Sunday, July 22, 2012

நான் அறிந்த சிலம்பு - 24

புகார்க்காண்டம் - 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 36-46


காதலரைக் கூடிய மகளிரின் களிமகிழ்வு


மேற்குத் திசையதனில் கிடைத்திடும்
நறுமணத்துக்கெனப் புகைத்திடும்
வெண்மையான கண்டு சருக்கரையோடு


கிழக்குத் திசையதனில் கிடைத்திடும்
கருமையான அகில் முதலியவற்றுடன்
புகைக்கும் புகையைத்
துறந்திட்டனர் மகளிர்
வேனிற்காலம் என்பதாலே.


வடக்குத் திசையதனின் கண்ணமைந்த
இமயமலையினின்று கொண்டு வந்திட்ட
சந்தனம் அரைத்திடும்
ஒளிபொருந்திய வட்டக்கல்லில்


தெற்குத் திசையதனின் கண்ணமைந்த
பொதிகைமலைப் பிறந்த
சந்தனக்கட்டையைச்
சுழற்றி இழைத்திட்டுச்
சந்தனக் குழம்பதனை
மேனியெங்கும் பூசினர்.


அழகிய சுண்ணப்பொடியுடன்
பூக்களும் சிதறிக்கிடந்த
பூம்படுக்கை தன்னில்
மந்த மாருதம் வீசியதில் மயங்கி
நீலோற்பவ மலரின் கண்களை ஒத்த
தம் கண்களைக்
காதலர் தம் மார்பில் பொருத்தியே
காதல் மகளிர் தாமும்
இன்பக்களிப்புடன் துயின்றனர்.


(மந்த மாருதம் - இளந்தென்றல்)


வல்லமை 11.06.12 இதழில் வெளிவந்தது.

1 comment:

ராமலக்ஷ்மி said...

சந்தனத்தின் நறுமணத்தை உணரச் செய்வதாக வரிகள்.

தொடருங்கள்.