Wednesday, October 3, 2012

மங்கி வரும் இளமைக்காலம்


 
மூலம்: - ஷேக்ஸ்பியர் Sonnet 73

வருடத்தின் பருவகாலம் இன்னதென்று
முதிர்ந்து வரும் என்னில் நீ அறியலாம்;

சிதைந்து போன தேவாலயத்தில்
இனிய குரலில் குழுப்பாடல்கள்
பறவைகள இசைக்கும்
இடங்களுக்கு அருகாமையில்
குளிரில் நடுங்கும்
பழுப்பு மஞ்சள் இலைகள்
மிகவும் குறைந்த எண்ணிக்கையில்
கிளைகளில் ஆடும் தருணங்களில்;
அல்லது ஓர் இலை கூடக் கிளைகளில்
இல்லாத தருணங்களில்;


இன்னும் மீதமிருக்கும்
மங்கலான வெளிச்சமதை
மரணம் தழுவ அருகில் வரும்
என்னில் நீ காணலாம்.

சூரியன் மேற்கில்
மறைந்த பிறகான தருணங்களில்;
சடுதியில் கறுப்பு இரவு
ஒளிர் வெளிச்சத்தை
மறைத்துச் செல்லும்
மரிக்கச் செய்யும்
மறையச் செய்யும் தருணங்களில்;

மரணிக்கக் காத்திருக்கும்
இளமை நெருப்பின் மீது படரும்
நீறுபூத்த நெருப்பாய் நான்
தகதகவென்று ஒளிர்கின்றேன்.

மரணப்படுக்கையில்தான்
அனைத்தும் முடிவு காண வேண்டியுள்ளது.


உணவளித்து ஊட்டி வளர்த்த மரத்துண்டுகள்
முழுமையாய் எரிந்து போனதும்
மரித்துப் போகும் நெருப்பது போன்றது வாழ்க்கை.
இளமைச் சக்தி குறைந்ததும்
வாழ்க்கையின் வலுவும் குறைந்து போகும்..

மங்கி வரும் என் இளமையையும்
அதன் ஏக்கங்களையும் தாபங்களையும்
நீ உணர்வாயோ என் அன்பே!

என் இளமை மங்கி மயங்கி வருவதை
நீ அறிவாயோ
பிரியும் தருணம் நெருங்கி வருவதை
நீ அறிவாயோ
அதனால்தான்
அதிக காலம் விரயமாவதற்குள்
உணர்ந்த காதலை
மேலும் வலுப்படுத்துகிறாயோ...
அதீதம் 11 ஆகஸ்ட் 2012 இதழில் வெளிவந்தது.

12 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான மொழியாக்கம்.

/குளிரில் நடுங்கும்
பழுப்பு மஞ்சள் இலைகள்
மிகவும் குறைந்த எண்ணிக்கையில்
கிளைகளில் ஆடும் தருணங்களில்;
அல்லது ஓர் இலை கூடக் கிளைகளில்
இல்லாத தருணங்களில்;/

சிறப்பான வரிகள் மலர்.

கோபிநாத் said...

அருமை..

\\உணவளித்து ஊட்டி வளர்த்த மரத்துண்டுகள்
முழுமையாய் எரிந்து போனதும்
மரித்துப் போகும் நெருப்பது போன்றது வாழ்க்கை.\\

கலக்கல் ;))

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்...

மிகவும் பிடித்த வரிகள் :

/// மரணிக்கக் காத்திருக்கும்
இளமை நெருப்பின் மீது படரும்
நீறுபூத்த நெருப்பாய் நான்
தகதகவென்று ஒளிர்கின்றேன்.

மரணப்படுக்கையில்தான்
அனைத்தும் முடிவு காண வேண்டியுள்ளது. ///

பல விசயங்கள் அப்போது தான் பலருக்கும் புரிகின்றன...

ஜீவி said...

//அதிக காலம் விரயமாவதற்குள்
உணர்ந்த காதலை
மேலும் வலுப்படுத்துகிறாயோ...//

எனக்கென்னவோ கவிதையின் அஸ்திவாரமே இங்கு தான் படிந்துக்
குலுங்கி கவிதையையே ஆட்டங்காணச் செய்வதாகப் படுகிறது.

Asiya Omar said...

மிக அருமை..திரும்ப திரும்ப வாசித்து பார்த்தேன்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி...ஈரேழ்வரிப் பாடலாய்க் கொண்டு வர மிகவும் முயற்சித்தேன்..ஆனால் கைகூடி வரவில்லை...என்ன இருந்தாலும் ஆங்கில மூலத்தின் முழு அழகைக் கொண்டு வராதது போலத்தான் உணர்கிறேன்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி...பெட்ரோல் இருக்கும் வரை வண்டி ஓடும்..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க தனபாலன்..நன்றி...உண்மைகள் புரிய ஆரம்பிப்பது காலம் எல்லாம் போன பின் தான்..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஜீவி...உண்மைதான்...மரணத்தைப் பற்றித்தான் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும் காதல் விஷயத்தில் கால விரயம் செய்யாமல் இருக்கின்ற தருணங்களைப் பயன்படுத்திக்கொள்கிற ஆதங்கம்..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஆசியா...நலமா...

ஷேக்ஸ்பியரின் வரிகள் அவ்வளவு பொருள் பொதிந்தவை...வார்த்தைகளின் வலுவை ஆங்கிலத்திலிருந்து முழுமையாகக் கொண்டு வரமுடியவில்லை...

உங்கள் சமையல் வலைத்தளம் பக்கம் அதிக காலமாய் வரவில்லை..வழக்கம்போல அசத்துவீர்கள் என்றே நினைக்கிறேன்..நானும் கூட சமையல் குறிப்புகள் வெளியிட்டு மாதங்கள் ஆகிறது..சீக்கிரம் வருகிறேன் அங்கேயும்..

இராஜராஜேஸ்வரி said...

இனிய குரலில் குழுப்பாடல்கள்
பறவைகள இசைக்கும் இடங்களுக்கு அருகாமையில்
குளிரில் நடுங்கும்
பழுப்பு மஞ்சள் இலைகள்
மிகவும் குறைந்த எண்ணிக்கையில்
கிளைகளில் ஆடும் தருணங்களில்;
அல்லது ஓர் இலை கூடக் கிளைகளில்
இல்லாத தருணங்களில்;

அருமையான பகிர்வுகள்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராஜ ராஜேஸ்வரி மேடம்