ள நேர்கிறது...வாய்ப்புக் கிடைக்கும் போது, எடுத்துப் பேசும் துறைகளையெல்லாம் ஓர் அலசல் அலசி விடுகிறார் அடிகள்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி...

இராஜராஜேஸ்வரி said...

வல்லமை -வெளியீட்டுக்கு வாழ்த்துகள்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்..வல்லமையில் தொடராக வருகிறது..